நூல் விமர்சனம்
அ.ஆறுமுகம்
புகழ்பெற்ற இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று அங்கே உதவி விரிவுரையாளராகப் பணியாற்றியவரும், சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா வந்தபின்னர், ஸ்டேட் வங்கியில் பணியாற்றியவருமான தோழர். எஸ்.இசட். ஜெயசிங் இந்நூலாசிரியராவார். இலங்கை இந்திய நிகழ்வுகளை, சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ளார். அரசியல் விஞ்ஞானம் அவரது துறையாக இருந்ததால், நூல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அவருடன் ஸ்டேட் வங்கி, கோவில்பட்டிக் கிளையில் நான் பணியாற்றியதால், அவரது இலங்கைப் பேச்சும், மொழிநடையும், அரசியல் தெளிவும், நேரில் காண வாய்ப்புக் கிட்டியது எனலாம்.
புத்தகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் ஆறு கட்டுரைகளும் இலங்கை பற்றிய தகவல்களோடு உள்ளன. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியில் தமிழ் மக்களின் வாழ்நிலை, இனவாத அரசியலின் தாக்கம், உள்நாட்டுப் போர் உருவான காரணிகள், என அவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அடுத்ததாக, 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட மலையகத் தமிழர்கள் எவ்வாறு பண்டங்களைப்போல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் வழியாக, இலங்கை-இந்திய அரசுகளால் இருநாடுகளுக்கும் இடையே பகிரப்பட்டனர் என்பது கண்ணீர்க் கதையாகக் கூறப்பட்டுள்ளது. “ஒப்பாரி கோச்சி” அல்லது “அழுகைக் கோச்சி” என்றழைக்கப்பட்ட தொடர்வண்டிகளில் மலையக மக்கள் தலைமன்னாருக்கு அழைத்து வரப்பட்டு, “ராமானுஜம்” என்ற கப்பல் மூலம் ராமேஸ்வரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பெரும்பகுதி தமிழ்நாட்டிலும், மற்றபடி ஆந்திரா, கர்நாடகா, ஒடிஸா எனப்பல பகுதிகளிலும் குடியேற்றப்பட்டனர். அரசுகளால் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், சில மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டன.
“சட்டவிரோதக் குடியேறிகள்“
1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் பாதிப்புகளால் பல்லாயிரக் கணக்கானோர் பல நாடுகளுக்கும் புகலிடம் தேடிச் சென்றனர். ஒரு பெரும்பகுதி இந்தியாவிற்கு வந்தனர். ஆரம்பகாலங்களில் மூன்று லட்சம் பேருக்கு மேல் அகதி முகாம்களில் இருந்தனர். இன்று ஒரு லட்சம் என்ற அளவில் உள்ளனர். அவர்கள் 39 ஆண்டுகளுக்கும் மேல் இங்கிருப்பினும், இந்திய அரசு அவர்களை இங்குக் குடியமர்த்த எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களாக இருப்பினும், தற்போதைய குடியுரிமைச் சட்டம் கூட அவர்களுக்கு உதவவில்லை. மாறாக, இவர்களைச் “சட்டவிரோதக் குடியேறிகள்“ என்ற பட்டியலில்தான் வைத்துள்ளனர்.
உலக நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு இலங்கை
2019ல் நடந்த அதிபர் தேர்தலும், 2020ல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலும், சிங்கள, பவுத்த பேரினவாதத்தின் வளர்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும். பவுத்த கோயில்களிலும், விகாரைகளிலும் கோத்தபயாவும், மகிந்தாவும் பதவியேற்றுக் கொண்டது இதன் அடையாளமாகும். இதன் தொடர்ச்சியாக, ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற வகையில் நிறுவப்பட்ட ஆட்சி சிறுபான்மைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாகும். 13ஆவது அரசியல் சட்டம் திருத்தப்பட்டு நீர்த்துப்போக வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் ராஜபக்சேக்களின் குடும்ப ஆட்சி காரணமாக, தேவையற்ற திட்டங்களான மாத்தரை விமான நிலையம், அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்பு தாமரைத்தடாகக் கோபுரம், மற்றும் பல அதிவிரைவுச்சாலைத் திட்டங்கள் எனப் பலவும் நிறைவேற்றப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் மூலம் கையூட்டு பெற்று நாட்டின் பெரும் செல்வங்கள் வீணடிக்கப்பட்டன. இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதாகக் கூறி, திடீரென உர உற்பத்தி கைவிடப்பட்டது. இதனால் உணவு உற்பத்தி குறைந்தது. செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சி தடைபட்டது. கொரானா காலத்தையொட்டி சுற்றுலாத்துறை பெருமளவு பாதித்தது. தேயிலை உற்பத்தி வீழ்ந்தது. எனவே பொருளாதாரம் பெரும்பாதிப்பை சந்தித்தது. இன்று உலக நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது – என்பன போன்ற பல விபரங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன.
இந்தியாவில் ஏற்ற தாழ்வு
இரண்டாவது பகுதியில் இந்தியா தொடர்பான பல விஷயங்கள் வந்துள்ளன. இந்திய அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக்கொள்கை மேட்டுக்குடிகளுக்கு ஆதரவானதாகவும், 5ஆம் வகுப்புக்கே பொதுத்தேர்வு என்பது குழந்தைப் பருவத்திலேயே கல்வியை அழுத்தமாக்குவதும், வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட பாலர்கல்வி 6 வயதிற்கு மேல்தான் என்பது கணக்கில் கொள்ளப்படாமை, மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, நுழைவுத் தேர்வு என்ற சாக்கில் பள்ளிக் கல்வியைப் புறந்தள்ளி, தனியாரையும் கல்வி வியாபாரிகளையும் ஊக்குவிப்பது என அதன் பல பரிமாணங்களையும் எடுத்துரைக்கிறார். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துவரும் வேளையில், பொதுவான சமூக, அரசியல் பணிகளில் அவர்களின் பங்கேற்பு மேலும் மேம்பட வேண்டும் என்பது நூலாசிரியரின் சரியான கருத்தாகும். இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் மொழிவழி மாநிலங்களிலும், பல்வேறுபட்ட கலாச்சாரங்களிலும், பல்வேறுபட்ட உணவுப்பழக்கங்களிலும் இருப்பது அனைவரும் அறிந்த சிறப்பான விஷயமாகும். வறுமையின் பிடியில் சிக்கியுள்ள இந்தியக் குடும்பங்கள் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன. குழந்தைகளைப் பிச்சை எடுக்க அனுப்பும் கும்பல்களும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பல்களும் நாட்டில் அதிகரித்து வருவதை வேதனையோடு சுட்டிக்காட்டுகிறார். மேலும் இந்திய சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் எவ்வாறு வீதியோரக் குடும்பங்களும், குழந்தைகளும் உருவாகிறார்கள் என்பதும், 10 சதமான செல்வந்தர்களிடம் 80 சதம் சொத்துகள் குவிவது இந்த வீடற்ற தன்மைக்கு முக்கியக் காரணமாகிறது என்பதும் விளக்கப்பட்டுள்ளது. வீதியோரக் குழந்தைகளுக்கு ஏற்படும் துன்பங்கள் கண்களில் நீரை வரவழைக்கின்றது.
இந்தியத் தேர்தல் முறையில் எவ்வாறு 30 சதமே வாக்குப் பெற்றவர்கள் நாட்டை ஆளுகிறார்கள் என்பதையும், இலங்கை போன்ற நாடுகளில் மலையகத் தமிழர், இஸ்லாமியர், உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் அங்கிருக்கும் விகிதாச்சார பிரதிநித்துவம் மூலம் பலன் பெறுகிறார்கள் என்பதையும் ஒப்பிட்டு எழுதுகிறார். சாதீயம் இந்தியாவின் மற்றும் தமிழகத்தின் சாபக்கேடாக மாறியுள்ளதைக் கடுமையாகச் சாடுகிறார். தந்தை பெரியார் பற்றிய கட்டுரையில் சாதிக் கொடுமைகளுக்கும், வருணாசிரமத்திற்கும் எதிரான அவரது போராட்டங்கள் விரிவாக விளக்கப் பட்டுள்ளன. இறுதியாக வந்துள்ள சிறப்புக் கட்டுரையில் தோழர். பால்வண்ணத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், அவரது எளிமையும், தொழிற்சங்கப் பற்றும், மார்க்சிய அறிவும், மற்றவருக்கு உதவும் தன்மையும் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.
மொத்தத்தில், தோழர். ஜெயசிங் எழுதியுள்ள இந்நூலின் மூலம் அவரது ஆழமான அறிவும், மார்க்சியக் கண்ணோட்டமும் வெளிப்படுகிறது.