கார்கி – திரைப்பட விமர்சனம்

சசிகுமார்

வித்தியாசமான படத்தின் தலைப்பை போல இத்திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.

 குழந்தைகள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமையை கதை மையமாக கொண்டு நகர்கிறது திரைக்கதை. இந்நிகழ்வை  எச்சரிக்கையுடனும், துணிச்சலுடனும் கையாண்டுள்ளார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.

 குற்றவாளிகளில் ஒருவராக கைது செய்யப்பட்டு ரகசிய அறையில் அடைக்கப்பட்டுள்ள தனது தந்தைக்காக மனரீதியான போராட்டத்தில் சிக்கித்தவிக்கும் மகள் கார்கியாக வாழ்ந்து இருக்கிறாள் சாய்பல்லவி.

 பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையாக நடித்துள்ள சரவணன், தன் மனைவியை இழந்த பின்பு தனது ஒரே மகளை தந்தைக்கு தந்தையாக, தாய்க்கு தாயாக வளர்க்கிறார். அவளைக் கொடூரமாக வன்புணர்வு செய்தவர்களில் மூத்த வயதான கார்க்கியின் தந்தையின் மீதான கோபத்தை தன் கண்களில் வெளிப்படுத்துகிறார்.

 சென்னை போன்ற பெருநகரில் நடக்கும் பாலியல் குற்றங்களை ஊடகத் துறை தனது டிஆர்பி ரேட்டிங் உயர்வதற்காக எவ்வகையில் எல்லாம் கீழ்த்தரமாக செயல்படுகின்றன என்பதைப் பல்வேறு காட்சிகள் மூலம் இயக்குநர் விவரிக்கின்றார்.

பிரபலமான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் உதவியை நாடும்போது, அவரை வழக்கில் வாதாட விடாமல் பின்புலத்தில் அழுத்தம் தரும் வழக்கறிஞர் அசோசியேஷனின் செயல்களை அப்பட்டமாக காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.

தனது தந்தை பிரம்மானந்தா சிறைவாசத்தை முடிவுக்கு கொண்டுவரவும், பாலியல்  குற்றவாளியின் மகள் எனும் அவப்பெயரை சமூகத்தினரிடம் இருந்து விலக்கவும் முயற்சிக்கிறார் கார்கி.

பார் அச்சோசியேஷனின் தடையால் எந்த வழக்கறிஞருமே முன் வராத பின்னணியில், பகுதிநேரமாக மருந்தகத்தில் பணிபுரியும் வழக்கறிஞரான காளி வெங்கட் வழக்கை ஆராய்ந்து வாதாட முன் வருகிறார்.

 வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் தனது மகளுக்காக, சிறையிலிருந்து பிணையில் வெளிவரும் பிரம்மானந்தாவை கொலை செய்ய தனது கையில் அரிவாளுடன் வந்து அதன்பின் குற்றவாளியின் தன் மகளின் வயது ஒத்த மகளை கண்டு தனது மகளைப் போல பாவித்து கட்டி அணைத்து அழும் காட்சி தத்ரூபமாக அமைந்துள்ளது.

 தனது தந்தை நிரபராதி என்று நம்பி அவரை விடுவிக்க போராடும்போது ஏற்படும் இன்னல்களை தனது மன உறுதியால் தகர்த்தெரிகிறாள் கார்கி.

 காளி வெங்கட் இறுதியில் கார்கியின் தந்தை இந்த குற்றத்தை செய்திருக்க வாய்ப்புள்ளதை வெளிப்படுத்தும் நேரங்களில் தனது தந்தைக்காக வாதாடும் கார்கி, பாதிக்கப்பட்ட பெண்ணிடமே நேரில் சென்று தனது தந்தை குற்றவாளி என்பதை உறுதிப்படுத்துகிறார்

 குற்றம் செய்தது 60 வயதான தனது தந்தை ஆனாலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் வலியையும் போராட்டத்தையும் உணர்ந்து உண்மையை வெளிச்சமிட்டுக் காட்டி தந்தையை சிறைக்கு அனுப்புகிறார் கார்கி.

சாய் பல்லவியின் நடிப்பு அபாரம். நிரபராதி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக துணிந்து ஒட்டு மொத்த சமூகத்தையும் எதிர்த்து போராடும் கார்கி, அவர் குற்றவாளி என்று தெரிந்ததும் கண நேரமும் யோசிக்காமல் அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதில் முன் நிற்கிறார். இது ஒரு வித்தியாசமான படம். படம் முழுவதும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

2 comments

Comment here...