அரசாங்க வங்கிதான் எனக்கு அம்மா – அப்பா

எம்.மருதவாணன்

      அரசு வங்கி இருப்பதால் எப்படி ஒரு பரம ஏழை வாழ்க்கையில் முன்னேறி உள்ளார் என்பதற்கு கடலூர் தோட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திரு.கணேசன் ஒரு வாழும் உதாரணம்.  25 வருடங்களுக்கு முன் குப்பையில் உள்ள பொருட்களை சேகரிப்பவராக வாழ்க்கையை தொடங்கியவர். உணவுக்கு போராடுவதையே தன் முழுநேர போராட்டமாக வாழந்தவர். 

      அவரை ஒரு நாள் எதேச்சையாக பார்த்து பேச்சு கொடுத்த போது, அவர் வாழ்க்கையின் போராட்டத்தை உணர்ந்தேன். அவருக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என்று கருதி நான் பணி புரியும் கடலூர், மஞ்சக்குப்பம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ஒரு கணக்கை துவங்க சொன்னேன்.  ”தலித்தாகிய எனக்கு கணக்கு தொடங்குவார்களா” என்பது தான் அவரின் முதல் கேள்வி. அதெல்லாம் தொடங்குவார்கள் என்று சொல்லி, அவரை ஒரு மாதிரி தேற்றி சம்மதிக்க வைத்த பிறகு, ”எனக்கு கையெழுத்து போடத்தெரியாது” என்றார். அதெல்லாம் தடையே இல்லை என்று புரிய வைத்து அவர் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு துவங்கி விட்டேன். பின் அவருக்கு  என் மனைவி கையெழுத்து போடக் கற்றுக் கொடுத்தார். அது முதல் 2 ரூபாய், 3 ரூபாய், 5 ரூபாய் என்று அவர் சேமித்த பணத்தை வங்கி ஊழியர்கள் முக மலர்ச்சியோடு வாங்கிக் கொண்டு அவருக்கு உற்சாகமளித்தனர்.

இப்படி சிறுக சிறுக ஆயிரம் ரூபாய வரை அவர் சேமித்தார்.  அந்தப் பணத்தில் ஒரு பழைய சைக்கிளை வாங்க வங்கி ஊழியர்கள் உதவி செய்தனர்.  அதைக்கொண்டு பல இடங்களுக்கும் சுற்றி பழைய இரும்பு கழிவுகளை வாங்கி விற்கும் தொழிலை சுறுசுறுப்புடன் தொடர்ந்தார்.  இதில் மிச்சமாகும் தொகையையும் வங்கியில் சேர்த்து வந்தார்.  ஓரளவு பணம் சேர்ந்ததும், மஞ்சக்குப்பம் பகுதியிலேயே ‘கணேஷ் டிரேடர்ஸ்’ என்ற பெயரில் சிறியதொரு பழைய இரும்புக்கடையை தொடங்கினார்.

“கல்யாணம் செய்துக்கக்கூட வசதி இல்லாமல் வாழ்ந்தவன் நான்.  பாங்குல கொடுத்த ஆதரவாலதான் கொஞ்சம் பணம் சேர்த்தேன்.  அந்த நம்பிக்கையில் கல்யாணமும் செய்து கொண்டேன்” என்றார் கணேசன். அவருக்கு 4 பெண் குழந்தைகள். அவரது பெண் குழந்தைகளின் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதை கேள்விப்பட்டவுடன் உடனே தலையிட்டு அவருக்கு உதவி செய்து குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க IOB ஊழியர்கள் உதவி புரிந்தனர். மூத்த மகளுக்கு +2 முடித்து திருமணம் ஆகிவிட்டது.  இரண்டாவது மகள் MA முடித்து Group I தேர்வுக்கு தயார் செய்துக் கொண்டு உள்ளார்.  அவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.  மூன்றாவது மகள் நர்சிங் முடித்து திருமணம் செய்து கொண்டு விட்டார்.  நான்காவது மகள் BE Civil முடித்து விட்டார். அவருக்கு சென்ற வாரம் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.  ஓர் ஏழை மனிதனை வளமான வாழ்க்கை வாழ IOB வங்கி ஊழியர்கள் எப்படியெல்லாம் உதவினார்கள் என்ற உணர்வு மகிழ்வளிக்கிறது.

      தலித் பெண்கள் நிலம் வாங்கும் திட்டத்தில் IOB மஞ்சக்குப்பம் கிளை மூலம் அவரது மனைவி ஜெயகாந்திக்கு, கடன் அளித்து 60 சென்ட் நில உடமையாளராக அவரை ஆக்கி உள்ளது பெருமைக்குறிய விஷயம்.

      மூன்று மகள்களுக்கும் கல்விக் கடன் IOB மூலம் பெற்று அதையும், நிலத்திற்கு வாங்கிய கடனையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி, என்னை வாழவைத்த IOBயில் கடன் நிலுவை வைக்க மாட்டேன் என்ற சபதத்துடன் வாழ்ந்துவரும் அற்புத மனிதர் திரு.கணேசன்.

      அவரின் நான்காவது மகள் திருமண பத்திரிக்கையில் IOB பெயரையும், LOGOவையும் தெய்வத்திற்கு மேலே வைத்திருப்பதே, அவர் அரசு வங்கியின் மீது வைத்திருக்கும் அளப்பறிய மரியாதையை வெளிப்படுத்துகிறது.

ஒரு முறை வங்கிகள் தனியார்மய எதிர்ப்பு போராட்டத்தில் அவரை அழைத்து பேசச் சொன்னோம். அப்போது அவர் “எங்கிட்ட 200 ரூபாய் காசு இல்ல தாலி வாங்கி கல்யாணம் பண்ண! அப்படியே சேர்ந்து வாழ்ந்தோம்.  இப்ப காசு வந்தபிறகு வாங்கி கட்டினேன்.  அஞ்சு ரூபாவ எடுத்திட்டு போனா தனியார் வங்கில வுடுவாங்களா, நான் காலனி ஆளு.  என்ன வளத்தது அரசு வங்கி, அதை வெளியாளுங்க கிட்டே விற்கக் கூடாது.  நான் ஒரு அனாதைன்னு நெனச்சுட்டிருந்தேன்.  இத்தனை பேரு சொந்தக்காரர்கள் இருக்கீங்க.  அரசாங்க வங்கி தான் எனக்கு அம்மா, அப்பா, அத காப்பாத்தறதுக்கு நானும் என் குடும்பமும் உங்களோடு சேர்ந்து போராடுவோம்” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

One comment

  1. எளிய மக்கள் பற்றி எழும் ஊண்றுகோல் அரசுடமை வங்கிகள் !

Comment here...