பில்கிஸ் பானு வழக்கில் குற்றாவாளிகள் விடுதலை அநீதியானது

எஸ்.ஹரிராவ்

கடந்த ஆகஸ்ட் 15 அன்று இந்தியா தனது 75 வருட சுதந்திர நிறைவினை பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து கொண்டாடிக் கொண்டிருந்தது. ஒருபுறம் செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி உரையாற்றிக் கொண்டிருந்த நமது பிரதமர், “பெண்களின் மரியாதை”யை குலைக்கும் எந்த செயலிலும் நாம் ஈடுபடக் கூடாது என முழங்கிக் கொண்டிருந்தார்.

மறுபுறம் ஒரு சில மணி நேரங்களில்,  2002 இல் நடந்த குஜராத் கலவர படுகொலை நிகழ்வுகளில், கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் படுகொலைகளை நிகழ்த்திய குற்றத்திற்தாக, பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பதினோரு குற்றவாளிகள் குஜராத் அரசால், ‘நன்னடத்தை’ அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு, ஆரத்தி எடுக்கப்பட்டு  வரவேற்கப்பட்டனர்.  பெண்களின் ஆற்றலை உயர்த்திப் பிடிக்குமாறு முழங்கிக் கொண்டிருந்த பிரதமரின் சொந்த கட்சியினர், பெண்கள் மீது கொடூர வன்கொடுமைகளை நிகழ்த்திய கொடூரக் குற்றவாளிகள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டிருந்தனர்.

நீதித்துறைக்கே பெரும் தலைகுனிவான இந்த நடவடிக்கை, நாடெங்கிலும் மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோத்ரா தொகுதி பாஜக எம்எல்ஏவான சி.கே.ரவுல்ஜி, விடுவிக்கப்பட்டவர்கள் “நல்ல பண்புள்ள பிராமணர்கள், நன்னடத்தை மிக்கவர்கள். அவர்கள் இத்தகைய படுபாதகங்களை செய்திருக்க மாட்டார்கள்” என்று கூறி, இந்த செயலை நியாயப்படுத்தி மனித மாண்புகளுக்கு எதிராக பேசியுள்ளார்.

வழக்கின் பின்னணி.

2002ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் பிஜேபி ஆட்சியில் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லீம் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியில் எடுத்து எரித்துக் கொன்ற கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன.

குஜராத்தின் இந்த கறுப்பு வரலாற்றில், பில்கிஸ் பானுவுக்கு இழைக்கப்பட்ட கொடூரமும் ஒன்று.  ஐந்து மாத கர்ப்பிணியான 21 வயது பில்கிஸ் பானு, அவரது வயதான தாய் மற்றும் அப்போதுதான் பிரசவித்து இருந்த சகோதரி ஆகியோர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். அவருடைய 3 வயது குழந்தை பில்கிஸ் பானு கண் முன்பே அடித்துக் கொல்லப்பட்டது.  அக்குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சார்ந்த 14 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அதில் தப்பிப் பிழைத்தவர் பில்கிஸ்பானு. அவரை குற்றுயிரும் கொலையுயிருமாக்கி விட்டு, அவர் இறந்து விட்டார் என்று நினைத்து அடுத்த கொலைக் களத்தை நோக்கி நகர்ந்தனர் கொலைகாரர்கள்.

உயிர் பிழைத்த பில்கிஸ் பானு, தனது குடும்பத்தினர் மீதான படுகொலைகளுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் நீதி வேண்டி, நீண்ட நெடிய போராட்டத்தினை மேற்கொண்டார்.  இந்தியா முழுவதும், பில்கிஸ் பானு உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு நீதி கிடைக்க, வலுவான குரல்கள் எழுப்பப்பட்டன.

பல்வேறு கட்ட சமரசமற்ற போராட்டங்களுக்குப் பிறகு, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 2008ல், பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை குற்றவாளிகள் என உறுதி செய்து, ஆயுள் தண்டனை விதித்தது. அந்தத் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றமும், உச்சநீதி மன்றமும் உறுதி செய்தன.

தீர்ப்பிற்குப் பிறகான நிகழ்வுகள்:

இத்தகைய படுபாதக குற்றவாளிகள் தான் தற்போது  ‘நன்னடத்தை’ அடிப்படையில், தண்டனை காலத்திற்கு முன்கூட்டியே விடுதலையாகி வெளிவந்துள்ளனர். நன்னடத்தை அடிப்படையில் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பதற்கான விதிகளை ஒன்றிய அரசாங்கம் கடந்த ஜூன் 10 ஆம் தேதி அன்று வெளியிட்டது. அதில், மிகத்தெளிவாக ”பாலியல் வன்புணர்வு, போக்சோ, வரதட்சணைக் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்படக்கூடாது” என்று தெரிவித்துள்ளது. இதன் உள்ளார்ந்த பொருள் பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறையை மற்ற குற்றங்களைப் போல கருதி விடுதலை அளிக்க கூடாது என்பதே ஆகும்.

ஆனால். தன்னை விடுதலை செய்யுமாறு ராதேஷ்யாம் ஷா என்ற குற்றவாளி தொடுத்த வழக்கின் அடிப்படையில், சட்டத்தின் ஓட்டைகள் மற்றும் உச்சநீதி மன்றத்தின் ஆலோசனை ஆகியவற்றை காரணம் காட்டி குஜராத் அரசு ஒரு கமிட்டியினை அமைத்து அக் கமிட்டியின் ’ஏகமனதான” பரிந்துரையின் பேரில், குற்றவாளிகள் 11 பேரையும்  விடுதலை செய்துள்ளது. அக்கமிட்டியில், கோத்ரா பாஜக எம்எல்ஏ உட்பட மூன்று பாஜக தலைவர்கள் இருந்தார்கள் என்பதிலிருந்தே அக்கமிட்டி எந்தவிதமாக செயல்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும். 

எதிர்ப்பலைகள்:

குஜராத் அரசின் இந்த செயல் பில்கிஸ் பானு என்கிற ஒற்றைப் பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதியல்ல. ஒட்டுமொத்த பெண்ணினத்திற்கு, குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி. பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டப் பாதையில் பெரும் பின்னடைவு.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைவழக்கின் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை திரும்பப் பெறவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சுபாசினி அலி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மொஹுவா மித்ரா உள்ளிட்ட பலர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஓய்வு பெற்ற 134 ஐஏஎஸ் அதிகாரிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். பெண்கள் அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் சார்பாக, நாடெங்கிலும் ஏராளமான கண்டனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த எதிர்ப்பு இயக்கங்கங்களின் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஆகஸ்ட் 28, 2022 அன்று சைதை பனகல் மாளிகை அருகில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தியுள்ளது. அந்த கூட்டமைப்பின் பாகமாக செயல்பட்டு வரும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பெண்கள் உபகுழுவும் அதில் பங்கேற்று, வங்கி ஊழியர்கள் சார்பாக அநீதிக்கு எதிராக வலுவான எதிர்ப்புக் குரல் பதிவு செய்துள்ளது.

இந்த விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக குஜராத் அரசு மற்றும் மத்திய அரசு இரு வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளது.

‘அச்சமின்றி வாழும் என்னுடைய உரிமையை எனக்குத் தாருங்கள்’ என்பது

குற்றவாளிகளின் விடுதலையை ஒட்டி, கை கூப்பி, கண்ணீர் மல்க பில்கிஸ் பானு இந்த தேசத்திற்கு விடுத்த கோரிக்கை.

அச்சமின்றி வாழ்வதற்கான உரிமை இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனது/குடிமகளது அடிப்படை உரிமை. அதை காப்பாற்றுவதும் இந்த தேசத்தின் ஒவ்வொருவரின் அடிப்படை கடமையாகும்.

One comment

  1. Clearly explained. Well written comrade…
    The words ‘அச்சமின்றி வாழும் என்னுடைய உரிமையை எனக்குத் தாருங்கள்’ will shake everyone.

Comment here...