மக்கள் நலத்திட்டங்கள் “வீணடிக்கப்படும் இலவசங்களா”?

ஜேப்பி

குழந்தைகளுக்கு  மிட்டாய் கொடுத்து ஈர்ப்பது போல, அரசியல் கட்சிகள் மக்களிடம் வாக்கு பெறுவதற்கு “இது இலவசம், அது இலவசம்” என்று தேர்தல் வாக்குறுதிகளை வாரி வீசி “மிட்டாய் கலாச்சாரத்தைக்” கடைப்பிடித்து வருவதாக சமீபத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

பாரதிய ஜனதா நிலைபாடு

மோடியின் பேச்சின் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர் உச்ச நீதி மன்றத்தில் “இலவசங்களுக்கு” எதிராகப் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்தார். வாக்காளர்களைத் தங்களுக்குச் சாதகமாகக் கவர்ந்திழுக்க, தேர்தல் பிரச்சாரங்களின் போது “முறையற்ற இலவசங்கள் (irrational freebies)” மற்றும் “தனிநலப் பொருட்கள் (private goods)” வழங்க அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதைச் சட்ட விரோதமாக்க வேண்டுமென்றும், அத்தகைய அரசியல் கட்சிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென்றும், அந்த கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும் அந்த வழக்கின் மனு கோருகிறது. இந்த மனுவை பாரதிய ஜனதா கட்சியும் ஆதரித்து இருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலையீடு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதை தடுக்க முடியாது எனக் கூறினார். ஆனால், இத்துடன் வழக்கை முடிக்காமல் பொதுப் பணத்தை நலத் திட்டங்களுக்குச் செலவிடுவதற்கான சரியான வழி என்ன என்பதுதான் நீதிமன்றத்தின் கவலை என்றும் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களும், அரசுகளின் சமூக நலத் திட்டங்களும் வெவ்வேறானவை என விளக்கமளித்தார்.  இலவசங்கள் பற்றி ஆலோசனை வழங்க அரசு, நிதி ஆயோக், நிதி ஆணையம், சட்ட ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

ஜனநாயக மரபு

இந்திய அரசியல் சட்டம் முகப்புரை “சமூக, பொருளாதார மற்றும் அரசியல் – நீதியை” குடிகளுக்கு உறுதி செய்கிறது. இதனடிப்படையில் மக்களுக்கு என்ன நலத் திட்டங்கள் தேவை அவற்றுக்கு எப்படி, எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பதை கணக்கில் கொண்டு மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் தங்கள் நிதிக் கொள்கைகளை வகுக்க வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை-இதைச் செயலாற்றுவோம் என வாக்குறுதி அளித்து அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக மரபு. தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சிகளின் இந்த நிதிக் கொள்கை முடிவுகளில், சமூகக் கடமையில், அரசியல் உரிமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத எவரும், அது நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ அல்லது வேறு எந்த நபரோ, நிறுவனமோ தலையிட முடியாது. அவ்வாறு தலையிட்டால் அங்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது மற்றும் மரபு மீறப்படுகிறது என்று பொருள்.

இலவசமா – முதலீடா?

எதுவுமே இங்கு இலவசம் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் வரி செலுத்துகின்றனர். அந்த வரிப்பணத்தில்தான் அரசாங்கங்கள் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுகின்றன. அப்படி இருக்க, மோடி சொல்லும் இலவசம் எது? கல்வி, சுகாதாரம், சத்துணவு போன்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் வீண் பொருளாதாரச் செலவுகளா? ஆராய்ந்து பார்ப்போம்.

எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இயற்கை வளங்களும் மனித வளங்களும் தான் அடிப்படை. இவற்றைப் பயன்படுத்தியே முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி நடைபெறுகிறது. இதில் மனிதவள முன்னேற்றத்திற்கு செய்யும் செலவுகள் அனைத்தும் முதலீடுகளே. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் கூட பல காலமாக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

பல சமயங்களில் பொருளாதாரம் மற்றும் பிற அதிர்ச்சிகளால் மக்கள் பாதிக்கப்படும் பொழுது உடனடி நிவாரணங்கள் வழங்குவது அவசரத் தேவை ஆகின்றது, கொரோனா காலத்தில் இலவச தடுப்பூசி, பண உதவிகள் போல. மற்ற காலங்களில் முதலாளித்துவ சந்தை இயங்குவதற்காக, மக்கள் பணப் புழக்கத்தை அதிகரிக்க, மனித வளத்தை மேம்படுத்த, அரசுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டி இருக்கின்றன. இவை இலவசங்கள் அல்ல. மாறாக இன்றி அமையாத முதலீடுகள்.

உண்மையில் எது இலவசம்?

சுதந்திரச் சந்தைப் பொருளாதாரம்“, சந்தையில் அரசு தலையிடக் கூடாது, என்று வாய்கிழிய்ப் பேசிக் கொண்டே மக்கள் வரிப் பணத்தில் இருந்து கார்பரேட் கம்பெனிகளுக்கு கொடுக்கப்படும் வருமான வரிச் சலுகைகள், விலக்குகள், தள்ளுபடிகள், சொத்து வரி இல்லாமை, வாரிசு வரி இல்லாமை, இதர நேர்முக-மறைமுக வரித் தள்ளுபடிகள், விலக்குகள், நிலுவைத் தொகை, கடன் தொகை ரத்துகள், தள்ளுபடிகள், சலுகைகள் என சில லட்சம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுப்பதுதான் உண்மையில் “இலவசம்”. கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் இந்த “இலவசங்களால்” மக்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதை மனித வளர்ச்சிக் குறியீடுகளும், பசிக் குறியீடுகளும், தொடரும் தற்கொலைகளும் நிரூபிக்கின்றன. ஆனால் இந்த கார்ப்பரேட் இலவசங்கள் “ஊக்கத் தொகைகள்” என நியாயப்படுத்த படுகின்றன. கார்ப்பரேட் இலவசங்கள் வழங்கப்படுவதை நிறுத்தி, நிலுவைகளை / தள்ளுபடிகளை வசூல் செய்தால் சமச்சீரான பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்படும்.

எதற்கு இந்த முஸ்தீபுகள்?

“இலவச” வாக்குறுதிகளை அள்ளி வழங்கி, சில பல இலவசங்களை மக்களுக்கு அளித்து அல்லது அளித்தது போல விளம்பரம் செய்து, ஒன்றியத்திலும் பல மாநிலங்களிலும் பதவிக்கு வந்த பாஜக, இந்த “இலவசங்களுக்கு” எதிராகப் போர்க் கொடி உயர்த்தி உள்ளதற்கு கீழ்க்காணும் காரணங்களைச் சொல்லலாம்:

1. நாட்டின் பல கேந்திரமான பிரச்சனைகளான விலை வாசி உயர்வு, வேலையின்மை, ஊழல் இவற்றில் இருந்து கவனத்தைத் திசை திருப்பலாம்; அல்லது அதற்கான பொய்க் காரணிகளை உருவாக்கலாம்;

2. 2024 தேர்தலிலும் மேலும் வரவிருக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் சட்டவிரோத “இலவச தேர்தல் வாக்குறுதி” வழங்குகிறார்கள் என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை தனது ஏவல் ஏஜென்சிகளை வைத்து முடக்கலாம்;

3. நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்ற ஐஎம்எஃப், உலக வங்கி போடும் கட்டளைகள் நிபந்தனைகளை நிறைவேற்றலாம்;

4. மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, மின்சாரம், கல்வி, கட்டுமானம், சுகாதாரம், தண்ணீர், போக்குவரத்து போன்ற பலவற்றில் அரசு முதலீடுகளை நிறுத்தி இவற்றில் கூட்டுக் களவாணி கார்ப்பரேட் கொள்ளை வசூலை நிரந்தரமாக்கலாம்.

மாற்றுக் கொள்கைகள் தேவை

பாஜகவின் இந்த மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மாற்றுக் கொள்கை தேவை. பொதுத் துறை நிறுவனங்கள் பாதுகாக்கப் படவேண்டும். கார்ப்பரேட் வரி, கடன் சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும், நிலுவைகள் அனைத்தும் கறாராக வசூலிக்கப்பட வேண்டும். மக்கள் நலத் திட்டங்கள் முன்னிலும் தீவிரமாகத் தொடரப்பட வேண்டும்.

Comment here...