பிராந்திய மொழி தெரியாத ஊழியர்களால் பாதிப்படையும் வங்கிச் சேவை

க.சிவசங்கர்

பொதுவாகவே மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய எந்த ஒரு துறையாக இருந்தாலும் அத்துறையில் பணிபுரிபவர்கள் குறிப்பிட்ட அந்த பகுதியைச் சார்ந்த மக்கள் பேசும் பிராந்திய மொழியைத் தெரிந்தவர்களாகவே இருக்க வேண்டும். அதுவும் மக்கள் சேவையை மட்டுமே பிரதானமாகக் கொண்ட வங்கித்துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்தத் தகுதி கூடுதலாகவே தேவைப்படுகிறது.

வாடிக்கையாளர் சேவை பாதிப்பு

வங்கிப் பணி என்பது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சேவை செய்ய வேண்டிய பணியாகும். வாடிக்கையாளர்களுடன் அவர்களின் தாய்மொழியில் பேசுவதன் மூலம் மட்டுமே அவர்களின் தேவையை அறிந்து கொண்டு சிறப்பாக சேவை செய்ய முடியும். ஆனால் இன்றைய சூழலில் வங்கிக் கிளைகளில் அந்த பகுதியின் பிராந்திய மொழி தெரியாதவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக தமிழகக் கிளைகளில் தமிழ் படிக்க, பேசத் தெரியாதவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து  கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கிகளில் அதிகாரிகள் பணி இடத்தில் தான் வெளி மாநில நபர்கள் இருப்பார்கள். ஆனால் சமீப வருடங்களாக முன் வரிசை (Front line staff) ஊழியர்கள் என்று சொல்லக்கூடிய எழுத்தர் பணி இடங்களிலும் வேறு மாநிலத்தவர்கள் பணிக்கு சேருவது அதிகமாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர் சேவை கடுமையாக பாதிக்கப்படுகிறது.

ஊழியர் பற்றாக்குறை

ஒருபுறம் ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து புதிய பெரிய அளவிலான வங்கிகளாக உருவாக்கிவிட்டு, அதற்கு தகுந்தாற்போல் வங்கிகளின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தாமல் விட்டதன் விளைவாகவும், கிளைகளின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் பணியாளர்களை நியமிக்காமல் விட்டதன் விளைவாகவும், ”பொதுத்துறை வங்கிகள் இன்றைய நவீன காலகட்டத்திற்கு ஏற்றவை அல்ல என்றும், பொதுத்துறை வங்கிகளுக்கு சென்றால் நமது தேவை குறிப்பிட்ட கால நேரத்திற்குள் பூர்த்தியாகாமல் நேர விரயம் ஏற்படும்” என்றும் பொதுமக்கள் மத்தியில் எண்ணம் உருவாகிறது.

இருதரப்புக்கும் இழப்பு

நகர்ப்புறப் பகுதிகளில் ஆங்கிலம் தெரிந்த வாடிக்கையாளர்களால் இந்த நிலைமையை ஒரளவு சமாளித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் பொதுத்துறை வங்கிக் கிளைகள் பெரும்பாலும் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் தான் அமைந்துள்ளன. இந்த நிலையில் கிராமப்புற வங்கிக் கிளைகளில் இந்த வெளிமாநில பணியாளர் விவகாரம் மிகப்பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்துகிறது. ”தான் என்ன சொல்கிறோம் என்பது குறித்த எந்த புரிதலும் இல்லாத ஊழியர்களிடம்” ஒரு வாடிக்கையாளரால் தனது தேவைகள் எதையுமே நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை.

கடன் கேட்க செல்லும் ஒரு வாடிக்கையாளர் அவரின் தொழில் பற்றி விளக்கி  சொல்லும் போது மொழி தெரியாத அதிகாரிகளால் அதைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு கடன் கொடுக்க முடியாத ஒரு நிலை உருவாகும். இதனால் அந்த வாடிக்கையாளர் கடன் பெற்று தொழிலை முன்னேற்ற முடியாத சூழலும், வங்கி வாடிக்கையாளரை இழந்து முன்னேற முடியாத  சூழலும் உருவாகிறது. இது இரு தரப்புக்கும் இழப்பையே ஏற்படுத்துகிறது. மேலும் வங்கிக் கிளைகளில் பல சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் எழுத்துப் பூர்வ கடிதம் அளிக்க வேண்டியது கட்டாயம். அந்த சூழலில் பிராந்திய மொழி தெரியாத ஊழியர்களால் அவற்றை புரிந்து கொள்ள இயலாது.

இத்துடன் எழுத்தர் பணியிடங்களிலும் மொழி தெரியாத வேற்று மாநில நபர்கள் பணியாற்றுவதால் மிக அடிப்படை பரிவர்த்தனைகளான பணம் எடுத்தல், செலுத்துதல், பாஸ்புக் பிரிண்ட் செய்தல் போன்ற சேவைகள் கூட வாடிக்கையாளர்களால் சரிவர பெற முடிவதில்லை. மேலும் ஏற்கனவே போதுமான ஊழியர்கள் இன்றி ஊழியர் பற்றாக்குறைகளால் பெரும்பாலான பொதுத்துறை வங்கிக் கிளைகள் தவித்து வருகின்றன. இதனால் பணியில் இருக்கும் ஒன்றிரண்டு சொந்த மாநில பணியாளர்களுக்கு கூடுதல் வேலைப் பளு ஏற்பட்டு, வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. சென்ற வருடம் நடைபெற்ற எழுத்தர்களுக்கான வங்கிப் பணியாளர்கள் தேர்வில் தமிழகக் கிளைகளுக்கு தேர்வானோரில் ஏறக்குறைய 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தமிழ் அல்லாத வேற்று மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பிராந்திய மொழி கட்டாயம் என்பது கைவிடப்பட்டு விட்டது

சில வருடங்களுக்கு முன்பு வரை வங்கி எழுத்தர் தேர்வு அறிவிக்கையில் குறிப்பிட்ட மாநிலத்திற்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் அந்த மாநில மொழியை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. மேலும் எழுத்தர் பணிக்கு நேர்முகத் தேர்வும் இருந்தது. அதில் தமிழில் எழுதி, படித்துக் காட்ட வேண்டிய கட்டாயமும் இருந்தது. ஆனால் தற்போது வங்கித் தேர்வுகளில் இந்த விதிகள் எதுவும் பின்பற்றப்படுவது இல்லை. மேலும் நேர்முகத்தேர்வும் இல்லை. இறகு மாநில மொழி தெரியாதவர்கள் மூன்று மாதத்திற்குள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு கற்றுக்கொள்ள இயலாதவர்கள் இன்னொரு மூன்று மாத அவகாசத்திற்குள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விதி இருந்தது. இதுவும் கூட குறிப்பிட்ட தேர்வர் பணியில் சேர்ந்த பிறகு நடைமுறையில் சரிவர கண்காணிக்கப்படுவதில்லை.

தற்போது அதுவும் கைவிடப்பட்டு விட்டது. ”பிராந்திய மொழி தெரிந்திருத்தல் விரும்பத்தக்கது” (desirable) என்று மாற்றி விட்டார்கள். பிராந்திய மொழி கட்டாயம் என்பது முற்றிலுமாக கைவிடப்பட்டு விட்டது. இதனால் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் உள்ள இதர மாநிலங்களில், இந்தி பேசும் மாநிலங்களில் மற்றும் குஜராத், மஹாராஷ்ட்ரா, வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் கூட அப்பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பிராந்திய மொழி தெரியாததால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே வங்கி நிர்வாகம் இதில் கண்டிப்புடன் இருந்து இதை கண்காணிக்க வேண்டும். வங்கிகளில் கடை நிலை ஊழியர் முதல் கிளை மேலாளர் வரை பிராந்திய மொழி தெரிந்தவர்களாக இருப்பதே வங்கிகளில் நல்ல சூழலை உருவாக்கும். அதுவே வாடிக்கையாளர் சேவைகளிலும் நல்ல பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.

2 comments

  1. அனைத்துத் தரப்பினரின் சிக்கல்களையும் சரியாக அலசியுள்ள கட்டுரை. பல துறைகளிலும் நிகழ்த்தப்படும் இந்த அநீதியின் நோக்கம் இந்தியாவின் ஒற்றை பிராந்திய மொழியாக இந்தியை அனைவரிடத்திலும் திணிப்பதே. குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்களை அலைக்கழிக்கும், அவர்கள் வேலை வாய்ப்புகளை பறிக்கும் அநீதி.

  2. காலத்தில் வந்திருக்கும் கட்டுரை. கனரா வங்கியில் கர்நாடக மாநிலத்திலுருந்து ஆந்திரா மாநிலத்திற்கான விருப்ப மாற்றல் 1000 ஊழியர்களுக்கு மேல் கொடுத்து காத்திருக்கிறார்கள்.

Comment here...