”நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் டெல்லி நோக்கி பேரணி”

செப் 5, 2022 விவசாயி தொழிலாளி சிறப்பு கூட்டு மாநாடு அறைகூவல்

நமது சிறப்பு நிருபர்

2018 செப்டம்பர் 5 அன்று நடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளி-விவசாயி போராட்டப் பேரணி (Mazdoor Kisan Sangharsh Rally) யின் நான்காம் ஆண்டுதினமான செப்டம்பர் 5, 2022 அன்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS), அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் (AIAWU) மற்றும் சிஐடியு (CITU) சங்கங்களின் மாபெரும் சிறப்பு கூட்டு மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது. 25 மாநிலங்களில் இருந்து 6000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். BEFI சங்கப் பிரதிநிதிகளும் அழைப்பின் அடிப்படையில் இம்மாநாட்டில் பங்கெடுத்தனர்.

மோசமான அழிவுப் பாதையில் நாடு

வீரமும், தியாகமும் செறிந்த சுதந்திரப் போராளிகளின் கனவுகளாக, 75 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், மக்கள் செல்வத்தில், கடும் உழைப்பில், உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை தற்போதைய ஒன்றிய அரசு எவ்வாறு அழித்து வருகிறது என்பதை கடும் வேதனையுடன் கூட்டு மாநாடு அவதானித்தது.

நாட்டின் வளமான சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சுரங்கங்கள், ராணுவ தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், டெலிகாம் டவர்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குழாய்கள், ரயில்வே, நெடுஞ்சாலை, விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், மின்சார வாரியங்கள், உருக்கு மற்றும் அஞ்சல் சேவைகள் என அனைத்தும் தேசிய பணமாக்கல் திட்டம் (National Monetisation Pipeline) மூலமாக அடி மாட்டு விலைக்கு மிகப்பெரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, உற்பத்தித் திறன், ஜனநாயகம், மதச் சார்பின்மை, கூட்டாட்சி அரசியல் அமைப்பு, அரசமைப்புச்சட்ட உரிமைகள், நாடாளுமன்ற நடைமுறைகள், நெறிமுறைகள் என அனைத்துமே கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.

கடந்த எட்டாண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அதிகரிக்கும் விவசாய நெருக்கடி, கிராமப்புற வேலையின்மை, நகர்ப்புறங்களில் குறைந்து கொண்டே வரும் ஊதியம் மற்றும் உண்மை ஊதிய மதிப்பு, ஏறும் விலைவாசி ஆகியவை நிலைமைகளை மிகவும் மோசமாக்கி வருகின்றன. சிறுபான்மையினர், பழங்குடியினர், பெண்கள், தலித்துகளுக்கு எதிரான வன்முறைக் கொலை வெறியாட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன.

அனைத்து அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளுக்கு சேவை வரி விலக்கில்லாமல் வசூலிக்கப்படும் அதே வேளையில் ஆடம்பரப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. பெரும் ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்கள், அம்பானி, அதானி வகையறாக்களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. செல்வ வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கூட்டுக் களவாணி கார்ப்பரேட் முதலாளிகள் பெற்ற 10.72 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வாராக் கடனாகத் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

கோடிக் கணக்கானவர்கள் வேலை இழந்துள்ள நிலையில், நிரந்தர வேலைகள் முற்றிலும் காணாமல் அழிக்கப்பட்டு ஒப்பந்த, தாற்காலிக (casual), வேலை முறைகளாக மாற்றப் பட்டிருக்கின்றன. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் வேலைகளுக்கான தேவை அதிகரித்துள்ள சமயத்தில், மோடி அரசாங்கம் 1.48 கோடி பேருக்கு வேலை அளிக்கவில்லை, அதற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, 1,498 கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்து உள்ளது.

நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (Labour Codes), மூலம், பல ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களின் விளைவாகப் பெற்ற தொழிலாளர் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. எட்டு மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு, சங்கம் வைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமை அனைத்தும் பறிக்கப் பட்டிருக்கின்றன.

இதன் மூலம் மக்கள் மீதான சுமைகள் மேலும் கூடும், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுகளுக்கும்  சாவு மணி அடிக்கப்படும். பல அரசுப் பணிகளில் அமலில் இருக்கும் ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் முறை கூட தனியாரிடம் தாரை வார்க்கப் படவிருக்கின்றன. “அக்னிபாதைத்” திட்டத்தின் மூலம் இராணுவத்திலும் ஒப்பந்த முறையைக் கொண்டு வந்து, இந்துத்துவா மதவெறி சக்திகளுக்குத் துணை செய்ய தனியார் இராணுவத்தை உருவாக்கிடத் திட்டமிடப் பட்டிருக்கிறது.

மாற்று உலகைப் படைப்போம்

நவதாரளமய, கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை, தங்கள் பிளவுவாதத் திட்டங்களை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல அரசு கடைப்பிடித்து வரும் நாடு தழுவிய கொடுந்தாக்குதல்களை மாநாடு வன்மையாகக் கண்டித்தது. அரசாங்கத்தின் மோசமான இந்தத் திட்டமிட்ட தாக்குதல்களை வரும் நாட்களில் முற்றாக எதிர்க்க மாநாடு தீர்மானித்தது.

2022 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாநாட்டின் கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.  2023 ஜனவரியில் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு மாநாடுகள், துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள், குழுக் கூட்டங்கள், கோரிக்கைப் பிரச்சாரப் பயணங்கள் (ஜாதாக்கள்), பேரணிகள் நடத்திட வேண்டும். நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வு நடக்கும்போது தலைநகர் டில்லி நோக்கி மாபெரும் பேரணிக்குத் திட்டமிடப் பட்டுள்ளது.

கோரிக்கைகள்:

  • அனைவருக்கும் குறைந்த பட்ச மாத சம்பளம் ரூ.26000/-
  • அனைத்து தொழிலாளிகளுக்கும் குறைந்த பட்ச மாத பென்சன் ரூ.10000/-
  • விவசாயப் பொருட்களுக்கு உற்பத்தி செலவைப்போல் 150% வழங்கிடுக
  • நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்க
  • மின்சார திருத்த மசோதா 2020 ஐ ரத்து செய்க
  • மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களுக்கும், நகர்புறத்திற்கும் ஒரு நாள் ஊதியம் ரூ.600 வழங்கி விரிவாக்குக
  • ஏழை நடுத்தர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளிகளூக்கு ஒரு முறை கடன் ரத்து செய்திடுக

நாட்டைப் பாதுகாத்திட, மக்களைப் பாதுகாத்திட சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மேற்கொண்டுள்ள இந்த அறைகூவலுக்கு நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு, ஜனநாயக மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்கள் அனைவரும் தங்கள் ஆதரவை அளித்திட வேண்டும் என்றும் சிறப்பு மாநாடு கேட்டுக் கொண்டுள்ளது.

Comment here...