திருப்பதி தொழிலாளர் மாநாடு
முதலாளிகளுக்கு வெகுமதி… தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு…

எஸ். கண்ணன்

இந்திய நாடாளுமன்றத்தில் அடிப்படை ஜனநாயக மாண்புகள் நசுக்கப்பட்டு, நிறைவேறிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள், இந்திய தொழிலாளர் மாநாட்டில், இந்திய தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக மத்திய தொழிற்சங்கங்கள் பங்கேற்பதை தடுத்துள்ளது. நிராகரிப்பதற்கான எழுதப்படாத சட்டம் திருப்பதியில் இந்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தால் அமலாக்கப்பட்டுள்ளது. 47 வது இந்திய தொழிலாளர் மாநாட்டில், மொத்தமாக தொழிலாளர் உரிமைகளை, கோரிக்கை வைக்கும் வாய்ப்பை பறிக்கும் நோக்கத்துடன், பாஜக ஆட்சியாளர்களால், தொழிற்சங்கங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இம்மாநாட்டில், முதலாளிகளின் பிரதிநிதிகளும், அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். ஆனால் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு எந்த அழைப்பும் கிடையாது.

46 மாநாடுகள் நடந்துள்ளன

1942 முதல் இந்திய தொழிலாளர் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1919ல் துவங்கப்பட்டு ”ஜனநாயக ரீதியிலான செயல்பாடுகளை உறுதி செய்ய, தொழிலாளர்கள் தாங்கள் சந்திக்கும், சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து உரையாட அனுமதிக்க வேண்டும்” என்பதை தனது நோக்கமாக அறிவித்தது. அதன் உறுப்பினராக உள்ள நாடுகள் இந்த உரையாடலை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியது. அந்த பின்னணியில் இந்தியாவில் 1942 முதல் 2015 வரை 46 மாநாடுகள் நடந்துள்ளன.

47வது மாநாடு

இந்த தொழிலாளர் மாநாடுகளில் “ஒன்றிய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறையின் அமைச்சர், அதிகாரிகள், மாநில அரசின் பிரதிநிதிகள், இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் என முத்தரப்பினரும் பங்கேற்பர். இதன் காரணமாகவே இந்த மாநாடு, முத்தரப்பு மாநாடு என்று அழைக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கார், வி.வி. கிரி, குல்சாரி லால் நந்தா உள்ளிட்டோர் அமைச்சர்களாக இருந்த பலரும், வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், ஏ.பி. வாஜ்பாயி, மன்மோகன் சிங் போன்ற பிரதமர் பொறுப்பில் இருந்தோரும் மாநாட்டினை துவக்கி வைத்து அல்லது பங்கேற்று பேசி உள்ளனர். ஆகஸ்ட் 25 மற்றும் 26 தேதிகளில் நடைபெற்ற 47 வது தொழிலாளர் மாநாட்டை பிரதமர் மோடி, காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்துள்ளார்.

எது ஆற்றல்படுத்துதல்?

பிரதமர் மோடி தனது துவக்க உரையில், தொழிலாளர் சட்ட திருத்தங்கள், தொழிலாளர்களை ஆற்றல் படுத்தும் என பேசி உள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகள் அழைக்கப்படாதது, தொழிலாளர்களை ஆற்றல் படுவதற்கான செயல் தானா? ஆற்றல் படுத்துவது என்றால் என்ன? சமூக நிலையில் பின் தங்கி உள்ள ஒருவர் தனது கருத்தை எடுத்துரைக்கும் துணிவு பெறுவது; தனது சமூக நிலையை மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை மற்றவர்களை போல் தொழிலாளரும் பெற அனுமதிப்பது; அவ்வாறு பெறுவதற்கான கூட்டு பேர உரிமை என்ற ஜனநாயக மாண்புகளுக்கான வாய்ப்பினை பெறுவது; ஒருவேளை அத்தகைய கூட்டு பேர உரிமை மறுக்கப்படுமாயின், அதை போராடிப் பெறும் உரிமையோடும், வலிமையோடும் செயல்பட அனுமதிப்பது. ஆனால் இவை அனைத்தும் இன்று மறுக்கப்படுகிறது. பின்னர் எப்படி பிரதமர் மோடியின் கூற்றுப்படி, தொழிலாளர்கள் ஆற்றல்படுத்தப்படுவார்கள்?

தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வார விடுப்பு, மருத்துவ விடுப்பு, இதர சமூக பாதுகாப்பு சட்டங்கள் போன்ற எதுவும் தானாக கிடைக்கவில்லை. மாறாக போராடியும், வாதாடியும் பெற்றவை. வாதாடுவதற்கான வாய்ப்பு, இந்திய தொழிலாளர் மாநாடுகளில் கடந்த காலங்களில் வழங்கபட்டது. அது ஒரு சில பயன்களையும் அளித்தன. தற்போது பாஜக ஆட்சியின் தொழிலாளர் கொள்கை, வாதாடும் வாய்ப்பினை முற்றாக மறுத்துள்ளது. அரசரிடம் குறைகளை எடுத்துரைக்க அன்றைய மக்கள் தயங்கியது போல், இன்றைய கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்காக வாதாடும் அரசாங்க பிரதிநிதிகள் முன்பு, தொழிலாளர் என்ற நிலையில் உள்ள பொது மக்கள் வாதாடும் வாய்ப்பை இழக்கின்றனர். எனவே தான் ஜனநாயகம் இந்த பெரு நிறுவனங்களாலும், அதை ஆதரிக்கும் ஆட்சியாளர்களாலும் நூறாண்டுகள் பின்னுக்கு தள்ளப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் தொழிலாளர் சட்டங்கள் பற்றி விவாதிக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

பெரு நிறுவனங்களுக்கான அரசு
தாராளமய கொள்கைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கும், அரசு சொத்துக்களையும், இயற்கை வளங்களையும் சூரையாட தாராளமாக அனுமதிக்கிறது. அவ்வாறு அனுமதிக்க தடையாக இருக்கும் அமைப்புகளையும், குழுக்களையும், நபர்களையும் அழிக்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபடுகிறார்கள். ஜனநாயகம் பேசும் நாட்டில், மேற்படி ஜனநாயக உரிமைக்காக போராடும் அமைப்புகளின் வலிமையை குறைக்க சட்ட நடவடிக்கைகளில் உள்ள வாய்ப்புகள் கட்டுபடுத்தப் பட்டு பின் நிராகரிக்கப் பட்டு வருகிறது. முதலாளிகளுக்கு தாராள அனுமதியும், தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடும், தொடர்ந்த நிராகரிப்பும் தான் மூலதன குவிப்பிற்கு வழிவகை செய்யக் கூடியதாக இருக்கிறது. பெரு நிறுவனங்களின் இந்த தேவையை நிறைவேற்றும் வகையிலேயே, மேற்படி நகர்த்தல் அனைத்தையும் பாஜக ஆட்சி செய்து வருகிறது.
தொழிலாளர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?

திருப்பதியில் நடந்த மாநாட்டில் தொழிற்சங்க பிரதிநிதிகள் அனுமதிக்கப் பட்டு இருந்தால், வாய்ப்பு வழங்கப்பட்டதாக கருதலாமா என்றால் அது பெயரளவிற்காக அரங்கேறி இருக்கும். இப்போது பெயரளவிற்கு கூட அனுமதிக்காத செயலுக்கு காரணம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக கார்ப்பரேட் நிறுவன ஆதரவாளர்கள் இருப்பதும் தொழிலாளர் பிரதிநிதிகள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதும்தான். தற்போது தொழிலாளர் மாநாட்டில், முதல முறையாக தொழிலாளர் பிரதிநிதிகளுக்கான அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது என்பதை தொழிலாளி வர்க்கம் உணர வேண்டும்.

நவ தாராளமய பொருளாதாரக் கொள்கையை அமுலாக்கமாக்கும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பல சட்டங்கள் ஆளும் கட்சியின் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்படுகின்றன. மறுபக்கம் மேற்படி தாராள அனுமதியை தடுக்கும் சக்திகளாக உள்ள தொழிற்சங்கங்களின் ஜனநாயக செயல்பாடுகள் ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப் படுகின்றன. அதாவது தொழிற்சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி, மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்படுகின்றன. வளர்ச்சி என்னும் மாயை வலைக்குள், அதிக எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்கத்தினர் சிக்கிக் கொள்கின்றனர். எனவே திருப்பதியில் தொழிற்சங்க அமைப்புகளுக்கு மூடப்பட்ட கதவு சாதாரணமான நிகழ்வல்ல என்பதை உணர வேண்டும்.

அரசியல் உணர்வாக வளர வேண்டும்
அது தொழிற்சங்க உணர்வாக மட்டுமல்லாமல், அரசின் நவ தாரளமய கொள்கைகளுக்கு எதிராகவும், கொள்கைகளுக்கு பின் உள்ள அரசியலை அம்பலப்படுத்துவதாகவும் வளர வேண்டும். பிரிட்டிஷ் காலனியாதிக்க எதிர்ப்பு, 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் போராட்டங்களாக இருந்தன. அதன் விளைவு பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்களே, இந்திய தொழிற்சங்க சட்டம் 1926 ஐ இயற்ற வேண்டிய சூழலும், 1942 முதல் இந்திய தொழிலாளர் மாநாடு நடத்த வேண்டிய சூழலும் உருவாகியது. இதன் தொடர்ச்சியாக ஒரு கட்டத்தில் நாட்டை விட்டு வெளியேறவும் நிர்பந்திக்கப் பட்டனர். இன்று மீண்டும் நவ காலனியாதிக்கத்தை நோக்கி ஆட்சியாளர்கள் செல்கின்றனர். தொழிலாளர் உரிமை, உழைக்கும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது அதன் துவக்கமே என்பதை உணர்வதும், அதற்கெதிராக போராடுவதும் சமூக வளர்ச்சிக்கான அடிப்படை தேவையாகும்.

One comment

  1. இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான, ஊழியர்களால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு கட்டுரை. தொழிலாளி வர்க்கம் கடந்து வந்த பாதையையும் தாம் ஆற்ற வேண்டிய எதிர்கால கடமைகளையும், அரசின் கொள்கைகளையும் மிக தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். தொழிலாளி வர்க்கம் தங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள, தங்களுக்கு எதிரான கொள்கைகளை தடுத்திட போராடுவதற்கு தயாராக வேண்டிய எச்சரிக்கை மணியை கட்டுரையாளர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அதன் வழியே பயணிப்போம்.

Comment here...