தொலை தொடர்பு துறையில்
பெரு முதலாளிகளுக்கு அளிக்கும் சலுகை இலவசம் ஆகாதாம்

டி.ரவிக்குமார்

”ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி
கடிதம் போட்டானாம் வெள்ளக்காரன்”

இது விடுதலைப் போருக்கு மக்களை இழுக்க ஒலித்த பாடல்.
வெள்ளைக்காரனை விரட்டி சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும்
அதே அவல நிலை தொடர்கிறது. அன்று பயனடைந்தவர்கள் அயல்நாட்டவர்கள். இன்று பயனடைபவர்கள் சுதந்திர நாட்டின் இந்திய பெருமுதலாளிகள்.
காற்றில் உள்ள அலைகளை கூறுபோட்டு தன் கைக்குள் அடக்கமாக்கி கொள்ளை லாபம் அடிப்பவர்கள் இன்று 5ஜி அலைக்கற்றையை ரூ.1,50,000 கோடிக்கு ஏலம் எடுத்திருக்கிறார்கள். ஏலம் முடிந்த உடனே அதில் பங்கு பெற்ற நிர்வாகி அரசுக்கு சான்றிதழ் வழங்குகின்றார் ‘இது போல் பிர்ச்சனையே இல்லாத ஏலத்தை’ நான் பார்த்ததே இல்லை என்று.

No fuss, no follow up, no running around the corridors and no tall claims. This is ease of doing business at work in its full glory. In my over 30 years of first-hand experience with the DoT (Department of Telecommunications), this is a first! Business as it should be,” Mittal said in a statement on Thursday

ஒய்யார கொண்டையாம்……..
7 நாட்கள் நடைபெற்ற நாற்பது சுற்று ஏலத்திற்கு பின்னர் நான்கு கம்பெனிகள்
ஏலத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மொத்த ஏலத் தொகையான ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயை 20 வருட தவணையில் அளிக்கலாம் என்று தொலைத் தொடர்புத் துறை அறிவித்தது. பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது நான்கு வருட ஏலத் தொகையான 8312 கோடி ரூபாயை ஒரே தவணையில் செலுத்தியுள்ளது. இதற்கு ஊடகங்கள் ஏர்டெல் நிறுவனத்தை பாராட்டி தள்ளியுள்ளனர்.
இந்த தொலைத்தொடர்பு நிறுவன முதலாளிகளின் சரித்திரம் என்ன? BSNL கம்பங்களிலிருந்து கொக்கி போட்டு ஒயர் இழுத்தவர்கள்; 2003 லிருந்து இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உரிமைக் கட்டணமாகவும், ஸ்பெக்ட்ரம் ஏலக் கட்டணமாகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அரசுக்கு உரிய நேரத்தில் செலுத்தாமல் காலந்தாழ்த்தியவர்கள்; வெவ்வேறு காரணங்களை கூறி தொடர்ந்து வழக்குகள் வாயிலாக இந்தத் தொகையை அரசுக்கு செலுத்தாமல் தள்ளிப் போட்டு கொண்டே வருபவர்கள்; இடையில் தொலைத் தொடர்பிற்கான உரிமக் கட்டணத்தை 15 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகவும் பின்பு அதையே 7 சதவீதமாகவும் அரசு குறைத்த போதும் உரிமத்தொகையை கட்டாதவர்கள் இவர்கள்.

இறுதியாக 2019 அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் இந்த பகாசுர கம்பெனிகளின் வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து, அரசுக்கு சேர வேண்டிய உரிமத்தொகையும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தொகையுமான ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாயை ஜனவரி 2020ற்குள் செலுத்த உத்தரவிட்டது. இடையில் அரசு அவர்களுக்கு சாதகமாக உரிம நிலுவைத் தொகையை 20 வருடங்கள் தவணையில் செலுத்தலாம் என்ற சலுகையை நீதிமன்றத்தில் முன்வைத்தது.

உச்ச நீதிமன்றம் தவணை வருடங்களை 10 ஆக குறைத்து தீர்ப்பளித்தது. இந்த தவணைத் தொகை 01.04.21 லிருந்து செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கும் மசியவில்லை இந்த கம்பெனிகள். உரிமக் குறியீட்டு முறைகளில் பல குறைபாடுகள் இருப்பதாக மீண்டும் நீதிமன்ற கதவைத் தட்டின. 2021 ஜூலையில் இந்த வழக்குகளையெல்லாம் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இதற்கு மேல் இந்த பிரச்சனைகளில் வழக்குகள் வரக்கூடாது என்று கண்டிக்கவும் செய்தது.
இந்த நிலுவைத் தொகை 2018-19 நிதியாண்டு வரை
பாரதி ஏர்டல் ரூ. 31,280.00 கோடி
வோடாபோன் ரூ. 59,236.63 கோடி
ரிலையஸ் ஜியோ ரூ. 631.00 கோடி
ரிலையஸ் கம்யூனிகேஷன் ரூ. 25,194.58 கோடி
ஏர்செல் ரூ. 12,389.00 கோடி

என்று மார்ச் 30, 2022 அன்று பாரளுமன்றத்தில் மத்திய நிதி இணை அமைச்சர் தேவுசின்ஹ் சொஹான் தெரிவித்துள்ளார்.
இந்த கம்பெனிகளில் ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஏற்கனவே உள்ள நிலுவைத்தொகையில் வெகு குறைந்த அளவே செலுத்தியுள்ள இந்த நிறுவனங்களுக்கு மேலும் சலுகை அளிக்கும் விதமாக இந்த நிலுவைத் தொகையை நான்கு வருடங்கள் செலுத்த வேண்டாம் என்று ஒன்றிய அரசாங்கம் செப்டம்பர் 2021 ல் அறிவித்துள்ளது.
வணிகத்தில் ஈடுபடுவது அரசாங்கத்தின் வேலை இல்லை என்று வாதிடுகிற பாஜக அரசு, வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ.16000 கோடி வட்டிக்கு பதிலாக நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனத்தின் 35.8% பங்குகளை வாங்கியது
ஏதோ ஒரு வழியில் அரசுக்கு தன்னுடைய வருமானத்தில் செலுத்த வேண்டிய உரிமம்/கட்டண தொகைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வரும் இந்த நிறுவனங்களில் ஒன்றுதான் தற்போதைய 5ஜி ஏலத் தொகையில் நான்கு வருட தவணைத் தொகையை ஒரே வருடத்தில் செலுத்தி விட்டதாக பெருமை அறிக்கை வெளியிடுகின்றது, பழைய கதைகளையெல்லாம் மறந்து ஊடகங்களும் இவர்களை தூக்கிப் பிடிக்கின்றன.
நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த நிலுவைத் தொகை என்னவாகும்?
அடுத்த 5ஜி அலைக்கற்றை தவணை என்னவாகும் ?

சாதாரண மற்றும் ஏழை மக்களின் நிலுவைத் தொகைகளையெல்லாம் கழுத்தில் கத்தி வைத்து வசூலிப்பவர்கள் – ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் ஒரு சில சலுகைகளை ’இலவசம்‘ என்று கொச்சைபடுத்தி பறிக்க திட்டம் போடுபவர்கள் இந்த கோடிக்ககணக்கான ரூபாய் நிலுவைத் தொகையினை முறையாக வசூலித்தால் எவ்வளவு மக்கள் நலத்திட்டங்கள் போடலாம்? சாதாரண மக்கள் சுமக்கும் எவ்வளவு வரிகள் குறைக்கப்படலாம்? ஆட்சியாளர்களை இந்த திசை வழியில் செல்ல நாம் நிர்ப்பந்திக்க வேண்டாமா?

2 comments

  1. பொது தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நடைபெறும் தனியார்மைய முயற்சிகள் தான் ஒவ்வொரு பொது துறைகளிலும் ஒவ்வொரு விதமாக அரங்கேறி வருகிறது. இதுவே ஆட்சியாளர்களின் கடமையாக கொள்கைகளாக வைத்துள்ளார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளின் லாபவெறி மக்களுக்கு மக்களின் நலன்களுக்கு எதிராகத்தான் செயல்படும் என்பதை ஆசிரியர் விளக்கமாக எடுத்துவந்துள்ளார். வாழ்த்துக்கள்.

  2. இந்திய மக்களின் செல்வங்களை, கார்ப்பரேட் முதலாளிகள் தங்களுக்குள்ளே ஏலமிட்டு அற்ப காசுகளுக்கு கையகப்படுத்தும் கொள்ளை, இது !

Comment here...