வங்கிகள் தனியார்மயமாக்கலினால் வரும் பெரும் ஆபத்து

பகுதி – 1

ஆங்கில மூலம்: பிரபாத் பட்நாயக்

தமிழில்: ஜேப்பி

பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றையாவது தனியார்மயமாக்க நினைக்கும் அரசின் திட்டத்திற்கு அடிப்படை ஆட்சேபனைகள் உள்ளன. இந்த ஆட்சேபனைகள் “வங்கிக் கடன் வழங்கல் முறை” முற்றிலும் மாற்றப்படும் என்ற உண்மையின் அடிப்படையில் இருந்து எழுபவை. அதாவது வங்கிக் கடன்கள் 1) உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து விலகி ஊக வணிகத்திற்கும்; 2) விவசாய உற்பத்தியிலிருந்து விலகி பெரு வணிகத்திற்கும் (இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் ஆபத்தான பாதிப்புகள் ஏற்படும்); மற்றும் 3) உள்நாட்டுப் பயன்பாட்டிலிருந்து விலகி அந்நிய நாடுகளுக்கும் செல்லும். இந்த ஆட்சேபனைகள் நன்கு அறியப்பட்டவை, அதிகம் விவாதிக்கவும் பட்டவை. மேலும் 2008 இன் அமெரிக்க “சப்-பிரைம்-கடன் நெருக்கடியினால்” இந்திய பொதுத்துறை வங்கிகள் பாதிக்கப்படவில்லை என்ற உண்மை இந்த ஆட்சேபனைகளின் பொருத்தப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால், ஒட்டு மொத்த தேச நலனைக் கைவிட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெருவணிகத்தை மகிழ்விப்பதிலேயே அதிக அக்கறை எடுத்து வரும் ஒன்றிய அரசாங்கம், எதிர்பார்த்தபடியே இந்த ஆட்சேபனைகளைப் புறந்தள்ளுகிறது. ஆயினும், இங்கு இந்த ஆட்சேபனைகளை மீண்டும் வலியுறுத்துவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. வங்கிகளின் தனியார்மயமாக்கலின் விளைவாக  ஏற்படும் மற்றொரு தீவிர ஆபத்தை சுட்டிக்காட்டுவது தான் இதன் நோக்கம். இது வரையில் இந்த ஆபத்து பற்றி குறைவாகவே விவாதிக்கப்பட்டுள்ளது. இது நமது நாடு அறவே புறக்கணிக்கப்பட முடியாத ஆபத்தாகும்.


அரசாங்கத்தால் தொழில்கள் மேலாண்மை செய்யப்பட்ட காலத்தில், வங்கிக் கடன்கள் பிரதானமாகக் குறுகிய காலக் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே வழங்கப்பட்டன. அதாவது, வர்த்தக நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள் சரக்குகளை வாங்கிச் சேர்க்கத் தேவைப்படும் குறுகிய கால நிதிக்கென கடனுதவியளிப்பதாகவே இருந்தது.  நிலையான மூலதனம் உருவாக்கத் தேவையான நீண்ட காலக் கடனுதவிகள் இந்த நோக்கத்திற்காகவே அமைக்கப்பட்ட சிறப்பு நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு நிதி நிறுவனங்கள் அரசாங்க ஆதாரங்களில் (இந்திய ரிசர்வ் வங்கியின் லாபம் போன்றவை) இருந்து தான் தங்கள் நிதியைப் பெற்றன.  அவ்வாறு பெற்ற பணத்தை வைத்து இந்தச் சிறப்பு நிதி நிறுவனங்கள், மிகக் குறைந்த வட்டி விகிதத்தில், வங்கிகள் வசூலிக்கும் விகிதங்களை விடக் குறைவாகவும், பெரும்பாலும் எதிர்மறையான (negative interest rates)  வட்டி விகிதங்களில் (அதாவது வசூலித்த பெயரளவு வட்டி விகிதங்கள் பணவீக்க விகிதத்தை விட குறைவாக இருந்தன) நீண்ட காலக் கடன்களை முதலீட்டை ஊக்குவிப்பதற்காக வழங்கின.

“தாராளமயமாக்கல்” செயல்பட ஆரம்பித்த பின் இந்தச் சிறப்பு ஏற்பாடு முற்றிலும் மாற்றப்பட்டது. பழைய வடிவில் இருந்த முந்தைய சிறப்பு நிதி நிறுவனங்கள்  மறைந்து விட்டன (ஐடிபிஐ சிறப்பு நிதி நிறுவனம் ஒரு வணிக வங்கியாக மாறியதைப் போல). இந்த மாறுதல்களால் தொழில் நிறுவனங்கள் தங்கள் நீண்ட கால நிதித் தேவைகளை மூலதனப் பங்குச் சந்தையின் மூலம் பெற வேண்டும் என்றானது. அதே போல மறையாமல் தப்பித்த சில சிறப்பு நிதி நிறுவனங்களும் நீண்ட காலக் கடன் வழங்குவதற்கு அரசு ஆதாரங்களுக்குப் பதில் இதே முறையில் மூலதனப் பங்குச் சந்தையில் தான் தங்களின் நிதியைத் திரட்ட வேண்டும் என்றானது. ஆனால் பின்னாளில், ஒரு “முதலீட்டுத் திட்டம்” போதுமான இலாபம் ஈட்டவில்லை என்றாலோ அல்லது மிகவும் அபாயகரமானது என்றாலோ, நீண்ட கால கடன்களைப் பெறுவதற்குக் கூட முதலாளிகள் மூலதனப் பங்குச் சந்தையை அணுகுவதற்குப் பதிலாக, பொதுத்துறை வங்கிகளை அணுகத் தொடங்கினர்.  அரசு கொடுத்த அழுத்தத்தினால் கடைசியில் பொதுத்துறை வங்கிகள் பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்கு நீண்ட கால கடன்களை, குறிப்பாக உள்கட்டமைப்புக்காக, வழங்க ஆரம்பித்தன. இவ்வாறு அரசு தான் நினைத்தபடி, நீண்ட காலக் கடன்களைக் கொடுப்பதற்கு பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு கொடுத்த கடும் நிர்ப்பந்தத்தின் விளைவாக,  பொதுத்துறை வங்கிகள்  வரவிருக்கும் ஆபத்தை தாங்கி நிற்கும் வரவு-செலவு கணக்குகளைக் (Balance Sheets) கொண்ட நிறுவனங்களாக மாறின.

எக்கணமும் பொது மக்களால் உடனடியாகத் திரும்பப் பெறக்கூடிய குறுகியகால-தாற்காலிக-கேட்பு வைப்புத் தொகைகளிலிருந்து வங்கிகளுக்கு நிதி ஆதாரம் கிடைக்கின்றது.  இந்தத் தாற்காலிக வைப்புக்களிலிருந்து கணிசமான பகுதி நீண்ட காலக் கடன்களை வழங்குவதற்குப்  பயன் படுத்தப்படுகிறது. அதாவது குறுகிய / தாற்காலிக நிதி நீண்ட காலக் கடனாக மாற்றப் படுகிறது.  இதனால் வங்கிகள் பணப்புழக்க நெருக்கடியில் (liquidity crisis) சிக்கிக் கொள்ள சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. பல டெபாசிட்தாரர்கள் சடாரென்று முடிவு செய்து ஒரு சேர அவர்களின் வைப்புத் தொகைகளை திரும்பப் பெற ஆரம்பித்தால், வங்கி மிகப் பெரிய பண நெருக்கடியில் சிக்கித் தகர்ந்து போகும். ஒரு சில டெபாசிட்தாரர்கள் மட்டும் கூட வைப்புத் தொகையை திரும்பப் பெற முயற்சித்தாலும், வங்கி நெருக்கடியில் இருக்கிறது என வாய் மொழி வார்த்தை வாடிக்கையாளர்களிடம் பரவி மற்றவர்களும் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறக் கேட்டால் உண்மையான திவாலாகும் நெருக்கடியில் வங்கி சிக்கிக்கொண்டு சரிவைச் சந்திக்கும். குறுகிய கால வைப்பு நிதியைக்  கொண்டு குறுகிய காலக் கடன் வழங்கினால் மட்டுமே பொதுவாக இத்தகைய பண நெருக்கடி சாத்தியக் கூறுகளை, குறுகிய காலக் கடன்களை நஷ்டமில்லாமல் வசூல் செய்து, எதிர் கொள்ள முடியும். வங்கிக்கு ஏற்படும் சரிவு அபாயமும் குறைக்கப்படுகிறது. ஆனால், நீண்ட காலக் கடன்களின் உடனடி வசூலும், “மதிப்பு நஷ்டம்” ஏற்படாத வசூலும் சாத்தியம் இல்லை. ஆகையால் திடீரென்று ஏற்படும் “வைப்பு நிதி திரும்பப் பெறுதல் ஓட்டத்தைச்” சமாளிப்பது மிகவும் கடினமாகிறது.

பொதுத்துறை வங்கிகள் நீண்ட கால சொத்துக்களின் அடமானத்தில் மட்டும் நீண்ட காலக் கடனை  வழங்கவில்லை. பெரும்பாலான கடன்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகக் கொடுக்கப்பட்டவை. உள்கட்டமைப்பு திட்டங்களில் உடனடி இலாபம் கிடைக்காது; திட்டங்களை எதிர்பார்த்த நேரத்திலும் திட்டமிட்ட செலவிற்குள்ளும் பொதுவாக முடிக்க முடியாது. அதனால், இலாபம் காண மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். உண்மையில்  வங்கிகளின் “செயல்படாத சொத்துக்களின்” பெரும்பகுதி உள்கட்டமைப்பிற்கு வழங்கிய கடன்களாக இருப்பதில் ஆச்சரியம் இருக்க முடியாது. மேலும் சில கடன்கள் அதிகாரபூர்வமாக “வாராக் கடன்களாக” வகைப்படுத்தப் படாவிட்டாலும் கூட, “சிரமத்தில் உள்ள சொத்துக்கள் (Stressed Assets)” என்ற வகையின் கீழ் வரும். இவ்வாறு அரசாங்கத்தால் பொதுத்துறை வங்கிகள் நீண்ட கால கடன்களை மட்டும் அல்ல “சிரமத்தில் உள்ள கடன்களை” வழங்கவும் நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளன. ஆகையால் உண்மையில் வங்கிகள் எந்த நேரமும் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ள எரிமலையின் மேல் இருக்கின்றன என்று தான் கூற வேண்டும்.

… இக்கட்டுரையின் இறுதிப் பகுதி அடுத்த வாரம் வெளி வரும்

நன்றி: பீபிள்ஸ் டெமாக்ரசி பத்திரிகை

Comment here...