கிராம வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை நாடு தழுவிய வேலை நிறுத்தம்.

இ.பரிதிராஜா

நாட்டில் உள்ள 43 கிராம வங்கிகளில் 49% பங்குகளை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஒன்றிய அரசு இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (All India Regional Rural Bank Employees Association – AIRRBEA) அறைகூவலுக்கிணங்க 2022 செப்டம்பர் 23ஆம் தேதி 70000க்கும் மேற்பட்ட கிராம வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் பட்டியல்.
இந்தியாவில் 43 கிராம வங்கிகள் அனைத்திலும் வணிகமும், சேவை முறைகளும் கிராம மக்களின் சேவை என்ற ஒரே தன்மையுடன் உள்ளது. கிராம வங்கிகளில் தனியார் மூலதனம் உள்ளே வந்தால் அவர்களின் சேவையின் நோக்கம் சிதைந்து போகும் என்பதை உணர்ந்து கிராம வங்கி ஊழியர்கள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

வேலைநிறுத்த ஆயத்தம்:

அனைத்து கிராம வங்கிகளிலும் கோரிக்கை நாள் அனுசரிப்பு, தலைமை அலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம், டெல்லியில் நாடாளுமன்ற வீதியில் தர்ணா என போராட்ட தயாரிப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றோடு அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியாக நாடெங்கிலும் சுமார் 76 நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கைகளை விளக்கி மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமிகு. கனிமொழி, ஜெயக்குமார், சு.வெங்கடேசன் மற்றும் திருமாவளவன் ஆகியோரையும், மாநில அமைச்சர்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தலைவர் திருமிகு கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திருமிகு முத்தரசன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமிகு கோபண்ணா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கிராம வங்கிகளை பாதுகாக்கும் முயற்சிக்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது.


கோரிக்கையின் முக்கியத்துவம்:

போராட்ட கோரிக்கைகள் முக்கிய கோரிக்கை ”கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்காதே” என்பதே. அதுதான் பிற கோரிக்கைகளுக்கு அடிப்படையானதாகவும் இருக்கிறது.
கிராம வங்கிகளின் பங்குகள் சந்தையில் விற்கப்பட்டு, தனியார் முதலாளிகள் கிராம வங்கியின் இயக்குநர் குழுவில் புகுந்து விட்டால், அவர்கள் கிராம வங்கிகளை, அவர்களின் ஊழியர்களை, அலுவலர்களின் முதலீட்டு லாபத்தை பெருக்கும் இயந்திரங்களாக மட்டுமே கருதுவார்கள். பதினோராவது இருதரப்பு ஒப்பந்தப்படி அலவன்சுகள், சலுகைகள் வழங்குதல், வணிகவங்கிகளில் இருப்பது போன்று பதவி உயர்வு மற்றும் பணிச்சூழல் நிலைமைகளை கிராம வங்கிகளிலும் அமல்படுத்துதல், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், அனைவரையும் பழைய பென்சன் திட்டத்தில் இணைத்தல், தற்காலிக ஊழியர்களை செய்தல் போன்ற போராட்டத்தின் பிற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான வாய்ப்பு, நிரந்தர கிராம வங்கிகள் பொதுத்துறையில் நீடித்தது இருக்கும். தனியார்மயமானால், இந்த கோரிக்கைகள் அனைத்தும் அடிபட்டுப்போகும்.
வேலைநிறுத்தம் வெற்றி!
AIRRBEAவின் அறைகூவலுக்கிணங்க நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தால் நாடெங்கிலும் உள்ள 22000க்கும் மேற்பட்ட கிளைகளில் ஆகப் பல கிளைகள் முழுவதுமாக இயங்கவில்லை. வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. மேலும், வேலைநிறுத்த நாளன்று அனைத்து கிராம வங்கி தலைமை அலுவலகங்கள் முன்பாகவும், மண்டல அலுவலகங்களின் முன்பாகவும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செப்டம்பர் 23 அன்று சேலத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான அலுவலர்கள், ஊழியர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள் ஒன்றிய அரசு, தன் முடிவை கைவிட வலியுறுத்தி விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பினர்.
கிராம வங்கிகளை பாதுகாக்க AIRRBEA சமரசமில்லாத போர் குணத்துடன் இந்தப் போராட்டத்தை துவக்கியுள்ளது. செப்டம்பர் 23 வேலைநிறுத்தம் அந்த வகையில் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் தாக்கம் மற்ற தொழிற்சங்கங்களையும் நிச்சயம் ஈர்க்கும். அரசின் ஒன்றிய தனியார்மய முயற்சியை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டம் மேலும் வலுவுடன் தொடரும்.

Comment here...