ஏழைத் தாயின் நேர்மை          

மித்ரன்

பொதுத்துறை வங்கியில் காசாளராக பணிபுரியும் எனக்கு நேற்று தந்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். நேற்றைய தினம் பணபரிமாற்றம் முடிந்து Cash tally செய்யும் போது Rs.3000 / குறைந்தது. அனைத்து புள்ளிவிவரங்களையும் சரி செய்து 7 மணிக்கு மேல் எனது கையிலும் பணமில்லாமல் நண்பர் ஒருவரிடம் வாங்கி Rs. 3000 /போட்டு Cash tally செய்து வீடு வந்து சேர்ந்தேன். மனம் ஏனோ தத்தளித்தது. சரியாகத் தானே நமது வேலையை செய்தோம் என்று ஒப்பீட்டுக் கொண்டிருந்தேன்.

மறுநாள் காலை அலுவலகம் சென்றவுடன் மறுமுறை சரிபார்ப்போம் என்று Challan அனைத்தையும் சரிபார்க்கும் போது லதா என்பவரின் கணக்கில் Rs.3000 எடுக்கப்பட்டு, அவரிடம் கொடுக்கப்பட்ட தொகை Rs.6000/ஆக இருந்தது. Cheque இன் பின்புறம் எழுதும் பழக்கத்தால் (500*12-6000) இதை அறிந்து அவரைத் தொடர்புக் கொண்டேன். அப்பெண்மனியும் போனை எடுத்து “என்னிடம் தான் நீங்கள் கொடுத்தீர்களா,உங்களுக்கு நினைவிருக்கிறதா “என்றார். நான் ஆம் என்றேன். போனை வைத்து விட்டார். மீண்டும் அடித்தார். “கடவுளே நீங்கக் கொடுத்த காச நான் எடுக்கவேயில்லை.

சாமி சத்தியமா அங்கேயயே தான் வச்சிருக்கேன். நான் பார்த்துட்டு கூப்பிடுறேன் என்றார். எனக்கு கொஞ்சம் உறுத்தல். இவங்க பணம் இல்லனு சொல்லப் போறாங்க என்று.மீண்டும் மணி அடித்தது போனில் அதேப் பெண்மணி.பணம் எனது பாஸ்புத்தகத்திலேயே தான் இருக்கு.இதோ பேங்க்குக்கு வருகிறேன் என்று அடுத்த 5 நிமிடத்தில் வங்கிக்குள் நுழைந்தார்.

நேரே என்னிடம் பாஸ்புத்தகத்தை நீட்டினார். இந்தாங்கம்மா நீங்க கொடுத்தப் பணம் அப்படியே இருக்கு. நீங்களே சரிசேய்து எடுத்துக் கொண்டு மீதம் கொடுங்கள் என்றார்.நெகிழ்ந்தேன். மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நன்றியை தெரிவித்து பணம் கொடுத்தேன் அன்பளிப்பாக. அதை வாங்க மறுத்த அந்தப் பெண்மணி ” நான் 10 வீட்ல பாத்திரம் விலக்கி வீட்டு வேலைப் பார்த்து சம்பாதிக்கிறேன்மா.இது எனக்கு ஒட்டுனா போதும் மா. இது என் பணம் இல்லன்னு துடிச்சி ஒடியாந்தேன். அதே மாதிரிதானம்மா நீயும் காச தொலச்சிட்டு துடிச்சிருப்ப.என் மகள் மாதிரி மா நீ. எனக்கு பணம் வேணாம் “என்று சொல்லி நகர்ந்தார். என் கண்முண்ணே அழகிய *தேவதை* தெரிந்தாள். இல்லாத இடத்தில் திருடூம் குணம் உள்ளவர்களும், அடுத்தவரின் உடைமைகளுக்கு ஆசைப் படுபவர்களும் இருக்கும் இதே உலகில் இப்படிப்பட்ட ஒரு பெண்மணியா. வியந்தேன்.  

பொதுத்துறையை தனியார்மயமாக்கினால் இப்படிப்பட்ட சாமானியர்களின் கணக்குகளும் இல்லாமல் போய்விடும். இது போன்ற நேர்மையான எண்ணம் கொண்ட பல சாமானிய வாடிக்கையாளர்களும் வங்கிச் சேவையை இழப்பர் என்பதை உணர்ந்தேன். 

Comment here...