வங்கிகள் தனியார்மயமாக்கலின் பெரும் ஆபத்து

(சென்றவாரத்தொடர்ச்சி) -நிறைவுப்பகுதி

ஆங்கிலமூலம்: பிரபாத் பட்நாயக்

தமிழில்:ஜேப்பி

இந்த வங்கிகள் அரசுக்கு சொந்தமானவை என்ற காரணத்தால் இன்னும் இந்த எரிமலை வெடிக்காமல் செயலற்ற நிலையில் இருக்கிறது; டெபாசிட் வைத்திருக்கும் பொது மக்களும் தங்கள் பணம் இந்த அபாயக் கடன்கள் வழங்கப் பயன்படுத்தப்பட்டதை க்கண்டு பீதி அடையவில்லை. மேலும், வங்கிகள் நெருக்கடிகளை எதிர் கொண்டால் வங்கிகளின் உரிமையாளரான அரசாங்கம் அவசியம் தலையிட்டு வங்கிகளை நெருக்கடியில் இருந்து மீட்டு விடும் என்ற  நம்பிக்கை டெபாசிட்தாரர்களுக்கு இருக்கிறது.

உலகம் முழுவதும் தனியார் நிதி நிறுவனங்கள் இவ்வாறு காலப் போக்கில் “சொத்து- பொறுப்பு-பொருத்தமின்மைகளை(asset liability mismatches)”உருவாக்கும்பொழுது, நிதி அமைப்பு நெருக்கடிகள் ஏற்பட்டுவருகின்றன.

கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட கிழக்கு ஆசிய நிதி நெருக்கடி இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். தென்கொரிய வங்கிகளின் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அந்த வங்கிகள் வெளிநாட்டு நாணயத்தில் (Foreign Currency Deposits) டெபாசிட்டுகளைப் பெற்றன. பின்னர் அந்த வைப்புநிதிகளை உள்நாட்டு நீண்டகால முதலீட்டு திட்டங்களுக்கு கடன் கொடுக்கப் பயன்படுத்தின. இந்த நடவடிக்கைகள் அவர்களுக்கு இரட்டை நெருக்கடிகளைக் கொடுத்தன. முதலாவதாக, “நீண்ட காலக் கடன் கொடுக்க குறுகிய கால வைப்பு பெறுதல்” என்கிற நடவடிக்கை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையிலான பொருத்தமின்மைக்கு இட்டுச் சென்றது. இரண்டாவதாக, வெளிநாட்டு நாணயமாகப் பெற்ற வைப்பு நிதியைக் கொண்டு அன்னியச் செலாவணி எதுவும் ஈட்டாத உள்நாட்டு முதலீட்டு திட்டங்களுக்கு கடன் கொடுத்த நடவடிக்கை. இந்த நடவடிக்கைகள் இரட்டைநெருக்கடிகளை உருவாக்கின. அவ்வாறு உருவான நெருக்கடிகள் மிகக் கடுமையானதாக இருந்தன.

2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி கூட இத்தகைய பொருத்தமின்மைகளின் பிரதிபலிப்பாகத்தான் இருந்தது. 1933 இல் பெரிய மந்த நிலை காலத்தில் (Great Depression) ரூஸ்வெல்ட் அரசு நிர்வாகம் “கிளாஸ்-ஸ்டீகல்” சட்டம் இயற்றி வணிக வங்கிந டவடிக்கைகளை முதலீட்டுவங்கிநடவடிக்கைகளில் இருந்து கட்டாயமாகப் பிரித்தது. வணிக வங்கிகள், டெபாஸிட் மூலம் நிதி பெறுவதால், குறுகிய கால கடன்களை வழங்குவதோடு மட்டுப்படுத்தப்பட்டன. அதே நேரம்  முதலீட்டு வங்கிகள், வைப்பு நிதி பெறுவதில்லை என்பதால் பங்குச் சந்தைக்கு கடன் கொடுப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. இந்த சட்ட நடவடிக்கைக்குக் காரணம் “பெரிய மந்த நிலை” காலத்தில் வங்கிகள் பல திவாலானதுதான். வைப்புத் தொகைகளைக் கொண்டு பங்குச்ச ந்தையில் முதலீடு செய்த வங்கிகள் பல திவாலாகின. இது மற்ற வங்கிகளையும் பாதித்தது. மக்கள் ஒரே நேரத்தில் தங்கள் டெபாசிட்டுகளைத் திரும்பக் கேட்க ஆரம்பித்தனர்.

இதைக் கட்டுப்படுத்த ரூஸ்வெல்ட் அரசின் புகழ் பெற்ற “ஃபயர்-சைடு சாட்” ஒலிபரப்புகள் போன்ற பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருந்தன. இருப்பினும் 1999ம் வருடம் கிளாஸ்-ஸ்டீகல் சட்டம் இரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக நிதி அமைப்பு மீண்டும் ஒருக டுமையான நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. சரியாகச் சொல்லப் போனால், நெருக்கடிக்குப் பின்னால் உள்ள காரணி சட்ட இரத்து மட்டுமே அல்ல. கடன் வழங்குவதில் உள்ள அபாயங்களை அனைத்து தரப்பும் கடுமையாகக் குறைத்து மதிப்பிட்டன. அதனால் தான் லேமன் பிரதர்ஸ் (Lehmann Brothers) போன்ற முதலீட்டு வங்கிகள் சரிவைச் சந்தித்தன. கடன் வழங்குவதில் உள்ள அபாயங்களைக் குறைத்து மதிப்பிடுவதோடு கூட, வணிக வங்கிகளும் முன்பு இருந்தது போல (வங்கிகள்  அரசு மேலாண்மையின் கீழ் இருந்தகாலம்) தங்கள் வழக்கமான வணிகத்தின் பகுதியாக இல்லாத சொத்துக்களுக்குக் கடன் கொடுத்து நிதி நெருக்கடியில் சிக்கின.

இந்திய அரசு கொடுத்த கடும் நிர்ப்பந்தங்கள் காரணமாக, இந்தியப் பொதுத்துறை வங்கிகளும் முன்னெப்போதும்கண்டிராத  பெரிய அபாயங்களுக்கு உள்ளாகின.  அரசாங்க வங்கிகளின் மீதுபொது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையின் காரணமாக இந்தியப் பொதுத்துறை வங்கிகள் இதுகாறும் காப்பாற்றப் பட்டுள்ளன.

இந்தப் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால்  அவர்கள்அமர்ந்திருக்கும்அபாய எரிமலை எந்நேரமும் வெடிக்கும்.  இதனால் டெபாசிட்தாரர்கள் மிகப் பெரிய அளவில் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இந்த அபாயம் வங்கி டெபாசிட்தாரர்களை மட்டும் தாக்காது, இந்திய பொருளாதாரத்திற்கும் ஆகத் தீவிரமான தீங்கு விளைவிக்கும்.

பொதுத்துறை வங்கிகளை நெருக்கடிகளிலிருந்து அரசு காப்பாற்றி வருவது போலவே இந்த வங்கிகள் தனியார் வசப்படுத்தப்பட்ட பின்பும் நெருக்கடிகளிலிருந்து அரசு இவைகளைக் காப்பாற்றி மீட்க முன் வரும் என்று  டெபாசிட்தாரர்கள் நம்பிக்கை கொள்ளலாம். டெபாசிட்தாரர்களின் இந்த நம்பிக்கை தனியார் மயமாக்கப்பட்ட வங்கிகளைப் பாதிக்கும் எந்த நெருக்கடியையும் தடுக்கலாம். ஆனால் மக்கள் இந்த நம்பிக்கை கொள்வதற்கான நியாயங்கள் மிகக் குறைவாக உள்ளன. அரசுக்கு ச்சொந்தமாக,அதன் நேரடி உரிமையாளரின் கட்டுப்பாட்டில் வங்கிகள் இருக்கும் பொழுது வங்கிகளை நெருக்கடி நேராமல் காப்பாற்றுவதற்கு அரசாங்கத்தின் மீது எவ்வளவு அழுத்தம் வேண்டுமானாலும் கொடுக்கமுடியும். ஆனால், வங்கிகள் தனியாருக்கு சொந்தமான பின் அரசின் மீது  இந்த அழுத்த நிர்ப்பந்தங்கள் கொடுக்க முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், சொத்து-பொறுப்பு பொருத்தமின்மையை (Asset Liability Mismatch) பொதுத்துறைவங்கிகள் மீது கட்டாயப்படுத்தி திணிக்கின்ற அரசாங்கம், இந்த வங்கிகளைத் தனியார்மயப்படுத்தி தன் கடமையிலிருந்து நழுவுவது என்பது முழுக்க முழுக்க ஒரு பொறுப்பற்ற செயலாகும். அரசாங்கத்தின் இந்த பொறுப்பற்ற தன்மை டெபாசிட்தாரர்களுக்கு கடுமையான நிதி நஷ்டத்தை மட்டும் ஏற்படுத்தாது, கூடவே, வங்கித்தொழில் அமைப்பின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நீண்ட காலத்திற்கு முற்றிலும் சிதைத்து விடும். மேலும், பொதுமக்கள்தங்கள் சொத்துக்களை வங்கி டெபாசிட்டுகளாகச் சேர்த்து வைப்பதற்குப் பதிலாக நாணய-பணப் பதுக்கல்கள் செய்வதில் சென்று முடியும்.  ஆக மொத்தத்தில்,வங்கி தனியார்மயமாக்கல் நடவடிக்கை என்பது நீண்ட காலத்திற்கு வளர்ச்சியின் வாய்ப்புகளைப் சேதப்படுத்தும் ஒரு பிற்போக்கான நடவடிக்கை.

பகுதி– 2 முடிவுற்றது

நன்றி: பீபிள்ஸ் டெமாக்ரசி பத்திரிகை

Comment here...