மாதவராஜ்
எளிய மனிதன் ஒருவனின் கதை.
சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து வரும் ராஜீவன் போலீஸுக்குப் பயந்து தலைமறைவாய் ஓரிடத்தில் அடைக்கலம் கொள்கிறான். உழைத்து வாழ ஆரம்பிக்கிறான். அங்கு பிடித்துப் போகும் பெண்ணோடு தன்னையும், தன்னைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறான். ‘இனி திருடமாட்டேன்’ என உறுதியளிக்க்கிறான்.
ஒரு நாள் திருவிழாவுக்குச் சென்றவன் எம்.எல்.ஏ வீட்டில் சுவர் தாண்டி அங்குள்ள நாய்களால் கடிபட்டதோடு இல்லாமல் போலீஸால் பிடிபடவும் செய்கிறான். தன்னை நம்பிய பெண்ணிடம், தான் திருடவில்லை, குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறான்.
தான் அங்கு திருட போகவில்லை என்பதை மட்டுமல்ல, எந்த சூழலில் சுவரைத் தாண்ட வேண்டியிருந்தது, நாயால் கடிபட்டதற்கு பொதுத்துறை அமைச்சரே காரணமென நீதிமன்றத்தில் சொல்கிறான். தொடரும் காட்சிகளில் கோர்ட்டில் தனக்குத்தானே வாதாடி நியாயத்தை நிறுவுகிறான். இதுதான் கதை. இந்த சிறிய சம்பவத்தோடு சமகால சமூக, பொருளாதார, அரசியலை இணைத்துச் சொல்லத் துணிகிறது இந்த சினிமா. இந்தப் படத்தின் சிறப்பே அதுதான்.
நீதிபதிகள் இல்லாத – வலியில் துடிக்கும் மக்களின் வழக்குகளை வாய்தா வாய்தாவென இழுத்தடிக்கிற – எளிய மக்களை மனிதர்களாகக்கூட மதிக்காத – இந்திய தேசத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லைதான். ஆனாலும் சாத்தியம் போல் காட்டியிருக்கிறது ‘Nna, Thaan Case Kodu’ சினிமா. மிகவும் சுவாரசியமாக, அழுத்தமாக இப்படியொரு கதை சொல்வதற்கு மலையாளச் சினிமாவால்தான் முடியும் போலிருக்கிறது.
நீதிமன்ற விசாரணை நடக்கும் அறையின் சுவரில் தங்கி, அவ்வப்போது குறுக்குமறுக்க சடசடவென பறக்கும் புறாக்களோடு பார்வையால் உரையாடுகிறவராய் இருக்கிறார் அந்த நீதிபதி. அவரது குறுக்கீடல்கள் அந்தப் பறவைகளின் வழியே நடக்கிறது. அவரே நியாயத்தின் பக்கம் நிற்கிறார். சினிமா உலகம் பார்த்திராத அற்புதமான கதாபாத்திரம் அவர்.
கண்டிப்பாக குறிப்பிட வேண்டியது சின்னச் சின்னத் திருட்டுகள் செய்யும் ராஜீவனாக நம்முன்வரும் குஞ்சாக்கோவின் அபாரமானநடிப்பு. என்ன மனுஷன் அவர். எண்ணெய் வழியும் முகம், பிட்டத்தில் நாய்க் கடிபட்டதால் உண்டாகும் சிரமம், கோர்ட்டில் இங்கிலீஷ் கேள்விகளுக்கு அப்பாவியாய் நிற்பது, படம் முழுக்க கதையோடு பயணிக்கும் பாவனை என வாழ்ந்திருக்கிறார். அதிலும் திருவிழாக் கூட்டத்தில் போய் நின்று தன் இஷ்டத்துக்கு ஆடுவது இருக்கிறதே செம.
’மூன்று மாதங்களுக்கு முன்’, ‘ஒரு வருடம்கழித்து’ என கதையின் ஊடாக காலத்தைச் சொல்லும் போது கூடவே அடைப்புக் குறிக்குள் அன்றைய பெட்ரோல் விலைக் குறிப்பிடப்படுகிறது. “நா என்ன மாட்டு மூத்திரத்தயா குடிக்கேன் நீ சொல்றத எல்லாம் அப்படியே நம்ப” என போகிற போக்கில் வசனம் வருகிறது. படம் முழுவதும் இப்படிச் சின்னச்சின்னதாக ரசிக்க, புன்னகைக்க, யோசிக்க எவ்வளவோ இருக்கின்றன.
டிஸ்னி & ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது இந்த படம். கோடி கோடியாய் கொட்டப்படும் ‘பான் இந்தியா’ பிரம்மாண்டங்களையும், அதி தீர சாகசங்களையும் விட இது போன்ற படங்களே நெருக்கமாய் இருக்கின்றன.
Just watched half of the movie some time ago. Your comments on the movie compels for an immediate view. Thanks