பொன்னியின் செல்வன்

திரை விமர்சனம்

க.சிவசங்கர்

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி அவர்களால் எழுதப்பட்டு தமிழக மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்ற நாவலைத் தற்போது இயக்குனர் மணிரத்னம் திரை வடிவில் வழங்கியுள்ளார். மொத்தம் ஐந்து பாகங்களாக சுமார் 2000 பக்கங்களைக் கொண்ட ஒரு புனைவை இரண்டு பாகங்களாக சுமார் 5.30 மணி நேரத்திற்கு உள்ளாக எடுக்க வேண்டிய கட்டாயத்தை மனதில் நிறுத்தியே இந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.

புத்தகம் படித்த எவர் ஒருவருக்கும் அந்த முதல் காட்சி நிச்சயம் ஏமாற்றதையே கொடுத்திருக்கும். வந்தியத்தேவனையும், வீராணம் ஏரியையும், ஆடிப்பெருக்கையும், மக்களின் கொண்டாட்ட மனநிலையையும் ஆவலுடன் எதிர்பார்த்தவர்களுக்கு நாவலில் இல்லாத போர்க்களமும், கத்திச் சண்டையும் நிச்சயம் ஏமாற்றமே. இருப்பினும் அதையெல்லாம் தாண்டி பாத்திரத் தேர்வுகள் நன்றாகவே இருந்தன. குறிப்பாக வீரமும், துறுதுறுப்பும், அழகும் நிறைந்த வாலிபன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு கார்த்தி நன்றாகவே பொருந்தினார். அதைத்தவிர ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி என்று பெரும்பாலான கதாபாத்திரத் தேர்வுகள் நன்றாகவே இருந்தன.

பெரிய கதையைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் சொல்லி முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தாலும், படத்தின் கதை பார்ப்பவர்களுக்குப் புரிய வேண்டுமே. புத்தகம் படிக்காமல் இந்த படத்தைப் பார்க்கும் எவருக்கும் கதையோடு ஒன்றுவதில் நிச்சயம் சிக்கல் இருக்கும். பல காட்சிகள் சரியான அறிமுகங்கள் இல்லாமல் அப்படியே தாண்டித் தாண்டிச் செல்வது போல் தோன்றுகின்றன.

இசையைப் பொறுத்தவரை பொன்னி நதி பாட்டு ஒன்றைத் தவிர வேறு எதுவும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையும் சுமார். இதே போன்ற கதைக்களத்தைக் கொண்ட ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பின்னணி இசையில் சும்மா தெறிக்க விட்டிருப்பார் ஜிவி. பார்த்திபன் ஆடும் ஒரு காட்சியில் எல்லாம் தியேட்டரே சும்மா அதிரும். ஆனால் இந்த படத்தில் அப்படி எந்த ஒரு goose bumps க்கும் வேலையே இல்லை. வசனத்திலும் பெரிதாக கோட்டை விட்டிருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைக்கு வசனம் எழுதுவதில் எவ்வளவு மெனெக்கெட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே ஏதோ இருபதாம் நூற்றாண்டில் பேசுவது போலவே பேசிக்கொண்டு திரிகின்றனர். இங்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வசனத்தையே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

மேலும் மன்னர், இளவரசர், இளவரசி, தளபதிகள், அரண்மனை என்பதைத் தாண்டி கொஞ்சமாவது அந்த காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்நிலையை வாய்ப்புள்ள இடங்களிலாவது காட்சிப்படுத்தியிருக்கலாம். பூங்குழலி, சேந்தன் அமுதன்  போன்ற கதாபாத்திரங்களின் வழியே அவற்றை காட்சிப்படுத்த நாவலிலேயே வாய்ப்புள்ளது. ஆனால் அவற்றை முற்றிலும் தவறவிட்டு அந்த காட்சிகளை ரொம்பவே தட்டையாக எடுத்து வைத்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இவை எல்லாவற்றையும் தாண்டி படம் எந்த ஒரு இடத்திலும் சலிப்பு தட்டவில்லை.  (புத்தகம் படிக்காதவர்களுக்கு எப்படி இருக்கும் என்பது தனி கேள்வி…) புத்தகத்தில் ரசித்து ரசித்துப் படித்த கதாபாத்திரங்களை திரையில் உலவ விட்டுப் பார்த்ததில் நிச்சயம் திருப்தியே.  பைசா வசூல். அதே போல் போகிற போக்கில் இந்துத்துவ கருத்தியல்களைத் திணிக்க நிறைய வாய்ப்பிருக்கும் கதைக்களம் இது. ஆனால் அவை அனைத்தையும் மிகக் கவனமாக தவிர்த்து சரியான கோணத்தில் இந்த படத்தை வழங்கியதற்காகவே நிச்சயம் இயக்குனர் மணிரத்தினத்தைப் பாராட்டலாம்.

மொத்தத்தில் இந்த படத்தை ஒரு புனைவின் திரைவடிவமாக பார்த்துவிட்டு நிறை குறைகளை சொல்லிவிட்டுப் போய் விடுவதே சரியாக இருக்கும். அதை விடுத்து இது தான் தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் பெருமை என்றெல்லாம் சொல்லி ஏமாற்றும் வேலையை விட்டு விட வேண்டும். மன்னர்களின் வரலாறு என்றுமே ஒரு நிலப்பரப்பின் வரலாறாக மாறி விட முடியாது.

உதாரணமாக சோழர்களின் வரலாறு என்றால் அது சோழ தேசத்து மக்களின் சமூகப் பொருளாதார வரலாறாகவே இருக்க முடியும். அந்த மக்களின் வாழ்நிலை, அவர்களின் தொழில், இலக்கியம், உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, அவர்களின் கலை மற்றும் பண்பாடு ஆகியவற்றைத் தழுவியதாக இருப்பதைத் தான் வரலாறாக ஏற்க முடியும். அப்படி எந்த ஒரு பதிவும் இந்த படத்திலும், இதன் மூலக் கதையிலுமே கூட இல்லை. மன்னர்களின் பதவி வெறியும், நாடு பிடிக்கும் ஆசையும், பெண்ணாசையும், அதனால் மக்களைக் கட்டாயப்படுத்தி சண்டையிடச் செய்து பலியிடுவதும் ஒருபோதும் வரலாறாக ஆகிவிட முடியாது. ஒருவேளை எழுத்தாளர் கல்கி பொன்னியின் செல்வன் என்பதற்கு பதில் “வைகையின் செல்வன்” என்று பாண்டியர்களை மையப்படுத்தி இதே கதையை எழுதியிருந்தால் என்னவாகியிருக்கும். அதில் வீரபாண்டியனும், நந்தினியும் கதையின் நாயகர்களாகவும், ராஜ ராஜ சோழனும், குந்தவையும் கதையின் வில்லன்களாகவும் ஆகியிருப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். எனவே ராஜராஜ சோழன் தான் தமிழர்களின், தமிழ் வீரத்தின் அடையாளம் என்று கம்பு சுத்துவதெல்லாம் வெறும் அபத்தம். சோழனோ, சேரனோ, பாண்டியனோ எந்த மன்னனாக இருப்பினும் அவர்கள் அனைவருமே அந்த காலகட்ட சமூகத்தின் அதிகார ஒடுக்குமுறை வர்க்கத்தின் பிரதிநிதிகளே ஆவர்.

இதில் இன்னொரு கோணத்தையும் கவனிக்க வேண்டும். ஒருசிலர் ராஜ ராஜ சோழன் ஒரு பார்ப்பன அடிமை; அவர் தான் தமிழகத்தில் சாதியைப் புகுத்தினார் என்று இங்கு நடைபெற்ற அனைத்து சமூக மாற்றங்களுக்கும் ஏதோ அவர் ஒருவர் மட்டுமே காரணம் என்பது போல் பேசுவதையும் பார்க்க முடிகிறது. சமூகவரலாற்றுப் போக்கில் அது சரியான பார்வையாக இருக்க முடியாது. இவை அனைத்தையும் அந்த காலகட்டத்தில் இருந்த சமூக அமைப்பு முறையை வைத்தே மதிப்பிட வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டான் அடிமை சமூகத்தின் எஞ்சிய கூறுகளும், அடுத்து உருவாக இருந்த நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் ஆரம்பகட்ட கூறுகளும் இங்கு நிச்சயம் இருந்திருக்கும். அதற்கு எந்த ஒரு தனி மன்னரையும் காரணமாக்க முடியாது.

எனவே உண்மையிலேயே ஒரு வரலாற்றுப் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் மக்களின் வாழ்நிலை சார்ந்த இவை அனைத்தையும் காட்சிப்படுத்தி அதனை மக்கள் முன் வைக்க வேண்டும். அதன் மூலமே அந்த காலத்தின் சமூக யதார்த்தத்தை, தற்கால சமூகம் கடந்து வந்த பாதையை இன்றைய மக்கள் புரிந்து கொள்ள முடியும். அதுவே உண்மையான வரலாற்றுப் பாடமாகவும் அமையும்.

4 comments

  1. விமர்சனத்தை அழகாக விமர்சித்த தோழர் சிவசங்கர்க்கு வாழ்த்துக்கள் 💐

  2. சிறப்பான விமர்சனம் 🙏
    பொன்னியின் செல்வன் வாழ்க்கையை சொல்ல வந்த படம் வரலாறு சொல்லாது !

  3. Bank Workers Unity இல் சினிமா எதற்கு? ஒருவேளை வங்கி ஊழியர்களின் தற்போதைய பிரதானப் பிரச்சினை இதுதானா?

Comment here...