Electricity Pylons at sunset on background

புதுச்சேரி மின் தனியார் மயமாக்கலை எதிர்த்த வீரம் செறிந்த போராட்டம்

ராமசாமி.ஜி.

குரங்கொன்று குட்டியை விட்டு ஆழம் பார்த்த கதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனைப் போல ஒன்றிய பாஜக அரசு தேசத்தின் மின்சார விநியோகத்தை முற்றிலுமாக தனியாரின் கைகளில் தாரைவார்த்திட யூனியன் பிரதேசங்களில் அதற்கான சோதனைகளை மேற்கொள்கிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் இத்தேசத்தில் கடந்த காலங்களிலும் சரி இக்காலத்திலும் சரி மக்களுக்கு எதிரான சட்டங்கள், திட்டங்கள் என எல்லாவற்றையும் அமலாக்கம் செய்து பார்க்கிற சோதனைக்கூடங்களாகவே இருந்து வருகின்றன.

பணமாக்கல் நடவடிக்கையின் பகுதியாக புதுச்சேரி மின் துறையை விற்க மத்திய மாநில அரசுகளால் டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டரின் விவரங்களை தெரிந்து கொள்ளவே ரூ.5.90 லட்ச ரூபாய்கள் செலுத்த வேண்டும். டெண்டரில் கலந்து கொள்ள ரூ.27 கோடி ரூபாய் செலுத்தவேண்டும். மின்சார சட்டம் 2003 பிரிவு 131க்கு எதிராக அரசுத்துறையை நேரடியாக தனியாருக்கு கொடுக்கும் மோசடியே இது.

பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த கதை

பொன்முட்டையிடும் வாத்தை அறுக்கும் அதே கதையாக லாபத்தில் இயங்குகின்ற ஒன்றாக ரூ. 20000 கோடி சொத்தும் கொண்டதான புதுச்சேரி மின் துறையை சட்டமன்றத்திலோ அல்லது மக்களிடமோ எந்த கருத்து கேட்பும் நடத்தாமல் தானடித்த மூப்பாக ஒன்றிய அரசின் வழியே திணிக்கப்பட்ட இந்த சூது நிறைந்த நடவடிக்கையை மின் ஊழியர்கள், மின் துறை பொறியாளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மாநிலமுமே எதிர்க்கிறது, எதிர்த்து நின்று போராடவும் செய்கிறது.

மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களால் கொண்டுவரப்பட்ட மின்விநியோகச் சட்டம் 1948இல் உள்ள Cross Subsidy – அதாவது மிக அதிகமான லாபமீட்டும் பெரிய நிறுவனங்களிடமிருந்து சற்று கூடுதலாக கட்டணம் பெற்று, விவசாயம் மற்றும் குடியிருப்பு இணைப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவது என இருந்து வரும் தற்போதைய நடைமுறை நிறுத்தப்பட்டு அனைவருக்கும் சமமான விலை என மாற்றுவதால் மட்டுமே கட்டணங்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ.12-15 வரை உயர்வடையும்.

விவசாயம், கைத்தறி, விசைத்தறி, கோழிப்பண்ணை, செடிவளர்ப்பு, வீட்டுத்தொழில்கள் போன்றவற்றுக்கான இலவச மின்சாரம் என்ற நீண்ட வரலாறு பழங்கதையாக மாறிவிடும். இலவச மின்சாரம் என்ற ஒன்று இருக்கும்போதே மேற்சொன்ன தொழில்கள் நசிவடைந்துள்ள நிலையில், புதிய மின் கட்டணமும் நடைமுறைப்படுத்தப்பட்டால் அவற்றின் நிலையும் அதை நம்பி வாழ்ந்து வரும் எளிய மக்களின் நிலையும் என்ன என்ற கேள்விக்கு அரசிடம் எந்த பதிலும் இல்லை. இது மட்டுமல்லாது உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து உற்பத்திப் பொருட்களின் விலைகளும் உயரும் அபாயமும் இல்லாமல் இல்லை. மின் கட்டண உயர்வைக் காட்டி குடிநீர், தெருவிளக்கு போன்ற அத்தியாவசிய சேவைகளின் வரிகளும் உயர்த்தப்படும்.

பேரழிவினை கொண்டு வந்த சுனாமி, பெருத்த சேதத்தை விளைவித்த தானே, நீலம் புயல் காலங்களில் புதுச்சேரி மின் துறையினரின் கடமையுணர்வை ஊடகங்களே பாராட்டின. அவை எல்லாம் தனியார்மயமானால் எவ்விதம் சாத்தியமாகும்? புயல் காலங்களில் பொதுத்துறையான பிஎஸ்.என். எல் வேலை செய்த போது மற்ற தனியார் தொலைபேசி நிறுவனங்கள் இயங்காத வரலாறும், சுனாமி பேரழிவில் இறந்து போன மக்களுக்கு தேடிப் பிடித்து ஆயுள் காப்பீடு வழங்கிய இந்திய பொதுத்துறை இன்ஸூரன்ஸ் நிறுவனங்களின் மக்கள் சேவையும் நாம் அறிந்த ஒன்றே.

இவையல்லாது புதுச்சேரியில் ஏற்கெனவே 12000 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும் நிலையில், மேலும் 3000 பணியிடங்கள் ரத்தாகும்.

மின் கட்டணம் கடும் உயர்வு

தனியார் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு ஏற்ற வகையில் மின்சாரத் துறையின் கட்டமைப்பை சரிசெய்யும் வேலையும் துவங்கிவிட்டது. அதாவது ரூ.262 கோடி ரூபாய் ஜப்பான் வங்கியிலிருந்து கடனாகப் பெற்று சுமார் 4.5 ப்ரீபெய்டு மீட்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. மின் கட்டணத்தோடு சேர்த்து நிரந்த சேவைக் கட்டணமாக வர்த்தக பயனீட்டாளர்களுக்கு என ரூ. 75ம், வீடுகளுக்கு என ரூ.30ம் மாதாமாதம் வசூலிக்கப்படுகிறது. மின் இணைப்புக்கான காப்புத்தொகை 4 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட போராட்டம்

2020 மே மாதத்தில் புதுச்சேரி மின்சாரத் துறை தனியாருக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே மின் துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், பொறியாளர் சங்கங்களும் ஒருங்கிணைந்து மின் துறை தனியர்மய எதிர்ப்பு போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்களிடம் தனியார்மயத்தால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி பரந்த அளவில் பிரச்சாரம், துண்டறிக்கை வெளியீடு போன்ற இயக்கங்களை எடுத்தது. தர்ணா, கேட் மீட்டிங் என போராட்டங்களும் தொடர்கதையாயின. புதுச்சேரியில் சென்ற முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் புதுச்சேரி மின் துறை தனியார்மயப்படுத்தப்படாது என தீர்மானம் நிறைவேற்றிய பொழுது, பாஜகவின் 3 நியமன உறுப்பினர்களைத் தவிர இன்று முதல்வராக இருக்கும் திரு.ரங்கசாமி மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் திரு.நமச்சிவாயம் உள்ளிட்டு அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதமற்று தீர்மானத்தை ஆதரித்தனர்.

2021 மே மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. அதன் பிறகே தனியார்மய செயலாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்தது. 2022 பிப் 1,2 தேதிகளில் பிரம்மாண்டமான வேலை நிறுத்தம், மக்கள் ஆதரவு போராட்டங்களும் மிக வலிமையாக நடைபெற்றது. 02.02.2022 அன்று முதல்வர், மின்சாரத்துறை அமைச்சர், தலைமை செயலர், மின்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் அனைத்து அரசியல் கட்சிகள், போராட்டக்குழுவினர், மின் உபயோகிப்பாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்றும் அதுவரை பழைய நிலையே தொடரும் என அரசு அறிவித்தது.

ஆனால் 7 மாதங்களுக்கு உள்ளாகாகவே அரசின் உறுதிமொழி, வாக்குறுதி என இவையெல்லாம் காற்றில் விடப்பட்டன. திரு.ரங்கசாமி தலைமையிலான பாஜக கூட்டணி அமைச்சரவை தனியார்மயத்திற்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றி அதனடிப்படையில் 27.09.2022 அன்று மின் துறையின் சொத்து மதிப்பு ரூ.590 கோடி ரூபாய்கள் என மோசடியாக நிர்ணயிக்கப்பட்டு 100% பங்குகளையும் விற்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. ரூ.2000 கோடி மதிப்புள்ள 285 ஏக்கர் நிலத்தை ரூ.1க்கு வாடகை விடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உறுதிமொழி கொடுத்த அரசே அதனை சற்றும் மதியாமல் டெண்டர் விட்டது. அரசு, புதுச்சேரி மின் துறை ஊழியர்கள் மீது மட்டுமல்லாது ஒட்டுமொத்த புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் மீதே தொடுத்த போராகவே பார்த்திட வேண்டும். டெண்டர் விடப்பட்ட அடுத்த நாளே 28.09.22 அன்றே மின்சார துறை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களிலும் நூறு சதவீதம் அமலானது.  அதன் தொடர்ச்சியே புதுவை இருளில் மூழ்கியது என செய்திகள் வைரலாகின. புதுவை மக்களும் ஆங்காங்கு சாலை மறியல் முதலான போராட்டங்களை நடத்தினர். 01.10.22 இரவு புதுச்சேரி மாநிலமே ஸ்தம்பித்தது. ஆட்சியாளர்கள் மின் துறை ஊழியர்கள் சதி செய்கின்றனர் என பொய்யை திரும்ப திரும்ப சொல்லியபோதும். ஆங்காங்கு மின் தடை நீங்க போராடிய மக்கள் தனியார்மயத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதும், சட்டமன்ற உறுப்பினர்களை முற்றுகையிட்டதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

புதுச்சேரியில் துணை ராணுவத்தினரை வரவழைத்தும், எஸ்மா சட்டங்கள் பாயும் என்றெல்லாம் பயம் காட்டியபோதும் ஊழியர்கள் பணிக்கு திரும்பாத நிலையில் காந்தி ஜெயந்தியன்று இரவு 11 மணிக்கு அலுவலகத்தினுள் காவல்துறையின் உதவியோடு உள்நுழைந்து போராடும் ஊழியர்களை பிணையில் வெளிவர முடியாத வகையில் கைது செய்தும் தனது கார்ப்பரேட் விசுவாசத்தை அரசு காட்டியது. இந்தப் பின்னணியில் புதுவை முதல்வர், மின்சார அமைச்சர், தலைமை செயலாளர் உள்ளிட்டோருடன் போராட்டக்குழுவினரின் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எதிர்வரும் ஆயுதபூஜை, திபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட கோரிய அரசின் வேண்டுகோளை ஏற்று 24.10.2022 வரை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்குள்ளாக டெண்டர் வாபஸ் பெறவேண்டும், தனியார்மய நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக தவிரவும் இதனோடு அதிமுக தவிர்த்து மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும், அரசு ஊழியர் அமைப்புகள், சமூக நீதி கூட்டமைப்பு உள்ளிட்ட மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய, மனித உரிமை அமைப்புகள், சிஐடியூ போன்ற தொழிற்சங்கங்கள் என பலவும் கூட்டாகவும், தனித்தும் ஆதரவுப் போராட்டங்களை நடத்தின. ஊழியர்கள் போராட்டங்களில் முன்பு போலவே இம்முறையும் இடதுசாரி கட்சிகள் கொடுத்த ஆதரவு அளப்பரிது.

வெறும் ஊழியர்கள் என்றில்லாமல் வெகுமக்களின் நலன் காக்கும் போராட்டங்களில் மக்களும் நேரடியாக ஈடுபடும் நிலையில் ஆளும் வர்க்கம் பின்வாங்கும், இறுதி வெற்றி தொழிலாளி வர்க்கத்தினருக்கே என்பதை நிலைநாட்டிய வரலாற்று சிறப்பு மிக்க போராட்டமாக இப்போராட்டம் மாறி நின்றது.

5 comments

  1. மக்களுக்கு ஆதரவான….
    புதுச்சேரி மின்சார ஊழியர்கள் போராட்டம் வெல்லட்டும்!

  2. அருமையான கட்டுரை. தனியார்மயத்தை எதிர்த்த போராட்டம் வெல்லட்டும்.

  3. அருமையான கட்டுரை. தனியார்மயத்தை எதிர்த்த போராட்டம் வெல்லட்டும்.

  4. தனியார் கொள்ளைக்கு மின்சாரத்தை கொடுப்பது மக்களின் வாழ்வில் மிக பெரிய தாக்குதலை ஏற்படுத்தும்….கட்டுரை சிறப்பு

Comment here...