தினசரி டெபாசிட் சேகரிக்கும் முகவர்களுக்கு கிராஜுவிட்டி!

ஜெ மாதவராஜ்

பாண்டியன் கிராம வங்கியில் நித்தம் வளர் நிதி முகவர்கள்  (NVN Agents )  என ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தினம் தோறும் வாடிக்கையாளர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் டெபாசிட் சேகரித்து, வங்கியில் அந்தந்த வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்கும் பணி அவர்களுடையது.  ஒவ்வொரு மாதமும் அவர்கள் சேகரித்த டெபாசிட்களின் அடிப்படையில் கமிஷன் கணக்கிடப்பட்டு அந்த முகவர்களின் சேமிப்புக் கணக்கில்  வரவு வைக்கப்படும்.

அந்த கமிஷனையும், வங்கியையும் நம்பி பல கிளைகளில் முகவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். பெரும்பாலும் அந்த முகவர்கள் வங்கி இருக்கும் ஊரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களே அந்த ஊரில் வங்கியை அறிமுகம் செய்பவர்களாகவும், வங்கியின் சேவைகளை மக்களிடம் கொண்டு செல்கிற தூதர்களாகவும் இருந்து வந்தனர். வங்கியின் நிர்வாகம் அவர்கள் மூலம் டெபாசிட்டை மட்டும் திரட்டுவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுப்பதிலிருந்து வராக்கடனை வசூலித்து தருவது வரை பல முக்கிய வேலைகளையும் அவர்கள் மூலம் வங்கி நிறைவேற்றிக் கொண்டது.

நாளடைவில் புதிதாக திறக்கப்பட்ட கிளைகளில் நித்தம் வளர் நிதி முகவர்களை நியமிப்பதை வங்கி நிறுத்திக் கொண்டது. ஏறத்தாழ நூறு பேர் போல வேலை பார்த்தவர்கள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தார்கள். 90களில் தொடர்ந்து டெபாசிட் பிடிக்க முடியாமல் திணறினார்கள். குறிப்பிட்ட அளவு டெபாசிட் பிடிக்க முடியாதவர்களை வங்கி நிறுத்த ஆரம்பித்தது. அவர்களுக்காக அன்று சங்கம் நிர்வாகத்துடன் நடத்திய  பேச்சுவார்த்தைகளும், சட்ட ரீதியாக முன்னெடுத்த முயற்சிகளும் அப்போது வெற்றி பெறவில்லை.

இதையெல்லாம் தாண்டி பத்து இருபது பேரே நிலையாக 2000ம் ஆண்டிற்குப் பிறகும் பணி புரிந்தார்கள். அதிலும் சிலர் வயோதிகம், இயலாமைக் காரணமாக தாங்களாகவே பணியிலிருந்து நின்று விட்டார்கள்.

1.7.2017 அன்று வங்கி நிர்வாகம் அப்போது வேலைபார்த்த பத்து முகவர்களை திடுமென நிறுத்தியது.  சங்கத்திலிருந்து பேசினார்கள். அந்த முகவர்களால் வங்கிக்கு லாபம் இல்லை என்று சொல்லி தனது முடிவில் நிர்வாகம் பிடிவாதமாக இருந்தது. ”அவர்கள் உங்கள் சங்க உறுப்பினர்களா, அவர்களுக்காக ஏன் பேசுகிறீர்கள்?” என்றும் கேட்டது.

முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த வங்கியை மட்டுமே நம்பி, வங்கிக்காக உழைத்த அந்த முகவர்கள் சட்டென செய்வதறியாமல் விக்கித்துப் போனார்கள். எதிர்காலம் அவர்களை அச்சுறுத்தியது. BEFI  இணைப்புச் சங்கமான பாண்டியன் கிராம வங்கி ஓர்க்கர்ஸ் யூனியன் அவர்களுக்காக சட்ட ரீதியான முயற்சிகளில் இறங்கியது.

லேபர் கமிஷனர் முன்பு கிராஜுவிட்டி கேட்டு புகார் அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. பத்து நித்தம் வளர் நிதி முகவர்களையும் தொடர்பு கொண்டு பேசி நேரில் வரவழைத்து அவர்களிடம் தேவையான ஆவணங்களில் கையெழுத்து வாங்கி புகார் அளிக்கபப்ட்டது.

அந்த புகாரை ஏற்று மதுரை லேபர் கமிஷனர் ( Regional Labour Commissioner – central) முன்பு விசாரணை ஆரம்பித்தது. நிர்வாகத்தரப்பில் அட்வகேட் ஆஜரானார். பத்து முகவர்கள் சார்பில் அப்போது சங்கத்தின் பொதுச்செயலாளராயிருந்த தோழர் மாதவராஜ் ஆஜரானார்.

NVN ஏஜண்ட்கள் வங்கியில் பணிபுரிகிறவர் (workman) இல்லை, அவர்கள் பெற்றது ஊதியம் (wages) இல்லை, எனவே அவர்களுக்கு கிராஜுவிட்டி வழங்க முடியாது என நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டது.

NVN ஏஜண்ட்கள் அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனவும், அவர்கள் மாதாமாதம் வாங்கிய கமிஷன் அவர்களது சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது, அதுவே அவர்கள் ஊதியம் என்றும் அதன் அடிப்படையில் கிராஜுவிட்டி வழங்க வேண்டும் எனவும் சங்கத்தின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அது சம்பந்தமான கேரள உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன.

முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், லேபர் கமிஷனர்கள் மாறி மாறி டிரான்ஸ்பர் ஆனார்கள். கோவிட் பெருந்தொற்று ஸ்தம்பிக்க வைத்தது. அதனால் தொடர்ந்து விசாரணை நடைபெறாமல் இருந்து வந்தது.

கடந்த ஒரு வருடமாகத்தான் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இருந்தாலும் லேபர் கமிஷனர்கள் முறையாக  நியமிக்கப்படாததால், சென்னையிலிருந்தும் திருவனந்தபுரத்திலிருந்தும் டெபுடேஷனில் அவ்வப்போது வந்து சென்றார்கள். சென்ற செப்டம்பர் மாதம் வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, விசாரணை முடிந்தது.

கடந்த வாரம் அந்த பத்து NVN ஏஜண்ட்களுக்கும் கிராஜுவிட்டி (பத்து பேருக்கும் சேர்த்து சங்கம் சமர்ப்பித்திருந்த ஆவணங்களின் அடிப்படையில் 63,54,062/- ) 1.7.2017 லிருந்து 10 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென்று லேபர் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினம் தோறும் டெபாசிட் சேகரிக்கும் முகவர்களுக்கு கிராஜுவிட்டி  கிடைக்க வழிவகுத்திருக்கும் இந்த உத்தரவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் செய்தி.

*

3 comments

  1. The perseverance of Comrades like Madhavaraj has paid rich dividends. The ten deposit collectors will be immensely benefitted.

  2. மகிழ்விக்கும் செய்தி !
    நிர்வாகத்தால் கைவிடப்பட்ட சூழலிலும் விடாமுயற்சி செய்து சட்டப்போராட்டம் நடத்திய சங்கத் தலமைக்கு பாராட்டுக்கள் 👏

Comment here...