நாகநாதன், திருச்சி.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சாருகேஷ் சேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, பாபி சின்ஹா, நவீன் சந்த்ரா ஆகியோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாள மொழியில் அமேசான் ப்ரைமில் வெளியான திரைப்படம் அம்மு.
எனது பணிநிறைவு விழாவில் எனது இணையர் பேசுகையில் “பேசாமல் அவருக்கு நான் மூன்றாவது மனுஷியாகவே இருந்திருக்கலாம்; இன்னும் கொஞ்சம் அதிக அக்கறையுடன் இருந்திருப்பார்” என்றார்.
உண்மைதானே? எல்லா ஆண்களுக்கும் இரண்டு முகங்கள் இருக்கத்தானே செய்கின்றன? அதிலும் மனைவி வெளியில் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பவரானால் கேட்கவே வேண்டாம். சுமைகள் யாவும் தாங்கும் சுகலட்சுமியாக அவதாரம் பெருவார்.
படத்தின் நாயகன் காவல் ஆய்வாளர். நாயகி Home Maker. வெளியில் தன் கடமை முகத்தை பராமரிக்க வீட்டில் தன் மனைவியை கை நீட்டி அடிக்கக்கூட துணிபவன். அவனது குடும்ப வன்முறையிலிருந்து எவ்வாறு மீண்டார் என்பதே கதை.
கணவன் அடித்ததை அம்மாவிடம் கூறும்போது அவர் கணவன் (அப்பா) அடித்ததை அவர் அம்மாவிடம் (பாட்டி) கேட்டு அவர் சொன்ன அறிவுரை – ஆண்களுக்கு வெளியில் ஏற்படும் அழுத்தங்களைக் களைய வடிகால் மனைவிதான் ; ஆகவே சகித்துக்கொள் பழகிப்போய்விடும் என்பார். ஆனால், நான் உனக்கு அதே அறிவுரை சொல்லமாட்டேன். உன் முடிவை நீயே எடு என்பார். அதே போல் பேருந்து நிலையப் பிச்சைக்காரனும், ”சரியோ தவறோ முடிவு உன்னுடையதாக மட்டும் இருக்கட்டும்” என்பார்.
முற்றிலும் வெறுத்தொதுக்க முடியாத, அவ்வப்போது அன்பையும் அவ்வப்போது வன்முறையையும் செலுத்தும் கணவனை எப்படி தண்டிப்பது; எப்படி சேர்ந்து வாழ்வது என இக்கட்டான பாத்திரத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி எல்லையின்றி நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார். பாபி சின்ஹா இரண்டு கொலை புரிந்த, தங்கையின் திருமணத்திற்காக . வெளிவந்துள்ள கைதியாக வெளுத்து வாங்குகிறார். பொதுவாழ்வில் எல்லோரும் விரும்பும் காவல் அதிகாரியாக, அக வாழ்வில் ஈகோ நிரம்பப் பெற்ற ஆம்பிளையாக வாழ்கிறார் நாயகன். அடுத்து என்ன செய்வது என்கிற கேள்விக்கான பதில் தெரியாமல் போவதாலேயே அடங்கி, ஒடுங்கி வாழும் சராசரி இந்தியக் குடும்பப் பெண்களின் வார்ப்பு, நாயகி. சின்ஹா தப்பிச் செல்லும்போது தனக்கு அப்படி ஒரு விடிவு எப்போது கிடைக்கும் என்று தெரியாது கழிவிரக்கத்தில் நாயகி அழும் காட்சி ஆயிரம் உணர்ச்சிகளைக் கொட்டும்.
சினிமா என்பது, அதைக் கண்டபின் பல்வேறு விவாதங்களையும், விமர்சனங்களையும், கேள்விகளையும் எழுப்புமானால் அது ஒரு நல்ல படைப்பு.
அந்த வகையில் அம்மு போன்ற திரைப்படங்கள் நம்பிக்கை தரும் படைப்புகளே.
சினிமாவுக்கு நல்லதொரு அருமையான விமரிசனம்.