சட்டம் கடந்த உரிமையை நிலைநாட்டிய யமஹா வேலைநிறுத்தம்

இ.முத்துக்குமார்

இந்தியா யமஹா மோட்டார் தொழிற்சாலையில் அக்11முதல் 20வரை நடைபெற்ற பத்து நாட்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் “பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றுபட்ட தொழிற்சங்கத்தை அமைப்பதற்கும், கூட்டு பேர உரிமையை தற்காத்துக் கொள்வதற்கும், தொழிலாளர்கள் சந்திக்கும் சில அடிப்படையான  பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கும்” வழிவகை ஏற்படுத்தியிருக்கிறது.

நிர்வாகத்தின் சீர்குலைவு வேலை

தொழிலாளர்கள் சங்கம் அமைத்தால் அதை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டிய சட்ட ரீதியான கட்டாயம்  தங்களுக்கு இல்லை என்கிற சூழ்நிலையை  சாதகமாக பயன்படுத்தி வந்தனர் யமஹா நிர்வாகிகள்.  பெரும்பான்மை தொழிலாளர்கள் உறுதியாக ஒற்றுமையாக தொழிற்சங்கத்தை பதிவு செய்து, தங்கள் உரிமைகளுக்காக போராடுகிற போது, தொழிலாளர்களில் ஒரு சிறிய பிரிவினரை ஐவர் குழு, பணிக்குழு, தொழிலாளர்கள் பிரதிநிதிகள் குழு, போட்டி தொழிற்சங்கம் என்கிற பல பெயர்களில் நிர்வாகத்திற்கு ஆதரவாக உருவாக்கி, தொழிலாளர்களின் ஒற்றுமையை  உடைக்கவும், தனது தடையற்ற சுரண்டலை நிறைவேற்றிக் கொள்ளவும், தங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை பலவீனப்படுத்தவும் பன்னாட்டு கம்பெனிகள் தொடர்ந்து முயன்று வருகின்றன.

யமஹாவில் மேற்கண்ட அனைத்து சீர்குலைவு வேலைகளையும் அந்த நிர்வாகம் இக்காலத்தில் செய்து வந்தது. போட்டி சங்கத்தை அமைத்தனர்; 10 நாட்களில் தொழிலாளர் துறையில் பதிவு செய்தனர். இதன் மூலம் தொழிலாளர் துறையின் ஒரு பிரிவு கார்ப்புரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக இருக்கிறது  என்பதை யமஹா போராட்டத்தில் வெளிப்படையாக பார்க்க முடிந்தது.

நிர்வாக ஆதரவு  பொம்மை சங்கத்துடன்  ஏற்படுத்திய ஊதிய உடன்பாடு, உற்பத்தி உள்ளிட்டவை பற்றிய அடிமை ஒப்பந்தம் பெரும்பான்மை தொழிலாளர்களின் மீது திணிக்கப்பட்டது.

சரித்திரம் படைக்கும் வேலை நிறுத்த போராட்டம்

இதை எதிர்கொள்ளவே,  பெரும்பான்மை சங்கம் எது என்பதை ரகசிய வாக்கெடுப்பு  அல்லது தொழிலாளர்துறை உதவியுடன் ஜனநாயக பூர்வ அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஓர் ஆலைக்குள் ஒருசங்கம் என்றும், ”ஒரு நிறுவனத்தில் பாரபட்சமான சம்பள பணப் பயன்களை, சமூக நல திட்டங்களை நிர்வாகத்தின் விருப்பத்தின் அடிப்படையில் அமல்படுத்த கூடாது” என்றும் வலியுறுத்தி உள்ளிருப்பு தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்த நோட்டீஸ் அடிப்படையில் சமரச பேச்சுவார்த்தை நிலுவையில் இருந்த போதுதான் இந்த போராட்டம் நடைபெற்றது.
ஆலைக்கு உள்ளே 10 நாட்கள் தொடர் போராட்டம் என்பது இக்காலகட்டத்தில் வேறு எந்த ஆலைகளிலும் நடைபெறாத சரித்திரம் படைக்கும் போராட்டமாகும். காவல்துறை, மாவட்ட ஆட்சி நிர்வாகம், நீதிமன்றம் உள்பட அனைத்து பிரிவினரையும் தன் வசப்படுத்த நிர்வாகம் முயற்சித்த போதிலும்,  சிஐடியு தனது நேர்த்தியான போராட்ட அணுகுமுறையால் அனைத்து அமைப்புகளையும் நியாயத்திற்காக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக  மாற்றியது புதிய அனுபவம்.

வலுவான சகோதர ஆதரவு

இப் போராட்டம் வெகுஜன ஆதரவை பெற்ற வேலை நிறுத்தமாக  அமைந்தது. தமிழகம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற ஆதரவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இவர்களுக்காக உணவு உண்ணாமல் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டதும் அரசை வலுவாக நிர்பந்தம் செய்யவும்,  யமஹா நிறுவனத்தை பணிய வைக்கவும் பேருதவியாக அமைந்தது. இதுவரை நடைமுறையில் இல்லாதபெரும்பான்மை தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும்” என்ற உரிமையை இப்போராட்டம் உருவாக்கி உள்ளது.

புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது

தொழிலாளர் உரிமைகளை பலவீனப்படுத்தும் வகையில் நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை மோடி அரசாங்கம் அமலுக்கு கொண்டு வரும் பின்னணியில், தொழிலாளர்கள் பல புதிய உரிமைகளை வலுவான போராட்டங்கள் மூலம் வென்றெடுக்க முடியும் என்பதை யமஹா வேலை நிறுத்தம் நிரூபித்து காட்டியுள்ளது. போராடும் தொழிலாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

தொழிலாளர்களைப் பிரித்து தடையற்ற சுரண்டல் முறையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் முயற்சிகளுக்கு இந்த போராட்டம் ஒரு பெரிய மதில் சுவரை ஏற்படுத்தியுள்ளது.

சங்கமாக திரண்டு போராடு

”பெரும்பான்மை சங்கத்தை தொழிலாளர்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள்: அதைத்தான் நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும்: அச்சங்கத்தோடுதான் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் காண வேண்டும். இனி பொம்மை சங்கத்துடன் போடும் ஒப்பந்தமெல்லாம் செல்லாது” என்பதை நிலை நாட்டியுள்ளது இந்தப் போராட்டம்.

இந்த போராட்டம் நிர்வாகத்தை எதிர்த்து சங்கம் அமைக்கிற போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக ஆதரவாளர்களுக்கு வழங்கிய போனஸ் தொகையை போராட்டக்காரர்களுக்கு வழங்க முடியாது என்று நிறுத்தி வைத்தார்கள்; அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒரு நாளைக்கு எட்டு நாள் சம்பளத்தை இந்த நிர்வாகம் பிடித்துக் கொண்டது.  இப்படி இரண்டு ஆண்டு காலமாக தொழிலாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தை இந்த போராட்டத்தின் மூலமாக தொழிலாளர்கள் திரும்ப  பெற்றார்கள்.  இவ்வாறு அநியாயமாக இழந்த பணத்தை சட்ட ரீதியாக திரும்ப பெற வேண்டுமென்றால் பல ஆண்டுகள் வழக்கு நடத்த வேண்டி இருக்கும் .

ஆனால் உறுதியான போராட்டங்களின் மூலம் சட்டம் கடந்த பல உரிமைகளை வெல்ல முடியும் என்ற மகத்தான அனுபவத்தை யமஹா வேலை நிறுத்தம் கற்று கொடுக்கிறது.

”சங்கம் இல்லாத பகுதிகளிலும் சங்கமாக திரண்டு போராடு; வெற்றி நிச்சயம்” என்கிற செய்தியை உரத்துச் சொல்கிறது யமஹா வேலைநிறுத்தத்தின் வெற்றி.




One comment

  1. ப.முத்துக்குமரன், எல்ஐசி., திருவண்ணாமலை says:

    யமஹா பற்றின கட்டுரையை வாசிக்கும் போது உற்சாகம் பீறிடுகிறது. உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் என்றுமே வெல்லும் என்பதற்கு மிகச்சீரிய சான்று.

Comment here...