வாரம் ஐந்து நாள் பணி – உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்

D.ரவிக்குமார்

வாரம் ஐந்து நாள் பணி – சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை – என்பது வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகின்றது. குறிப்பாக வங்கி அதிகாரிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நேர வரம்பின்றி கடுமையான பணிக்கு பிறகு இந்த இரண்டு நாள் ஓய்வை மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். அனைத்து வங்கி ஊழியர் அதிகாரிகளின் கோரிக்கையான ஐந்து-நாள் வங்கிச் சேவை என்பது பத்தாவது இரு தரப்பு ஒப்பந்தத்தின் போதே மிகவும் வலியுறுத்தப்பட்ட கோரிக்கை. ஆனால் கடைசி நிமிடத்தில் ”தற்போது இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை; அடுத்து விரைவில் ”வாரம் ஐந்து-நாள் பணி” என்பதை பரிசீலித்து ஏற்றுக் கொள்வோம்” என்று நிர்வாகங்கள் கொடுத்த வாக்குறுதியின் பேரில் ”மாதம் இரண்டு சனிக்கிழமைகள் விடுமுறை” என்பது நடைமுறைக்கு வந்தது. பதினோராவது இருதரப்பு ஒப்பந்த பேச்சு வார்த்தை காலங்களில் அனைத்து வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பான UFBU வால் மிகவும் வலிவோடு வாரம் ஐந்து-நாள் பணி என்பது கோரப்பட்டது. இந்த கோரிக்கை நிச்சயம் 11 வது இருதரப்பு ஒப்பந்தத்தில் நிறைவேற்றப் பட்டுவிடும் என்று லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள்-அதிகாரிகள் காத்திருக்க இந்த கோரிக்கைக்கு தீர்வு காணாமலேயே இருதரப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

கோரிக்கை பட்டியல் கூட்டாக இறுதி செய்ததிலிருந்து அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் தொடர்ந்து கலந்து கொண்டிருந்த BEFI, வங்கி ஊழியர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த இந்த கோரிக்கை 11 வது இருதரப்பில் இறுதி செய்யப்படாததும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடாதத்திற்கு முக்கியமான காரணமாகும்.

விடுபட்ட கோரிக்கைகள் மீதான போச்சுவார்த்தை:

11வது இருதரப்பு ஒப்பந்தத்திற்கு பிறகு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சங்கங்கள் தொடர்ந்து விடுபட்ட கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த பேச்சு வார்த்தைகளில் வாரம் 5 நாள் பணி என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

தற்போதைய ஆலோசனைகள்

தற்போது பதினோராவது இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நான்கு ஊழியர் சங்கங்கள் தனியாகவும், நான்கு அதிகாரிகள் சங்கங்கள் தனியாகவும் ஐபிஏ விற்கு 28 சனிக்கிழமைகளின் பணி நேரத்தை எவ்வாறு மற்ற நாட்களில் கூட்டுவது என்பது பற்றி ஆலோசனை முன் வைத்து கடிதம் எழுதியுள்ளன. ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் வார நாட்களில், தற்போது பணி தொடங்குவதற்கு முன்பாக காலை நேர பணி நேரத்தை கூட்டி இந்த கோரிக்கையை இறுதி செய்யலாம் என்று ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் சங்கம் சார்பாக வார நாட்களில் தற்போது பணி நேரம் முடிந்த பின் மாலை நேரங்களில் இந்த கூடுதல் பணி நேரத்தை கூட்டலாம் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஊழியர் சங்கங்களும், அதிகாரி சங்கங்களும் எதிரெதிரான ஆலோசனைகளை முன் வைப்பது வங்கி நிர்வாகங்களுக்கு பிரித்தாள ஏதுவாக அமையும்.

பெருவாரியான வங்கி ஊழியர்கள் பணியிடங்களிலிருந்து வெகு தொலைவில் வசித்து வருகின்றனர். தற்போதைய பணி நேர துவக்கத்திற்குள் பணியிடங்களுக்கு செல்வதே பெரும் சிரமமாக உள்ளது. காலைப் பணி துவக்க நேரத்தை இன்னும் முன்னுக்கு கொண்டு வருவது அவர்களுக்கு மேலும் பல இடர்களை உண்டாக்கும். குறிப்பாக பெண் தோழர்கள் இதனால் பெரும் அவதிக்குள்ளாவார்கள். ஏற்கனவே அதிகாரிகள் மாலையில் நேர வரம்பின்றி பணி புரிகிறார்கள். காசாளர்களும் பணம் பத்திரமாக உள்ளே வைக்கும் வரை பணி புரிய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்தப் பின்னணியில் வார நாட்களில் மாலையில் அரை மணி நேரம் கூடுதல் பணி செய்வதைத் தான் ஆகப் பெரும்பாலான ஊழியர்களும், அதிகாரிகளும் விரும்புகிறார்கள்.

ஒன்றுபட்ட இயக்கத்தின் தேவை

UFBUவின் தோற்றத்திற்குப்  பிறகு பொதுவான கோரிக்கைகளில் அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரி சங்கங்களும் ஒன்றாக கூடி முடிவெடுத்து பேச்சு வார்த்தை நடத்துவதுதான் நடைமுறையாக இருந்து வந்துள்ளது. இதற்கு மாறாக தற்பொழுது ஊழியர்கள் சங்கங்கள் தனியாகவும் அதிகாரிகள் சங்கங்கள் தனியாகவும் இந்த கோரிக்கையை எடுத்துச் சொல்வது வங்கி ஊழியர்கள்-அதிகாரிகள் மத்தியில் உள்ள ஒற்றுமையை பாதிக்கும். எதிர்காலத்தில் ஊதிய உயர்விற்கான இயக்கங்களையும், பொதுத்துறை பாதுகாப்பதற்கான இயக்கங்களையும் கொண்டு செல்வதில் பாதிப்பை உண்டாக்கும். UFBU உடனடியாக கூட்டப்பட்டு, இந்த பிரதான கோரிக்கையையும், மற்ற விடுபட்ட கோரிக்கைகளையும் வென்றெடுக்க கூட்டாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Comment here...