தமிழ்நாடு கிராம வங்கியில் பல்லாண்டு அரியர்ஸ் தொகையுடன் கம்யூட்டர் இன்கிரிமெண்ட் – உச்ச நீதிமன்ற தீர்ப்பு

பரிதிராஜா இ

தொண்ணூறுகள் வணிக வங்கிகளில் ஊழியர்களும், அலுவலர்களும் போர்க்களத்தில் இருந்த காலம். பென்சனுக்கும், கணிணிமயத்தை எதிர்த்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும் போராடிக்கொண்டிருந்தனர். இதன் விளைவாக நிர்வாகங்கள் பென்சன் கொடுக்கவும், கணிணிமயத்திற்கு இன்கிரிமென்ட் தருவதற்கும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது வரலாறு. இந்த போராட்டங்களில் கிராம வங்கி ஊழியர்களும் வணிக வங்கி ஊழியர்களோடு தோளோடு தோளாக நின்று போராடினர். அவர்கள் அப்போது தான் தாங்களும் வங்கி ஊழியர்கள் தான் என்பதை சுமார் 25 ஆண்டுகாலம் போராடி நிறுவியிருந்தார்கள். ஆனால், நடந்த விந்தை என்னவென்றால் பென்சன், கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட் போன்றவற்றை அரசு கிராம வங்கிகளில் நடைமுறைப்படுத்தவில்லை.

கிராம வங்கி ஊழியர்களை மற்ற வங்கி ஊழியர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் சில வழிகளை அரசு தேர்வு செய்து செயல்படுத்த முயன்றது. அந்த சதிகளை முறியடித்து வென்றது கிராம வங்கி ஊழியர்களின் வரலாறு. அரசின் இந்த சதி வேலைகளை முறியடிக்கும் காலத்தில் ஒன்றிரண்டு இருதரப்பு ஒப்பந்தங்கள் கிராம வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்படாமல் தப்பிப் போயின. இதனால், பென்சனும் வரவில்லை. கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட்டும் வரவில்லை.

PGBEAவின் முன்கை எடுப்பு:

 இந்திய அளவில் கிராம வங்கிகளின் கோரிக்கைகளை AIRRBEA (All India Regional Rural Bank Employees Association) முன்னெடுத்துச் சென்றாலும், அதன் அங்கமாய் இருந்த உறுப்பு சங்கங்களும் தனித்தனியே போராட்டங்களை முன்னெடுத்தே வந்தன. அந்த பாரம்பரியத்தில் அப்போதிருந்த பாண்டியன் கிராம வங்கியில் செயல்பட்ட PGBEA (Pandian Grama Bank Employees Association) அகில இந்திய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இயக்கங்களை முன்னெடுத்தது. கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிலாளர் ஆணையத்தில் தொழில் தவா ஏற்படுத்தியது. அப்போதைய PGBEAவின் பொதுச்செயலாளர் தோழர். சோலைமாணிக்கம் அவர்கள் இந்த வழக்கை முன்னின்று நடத்தினார். வணிக வங்கிகளில் கொடுத்தது போல் கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட் தர வேண்டும் என்று 2004ல் லேபர் கோர்ட் உத்தரவிட்டது. பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த காலத்தில் கிராம வங்கிகளில் ரகம் ரகமாய் கணிணிமயம் வந்து, கடைசியாக Core Banking Solution ம் வந்துவிட்டது. ஆனால், அரசு அந்த ஒரு கூடுதல் இன்கிரிமெண்ட்டை மட்டும் தரவேயில்லை.

நீதிமன்ற வெற்றிகள்:

இதே காலகட்டத்தில், கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்சன் மற்றும் கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட் ஆகியவற்றை வழங்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில்  AIRRBEA- Karnataka வின் சார்பில் போடப்பட்ட வழக்கில் வெற்றி கிடைத்தது. 2010ல் வெளியான இந்த முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்ற உத்தரவில் கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்றும், கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட் தர வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றம் சென்றது. சுமார் எட்டு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு 2018 ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்றம் அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது. இதன் பின்னர் கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட் தருவதற்கான அறிகுறி மட்டும் தென்படவில்லை.

நம்பிக்கை வெளிச்சம்:

 நாடெங்கிலும் கொரானா பேரிடரின் தாக்கம் தணிந்திருந்த 2021 அக்டோபர் மாதத்தில் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வந்தது. அதற்கு முன்னதாக வந்திருந்த கர்நாடக உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைக் குறிப்பிட்டு பாண்டியன் கிராம வங்கியான, இந்நாள் தமிழ்நாடு கிராம வங்கியில் கம்ப்யூட்டர் இன்கிரிமென்ட் வழங்க சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி உத்தரவிட்டார். நிர்வாகம் உடனே பெஞ்சிற்கு அப்பீல் செய்தது. வழக்கின் முகாந்திரத்தை பார்த்த மாத்திரத்திலேயே, அது ஊழியர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய ஒன்றை தராமல் இழுத்தடிப்பதற்காகவே என்பதை உணர்ந்த டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் நிராவாகத்திற்கு கடுமையான கண்டனங்களோடு,  இழுத்தடிப்புக்கு  ரூ.10000/- அபராதமும் போட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர். தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அந்த வழக்கு அனுமதிக்காக 2022 அக்டோபர் 10ம் தேதி எடுத்துக் கொள்ளப்பட்டு, வழக்கில் எந்த தரப்பு நியாயமும் இல்லை என்று அன்றேஅந்த நிலையிலேயே டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டது.

நியாயத்தை வேண்டிய பயணம் சுமார் 19 ஆண்டுகளாக வெப்பமிகு போராட்ட தளங்களையும், ஆவேசமான முழக்கங்களையும், பல  நீதிமன்றங்களின் உத்தரவுகளையும் கண்டிருக்கிறது. தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் ஒவ்வொருவருக்கும் கணினிமயமானதிலிருந்து இத்தனை ஆண்டுகளுக்கான அரியர்ஸ் தொகையுடன் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் நீதிமன்றத் தீர்ப்பின்படி வழங்கப்படவேண்டும். ஒவ்வொருவருக்கும் கணிசமான அரியர்ஸ் தொகை கிடைக்கும். இந்த மகத்தான வெற்றியின் தாக்கம் மற்ற கிராம வங்கி ஊழியர்களுக்கும் பயனுள்ள வகையில் அமையும்.

   

One comment

  1. தொழிலாளி வர்க்கத்திற்கு சங்கரீதியாகவும் சட்ட ரீதியாகவும் போராடுவது ஒன்றே அவர்களுக்கான நியாயத்தை ஏற்படுத்தும் என்பதை பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம் நடந்து வந்த போராட்டப் பாதையை கட்டுரை விமர்சையாக வெளி கொண்டு வந்துள்ளது. ஆசிரியருக்கும் கிராம வங்கி ஊழியர்களுக்கும் போராட்ட வாழ்த்துக்கள்

Comment here...