நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983: நூல்அறிமுகம்

எஸ்.இஸட்.ஜெயசிங்

இலங்கை தேசம் நன்கு அறிந்த மலையகத்தின் மிகப் பிரபலமான எழுத்தாளர் மறைந்த திரு. தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய ” நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983 ” என்ற நாவல் இலங்கை இலக்கிய உலகில் தடம் பதித்த வரலாற்று நாவலாகும் . 1983 ஜூலை 24 ல் நடந்த சிங்கள-தமிழ்   இனக் கலவரத்தை கருப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டமையால் இலங்கையில் குறிப்பாக தமிழர் மத்தியில் இந் நூல் மறக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது . வன் முறைச் சம்பவங்களை மிக தத்ரூபமாக நாவல் வடிவில் தந்திருக்கிறார் தெளிவத்தை ஜோசப் அவர்கள் .

தெளிவத்தை தோட்டத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தமையால் தெளிவத்தை என்ற அடையாளத்துடன் அழைக்கப்படலானார் . ” வாழைப்பழத் தோல் ” எனும் சிறு கதையுடன் எழுத்துலகில் நுழைந்த அவர் அதன் பின்னர் எழுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள்,  குறுநாவல்கள்,  நாவல்கள், கட்டுரைகள்  எழுதியதுடன் வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட கதைவசனம் என இவரது இலக்கிய பங்களிப்பு மிகப் பெரியதாகும் . இலங்கையில் மிக உயரிய ‘சாகித்ய ரத்னா’  விருது உட்பட ஏராளமான விருதுகளை உள்நாட்டிலும்,  வெளிநாட்டிலும் பெற்றுள்ளார் . மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்த தெளிவத்தை ஜோசப் அவர்கள் இந்த வருடம் அக்டோபர் 21 ல் தனது 87 வது  வயதில் மறைந்தமை தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும் .

இவரது சமூகப் பார்வையின் தொடர்ச்சியாக 1983 ல் தான் கண்ட, தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை தொகுத்து அருமையான கதையாக வடிவமைத்திருக்கிறார்   2016 ல் பாக்யா பதிப்பகத்தில் இந்நூலை வெளியிட்ட அதன் நிறுவனர் எழுத்தாளர் தோழர் மல்லியப்பு சந்தி திலகர் தனது பதிப்புரையில் குறிப்பிட்டதைப் போன்று எல்லோருக்கும் ஓர் அனுபவம் நேர்வதற்கும், எழுத்தாளனுக்கு ஓர் அனுபவம் நேர்வதற்குமான வித்தியாசம் இந்த  படைப்பின் ஊடே வெளிப்பட்டு நிற்கிறது என கூறலாம் . எந்தவிதமான கற்பனை பாத்திரங்களையும் நுழைக்காமல் அசல் பாத்திரங்கள் ஊடாகவே கதையை நகர்த்திச் செல்வது சிறப்பு அம்சமாகும் . குறிப்பாக தனது வீடு, குடும்பம், அயல் வீட்டார், தான் பணிபுரியும் இனிப்பு தொழிற்சாலை என கதையை மிக நேர்த்தியாக நகர்த்தி இருக்கிறார் .

” நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்  ” என்ற விவிலிய நூலின் ஜெப வார்த்தையுடன் ஆரம்பிக்கும் நாவல் அடுத்து 1983 கலவர காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது . 3000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்; பல நூறு கோடி சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன. வீடுகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன . விலை உயர்ந்த வீட்டுப் பொருட்கள் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.  மிகவும் பதட்டமான இந்த சூழ்நிலையில் நாவலாசிரியர் தன் வீட்டில் இருளில் கதவுகளைப் பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் உறைந்து போய் இருந்ததாக கதையை தொடங்குகிறார் .

“பறத்தமிழர்களை கொல்லுவோம்” என கூக்குரலுடன் வீட்டை நோக்கி வரும் சிங்கள வன்முறையாளர்களை தனியொரு பெண்ணாக தடுத்து திருப்பி அனுப்பியதுடன் நூலாசிரியரின் குடும்பத்தை கடைசிவரை பத்திரமாகப் பாதுகாத்த திருமதி.  சொய்சா எனும் சிங்களப் பெண்மணியின் அசல் பாத்திரத்தை உயிரோட்டமாக நடக்க விட்டு நம்மை வியக்க வைக்கிறார். இரவு பகலாக இவர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க சொய்சா மேற்கொண்ட யுக்திகளை அனுபவித்து எழுதி இருப்பதை வாசிக்கும் போது அந்த பெண்மணியை நேரில் பார்த்து வணங்க வேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது .

இவரது நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அசலாக இருப்பதால் வாசிக்கும் நாமும் கதையோடு பயணிப்பதைப் போன்று இருக்கும் . அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலைத் தூண்டும் விதமாக நாவல் நகர்வதைக் காணலாம் . கொழும்பு நகரின் எல்லா பகுதிகளிலும் கடுமையான கலவரம்; கொலை வெறியுடன் வன்முறைக் கும்பல் கத்தி, கம்பு, பெட்ரோல் கேன் என்பவற்றுடன் தமிழர்களை தேடி அலையும் போது பாடசாலைக்கு சென்ற தன் பெண்குழந்தைக்கு என்ன நடந்ததோ என பரிதவிக்கும் ஒரு தந்தையின் உணர்வையும் எழுத்தின் ஊடே ஆழமாக பதிவிட்டிருக்கிறார் .

இலங்கையில் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததை வலியுறுத்தும் தெளிவத்தை ஜோசப் அவர்கள் யாழ்ப்பாணத் தமிழன், மட்டக்களப்புத் தமிழன்,  மலையகத்தமிழன் என அரசியலால் பிரிந்து கிடந்தாலும் இவ்வாறு “அடி உதை ” என்று வரும் போது எல்லோருமே தமிழர்கள்தான் என முகத்தில் அறைந்தது  போல உண்மையை உரைக்கிறார். கதை சொல்வதில் ஆற்றல் மிக்க தெளிவத்தை ஜோசப் அவர்கள் வன் செயல்களை மட்டுமல்லாமல் நன் செயல்களையும் ஆங்காங்கே குறிப்பிட்டு கதையை தொய்வில்லாமல் நகர்துகிறார் .

எந்தவிதமான பாதிப்புகள் இருந்தாலும் சமூகத்தின் பணம் படைத்த உயர் தட்டு வகுப்பினரை அரசு இயந்திரம் பாதுகாக்க தவறுவதில்லை என்பதை கொழும்பு செட்டியார் தெரு நகைக்கடைகள் பாதுகாக்கப்பட்ட விதம் குறித்து  தன் ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார் .  தமிழர் என்ற ஒரே காரணத்தால் மலையகத்தவர்கள் கொல்லப்பட்டனர் என்ற வருத்தத்தையும்  ஆசிரியர் பதிவு செய்கிறார் .

நூலாசிரியர் மலையக மண்ணின் மைந்தன் என்பதால் மலையக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வட்டார சொற்களையும் ஆங்காங்கே தெளித்துள்ளமை சிறப்பான அம்சமாகும் .  அதேபோன்று சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்ற சமூக அமைப்பு காரணமாக தனது சிங்கள கதாபாத்திரங்களுடனான உரையாடலில் பயன்படுத்தப்பட்ட சிங்கள மொழியினை அதன் தன்மை குறையாது அப்படியே தமிழ் மொழியில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும் .

சிங்கள வன்முறையாளர்களால் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட அதே வேளை நல் மனம் கொண்ட பல சிங்கள மக்களும் தமிழர்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்திட உதவிய உயர்ந்த உள்ளத்தை நினைவு கூறும் வகையில் நாவலின் முக்கிய கதாப்பாத்திரத்திரமாக மாறிவிட்ட திருமதி.சொய்சா போன்ற சிங்கள நல் இதயங்களுக்கு ” நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் ” என்ற புத்தகத்தை அரப்பணிப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளமை  மனதை தொடுகிறது.

மாபெரும் இலக்கிய மேதை திரு. தெளிவத்தை ஜோசப் அவர்களின் நினைவும் அவரது நூல்களும் காலத்தால் அழியாது .


====================.

4 comments

  1. பல நாடுகளில் அரசும் அதன் அரசியலும் அந்நாட்டு மக்களை எல்லா வகையிலும் பிரித்தாள்வதும் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்படுவதும் வேதனை. இம்மாதிரியான ஒரு இனப்படுகொலையை இலங்கையில் நிகழ்ந்ததை இந்த நாவல் மிகத் துல்லியமாக கொண்டு வந்துள்ளதை இந்த நூல் விமர்சனம் மூலம் நமக்கு எடுத்துக்காட்டி உள்ள விமர்சகருக்கு வாழ்த்துக்கள்.

  2. நாவல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி 🙏

  3. நல்ல அறிமுகம். நல்லவர்கள் எவ்லா இடங்களிலும் இருக்கிறார்கள் சிங்களவரிலும் கூட.

  4. நல்ல சொல்லாடலுடன் நேர்த்தியாக எழுதப்பட்டுள்ள நூல் அறிமுக கட்டுரை.. வாழ்த்துக்கள்!

Comment here...