மாதவராஜ்
புதுக்கோட்டையில் அக்டோபர் 14 முதல் 18 வரை ஐந்து நாட்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தி வரும் உலகத் திரைப்பட விழா நடைபெற்றது. அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய இரு தினங்கள் மட்டும் அந்த திரைப்பட விழாவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்க்க முடிந்த சினிமாக்களில் ’The father’ மற்றும் ‘Quo vadis Aida?’ இரண்டு படங்களும் உலுக்கி விட்டன.
பிரிட்டனில் நிகழும் கதை ‘The father’.
ஆனியோடு சேர்ந்து பார்வையாளர்களும் அந்த வீட்டிற்குள் நுழைகிறோம். எண்பது வயதிலும் ஆரோக்கியமான, துடுக்கும் கோபமும் நிறைந்த ஆனியின் தந்தை அந்தோணியை அங்கு பார்க்கிறோம். அவரைக் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்திருந்த பணிப்பெண் எங்கே என்று ஆனி அவரிடம் கேட்கிறார். தனது வாட்சை பணிப்பெண் திருடிவிட்டாள் என அந்தோணி சொல்கிறார். நடந்ததை அறிந்து கொண்டவளாய் ஆனி அவரது அறைக்குள் சென்று தேடி அவரது வாட்சைக் கொண்டு வந்து காட்டுகிறாள். பார்வையாளர்களுக்கு நெருடுகிறது. ’அந்த தந்தையை’ உற்றுப் பார்க்க ஆரம்பிக்கிறோம்.
”தனக்கு ஒருவனைப் பிடித்திருக்கிறது, அவனோடு பாரிஸில் சென்று வாழப் போகிறேன், வார இறுதி நாட்களில் வந்து செல்கிறேன், புதிய பணிப்பெண் உங்களைப் பார்த்துக் கொள்வாள்” என்று ஆனி சொல்கிறாள். அதற்கு அடுத்த சில காட்சிகளில், ”நீ பாரிஸ் செல்லப் போகிறாயா?” என அந்தோணி கேட்பார். “நான் எப்போது அப்படி சொன்னேன்?” என்று ஆனி சொல்வாள்.
இப்படி அடுக்கடுக்காய் தொடரும் குழப்பம் நிறைந்த முரணான காட்சிகள் பிடிபட ஆரம்பிக்கிறது. அந்த தந்தையின் மூளைக்குள் சென்று பார்வையாளர்கள் உட்கார்ந்து நடப்பதையெல்லாம் அறிய முடிகிறது. காட்சிகள் மூலம் அப்படியொரு விந்தையை இந்த படம் நிகழ்த்தி இருக்கிறது. அந்தோணியிடம் ஆனி காட்டும் பரிவு தொற்றிக் கொள்ள ஆரம்பிக்கிறது. அதுதான் இந்த திரைப்படத்தின் சிறப்பு.
”தன் வீடு இது இல்லையா?’,‘யார் இதற்கு உரிமை கொண்டாடுவது?” ”தன்னை கவனித்துக் கொள்ள யாரும் தேவையில்லை”, ”ஆனியின் முதல் கணவன் என்ன ஆனான்?” ”தன்னை மிகவும் நேசித்த இரண்டாவது மகள் வரைந்த ஒவியம் சுவற்றில் இல்லையே?” என நம்முன் நடமாடும் அந்த வயதான தந்தையின் தவிப்பு, ஏக்கம், கோபம் எல்லாம் நம்மை அலைக்கழிக்கிறது.
மறதி, நினைவுகளின் அலைக்கழிப்பு, மனச் சிதைவுகளோடு – தனக்கு எதுவும் நேரவில்லை என்று வாழ்கிற அந்தோணியாக நடித்திருக்கும் அந்தோணி ஹாப்கினின் பார்வைகள், பாவனைகள், அசைவுகள், பேச்சு அத்தனையும் அவ்வளவு உயிரோட்டமாக இருக்கிறது. காலத்திற்கும் நிற்கும் மகத்தான கலைஞர் அவர்.
இந்த சினிமாவில் கதை மாந்தர்கள் யாரும் – அல்லது மெனக்கெட்டு பின்னணிக் குரல் மூலம் – கதையை எங்கேயும் சொல்லவில்லை. படம் முடியும்போது அந்த எண்பது வயது குழந்தை அழும்போது பார்வையாளர்கள் கண்களிலும் நீர் தன்னியல்பாக பெருக்கெடுக்கிறது.
இன்னொரு படம் ‘Quo vadis Aida?’ . போஸ்னியாவில் நடந்த வரலாறு.
1995ல் ஸ்ரெப்ரெனிகாவில் உலகை உலுக்கிய – பல்லாயிரக்கணக்கில் முஸ்லீம் மக்களை கொன்று குவித்த – இனப்படுகொலை பற்றிய படம் இது.
1992ல் யூகோஸ்லோவியா கூட்டமைப்பிலிருந்த குடியரசுகள் தனித்தனியாக பிரிந்தன. அதில் ஒன்று போஸ்னியா. அங்குள்ள செரிபியர்கள் அதனை விரும்பாமல் யூகோஸ்லோவியாவுடனோ அல்லது செரிபியாவுடனோ இணைய விரும்பினர். 1995 ஜூலையில் அவர்களது படை போஸ்னியாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்தன.
ஐக்கிய நாட்டு படைகளின் பிடியில் மிகவும் பாதுகாப்பானதாக கருதப்பட்ட இடம் ஸ்ரெப்ரெனிகா. வீடுகளை எல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு குடும்பம் குடும்பமாக அங்கு வாழும் முஸ்லீம் மக்கள் ஐ.நா படைகள் இருக்கும் பகுதியில் பல்லாயிரக்கணக்கில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். உயிர் பிழைத்துக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் அவர்களிடம் இல்லை.
இந்த இடத்திலிருந்து படம் துவங்குகிறது. ஜஸ்மிலா ஸ்பானிக்! அவர்தான் இந்த படத்தை இயக்கியவர். அவரே படத்தின் மைய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு மொழி பெயர்ப்பாளராக இருக்கும் ஜஸ்மிலாவுக்கு ஐ.நா. படைகளோடு பழக்கம் இருக்கிறது. உயர்மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. சூழ்ந்துவிட்ட செரீபிய படைகளிடம் தஞ்சம் புகுந்திருக்கும் மூஸ்லீம் மக்களை ஒப்படைக்க இருப்பது தெரிய வருகிறது.
தனது கணவர், இளைஞர்களாய் இருக்கும் தனது இரு குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் மூச்சு படபடக்க ஈடுபடுகிறார் ஜஸ்மிலா. முஸ்லீம் மக்களில் குழந்தைகள், பெண்களை விட்டுவிட்டு ஆண்களை தனியாக பிரிக்கிறது செரிபீய படை. தங்கள் ஆண் குழந்தைகளுக்கு பெண் வேடமிட்டு தப்ப வைத்த சில முயற்சிகள் கூட கண்டுபிடிக்கப்பட்டு கதறக் கதற அவர்களை இழுத்துச் செல்கிறது செரிபீய படை.
எங்கும் கூப்பாடும், பெரு மூச்சுகளும், தவிப்புகளுமாய் மனிதக் கூட்டம் இருக்கும் அந்த இடத்தில் கொஞ்சம் செல்வாக்கு பெற்றிருக்கும் ஜஸ்மிலா என்னும் தாயின் வேட்கையும் தோல்வியடைகிறது. ஒரு தியேட்டரில் பிடிபட்ட ஆண்களை எல்லாம் அடைத்து விட்டு, ”இதோ ஒரு நிஜமான சினிமாவை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்’” என ஒலிக்கும் குரல் நம்மை வதைக்கிறது.
சில வருடங்கள் கழித்து அந்த இனப்படுகொலையில் இறந்தவர்களை புதைத்த இடம் தோண்டப்படுகிறது. அந்தக் குடும்பத்தில் மிச்சமாய் இருக்கிற ஜஸ்மிலா ஒரே வீட்டில் வாழ்ந்த தன் உயிர்களின் மிச்சங்களை அங்கே காண்கிறாள்.
ஆட்சி, போர், வன்முறை, இனவெறி குறித்தெல்லாம் எந்த பாடமும் எடுக்கவில்லை. அமைதியை விரும்பும் சாமானிய மனிதர்களை இந்த ஆதிக்கவெறி கொண்ட உலகம் ஒரு பொருட்டாக கருதுவதில்லை என்பதை உணர்த்துகிறது. மனிதர்களுக்கு எவையெல்லாம் பகை என்பதை சொல்கிறது.
பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என கதைப்பவர்களே இந்தப் படத்தை பாருங்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கிடந்து தவிக்கும் காட்சிகளில், அவர்கள் ஊடே அலைபாயும் காமிராக்களின் முன்பு ஒரு மனித முகம் கூட காமிராவை பார்க்கவில்லை. பின்னணி இசையும், ஓளியின் இறுக்கமும் நம்மை அந்த பெருங்கூட்டத்தில் சேர்த்து விடுகிறது.
மிக முக்கியமானதொரு சினிமா அனுபவம்.
தரமான, சமூகத்திற்கு பயன்படும் விதமாக வெளிவந்துள்ள திரைப்படங்களைப் பற்றிய விமர்சனம் எழுதுவது என்பது படங்களை பற்றிய புரிதலை நமக்கு ஏற்படுத்துகின்றது. இது மாதிரியான படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகின்றது. BWU திரை விமர்சன பகுதியை தொடர்ந்து வெளி கொண்டு வர வேண்டும்.