எஸ்.ஹரிராவ்
ஆனந்தவல்லி நாவலை எழுதிய எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன் தனது ஆய்வுகளை மேற்கொண்ட போது ஒரு கடிதத்தை காண்கிறார். சிறு வயதிலேயே அதாவது 5 வயது பெண் குழந்தையை 12 வயதினள் என்று ஏமாற்றி பணத்திற்காக ஆசைபட்டு திருமணம் செய்து வைக்கிறான் தகப்பன் கொத்தன்.
வேலூர் கோட்டையில் கும்பினியாரிடம் தன் தந்தையுடன் பணிபுரியச் சென்ற கணவனான சபாபதி, சில வருடங்கள் கழித்து தன்னுடன் அழைத்துச் செல்ல ஆவலோடு தன் மனைவியைத் தேடி வருகிறான். ஆனால் தன் மனைவி அரசரின் அரண்மனைக்கு அவள் தகப்பனாலேயே விற்கப்பட்டு விடுகிறாள் என்ற செய்தி காத்திருக்கிறது. எங்கு இருக்கிறாள் என்பதும் தெரியவில்லை. தன் மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம் தான் அது.
அந்த கடிதம் தந்த ஆவலில் நாவலுக்கான கருப்பொருள் வளர்கிறது. தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களின் சரித்திரங்களை ஆய்வு செய்து “ஆனந்தவல்லி” என்னும் கற்பனா பாத்திரத்தின் வழியாக வரலாற்று புனைவை எழுதியுள்ளார் ஆசிரியர்.
மராட்டியர்கள் எவ்வாறு தஞ்சாவூர் வந்தார்கள், ஆட்சியைப் பிடித்தார்கள், ஆட்சி செய்தார்கள், அவர்களின் போக இச்சைகளுக்கு இரையான ஆசைநாயகிகளின் பராமரிப்பு, அவர்களை கவனித்துக் கொள்ளவே ஒரு தனி நிர்வாகம் மிகுந்த பொருட் செலவுடன் செயல்பட்ட வரலாற்று செய்திகளை கதை வழியே சுவைபட சொல்லிச் செல்கிறார் நூலின் ஆசிரியர்.
ராஜாக்கள் தனக்கு பிடித்தவர்களை எல்லாம் கல்யாணம் செய்து கொண்டாலும் அது வெறும் கத்தி கல்யாணம் தான். அரசருக்கு பதிலாக அவரது கத்தியை வைத்து கல்யாணம் செய்து கொள்வது. அரச பரம்பரையில் ராஜாவால் தாலி கட்டி திருமணமானவர்கள் மட்டுமே மகாராணி பட்டத்திற்குரியவர்கள்.
ராஜாக்கள் காலப் போக்கில் கும்பினியாருக்கு அடிமைப்பட்டு அவர்கள் கொடுக்கும் மானியத் தொகையிலும் நிலபுலன் மூலம் வரும் வருமானத்திலும் தங்களது ஆடம்பர வாழ்வை நடத்தி வந்தார்கள். பக்தி ஒருபுறமும் போகம் மறுபுறமும் அமோகமாக நடந்தது. அதற்கான செலவுகளை ஈடு செய்ய மிகவும் சிரமப்பட்டார்கள்.
ராஜா இறக்கும் போது அவருடன் உடன்கட்டை ஏறி சதிமாதா ஆகிவிட்டால் தனது மகன் பட்டத்து அரசனாவான் என்று சதி ஏறும் மகாராணிகள் இருந்தார்கள். பிரிட்ஷாருக்குப் பிடிக்காத சதி தடைசெய்யப்பட்ட போதும், உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. அப்படி செய்யாமல் விதவையாக இருந்தால் அந்த கொடுமையான வாழ்க்கை முறைக்கு பதில் உடன்கட்டை ஏறி சதிமாதா ஆகுவதே உசிதம் என்ற முடிவுகள் மிகவும் கசப்பானவை.
இவற்றையெல்லாம் மிக விரிவாக மிகுந்த உழைப்பையும் நேரத்தையும் செலவழித்து ஆய்வு செய்து அதை ஒரு சிறப்பான வரலாற்றுப் புதினமாக ஆசிரியர் படைத்துள்ளார். அவரது தமிழ் நடை மிகவும் சிறப்பாக அக்கால தமிழ் வழக்கு மொழியையும் பயன் படுத்தி வாசகர்களுக்கு சுவை குன்றாமல் சுவாரசியமாக எழுதியுள்ளார்.
அரசர்கள் காலப் போக்கில் கும்பினியாருக்கு எவ்வாறு அடிமைபட்டுப் போனார்கள் என்பதை கால ஓட்டத்துடன் கதையினூடாக இயல்பாக இணைத்து எழுதியுள்ளார்.
ஆனந்தவல்லி என்ற சிறு பெண் பணத்திற்காக தன் தகப்பனால் அரச அந்தபுரத்திற்கு விற்கப்படும் இடத்தில் வாசகனின் மனம் பாடுபடும். ஆனந்தவல்லியை மீட்டு விட அவளது அம்மாவும் பெரியப்பாவும் எடுக்கும் முயற்சிகளும் படும் அவமானங்களும் படிப்பவரின் மனதைப் பிசையும். கும்பினி அரசின் படையில் வேலை செய்யும் ஆனந்தவல்லியின் கணவன் சபாபதி மிகுந்த சிரமத்திற்கிடையே தேடிவந்து தன் மனைவியை அழைத்துச் செல்ல வந்தபோது அவள் அரச அரண்மனைக்கு விற்கப்பட்டது தெரியவருகிறது.
அரச அரண்மனையில் கல்யாணமஹாலில் உள்ள ஆசைநாயகிகளின் சேவைக்கு விற்கப்பட்ட தன் மனைவி கற்பிழந்தவளாக இருந்தாலும் அது அவளது தவறில்லை என்று சபாபதி கருதுகிறான். எப்படியாவது தன் மனைவி ஆனந்தவல்லியை தேடிக் கண்டுபிடித்து அழைத்துச் சென்று வாழ வேண்டும் என்று எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்கிறான். மிகுந்த அலைக்கழிப்பிற்கும் அவமானத்திற்கும் உள்ளாகிறான். இருந்தாலும் மனம் தளராமல் எல்லா முயற்சிகளையும் எடுக்கிறான். கடைசியாக சென்னை மாகாண கவர்னர் வரை மனு கொடுத்து போராடுகிறான். எப்படியாவது ஆனந்தவல்லியை ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும் என்று துடிக்கிறான். அதில் அவன் வெற்றியடைகிறானா? இல்லையா? என்பதுதான் நாவலின் சூட்சூமம்.
நாவலில் ஆனந்தவல்லி பற்றி குறைவாகவே சொல்லப்பட்டு மராட்டிய மன்னர்கள் மற்றும் மகாராணிகள், மன்னர்களின் கணக்கிலடங்கா மனைவிமார்கள், அவர்களது வாழ்க்கை முறை, அக்கால மக்களின் வாழ்வியல் இவையே மிக அதிகமாக நாவலில் பேசப்பட்டுள்ளது.
மிக விரிவாக எழுதப்பட்ட நாவல், திருத்தப்பட்ட போது (எடிட்டிங்) சுருங்கியதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆசிரியரின் இரண்டாவது புத்தகம், ஆனால் முதல் நாவல் என்பது ஆச்சர்யமாக உள்ளது. சமீபத்தில் தமிழில் இது போன்று மிகுந்த உழைப்பையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு எழுதப்பட்ட நாவல்களில் இது குறிப்பிடத்தக்க ஒன்று. படிக்கப்பட வேண்டிய நாவல். பாரதி புத்தகாலயம் சிறப்பாக வெளியிட்டுள்ளது.
வரலாற்று புனைவு நாவலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி 🙏