க.சிவசங்கர்
“என் கனவுகளைத் தடுத்து நிறுத்தி விடலாம் என்று முயலாதீர்கள்.
அவை இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் மனங்களிலும் விதைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதை சிறைப்படுத்தி விட முடியாது..!!!
ஒற்றை மனிதனின் மூச்சை அடக்கி விட்டால் இங்கு நடைபெறும் அனைத்தையும் நிறுத்தி விடலாம் என்று நினைக்காதீர்கள்.
மூடர்களே…என் இதயம் இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வழியே மீண்டும் மீண்டும் துடிக்கும்..!!!
வலிமை மிகுந்த ஒருவன் ஒன்று, இரண்டு அல்லது ஒரு நூறு ரோஜாக்களை பிடுங்கி எறியலாம். ஆனால் ஒருபோதும் அவனால் வரவிருக்கும் வசந்தத்தை தடுத்து நிறுத்தி விட முடியாது.
எங்களது போராட்டம் அந்த வசந்தத்தை நோக்கியே..!!!”
கடந்த 2018 ம் ஆண்டு பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா தன்னுடைய அரசியல் எதிரிகளால் புனையப்பட்டஓர் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். அப்போது அவரை சிறைக்கு செல்ல வேண்டாம் என்று தடுத்த ஆயிரக்கணக்கான மக்களிடையே, “தான் சரணடைந்து நிரபராதி என்று நிரூபித்து விட்டு மீண்டு வருவேன்” என்று சூளுரைத்த உணர்ச்சி மிகுந்த பேச்சின் ஒரு பகுதி தான் மேலே இருப்பவை.
நிலப்பரப்பில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாகவும், மக்கள் தொகையில் உலகின் ஏழாவது பெரிய நாடாகவும், தென்னமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடாகவும் திகழும் பிரேசில் நாட்டின் ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் இறுதிச் சுற்றில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூலா தற்போதைய ஜனாதிபதியான போல்சனாரோவைத் தோற்கடித்து பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
யார் இந்த லூலா?:
1945ம் ஆண்டு ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த லூயிஸ் இனாசியோ லூலா டிசில்வா என்னும் லூலா, வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது 12 வயதிலேயே தெருவோர வியாபாரியாக மாறினார். பிறகு ஓர் இரும்புத் தொழிற்சாலையில் ஆலைத் தொழிலாளியாக பணிக்கு சேர்ந்து ஒரு விபத்தில் தனது ஒரு கைவிரலை இழந்தார். அதன் பின்னர் அந்த ஆலையின் பல முக்கிய போராட்டங்களில் முன்னணியில் பங்கேற்று ஆலைத் தொழிலாளர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பிற்கு உயர்ந்தார். 1970 களின் இறுதியில் பிரேசிலில் நடைபெற்ற ராணுவ ஆட்சியை எதிர்த்து பல கட்ட கிளர்ச்சிப் போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டு, பிரேசில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
1980 களின் துவக்கத்தில் தன்னுடைய சகாக்களுடன் இணைந்து இடதுசாரி சித்தாந்த அடிப்படையிலான தொழிலாளர் கட்சியைத் துவக்கினார். பிறகு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் தொழிலாளர் கட்சியின் சார்பாக வேட்பாளராக களம் இறங்கி 2003ம் வருடம் முதல் முறையாக ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டுமுறை பிரேசிலின் ஜனாதிபதியாக பதவி வகித்தார். லூலா பதவி வகித்த காலங்களே பிரேசில் நாட்டின் வளமான காலம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அவரது காலத்தில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்தன. பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றது. சுமார் இரண்டு கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டார்.
குறிப்பாக அவரது ஆட்சிக்காலத்தில் மக்களின் வறுமையைப் போக்குவதற்காக ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்து, அவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை ஊக்கப்படுத்துவதற்காக பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எளிய மக்களின் கைகளில் நேரடியாக பணப்புழக்கத்தை ஏற்படுத்தியதுடன் குழந்தைகளின் கல்வி கற்கும் விகிதத்தையும் அதிகரித்தது. இது போன்ற மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளின் மூலம் ஏழை எளிய பிரேசிலியர்களிடையே லூலா பெரும் செல்வாக்குப் பெற்றார்.
வலதுசாரி திருப்பம்:
21வது நூற்றாண்டில் உலகம் முழுவதும் பரவிய வலதுசாரி அலை பிரேசிலையும் விட்டுவைக்கவில்லை. வழக்கமாக வலதுசாரி கருத்தியல் முன்வைக்கும் தேசியவாதம், தேசப் பாதுகாப்பு, பெரும்பான்மைவாதம், கவர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றாலும், பன்னாட்டு நிதி மூலதன ஆதரவுகளாலும் பிரேசில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று அதிதீவிர வலதுசாரி போல்சனாரோ பதவியைப் பிடித்தார். ஆனால் அவரது ஆட்சிக்காலம் பிரேசில் மக்களின் வாழ்வாதரத்திற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பின்னடைவாக மாறியதை மக்கள் உணரத் துவங்கினர். குறிப்பாக உலகம் முழுவதும் உலுக்கிய கொரோனா பெருந்தொற்று பிரேசில் நாட்டையும் மிகஅதிக அளவில் பாதித்தது.
அப்போது ஜனாதிபதியாக இருந்த போல்சனாரோ பொது சுகாதாரத்தை விரிவுபடுத்துவதிலும், தடுப்பூசி செலுத்தி தன் மக்களைக் காப்பதிலும் சிறிதும் அக்கறையின்றி செயல்பட்டார். மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய அவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்து, ”கொரோனா என்று ஒன்று இல்லவே இல்லை” என பகிரங்கமாக தெரிவித்தார். இதனால் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பிரேசில் மிக அதிக அளவில் லட்சக்கணக்கான உயிரிழப்புகளைச் சந்தித்தது. மேலும் அவரது அரசாங்கத்தின் கட்டுப்பாடற்ற தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் பிரேசில் மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளானது. மக்களின் மிக அடிப்படைத் தேவையான மூன்று வேளை உணவு கூட பல லட்சக்கணக்கான பேர்களுக்கு சரியாகக் கிடைக்கவில்லை. கோடிக்கணக்கான மக்களை மீண்டும் வறுமையில் தள்ளினார்.
அமேசான் மழைக்காடுகளின் அழிப்பு:
“உலகின் நுரையீரல்” என்று வர்ணிக்கப்படும் அமேசான் மழைக் காடுகள் கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டுப்பாடற்ற முறையில் அழிக்கப்பட்டன. காடுகள் அழிப்பு மற்றும் எரிப்பு விகிதம் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் உயர்ந்துள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். புவிப்பரப்பின் ஆக்சிஜன் உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் அமேசான் காடுகளின் மூலம் உற்பத்தியாகிறது. உலகில் வாழும் மொத்த பறவைகள் மற்றும் மீன் இனங்களில் ஐந்தில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் மட்டும் வசிக்கின்றன. சுமார் 400 முதல் 500 பழங்குடி இனங்கள் இந்த மழைக்காடுகளில் வசிக்கின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அமேசான் காடுகளில் இருந்து பல அரிய வகைக் கனிமங்கள் மிகஅதிக அளவில் தோண்டி எடுக்கப்பட்டு தனியார் பெருமுதலாளிகளின் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன.
லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்பட்டு அப்பகுதிகள் தீக்கிரையக்கப்பட்டன. இவை பிரேசில் மக்களிடமும் உலக சூழலியல் ஆர்வலர்களிடமும் மிகப்பெரிய எதிர்ப்பை எதிர்கொண்டன. மேலும் சாதாரண எளிய மக்களிடம் இருந்து பெறப்படும் வரிகள் உயர்த்தப்பட்டன. மொத்தத்தில் ஒரு அதிதீவிர வலதுசாரி அரசாங்கம் அமைந்தால் ஒரு நாடு என்னவாக மாறும் என்பதை பிரேசில் மக்கள் நன்கு உணர்ந்தனர்.
இதற்கிடையில் லூலா மீண்டும் தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருவார் என்று எண்ணிய போல்சனாரோ அரசு அவர் மீது பொய்யான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவித்து சிறையில் அடைத்தது. ஒரு வருட சிறைவாசத்திற்குப் பிறகு பிரேசில் உச்சநீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை முன்வைத்து குற்றமற்றவர் நிரூபித்தார். விடுதலை செய்யப்பட்டு பிரேசில் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார் லூலா. ஆளும் அரசாங்கத்தின் அனைத்து தில்லுமுல்லுக்களையும் மீறி பிரேசில் மக்களின் சிறப்பான ஆதரவுடன் 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் லூலா.
இளஞ்சிவப்பு அலை:
உலக அளவில் எழுந்த வலதுசாரிப் போக்கினால் ஏற்பட்ட ஓர் இடைவெளிக்குப் பிறகு தென்னமெரிக்க நாடுகளில் தேர்தல்களின் மூலம் இடதுசாரிக் கட்சிகள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் சூழல்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்கின்றன. இது வரலாற்றில் “இளஞ்சிவப்பு அலை” என்று அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் வெனிசுலாவில் 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதே ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி கட்சி வெற்றி பெற்று ஆன்ரஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரேடர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இது அந்த நாட்டின் 49 ஆண்டுகால வரலாற்றில் இடதுசாரிகளின் முதல் வெற்றியாகும். பொலிவியாவில் இடதுசாரித் தலைவர் ஈவோ மொரேல்ஸைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சோசலிசத்திற்கான இயக்கம் என்ற கட்சியின் சார்பில் லூயிஸ் ஆர்ஸ் கேடகோரா ஜனாதிபதியாக வந்துள்ளார். மேலும் ஈக்குவடாரில் ரபேல் கோரியா, அர்ஜென்டினாவில் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் போன்ற இடதுசாரித் தலைவர்கள் இந்த காலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளனர்.
இவற்றைத் தொடர்ந்து 2021ம் வருடம் நடைபெற்ற தேர்தல்களில் ஐந்து நாடுகளில் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக சிலி நாட்டில் இடதுசாரி புரட்சிகரக் குழுவைச் சேர்ந்த சால்வடார் அலெண்டே அமெரிக்க சிஐஏ சதி மூலம் படுகொலை செய்யப்பட்டு, 48 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்நாட்டின் ஜனாதிபதியாக இடதுசாரித் தலைவர் கேப்ரியல் போரிக் பொறுப்பேற்றது புதிய வரலாற்றின் தொடக்கமாக மாறியது. நிகரகுவாவில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இடதுசாரியான டேனியல் ஒர்டேகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் பெருவிலும் பெட்ரோ காஸ்டிலோ தலைமையிலான சுதந்திர பெரு தேசிய அரசியல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கொலம்பியாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்த காஸ்டவோ பெட்ரோ 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபர் என்ற பெருமையைப் பெறுகிறார் பெட்ரோ. ஹோண்டுராஸ் நாட்டில் இடதுசாரி வேட்பாளர் சியமரோ காஸ்ட்ரோ வெற்றி பெற்றுள்ளார். இந்த வரிசையில் தென்னமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடான பிரேசிலும் தற்போது இணைந்துள்ளது.
ஏற்கனவே அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக புரட்சிகர இடதுசாரி அரசைக் கொண்டுள்ள கியூபாவையும் சேர்த்து தற்போது 12 நாடுகளில் இடதுசாரி அரசாங்கங்கள் ஆட்சியில் உள்ளன. இதன்மூலம் தென்னமெரிக்க கண்டத்தை ஏறக்குறைய முற்றாக சூழ்ந்துள்ளது மக்கள் நலன் சார்ந்த இடதுஅலை.
“உலகின் மூன்றாவது பெரிய உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காமல் பட்டினி கிடப்பதை இனியும் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது. எனது முதல் பணி இந்த நாட்டு மக்களின் பட்டினியைப் போக்குவதேயாகும்”. ஜனாதிபதி தேர்தலின் உச்சகட்ட பிரச்சாரத்தின் போது இடதுசாரி வேட்பாளர் லூலா பிரேசில் மக்களுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் படர்ந்துள்ள பொருளாதார தேக்கம், உக்ரைன் போர், மோசமான உள்நாட்டு பொருளாதாரம் உள்ளிட்ட சிக்கலான சூழலில் தலைமை ஏற்றிருக்கும் லூலா இவற்றை எல்லாம் கடந்து தன் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொள்வார் என்றும், அமேசான் மழைக் காடுகளின் அழிப்பை தடுத்து நிறுத்தி இப்பூமிப்பந்தின் சூழலியல் பிரச்சனைகளைக் குறைப்பதற்கு தன்னாலான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வார் என்றும் உறுதியாக எதிர்பார்க்கலாம். வசந்தத்தை நோக்கிய தன்னுடைய பயணத்தை 2023 ம் வருடம் ஜனவரி முதல் தேதி துவக்குகிறார் லூயிஸ் இனாசியோ லூலா டிசில்வா என்னும் இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் தோழர் லூலா.
Very well written informative article. Hats off to Bank Workers unity.
மிக அற்புதமாக எழுதப்பட்டுள்ளது. தெளிந்த நடை படிக்க எளிமையாக உள்ளது.
Good one👏
தென்அமெரிக்கா நாடுகளில் மக்கள் நலன் சார்ந்த இடதுசாரி அரசியல் படர்ந்து முன்னேறிய விதம் சிறப்பாக முன் வைக்கப்பட்டுள்ளது!
வாழ்த்துக்கள் 💐
அருமையான விரிவான கட்டுரை.
அற்புதமான கட்டுரை. ஏராளமான விவரங்களை தெளிவாக எழுதிய கட்டுரை யாளர் க்கு பாராட்டுகள்.