ஜி.ஆர்.ரவி
உலகப் பட்டினிக் குறியீடு அமெரிக்காவின் International Food Policy Research Institute (IFPRI) மற்றும் ஜெர்மனியின் Welt hunger life தான் முதல் அறிக்கை வெளியிட்டது. பின்னர் அயர்லாந்தின் அரசு சாரா அமைப்பான Concern Worldwide-ம் இணைந்துகொண்டது. 2018ல் IFPRI இதிருந்து விலகி மற்ற இரண்டு அமைப்புகளும் கூட்டாக வெளியிட்டு வருகின்றன.
உலக பட்டினி குறியீடு பற்றி பார்ப்பதற்கு முன்னால் உலக நாடுகளின் ஏழ்மை நிலை குறித்து ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமும் ஆக்ஸ்போர்டு (OXFORD) பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வை பார்ப்போம். இந்த ஆய்வில் பல புதிய பரிமாண வறுமை குறியீடு (Multi Dimensional Poverty Line) மூலம் ஏழ்மை நிலையில் இந்தியா முதடத்தை பிடித்துள்ளது. நமது நாட்டில் ஏழ்மை நிலையில் சுமார் 22 கோடி பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக நைஜீரியா 9.6 கோடியாக உள்ளது.பங்கேற்ற மொத்த நாடுகள் 111 ஆகும்.
உலகம் முழுவதும் சுமார் 120 கோடி பேர் அதாவது உலக மக்கள் தொகையில் சுமார் 19.1% பேர் கடுமையான வறுமையில் வாழ்கின்றனர். அதில் சரிபாதிபேர் அதாவது கடுமையான வறுமையில் வாழும் மக்களில் 60 கோடி பேர் 18 வயதிற்கும் குறைவான குழந்தைகள் தான் என்று கூறுகிறது இந்த ஆய்வு. இந்தியாவில் (2019-21) ஆம் ஆண்டில் 9.7 கோடி குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருந்தனர். அதாவது இந்தியாவில் 5ல் ஒரு குழந்தை (21.8%) ஏழ்மை நிலையில் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களே வறுமையில் முதடம் வகிக்கின்றன.
உலக பட்டினி குறியீடு :
2022 ஆம் ஆண்டிற்கான உலக பட்டினி குறியீட்டில் (Global Hunger Index) இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான இடத்தை பெற்றுள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது.
ஆனால் சக ஆசிய நாடுகளான பாகிஸ்தான் 99வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும், நேபாளம் 81-வது இடத்திலும் உள்ளன. பொருளாதார சீர்குலைவிற்குள்ளான இலங்கையும் இந்தியாவைவிட 43 இடங்கள் முன்னிலை பெற்று 64வது இடத்தில் உள்ளது.
தெற்காசியாவிலேயே மிகவும் மோசமாக, தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தியாவை விட பின் தங்கி 109வது இடத்தில் உள்ளது. உலக அளவில் 44 நாடுகள் “தீவிரமான” அல்லது “ஆபத்தான” நிலையில் உள்ள நாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியல் 2வது ஆண்டாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
அடிப்படை காரணிகள் (அளவு கோல்) :
1. ஊட்டச்சத்தின்மை விகிதம்
2. குழந்தை வளர்ச்சி குறைவு
3. போதிய எடையற்ற குழந்தை
4. குழந்தை இறப்பு விகிதம்
ஆகிய காரணிகள் அடிப்படையில் 100%க்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படுவது வழக்கம். இதில் “ஜீரோ’ மதிப்பெண் பட்டியினியிமைக்கான அளவு கோலாக எடுத்துக் கொள்ளப்பட்டு பட்டினி அதிகமாக உள்ள நாடுகளுக்கு 100 வரை மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் இந்தியா 2022 ஆம் ஆண்டில் 29.1 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. 2014ல் இது 28.2 மதிப்பெண்களாக இருந்தது. அதாவது தற்போது 29.1 என்பது பட்டினி அதிகரித்துள்ளதை காட்டுகிறது. இந்த கீழ் நிலைக்கு 2016ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, 2019ல் கோவிட் பெருந்தொற்றை பாஜக அரசு கையாணட விதம், பொது விநியோக முறை சீரழிப்பு, 11 ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கீடு எடுக்காமல் உள்ளதால். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் பயன்பெறும் சுமார் 12 கோடி பேர் விடுபட்டுள்ளமை, வரி மற்றும் விலை வாசி உயர்வு ஆகிய தொடர்ச்சியான பல மோசமான பொருளாதார கொள்கை முடிவுகள் முக்கிய காரணிகளாகும்.
ஊட்டச்சத்து பற்றாக்குறை :
குழந்தைகள் உரிய எடையில்லாமல் இருப்பது 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபோது 15.1%. இது 2022ல் 19.3% ஆக அதிகரித்துள்ளது. அதே போல ஊட்டச்சத்து பற்றாக்குறை 2018-20ல் 14.6%. ஆனால் 2019-21ல் 16.3%ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள சுமார் 82 கோடியே 80 லட்சம் மக்களில் இந்தியாவில் மட்டும் 22 கோடியே 40 லட்சம் மக்கள் உள்ளனர்.
வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல் பிரிவில் சற்று ஆறுதலாக 2014ல் 38.7% இருந்தது, தற்போது 35.5% ஆக குறைந்துள்ளது. அதேபோல குழந்தை இறப்பு விகிதமும் 4.6% இருந்து 3.3%ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் பட்டினிக்கொடுமை திடீரென அதிகரித்துவிடவில்லை என்றும் கடந்த 7 ஆண்டுகளாகவே (அதாவது பாஜக ஆட்சிக்கு வந்தபின்) பட்டினி குறியீட்டில் தான் இந்தியா பயணிக்கிறது என்றும் உலக பட்டினி குறியீடு கடந்த 2021ஆம் ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. கீழே உள்ள அட்டவணை அதை தெளிவாக்கும்.
வருடம் | இந்தியாவின் இடம் | மொத்த நாடுகள் பங்கேற்பு |
2011 | 67 | 122 |
2012 | 65 | 120 |
2013 | 63 | 120 |
2014 | 55 | 120 |
2015 | 80 | 117 |
2016 | 97 | 118 |
2017 | 100 | 119 |
2018 | 103 | 132 |
2019 | 102 | 117 |
2020 | 94 | 107 |
2021 | 101 | 116 |
2022 | 107 | 121 |
இதை சகித்துக் கொள்ள முடியாத ஆட்சியாளர்கள் இந்த அறிக்கை அறிவியல் பூர்வமற்றது என்று தொடர்ந்து மறுத்து வருகிறார்கள்.
சிறப்பான இடத்தில் உள்ள நாடுகள் :
உலகப் பட்டினி குறியீட்டில் 5 மதிப்பெண்களுக்கு கீழே பெற்று சீனா, துருக்கி மற்றும் குவைத் உட்பட 17 நாடுகள் கடந்த முறை பட்டினி ஒழிப்பில் சிறப்பான இடத்தை பெற்றிருந்ததை இந்த ஆண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை கைவிட்டு மக்கள் சார்பான பொருளாதார கொள்கையை கைக் கொண்டால் மட்டுமே இந்தியா பட்டினிக் கொடுமையிலிருந்து விடுபட முடியும்.