”அனைவருக்கும் உத்தரவாதமான பயனுள்ள பென்சன்” – கோரிக்கை நாள் 2022 நவம்பர் 17 – BEFI அறைகூவல்

சி.பி.கிருஷ்ணன்

2022 அக்டோபர் மாதம் 14-15 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (பிஇஎஃப்ஐ) மத்திய குழு 2022 நவம்பர் 17 ஆம் நாளை பென்சன் தினமாக கடைபிடிக்கக் கோரி அறைகூவல் விடுத்துள்ளது.

கிராஜுவிடி, பிஎப் உடன் மூன்றாவது ஓய்வூதியமாக பென்சன் பெற வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கனவிற்கு வடிவம் கிடைக்கும் வகையில் 1990 களின் துவக்கத்தில் தீரமிக்க கூட்டுப் போராட்டம் நடைபெற்றது. இதில் வணிக வங்கி, கிராம வங்கி, ரிசர்வ் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தீவிரமாக பங்கேற்றனர். ஆனால் வணிக வங்கியில் உள்ள ஒரு பெரும்பான்மை வங்கி சங்கம் பிஎப் ஐ விட்டுக் கொடுத்து பென்சன் பெற ஒப்பந்தம் போட்டு ஒப்புக்கொள்ளவே அது கனவாகவே மாறி விட்டது. பிஎப்க்கு பதிலாக அமலாக்கப்பட்ட பென்சனை வணிக வங்கியில் 50%க்கும் குறைவான ஊழியர்கள் அதிகாரிகள் மட்டுமே தேர்ந்தெடுத்தனர். கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்சன் அப்போது கிடைக்கவில்லை. வட்டி வீதம் குறைந்து கொண்டே வந்த மற்றும் விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் போன பின்னணியில் பென்சன் தெரிவு செய்ய மற்றொரு வாய்ப்பு வேண்டும் என்ற கோரிக்கை ஆகப் பெரும்பாலான வங்கி ஊழியர்கள் அதிகாரிகளால் எழுப்பப்பட்டது. நீண்ட முயற்சிக்குப் பிறகு ஒன்பதாவது இருதரப்பு ஒப்பந்தத்தின் போது இந்த கோரிக்கை வென்றெடுக்கப்பட்டது. “நீங்கள் பேருந்தை தவற விட்டு விட்டீர்கள்; எப்படி பென்சனுக்கான மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்?” என்று சொன்னவர்களே மற்றொரு வாய்ப்புக்காக குரல் கொடுக்க முன் வந்தனர். 25000 கோடிக்கு மேல் கூடுதல் செலவாகும் என்ற நிர்வாகத்தின், மத்திய அரசின் கணக்குகளெல்லாம் பொய்ப்பிக்கப்பட்டு, பணியில் இருந்தவர்களுக்கு ரூ.6000 கோடி மட்டுமே கூடுதல் செலவாகும் என்று நிரூபித்ததில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்திற்கு மகத்தான பங்குண்டு.

புதிய பென்சன் திட்டம் திணிப்பு

அதே சமயம் புதிய பென்சன் திட்டமும் 2010 ஏப்ரல் முதல் திணிக்கப்பட்டது. அனைத்து சங்கங்களும் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டன. ஆனால் பத்தாவது இருதரப்பு ஒப்பந்தத்திலேயே புதிய பென்சனை கைவிட்டு, அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட பயனுள்ள பழைய பென்சன் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கூட்டாக வலுவாக வைக்கப்பட்டது. இது 11 வது ஒப்பந்தத்தின் போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் வங்கி நிர்வாகஙகள் இந்த கோரிக்கையை ஏற்க வில்லை. அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் 2004 முதலே திணிக்கப்பட்டு விட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே நாடெங்கிலும் அரசு ஊழியர்கள் புதிய பென்சனை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாநிலங்களில் இது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டங்களில் வங்கி ஊழியர்களும் பங்கேற்கின்றனர். ராஜஸ்தான், சட்டிஸ்கர், பஞ்சாப், ஜார்கண்ட் மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, உத்திரவாதமான பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்துவதாக அறிவித்து விட்டன. எனவே ”வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் புதிய பென்சனை கைவிட்டு உத்தரவாதமான பயனுள்ள பழைய பென்சனை அமுல்படுத்த வேண்டும்” என்ற கோரிக்கை இன்னும் வலுப் பெறுகிறது.

பென்சன் புதுப்பித்தல்

வங்கித் துறையில் 1995ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட பென்சன் கடந்த 27 ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவே (அப்டேஷன்) இல்லை. இதனால் பல முரண்பாடுகள் உருவாகியுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஓய்வு பெற்ற உயர்நிலை அதிகாரியின் பென்சன் என்பது சொற்பத் தொகையாகவே உள்ளது. கடைநிலை ஊழியர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.  பென்சன் அப்டேஷன் கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளாக பேச்சு வார்த்தை நிலையிலேயே உள்ளது. வங்கி நிர்வாகங்கள் தொடர்ந்து எதிர்மறை நிலையே எடுத்து வருகிறது. சமீபத்தில் உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் ”அப்டேஷன் சாத்தியமில்லை” என்று இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) கூறியுள்ளது. அதன் பிறகு 8 சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் படிப்படியாக அமல்படுத்த ஆலோசிப்பது போன்ற தோற்றத்தை கொடுக்கிறது ஐபிஏ. இது வரை முழுமையான விவரங்களைக் கொண்டு சங்கங்கள் வைத்துள்ள அப்டேஷன் கோரிக்கைக்கு கூடுதல் செலவாகுமா? ஆகுமென்றால் எவ்வளவு ஆகும் என்பது பற்றியெல்லாம் ஐபிஏ எந்த விதமான ஆக்சூரியல் கணக்கும் போடவில்லை. இது சங்கங்களின் கோரிக்கையை உதாசீனப்படுத்தும் போக்காகும்.

குறைவான லோட் 

10வது, 11வது இருதரப்பு ஒப்பந்தத்தில் முறையே 2% மற்றும் 2.5% மட்டுமே அடிப்படை ஊதியத்தில் கூட்டப்பட்டதால் (loading) முறையே 7.75% மற்றும் 16.4% சிறப்பு அலவன்சுக்கு எந்தவிதமான ஓய்வூதியப் பயனும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக பென்சன் தொகையிலும், கம்யூடேஷன் தொகையிலும் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் பின் தேதியிட்டு சரி செய்யப்பட வேண்டும்.

பென்சன் திட்டத்தில் முன்னேற்றம்

இதுவல்லாமல் அரசு ஊழியர்களுக்கு/ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு பென்சன் திட்டத்தில் பல் முன்னேற்றமான சலுகைகள் உள்ளன. 10 வருடத்தில் ஓய்வு பெற்றால் முழு பென்சன், 20 வருடத்தில் விருப்ப ஓய்வு பெற்றால் முழு பென்சன், கடைசி 10 மாத சம்பள சராசரி அல்லது கடைசி மாத சம்பளம் இதில் எது கூடுதலோ அதை பென்சன் கணக்கிட எடுத்துக் கொள்வது, 40% வரை கம்யூடேஷன், 12 வருடத்தில் கம்யூடேஷன் தொகை திரும்பப் பெறுதல், 80 வயதுக்குப் பிறகு, 90 வயதுக்குப் பிறகு, 100 வயதுக்குப் பிறகு கூடுதல் பென்சன் இப்படி பல முன்னேற்றங்கள் உள்ளன. இவற்றை வங்கி ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் விரிவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது. சில ஆயிரம் ஊழியர்கள் பென்சன் பெற தகுதி இருந்தும், முதல் முறை பென்சனை தேர்ந்தெடுக்காததால் ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களுக்கும் பென்சன் வழங்கப்பட வேண்டும்.

எனவேதான் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மத்திய குழுவில் 2022 நவம்பர் 17ம் தேதியை பென்சன் தினமாக கடைபிடிப்பது என்று மிகச் சரியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

  • புதிய பென்சன் திட்டத்தை கைவிடு
  • அனைவருக்கும் உத்திரவாதமான பயனுள்ள பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்து
  • பென்சன் அப்டேஷனை அமல்படுத்து
  • பென்சன் திட்டத்தை முன்னேற்று

இந்த கோரிக்கைகளை வைத்து நடைபெறும் ஆர்ப்பாட்டம், பிரசாரம் இவற்றை வென்றெடுப்பதற்கான முக்கிய மைல்கல்லாக அமையும்.

5 comments

  1. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வைத்துள்ள பென்ஷனுக்கான கோரிக்கை என்பது ஒட்டுமொத்த வங்கி ஊழியர் அதிகாரிக்கான குறிப்பாக ஓய்வூதியர்களுக்கான நலன் சார்ந்த கோரிக்கைகளாகும். எனவே இப் போராட்டங்களில் பிரச்சாரங்களில் அனைத்து வங்கி ஊழியர் அதிகாரிகளும் ஓய்வு திறனும் பெருமாளின் பங்கெடுப்பது என்பது இக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான முதல் வெற்றி படியாகும். இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும்.

  2. நம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையே. இருப்பினும், இருதரப்பு பேச்சு வார்த்தையில், கோரிக்கைகள் செவிமடுக்கப்படவில்லையெனில், ஒன்றுபட்ட தொடர் போராடாடத்தினால்தான், ஒரு சில கோரிக்கைகளையாவது இன்று உள்ள சூழலில் வென்றெடுக்க முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒரு நாள் வேலைநிறுத்தம் என்பது ஒருநாள் விடுப்பு போல இன்றைய Digital Banking காலகட்டத்தில்லாவதால், வேலைநிறுத்தம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகம். ஆயின், நம் பிரச்சினைகளை மக்கள் முன் எடுத்து செல்ல வழிவகுக்கும்.

  3. நவம்பர் 17ம் தேதியை பென்சன் தினமாக BEFI மத்தியக்குழு கடைப்பிடிக்க முடிவெடுத்தது மிகவும் வரவேற்கத்தகுந்தது. இந்த முயற்சி, பென்ஷன் கோரிக்கைகள் விஷயத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளோம்/ சாதித்துள்ளோம் என்று UFBU வும் சயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்பாக அமையும். வங்கி ஊழியர்கள்/ அதிகாரிகள்/ வங்கியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அனைவரின் கூட்டு முயற்சியாலேயே இது முடியும். BEFI க்கு வாழ்த்துக்கள்.
    நம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவையே. இருப்பினும், இருதரப்பு பேச்சு வார்த்தையில், கோரிக்கைகள் செவிமடுக்கப்படவில்லையெனில், ஒன்றுபட்ட தொடர் போராடாடத்தினால்தான், ஒரு சில கோரிக்கைகளையாவது இன்று உள்ள சூழலில் வென்றெடுக்க முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒரு நாள் வேலைநிறுத்தம் என்பது ஒருநாள் விடுப்பு போல இன்றைய Digital Banking காலகட்டத்தில்லாவதால், வேலைநிறுத்தம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகம். ஆயின், நம் பிரச்சினைகளை மக்கள் முன் எடுத்து செல்ல வழிவகுக்கும்.

  4. விவாதத்திற்கு தேவையான விவரங்கள் உள்ள கட்டுரை… NPS to OPS க்கான உதாரணங்களை கொடுத்திருக்கலாம்..

  5. ஊழியர்கள் ஓய்வூதியர்கள் ஆதங்கமான பென்ஷன் அப்டேஷன் கோரிக்கைக்கு, எடுக்கப்படும் பிஇஎப்ஐ போராட்டம் வெல்லட்டும்!

Comment here...