ஆர்.இளங்கோவன்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1-1- 2004 முதல் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஓய்வு பெற்றவர்களுக்கு கிராஜுவிட்டி கிடையாது என்று உத்தரவு கூறியது. அதேபோல ஓர் ஊழியர் இறந்து விட்டால் அவர் குடும்பத்துக்கு என்ன வழங்குவது என்பதைப் பற்றி புதிய பென்ஷன் திட்ட விதிகளில் எதுவும் இல்லை . அதேபோல ஓர் ஊழியர் உடல் ஊனமுற்று வேலை இழந்தால் அவருக்கு என்ன வழங்குவது என்பதும் திட்டத்தில் இல்லை.இதுகுறித்து பல போராட்டங்களும், டிஆர்இயூ தொடுத்த வழக்கும் இதற்கான கோரிக்கைகளை எழுப்பின. இவற்றின் விளைவாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
கிராஜுவிட்டி
புதிய பென்சன் திட்டத்திற்கு எதிராக டிஆர்இயூ தொடுத்த வழக்கில் கிராஜுவிட்டி என்பது கிராஜுவிட்டி 1972 சட்டப்படி நாட்டிலுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். ”மத்திய அரசு ஊழியர்களுக்கும் ரயில்வே உயிர்களுக்கும் கிராஜுவிட்டி வழங்க தனியாக விதி உள்ளது .எனவே அவர்களுக்கு கிராஜுவிட்டி சட்டம் பொருந்தாது என்று சட்டம் கூறுகிறது” என்பது அவர்கள் வாதம். ”புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி இல்லை என்றால் கிராஜுவிட்டி சட்டப்படி கிராஜுவிட்டி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றாலோ இறந்தாலோ உடல் ஊனமுற்று வேலை இழந்தாலோ அவர்களுக்கு கிராஜுவிட்டி வழங்க வேண்டும்” என்று டிஆர்இயூ கோரியிருந்தது.
செப்டம்பர் 2016 அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு முன்பாக 26. 8. 2016 அன்று மத்திய அரசு ஓர் உத்தரவிட்டது. அந்த உத்தரவில் ”புதிய பென்சன் திட்டத்தில் ஓய்வு பெற்றாலோ அல்லது இறந்தாலோ அல்லது உடல் ஊனமுற்று வேலை இழந்தாலோ பழைய பென்சன் விதிகளில் உள்ளபடி கிராஜுவிட்டி வழங்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் பயன் 1-1- 2004 முதலே அமலாகும் என்று உத்தரவு கூறுகிறது. புதிய பென்சன் திட்டத்தை பின்பற்றுகிற தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளும், கிராஜுவிட்டி வழங்கி மத்திய அரசு இட்ட உத்தரவை தங்கள் ஊழியர்களுக்கு அமல்படுத்தாமல் உள்ளார்கள்.
குடும்ப பென்ஷன் மற்றும் இன்வேலிட்/டிசேபிலிட்டி பென்சன்
அதேபோல புதிய பென்சனில் உள்ள ஓர் ஊழியர் இறந்து விட்டால் அவரது குடும்பத்துக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் இருந்தது. அதே போல வேலை விபத்திலோ அல்லது வெளி விபத்திலோ உடல் ஊனமுற்று வேலை இழந்தவர்களுக்கும் எந்த நிவாரணமும் இல்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு மத்திய அரசு 5-5- 2009 அன்று ஓர் உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவில் ”புதிய பென்சனில் உள்ள ஓர் ஊழியர் இறந்துவிட்டால், அவருடைய குடும்பத்துக்கு பழைய பென்ஷன் அடிப்படையிலான குடும்பப் பென்சனும் இறப்பு கிராஜுவிட்டியும் வழங்கப்பட வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டது. அதேபோல ”ஓர் ஊழியர் வேலை விபத்தில் அல்லது வெளி விபத்தில் உடல் ஊனமுற்று வேலை இழந்தால் அவருக்கு டிசெபிலிட்டி/இன்வேலிட் பென்சனும், சர்வீஸ் கிராஜுவிட்டியும் வழங்கப்பட வேண்டும்” என்றும் அந்த உத்தரவு கூறுகிறது. இந்த உத்தரவின் பயனும் 1-1-2004 முதலே அமலாக வேண்டும் என்று உத்தரவு கூறுகிறது.
இந்த உத்தரவு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2009இல் போடப்பட்டாலும் இது அமல் ஆகாமல் இருந்தது .தெற்கு ரயில்வேயில் டிஆர்இ யூ தொடுத்த வழக்கில் இது அமலாகவில்லை என்பதை சுட்டிக்காட்டி யார் யாருக்கு பழைய பென்சன் கொடுக்கவில்லை என்ற பட்டியலையும் சென்னை நிர்வாகத் தீர்ப்பாயத்திடம் அளிக்கப்பட்டது.
சென்னை நிர்வாக தீர்ப்பாயம் இதை விசாரித்து, அந்த குடும்பங்கள் விண்ணப்பித்த நான்கு வாரத்துக்குள் அவர்களுக்கு குடும்ப பென்சனும் இறப்பு கிராஜுவிட்டியும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அது முதற்கொண்டு தெற்கு ரயில்வேயில் அத்தகையவர்கள் அனைவருக்கும் பழைய பென்சன் படி குடும்பப் பென்சனும் இறப்பு கிராஜுவிட்டியும் வழங்கப்படுகிறது. இதே போல மற்ற ரயில்வேக்களிலும் பல மத்திய அரசு நிறுவனங்களிலும் இது இப்போது அமல்படுத்தப்படுகிறது.
ஆனால் புதிய பென்சன் அமல்படுத்தி உள்ள பல மாநில அரசுகளும் இந்த உத்தரவை அமுல்படுத்துவதில்லை. சமீபத்தில் மத்திய அரசு புதிய பென்சனுக்கான விதிகளை 2022 அக்டோபர் 26ஆம் தேதியும், புதிய பென்சன்தாரர்களுக்கான கிராஜுவிட்டி விதிகளை 2022 அக்டோபர் 11ம் தேதியும் உருவாக்கியுள்ளது இந்த விதிகளில் இந்த உத்தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகள் இல்லாத இடங்களில் இதை அமலாக்க முன்முயற்சி எடுக்கப்பட வேண்டும். புதிய பென்சனுக்கு எதிரான போராட்டங்களோடு இந்த குடும்பங்களுக்கான நிவாரணமும் கோரப்பட வேண்டும்.
கட்டுரை கூடுதல் வெளிச்சம் தருகிறது.
நன்றி தோழர் 🙏
Very valuable informations.