சங்கிலித் தையல் – கவிதைத் தொகுப்பு: நூல் விமர்சனம்

ஆர்.எஸ். செண்பகம்.

”நூல் விமர்சனம் உங்கள் வேலை” என்றார்கள்.  ”ஆஹா, நல்லது” என்றேன்.  சங்கிலித் தையலால் கட்டுண்டேன்.  கட்டுற வாய்ப்பளித்த நம் உதயத்திற்கு நன்றி. தையல்களில் அழகான தையல் சங்கிலித் தையல்.  கை விலங்கு அழகாய் மாறுவது தையலுக்கு மட்டுமன்று.  ”தையலு”க்கும் தான்.  “விலங்கு”க்குள்ளும் அழகியல் தேடிக் கொண்டாட பழகியவர்கள் நாம்.  கோர்த்திருந்த சங்கிலித் தையலில் பல ”குல சாமி”களின் வரலாறும் கட்டுண்டு கிடக்கிறது.  

எங்கே தொடங்க? எங்கே முடிக்க?  கவிதைகளுக்கு துவக்கமும் முடிவும் உண்டா என்ன? ஆயினும் கவிஞர் உமாவின் முகவுரை பற்றி தொடர்கிறேன். 

பெண்கள், குழந்தைகள், உழைப்பாளிகள், உழுகுடிகள், ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், விளிம்புநிலை மனிதர் நிலை பற்றி அக்கறை கொள்ளும் ”பேசு” மொழிகள் பண்புற்றது பல தளங்களில் என்றாலும், முக்கிய தளம் நம் தொழிற்சங்கம் அல்லவா? மிளிர்கிறது பெண் பார்வையையும் தாண்டி. நன்றி சொல்வோம் AIIEA சங்கத்திற்கு. கவிஞர் தன் சிந்தனையால் தொடாமல் எதையும் விட்டு வைக்கவில்லை என்பது போல் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர் தொட்டு தலைச் சுமடு வியாபாரி, ஊரக உள்ளாட்சி துறை ஊழியர், கொரோனா காலத்தில் அன்றாடங்காச்சிகளாய் மாறிப் போனவர்கள் வரை அனைவரின் அவல நிலையையும் ஆங்காங்கே சிந்தியிருக்கும் கவித் துளிகளில் தெளித்துச் சென்றுள்ளார்.  

”பசிப்பிணி நீக்கா தேசங்களின் அதிநவீன செயற்கைக் கோள்கள் விண் கிழித்தலில்” மட்டும் சினம் எழவில்லை.  எதற்கும் போராடாது இருப்போர் மீதும் சினம் ”எரி நட்சத்திரங்களாய்” சீறிப் பாய்கிறது.  பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் சிறு கவிதையில், ”அடையாளம் மறைத்த குற்றவாளி” என்று தன்னைத் தானே சுட்டுவதன் மூலம், மௌனமாய் உறைந்திருக்கும் அத்தனை உள்ளங்களையும் குற்றவாளிக் கூண்டில் சத்தமின்றி ஏற்றி விடுகிறார் கவிஞர்.  

”களப் போராளி போல்” கொத்தி விரட்டும் குஞ்சு பொறித்த காகம் பார்த்த மகள் ”காக்காவுக்கு பெண் குழந்தையா பிறந்திருக்கு” என்று கேட்பதாய் எழுதியுள்ள வரிகளின் தீர்க்கமான வார்த்தை செறிவினில், உலகிலேயே பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலாவது இடத்தில் இருக்கிறது என்று இரண்டாண்டுகள் முன்பு வெளி வந்த அறிக்கையின் உண்மைத் தன்மை வெளிப்படுகிறது.

அடி உதைகளை எதிர் கொள்ளும் தற்காப்பு வித்தைகள் அறிந்தாலும், ”மதுவாடை வந்தவுடன் வயது வந்த மகளை இழுத்தணைத்து புடவைக்குள் ஒளித்து இரவெல்லாம் கண் மூடாது கிடக்கும்” தாயின் துயரில் நம் நெஞ்சம் பிசைகிறது.  

மூன்றாம் பாலினத்தின் கண்ணியத்தை – ”கண்ணியமான எதிர் முத்தத்தில்” அனைத்துப் பசியும் அடங்கிப் போகும் உணர்வை – இதைவிட ”கண்ணியமாய்” பதிவு செய்வது கடினம்.  துரோகித்து ஏமாற்றிய ஆண் கயவனை எதிர் கொள்ளும் பெண் மனதின் கம்பீரத்தை, ”கால் சங்கிலிகளற்ற காட்டு யானையின் கம்பீரத்தோடு” ஒப்பிடும்போது, ஆஹா, ஆஹா என்று ஆர்ப்பரிக்கவும், ”மதங்கொள்ளுதல் களிறுக்கு மட்டுமானதல்ல என்பதறிக” எனும் போது நெஞ்சுயர்த்தி கவிஞரை ஆரத்தழுவவும் தோன்றுகிறது. பல நேரங்களில், காரணமின்றி ஏவப்படும் அடக்குமுறைகளில், பெண் மனது ”காரணம் நாமோ என்று” தன்னையே ஆய்வு செய்யும்.  ”வீட்டைச் சுற்றிலும் தகரக் கதவுகளால் அடைத்த போது சினமுற்ற பொன் வண்டுகளின் நியாயத் தீர்ப்பெனவே தோன்றுகிறது மும்தாஜ்” என்ற வரிகளில் வீட்டிற்குள் சிறை வைக்கப்படும் பெண் மனது நியாயம் தேடுகிறது.

அதே நேரத்தில், கலாச்சார தூக்குக் கயிற்றில் குற்றங்கள் பல சாட்டி பெண்ணை மீண்டும் மீண்டும் தூக்கிலேற்றும் இச்சமூகத்தின் பொல்லா துலாக்கோல் கண்டு எரிச்சலாகி, ”வாழ்வு முழுமையும் அறிவுரைகளெனும் அம்புகளிலான படுக்கையில் எப்படிக் கிடப்பது?” என்று கேள்வி எழுப்பி, ”உங்கள் தலைக்கு மேல் உயர்ந்து பறப்பதைக் காண விரும்பாவிடில் எங்களுக்காக உருவாக்கிய கலாச்சாரக் கயிற்றில் தூக்கிட்டுக் கொள்ளுங்கள்” என்ற நியாயத் தீர்ப்பை வழங்கிச் செல்கிறார் கவிஞர்.

அதே போல, பெண் கவிஞர்களின் காதல் கவிதைகளில் காதலனின் அடையாளத்தை தேடும் வாசக மனத்தில் சமூகத்தின் பொதுப்புத்தி தகவமைக்கப்பட்டுள்ள விதத்தை சாடிச் செல்கிறார் போகிற போக்கில்.

தடுப்புச் சுவர் கொண்டு ”வறுமை மறைக்கும்” அவசரச் செயலுக்கு எச்சரிக்கை விடுகிறார்… ”அந்திச் சிவப்பின் எழுச்சிக்குப் பின்னால்” அகங்கார அரியணையில் இருந்து தலைகீழாய் தள்ளப்படுவாய் என்று அரசியலின் சூட்சுமத்துடன்.  

”அழித்தொழித்த நினைவுகளின் தடயங்களில் கால்பதிக்காது கடந்து செல்லும்” ஆண் மனதையும். ”தூக்குக் கயிற்றில் தலை நுழைத்து வெளி எடுத்து” தத்தளிக்கும் பெண் மனதையும் சித்தரிக்கும் கவிஞர், இன்னொரு கவிதையில் பெருங்காதலின் இலக்கணத்தை உணர்த்தும் வகையில், ”முனை முறிந்த நம் காதல் செடி” துளிர்ப்பதற்கு, பௌதிகத்தை வென்று நிற்கும் மாகிழவனோடும் கிழத்தியோடும் சுயமி எடுப்போம் என்று அழைக்கிறார். 

பல பெண்களின் சுயங்களும், சிந்தனைகளும், சந்தோஷங்களும் திருமண வாழ்வில் காணாமல் போவதை பேசும் கவிதைகளின் வார்த்தைகள் சிற்றுளிகளாய் ”கடவுச் சொற்களற்று” இறுகிக் கிடக்கும் இதயங்களையும் உடைத்துத் திறக்கின்றன.  

”நான் பேசுவது கேட்கிறதா?”என்ற பதில் கிட்டாத நூற்றாண்டு கேள்வியை, கவிஞரோடு சேர்ந்து முச்சந்தியில் நின்று கொண்டு, ”நாங்கள் பேசுவது கேட்கிறதா?” என்று உரத்துக் கேட்க வேண்டும் போல் எனக்கும் இருந்தது.  தொடர்ந்து கவிஞர் கேட்க வேண்டும். அவரோடு சேர்ந்து வாசக நெஞ்சங்களும் தொடர்ந்து கேட்போம்.

நூல்: சங்கிலித் தையல்.

வகை: கவிதை.

எழுதியவர்: கோவை மீ. உமா மகேஸ்வரி.

வெளியீடு: அகநி பதிப்பகம்

One comment

Comment here...