என்.எல்.மாதவன்
போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை அதிகமாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மறுசீராய்வு மனு செப்டம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. – செய்தி
யூனியன் கார்பைடு நிறுவனம் அளித்த நிவாரணத் தொகை 470 மில்லியன் டாலர்கள் (இன்றைய மதிப்பில் 3800 கோடி ரூபாய்) குறைவான நிவாரணத் தொகையாக இருப்பதால் மேலும் 7400 கோடி ரூபாய் கேட்டு நவம்பர் 2010ல் உச்ச நீதிமன்றத்தை இந்திய அரசு நாடியது. நீதி அரசர் எஸ் கே கவுல் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டு விசாரிக்க தொடங்கியது. 12 ஆண்டுகள் கழித்து 2022 செப்டம்பர் 20 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. திடீரென்று (!!) வழக்கு விசாரணைக்கு வந்திருப்பதால், அரசு தரப்பு அதிகாரிகள் தாங்கள் பதிலளிக்க மேலும் அவகாசம் கேட்டுள்ளனர். மனு தாக்கல் செய்து 12 ஆண்டுகள் கழித்து அப்படி ஒரு முக்கியமான வழக்கு விசாரணைக்கு வரும்போது மேலும் காலம் கடத்துவது பொறுப்பற்ற செயலாகும்.
1984 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து
விஷவாயு கசிவு ஏற்பட்டது 1984 ஆம் ஆண்டில். அந்த விபத்தில் மாண்டவர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் மேல் மற்றும் 6 லட்சம் பேருக்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் இன்னும் நீதிமன்ற படிகளிலேயே நிவாரணத்தொகை நிர்ணயிக்கப்படாமல் உறங்கிக் கிடக்கிறது.
1934 ஆம் ஆண்டு யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. அந்த கம்பெனி பேட்டரிகள், ரசாயன பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்க இங்கு நிறுவப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைட் கம்பெனி இந்த நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளின் உரிமையாளர்.
20000 பேர் கொல்லப்பட்டனர் 6 லட்சம் பேர் பாதிப்பு
1970 ஆம் ஆண்டு யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட் என்ற கம்பெனி பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பதற்காக ஒரு தொழிற்சாலையை மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் அடர்த்தியான மக்கள் தொகை வசிக்கும் இடத்தில் நிறுவியது. இந்த தொழிற்சாலை நிறுவ அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. ‘செவின்’ & ‘டெமிக்’ (Sevin and Temik) என்ற பூச்சிக்கொல்லிகள் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன. 1984 டிசம்பர் 2 மற்றும் 3ஆம் தேதி 40 டன் ‘மிக்’ (MIC – Methyl Isocyanate) என்கிற கேஸ் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் ஒழுகி அந்த வாயுக்களுடன் தண்ணீர் கலப்பினால் எதிர்வினை ஆற்றி கொடிய விஷவாயுவாகி வெளியே காற்று மண்டலத்தில் கலந்து அங்கிருந்த குடிசைப் பகுதிகள் மீது வீச ஆரம்பித்தது.
அந்த விஷ வாயு கலந்த காற்று பட்டவுடன் 2600 பேர் மரணம் அடைந்தனர். 15 நாட்களில் மரணமடைந்தவர் எண்ணிக்கை 8000 ஆக உயர்ந்தது மேலும் சில நாட்களில் விஷவாயு தாக்குதலால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 20000 ஆக் உயர்ந்தது. 6 லட்சம் பேருக்கு மேல் மீள முடியாத நிரந்தர பாதிப்புக்கு உள்ளாயினர். உலக சரித்திரத்திலேயே இதற்கு இணையான தொழிற்சாலை பேரிடர் பேரழிவு எங்கும் கேள்விப்பட்டதில்லை.
யூனியன் கார்பைட் இந்தியா லிமிடெட்டின் 51% பங்குகள் அமெரிக்காவின் யூனியன் கார்பைட்டுக்கு சொந்தம். மீதி 22 சதவீதம் எல்ஐசி யூடிஐ க்கு சொந்தம்.மீதமுள்ள 27 சதவீதம் இந்திய பங்குதாரர்கள்.
வழக்கின் வரலாறு
‘போபால் கேஸ் லீக் டிசாஸ்டர் பிராசசிங் ஆஃப் கிளைம்ஸ் ஆக்ட் 1985’ என்ற சட்டத்தின் படி மத்திய அரசு பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக பேசுவதற்கும், நிவாரணம் கோருவதற்கும் உரிமை பெற்றது.
இந்த சட்டத்தின் படி இந்திய அரசு அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் நீதிமன்றத்தை அணுகியது. அங்குள்ள நீதிமன்றம் இந்தியாவிலுள்ள நீதிமன்றத்தை நாடச் சொல்லிற்று. மேலும் யூனியன் கார்பைட் நிர்வாகத்தை இந்திய அரசுடன் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தியது.
1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் போபால் மாவட்ட கோர்ட் யூனியன் கார்பைட் நிறுவனம் ஏற்கனவே நஷ்ட ஈடாக அளிக்க ஒப்புக் கொண்ட தொகைக்கு கூடுதலாக 350 கோடி ரூபாய் அளிக்க தீர்ப்பு கூறியது. கம்பெனி மேல்முறையீடு செய்ததில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூடுதல் தொகையை 250 கோடி ரூபாயாக குறைத்து தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து கம்பெனியின் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இப்படி மேல்முறையீடு செய்யும் போது உயர் நீதிமன்றம் கூறிய தொகையை கட்டி விட்டுத்தான் மேல் முறையீடு செய்ய வேண்டும். ஆனால் ஒரு பைசா கூட கட்டாமல் உச்ச நீதிமன்றத்தை நாட அனுமதிக்கப்பட்டனர் என்பது தான் வேதனை.
இந்தத் தொகை மிகக் குறைவானது என்றும் அதை செங்குத்தாக உயர்த்த வேண்டும் என்றும் மத்திய அரசும் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் கூடுதலாக 750 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க தீர்ப்பு அளித்தது. எல்லோருடைய எதிர்பார்ப்புக்கும் இது மிகவும் குறைவான தொகையாக அமைந்தது. கம்பெனியின் செயலால் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளுக்கும் தொடர்ந்து மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பாதிப்புகளுக்கும் இந்த தீர்ப்பு சரியான தீர்வை அளிக்கவில்லை. பெரிய ஏமாற்றத்தை இது அளித்தது.
பாதிப்பை மதிப்பீடு செய்து இறந்தவர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தீர்ப்பின்படி நிவாரணமாக அளிக்கும் தொகையை பிரித்துக் கொடுத்தால் தலா ரூபாய் 50 ஆயிரத்துக்கு குறைவாகத்தான் கிடைக்கும். மனிதர்களின் உயிரையும் பாதிப்பையும் ஒரு பொருட்டாகவே இந்த தீர்ப்பு மதிக்கவில்லை. எனவேதான் மத்திய அரசு மறு சீராய்வு மனுவில் யூனியன் கார்பைடு நிறுவனம் அளிக்க முன் வந்த நஷ்ட் ஈட்டுத் தொகையான ரூ.3800 கோடிக்கு மேல் (470 மில்லியன் டாலர்) ரூ. 7400 கோடி வழங்கிட மறு சீராய்வு மனு போட்டுள்ளது. அந்த வழக்குதான் 12 ஆண்டுகள் கழித்து இந்த வருடம் செப்டம்பர் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
குற்றவியல் சட்டத்தின் படி கொலை குற்றத்திற்காக யூனியன் கார்பைட் நிர்வாகம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக எந்த காரணமும் நிரூபிக்கப்படாததால் ‘அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து‘ என்று ஒரு சாதாரண வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதன்படி அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள் சிறை மட்டும்தான். சாதாரண வாகன விபத்து மாதிரி இந்தப் பேரிடரை குறைத்து மதிப்பிட்டு வழக்கு தொடரப்பட்டது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியது.
மற்ற நாடுகளில் இது போன்ற சம்பவங்களை எப்படி எதிர்கொண்டிருக்கின்றனர் என்று பார்க்கும்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் உதாசீனப்பட்டிருப்பது நன்றாக புலப்படும். 2010 ஆம் ஆண்டு மெக்சிகோவில் எண்ணெய் கிணறு வெடித்து ஏற்பட்ட எண்ணெய் கசிவு விபத்துக்காக அந்த கம்பெனியை அரசு பொறுப்பாக்கியது. கம்பெனி 20 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி அந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கியது.
அந்த இரண்டு ஆண்டுகளுக்குள் விபத்துக்கு பொறுப்பானவர்கள் மீது சிறை தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தியாவில் 1984 இல் நடந்த இந்த விபத்துக்கு 38 ஆண்டுகள் கழித்தும் சரியான தீர்வு எட்டப்படாமலேயே காலம் கடத்திக் கொண்டே இருக்கின்றனர். வழக்கை நீர்த்துப்போக விடுகின்றனர் என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
ஆட்சி மாறி இருக்கிறது. கட்சி மாறி இருக்கிறது. ஆனால் காட்சி மாறவில்லை. தீர்வு எட்டப்படாமலேயே அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இழப்பிட்டிற்காக காத்திருப்பவர்களும் கல்லறைக்குள் சென்ற பின்பும்
எட்டா தூரத்தில் இழப்பீடு!
குஜராத் மாநிலத்தில்,பாலம் அறுந்து விழுந்ததை “கடவுளின் விருப்பம்” என்று சொல்வதை கேட்டு நிற்கும் இரட்டை என்ஜின் அரசு வாய்தா கேட்கவே செய்யும் !
எளிய மக்களின் உயிரை இப்படி தான் மதிப்பீடு செய்கிறார்கள்!
மிகவும் வேதனையான நிகழ்வுகள். Still Eveready batteries are made available. What a shame.