கிராம வங்கிகளை பாதுகாப்போம்

தெபாஷிஸ்பாசு சவுத்திரி (தமிழில் டி.ரவிக்குமார்)

சிறு குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், நிலமற்ற விவசாயிகள் உட்பட கிராமப்புறங்களில் உள்ள நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் சிறிய அளவிலான கடன்களை வழங்கி பெரும் சேவை  ஆற்றி வருகின்றன  கிராம வங்கிகள் (Regional Rural Banks).  அவற்றை இழிவுபடுத்தும் வகையில்  சில கார்ப்பரேட் ஊடகங்களில் சமீப காலமாக திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கிராமப்புற மக்களின் தேவைகள் பற்றிய சிறந்த புரிதலொடு, அவர்களுக்கு கடன்களை வழங்குவதில் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகின்றன கிராம வங்கிகள். இதன் மூலம் சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதில் அவை முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.

கிராம வங்கிகளின் தோற்றம்

நிலப்பிரபுக்கள் /கந்து வட்டிக்காரர்கள் கிராமப்புற மக்களுக்கு மிக அதிக வட்டிக்குக் கடனைக் கொடுத்து காலப்போக்கில் அவர்களின் சொற்ப நில உடமையை பறித்து வந்துள்ளனர். இந்தப் பின்னணியில், கிராம மக்களை கந்து வட்டிக்காரர்களின் பிடியிலிருந்து மீட்பதற்காக,  1969ல் வங்கிகள் தேசியமயமாக்கலுக்குப் பிறகு,  பொதுத்துறை வங்கிகளின் பணியை மேம்படுத்தும் வகையில் 1976ல் கிராம வங்கிகள் நிறுவப்பட்டன.

முன்னுதாரணமாக செயல்படுகின்றன

NABARD-ன் சமீபத்திய ஆய்வுக் கட்டுரைகள், ஆராய்ச்சியாளர்கள் ஷெட்டி & பட், கௌதம், பீமவரப்பு & ராவல் ஆகியோரின் ஆராய்ச்சி கட்டுரைகள், கிராம வங்கிகள் எவ்வாறு  கிராமப்புறக் குடும்பங்களின் வீட்டு வாசலுக்கு வங்கிச் சேவையைக் கொண்டு சென்று, அவர்களின் தேவைக்கேற்ப மலிவான வட்டி விகிதத்தில் சிறு கடன்களை அளிப்பதில் வெற்றிகரமாக  செயல்பட்டுள்ளன என்பதை விளக்குகின்றன.

தனியார் கடன்களை நம்பியிருக்கும் ஏழை கிராமப்புறப் பிரிவினருக்கு குறைந்த வட்டியில் சுலப கடன் வசதிகளை வழங்குவது, உற்பத்தி நடவடிக்கைகளுக்கு கிராமப்புற சேமிப்புகளை ஊக்குவிப்பது, கிராமப்புறங்களில் வேலைகளை உருவாக்குவது  ஆகியவற்றில் திறம்பட செயலாற்றி வருகின்றன.  அனைவருக்குமான உள்ளடக்கிய நிதிச் சேவையில் கிராம வங்கிகள் முன்னுதாரணமாக செயல்படுகின்றன.

கிராம மக்கள் தங்களுடைய சேமிப்பில் பெரும்பகுதி பணத்தை வங்கியில் வைப்பதை விட ரொக்கமாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள். அவர்களுக்கு தனியார் வங்கிகள் மீது நம்பிக்கை இல்லை. இந்த நிலையை மாற்றி கிராம வங்கிகள் மக்களிடையே நம்பிக்கையை வளர்த்துள்ளன. கிராமப்புற மக்களிடையே வங்கிப் பழக்கத்தை வளர்ப்பதிலும், கிராமப்புறங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அவர்களின் சேமிப்பை திரட்டுவதிலும் கிராம வங்கிகள் மகத்தான பணி ஆற்றியுள்ளன.

90% ஏழைகளுக்கான முன்னுரிமைக் கடன்

கிராம வங்கிகள் கிராமப்புற / சிறு நகர்ப்புற பகுதிகளில் 92சதவீதம் கிளைகளைக் கொண்டுள்ளன. மேலும் கிராம வங்கிகளின் மொத்தக் கடன் தொகையில் 90 சதவீதம் முன்னுரிமைத் கடனாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகின்றன. தற்போது 43 கிராம வங்கிகள், 12 பொதுத்துறை வங்கிகளால் ஸ்பான்சர் செய்யப்பட்டு 21,856 கிளைகளுடன் 28.3 கோடி சேமிப்பாளர்களுடனும் மற்றும் 2.6 கோடி கடனாளர்களுடனும் செயல்பட்டு வருகின்றன. அக்டோபர் 2022 நிலவரப்படி, ஏழை மக்களுக்கான பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா மொத்த கணக்குகள் 43.76 கோடியில் 7.96 கோடி (18 சதவீதம்) கிராம வங்கிகள் வசம் உள்ளன.

மீண்டும் நுண் நிதி நிறுவனங்களின் பிடியில் கிராம மக்கள்

முப்பது வருடங்களுக்கு முன்னர் ஒன்றியஅரசாங்கம் தாராளமய கொள்கைகளை பின்பற்றத் தொடங்கியதிலிருந்து, ஏழை மக்களுக்கான கிராமப்புற கடன்கள் மீது மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. கிராமப்புற வங்கிச் சேவையில் பொதுவாகவும், ஏழைகளுக்கு முன்னுரிமைக் கடன் வழங்குவதில்  குறிப்பாகவும் கடுமையான தேக்கம் ஏற்பட்டுள்ளது.  

நபார்டு வங்கியின் குறைந்த வட்டியிலான கடன் மற்றும் மறுநிதியளிப்பில் குறைப்பு,  ஒன்றிய அரசின் நிதிக் குறைப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறை ஆகியவை கிராம வங்கிகளின் சேவையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.  இதனால் ஏற்பட்ட இடைவெளியை தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தனியார்சிறு நிதி வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவன ங்கள் முயற்சிக்கின்றன.  இவை கடும் நிபந்தனைகளுடன் அதிக வட்டி விகிதத்தில் கடன் வழங்கி கிராம மக்களின் வாழ்வாதரத்தை சிதைக்கின்றன. இந்த நிலை வங்கி தேசியமயமாக்கலுக்கு முந்தைய காலத்தின் சுரண்டல் முறைக்கு மீண்டும் கொண்டு செல்கிறது.

குறைந்த வட்டி, குறைந்த செலவு

உள்நாட்டு விவசாயத்தில் ஏற்பட்ட கடுமையான நெருக்கடியினால், கிராம வங்கிகள் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து இழப்பை எதிர்கொண்டன. கிராம வங்கிகளின் நிகர வட்டி விகிதம், கிராமப்புற ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நிர்ணயிக்கப்படுவதால், சிறு நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 2 முதல் 3 சதவீதம் வரை குறைவாக உள்ளது. கிராம வங்கிகளில் ஊழியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டே வருகின்றது.  ஊழியர்களுக்கான சராசரி நிர்வாக செலவு கிராம வங்கிகளில் மொத்த வணிகத்தில் 1.3 முதல் 1.9 சதவீதம் உள்ள நிலையில், பந்தன் வங்கியில் அது 1.7 முதல் 3.1 சதவீதமாகவும், சிறு நிதி வங்கிகளில் 1.4 முதல் 2.4 சதவீதமாகவும் உள்ளது.

பங்கு விற்பனைக்கு வித்திடும் ஒன்றிய அரசு

தற்போது கிராம வங்கிகள் தங்கள் சேமிப்புகளை அதிக ஆபத்துகளை கொண்ட முதலீட்டு பத்திரங்களிலும், பங்குகளிலும் முதலீடு செய்யவும்,  லாபத்தை அதிகரிக்க தனியார் சிறு வங்கிகளுடன் போட்டியிடும் வகையில் கடன்களுக்கு கூடுதல் வட்டியை நிர்ணயிக்கவும்  வற்புறுத்தப்படுகின்றன.  2015இல் கிராம வங்கிகள் சட்டம் திருத்தப்பட்டு, பங்குகளை தனியாருக்கு விற்க அனுமதிக்கப்பட்டன. லாபம் ஈட்டும் கிராம வங்கிகளை தனியார் சிறு நிதி வங்கிகளாக மாற்றி இந்தத் துறையை முழுவதும் தனியார்மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.

தேசிய கிராம வங்கியே தீர்வாகும்

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI)  அக்டோபர் 31, 1991 அன்று முதல் நரசிம்மம் கமிட்டிக்கு சமர்ப்பித்த ஒர் அறிக்கையில், ஏழை கிராம மக்களுக்கு தொடர்ந்து கடன் வழங்க பிராந்திய கிராம வங்கிகள் அவசியம் என்றும், இல்லையெனில் அவர்கள் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது என்றும் வலியுறுத்தப்பட்டது. கிராம வங்கிகளின் செயல் திறனை ஒவ்வொரு கிராம வங்கியும் லாபம் ஈட்டுகின்றதா என்ற கோணத்தில் பார்க்கக்கூடாது – அதற்காக அவை  உருவாக்கப்பட்வில்லை. மாறாக கிராமப்புற மக்களின் வறுமையை ஒழிப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட சமூக சொத்துக்களை கொண்டு அவை அளவிடப்பட வேண்டும்.

தகுந்த மறுசீரமைப்பு மூலமும், உள்ளார்ந்த பலவீனங்களை அகற்றுவதன் மூலமும், கிராம வங்கிகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மத்திய ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்குவதன் மூலமும் இவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்க முயற்சிக்கலாம். நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு (2003) அதன் 55வது அறிக்கையில் இந்திய தேசிய ஊரக வங்கியை (NRBI) அமைக்க பரிந்துரை செய்தது.  இது தான் இன்றைய தேவை. இந்தியாவின் தேசிய ஊரக வங்கி (NRBI) உருவாக்கப்பட்டால் அது அளவில், பாரத ஸ்டேட் வங்கிக்கு சமமான வங்கியாகவும், கிராமப்புற ஏழைகளுக்கு திறம்பட சேவை செய்யும் வங்கியாகவும் அமையும்.

மக்கள் விரோத அரசியல் சக்திகளை தனிமைப்படுத்துவோம்

சமீபத்தில் தேசிய நாளிதழ் ஒன்றில் அவதூறைப் பரப்பும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட கார்ப்பரேட் ஊடக தலையங்கத்தை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகளை முடக்கி, சாதாரண தொழிலாளர்களின் சேமிப்பு, சொத்து, வாழ்வாதாரம் அனைத்தையும் பெரு முதலாளிகள் கபளீகரம் செய்யும் வகையில், ஒன்றிய அரசு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி கொள்கை வகுக்கின்றன.  ஜனநாயக எண்னம் கொண்ட தேசபற்றாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரலெழுப்பி, இந்த தேச விரோத, மக்கள் விரோத அரசியல் சக்திகளை தனிமைப்படுத்தவும், தோற்கடிக்கவும் உறுதி  ஏற்க வேண்டும்.

Comment here...