IDBI வங்கியை தனியார்மயமாக்கும் முயற்சியை தடுத்திடுவோம்

தேபாஷீஸ் பாசு சௌத்ரி ( தமிழாக்கம்: டி.ரவிக்குமார் )

இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் முன்பு சிறந்த முறையில் இந்தியாவில் செயலாற்றி வந்த நிதி நிறுவனம் ஐடிபிஐ வங்கியாக உருமாறியது.  தற்போது அதை தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.

60.72% பங்கு விற்பனை

Department of investment and assets management-ன் தகவல்படி  ஐடிபிஐ வங்கியில், ஆயுள் காப்பீட்டுக் கழகம் வைத்துள்ள 49 சதவீத பங்குகளில் 19 சதவீத பங்குகளையும், ஒன்றிய அரசாங்கம் வைத்துள்ள 45 சதவீத பங்குகளில் 15 சதவீத பங்குகளையும் மட்டுமே வைத்துக் கொண்டு, மொத்தமாக தங்களிடம் உள்ள பங்குகளில் 60.72 சதவீதத்தை தனியாருக்கு கொடுக்க உள்ளதாகவும், அதோடு சேர்த்து ஐடிபிஐ வங்கியின் நிர்வாக பொறுப்பையும் மாற்ற உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.     தனியார் துறை வங்கிகள், அந்நிய வங்கிகள், வங்கி சேவை புரியாத நிதி நிறுவனங்கள், மாற்று முதலீட்டு நிறுவனங்கள் அல்லது இந்தியாவிற்கு வெளியே பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனங்கள் மட்டுமே ஐடிபிஐ வங்கியின் பங்குகளை  வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்கலாம்.

கத்தோலிக் சிரியன் வங்கியிடம் விற்க முயற்சி

மொத்த வைப்பு தொகையில் 51% வரை நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் வைப்புத் தொகையாகவும், மொத்த கடன் தொகையில் வாராக் கடன்களுக்காக 97 சதவீதம் வரை ஒதுக்கீட்டுடனும், 1884 கிளைகள் 3400 தானியங்கி இயந்திரங்கள்  ஆகியவற்றுடனும்சிறப்பாக இயங்கி வரும் ஐடிபிஐ வங்கி தனியார்மயமாக்கலுக்கு தயார்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமல்லாமல் ஐடிபிஐ வங்கியின் ஐந்து துணை நிறுவனங்களும் லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வங்கியின் பங்குகளை விற்பதற்கு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விளம்பர நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்நிய நிறுவனங்கள் ஐடிபிஐ வங்கியை வாங்குவதற்கேற்றவாறு அந்நிய நேரடி முதலீட்டின் உச்ச வரம்பினை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. இதற்காக அரசாங்கம் Carlyle Group, TPG Capital, கத்தோலிக் சிரியன் வங்கி மற்றும் Fairfax நிறுவனத்தின் முதலாளியான கோடீஸ்வரர் Prem Watsa ஆகிய உலக முதலீட்டார்களை  அணுகி உள்ளார்கள்.

கத்தோலிக்க சிரியன் வங்கியின் முதலாளி ஐடிபிஐ-யின் பங்குகளை வாங்கி அந்த வங்கியை கத்தோலிக்க சிரியன் வங்கியுடன் இணைப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார். ”அரசாங்கத்தின் முழு பங்கினையும் அளிக்க வேண்டும் என்பதும், எல்ஐசி நிறுவனத்தின் பகுதி பங்குகளை வாங்குவதோடு மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தின் மற்ற முதலீடுகள் குறைந்தபட்சம் 5 வருடங்கள் தொடர வேண்டும் என்பதும், தங்களுக்கு இந்த வங்கியை நிர்வகிப்பதிலும் அதன் நடவடிக்கைகளிலும் முழு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்” என்பதே கத்தோலிக்க சிரியன் வங்கியின் முன் நிபந்தனையாக உள்ளது.

சிறப்பாக செயல்பட்ட ஐடிபிஐ

பொதுத்துறையில் இருந்த இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி, வளர்ச்சியின் அடிப்படையில் உலகின் பத்தாவது பெரிய வங்கியாகும்.  தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நீண்ட கால நிதி உதவி வழங்கும் முதன்மை நிதி நிறுவனமாகவும் இருந்து வந்தது. வணிக வங்கி நிறுவனங்கள், இந்த நீண்ட கால கடன் திட்டங்களால் தோல்விகள் ஏற்படும் என்ற பயத்தில் உள்ளே நுழையாத நேரத்தில் இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி இந்த சேவையை சிறப்பாக செய்து வந்தது. ஒன்றிய அரசாங்கத்தால் ஆரம்ப காலத்தில் துவங்கப்பட்ட இந்த தொழில் வளர்ச்சி வங்கிகள் அரசாங்கங்களால் ஊக்குவிக்கப்பட்டு உலகம் முழுவதும் சமூக, பொருளாதார வளர்ச்சியில் ஓர் ஊக்கப் பங்கை ஆற்றி வந்துள்ளது. இது இந்தியாவில் தொழில்களின் சீரான வளர்ச்சிக்கும், புதிய தொழில் தொடங்குவதற்கான உந்து சக்தியாகவும், ஆழமான மற்றும் துடிப்பான மூலதன சந்தையின் வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களித்துள்ளது. இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கியிலிருந்து EXIM வங்கி மற்றும் SIDBI நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன

வணிக வங்கியாக மாற்றப்பட்டது

நிதித் துறை சீர்திருத்தங்களுக்கான நரசிம்மம் கமிட்டியின் பரிந்துரைகளைத் தொடர்ந்து ஐடிபிஐ வங்கி 2004இல் வணிக வங்கியாக மாற்றப்பட்டது. ஐடிபிஐ லிமிடெட் அதன்  நிதி நிறுவனப் பணிகளுக்கு கூடுதலாக வணிக வங்கியாகவும் செயல்பட நிர்ப்பந்திக்கப்பட்டது. முன்னர்  சிறிய அளவிலான வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் வரையறுக்கப்பட்ட போட்டியுடன் செயல்பட்டு வந்த வளர்ச்சி நிதி நிறுவனம், விரிந்த வங்கிச் சேவைக்கு மாறுவது கடினமாக இருந்தது. ஐடிபிஐ வங்கி தனது புதிய செயல்பாடுகளில் காலூன்றும் முன்னரே United Western வங்கியை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. அந்த வங்கி நஷ்டத்தில் இயங்கி ரிசர்வ் வங்கியால் கடன் கொடுக்க தடை செய்யப்பட்டிருந்தது.  இந்த நிர்ப்பந்தத்தினால் ஐடிபிஐ வங்கியின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி புரியாத மோசமான கடன்கள் சேர்க்கப்பட்டன.

தொடர் நஷ்டத்திற்கு ஒன்றிய அரசே காரணம்

ஒன்றிய அரசின் நிர்பந்தத்தால் ஒரு சக்தி வாய்ந்த மேம்பாட்டு நிதி நிறுவனத்திலிருந்து வங்கியாக மாறியதிலிருந்து அதன் பயணம் பெரிய சறுக்கலை சந்திக்கக் கூடியதாக அமைந்தது. உலகளாவிய  நிதி  நெருக்கடிக்குப்  பிறகு, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, குறிப்பாக உள்கட்டமைப்புத் துறையில் பெரும் முதலீடுகள் செய்துள்ள பின்னணியில், லாபத்தின் அடிப்படையில் சரிவைக் கண்டது. 2011-12ல்  ரூ. 2031 கோடியாக இருந்த லாபம் 2012-13ல் ரூ. 1882 கோடியாகவும் 2013-14 ஆண்டில் ரூ. 1121 கோடியாகவும் குறைந்தது. 2016 ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்ட சொத்துத் தர மதிப்பாய்வில், பெரிய நிறுவனக் கடன் வாங்குபவர்களின் கணக்குகளில் ஏற்பட்ட பெரும் வாராக் கடன்கள் காரணமாக ஐடிபிஐ உட்பட அனைத்து வங்கிகளும் மோசமாக பாதிக்கப்பட்டன.

2015-16ஆம் நிதியாண்டில், ஐடிபிஐ வங்கி லிமிடெட் ரூ. 3664 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. மார்ச் 2017 முதல் ரிசர்வ் வங்கி ஐடிபிஐ வங்கியை PCA-ன் கீழ் கண்காணிப்பில் கொண்டு வந்தது. இந்த இழப்புகளுக்கு ஊழியர்கள் எந்த வகையிலும் பொறுப்பில்லை என்றாலும், இந்த வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் வங்கியின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மற்றும் ஐடிபிஐ வங்கியுடன் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஐடிபிஐ வங்கி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான செயல்பாட்டு லாபத்தை ஈட்டினாலும், பெருநிறுவன கடன்களுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் தள்ளுபடிகள் காரணமாக தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நிகர இழப்பை சந்தித்தன.

ஐடிபிஐ யை தனியார்மயமாக்கும் முயற்சி

ஐடிபிஐ லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசின் பங்குகளை 51 சதவீதத்திற்கும் கீழே குறைக்கும் முடிவு 2018 பட்ஜெட் உரையின் போது அறிவிக்கப்பட்டது. அரசாங்கம் அதன் நோக்கத்தை நிறைவேற்ற சந்தேகத்திற்குரிய வழிகளைக் கடைப்பிடித்தது. 2019 ஜனவரி 21 அன்று ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்ஐசி வாங்குவதற்கும், அதன் மூலம் ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குதாரர் ஆகவும், மேலாண்மைக் கட்டுப்பாட்டை பெறவும் நிர்பந்திக்கப்பட்டது. இந்த வங்கி பெரும்பாலும் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ரிசர்வ் வங்கி இந்த வங்கியை தனியார் வங்கியாக 21 ஜனவரி 2019 முதல் பின் தேதியிட்டு பட்டியலிட்டது. 2018-19ஆம் ஆண்டில், எல்ஐசி இந்த வங்கிக்கு ரூ. 21,624 கோடியும், செப்டம்பர் 2019இல் மேலும் ரூ.4,743 கோடியும் அளித்தது. அதேபோல், 2019 செப்டம்பரில் அரசாங்கம் ரூ. 4,557 கோடி மூலதனத்தை அளித்தது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 2019இல் நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.1,435 கோடியை வங்கி திரட்டியது. இந்த நடவடிக்கைகளால் பயனடைந்தவர்கள் கடன்களை திருப்பி செலுத்தாத பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளே. மார்ச் 2021ல் வங்கி நிகர லாபத்தை சந்த்தித்த பின் ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

ஒன்றுபட்டு எதிர்ப்போம்

ஐடிபிஐ வங்கியின்  ஒட்டு மொத்த பங்கு விற்பனைக்கான வழிமுறை, வங்கிகள் தனியார்மயமாக்கலுக்கு வழி வகுக்கும் என்று இந்திய  வங்கி ஊழியர் சம்மேளனம் உணர்ந்தே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, அரசு, சிறிய பொதுத்துறை வங்கிகளை பெரிய மற்றும் அதிக லாபம் தரும் பெரிய வங்கிகளுடன் இணைத்து அவற்றை அந்நிய முதலீட்டாளர்களின் தேவைகளுக்கேற்ப தயார்படுத்தி வருகின்றது.

வங்கி ஊழியர் இயக்கமும், ஜனநாயக இயக்கங்களும் இந்திய அரசின் இந்த மோசமான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருங்கிணையாவிட்டால், மக்கள் சார்ந்த பொருளாதாரத்தின் நன்மைகள் சிதைக்கப்பட்டு விடும்.

மேலும், 2003 ஐடிபிஐ ரத்துச் சட்டம், ஐடிபிஐ தனது வேலைவாய்ப்புக் கொள்கையை மாற்றுவதையோ அல்லது  ஊழியர்களின் வேலை விதிமுறைகளை மாற்றுவதையோ அனுமதிக்கவில்லை. அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான தேர்வின் மூலம் ஐடிபிஐ வங்கியில் பணியிலிருக்கும் 17,430 ஊழியர்கள் கத்தோலிக்க சிரியன் வங்கி மற்றும் லஷ்மி விலாஸ் வங்கி ஊழியர்கள் சந்திப்பது போல் சொல்லொணாத் துன்புறுத்தல்களை சந்திக்க நேரிடும்.

மத்திய அரசு தீவிரமாக பின்பற்றி வரும் பேரழிவு தரும் தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் பகுதியாக இருக்கும் ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்கும் முயற்சிகளை தீவிரமாக எதிர்க்குமாறு வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களை கேட்டுக் கொள்கிறோம்.

Comment here...