ஹரிராவ்
எழுத்தாளர் ஆண்டோ கால்பெட் எழுதிய “உப்பேறிய மனிதர்கள்” என்ற சிறுகதை தொகுப்பினை வாசித்தேன்.
வித்தியாசமான தலைப்பு. கடலோர பகுதி மக்களின் கதைகளாக இருக்குமோ என ஊகித்தது சரியாக இருந்தது.
தமிழ்க் கதை சூழலில் மீனவர்கள் அதுவும் கிருத்தவர்களைப் பற்றிய கதைகள் (எனக்குத் தெரிந்து) மிகவும் குறைவே. அந்தக் குறையை வெகுவாகவே தீர்த்துள்ளார் ஆசிரியர். ஒன்பது கதைகளில் எட்டு கதைகள் மீனவ கிருத்துவர்களைப் பற்றியும், அவர்களது அன்றாட வாழ்க்கை போராட்டங்களையும் சுக துக்கங்களையும் அவற்றின் சாட்சியாக விளங்கும் கடல் பற்றியும், தூத்துக்குடி சார்ந்த வட்டார மொழியோடு மிகையில்லாமல் எழுதியுள்ளார். இயல்பான கதைகளினூடேயே மரணங்களும் சோகங்களும், ஆனால் வாழ்க்கை மீதான நம்பிக்கையும் ஊடாடிச் செல்கின்றன. கதைகளைப் படிக்கும் வாசகனுக்கு அவை உண்மை நிகழ்வுகளாக மனதில் படிவது எழுத்தாளனின் வெற்றி.
முதல் கதை துவங்குவதே மரணச் செய்தியில் தான். கைத்தான் பப்பாவின் மரண செய்தியோடு அவரது தியாக வாழ்க்கையை நாம் பின்நோக்கி அவருடன் வாழ்கிறோம். சிறந்த கடலோடியான கைத்தன் பப்பா மற்றும் அவரது பேரனுடனான கதையாடல்கள் ‘கடலும் கிழவனும்’ கதையினை நினைவுக்குக் கொண்டு வருவதை தவிர்க்க முடியவில்லை. கதையின் கடைசி திருப்பம் அற்புதம்.
கருணையும் பேரன்பும் தியாகமுமே உருவான அல்பெர்ட்டா சிஸ்டர், அந்தக்கால கிருத்துவப் பள்ளிகளில் படித்த என் போன்றவர்களுக்கு அதே போன்ற ஒரு சிஸ்டரை நினைவு படுத்துகிறது. கல்லறை திருநாளில் சிஸ்டருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில் ஒரு சிறு ஆச்சர்யமும் நிகழ்கிறது.
அந்தக்காலத்தில், எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்த, ரஞ்சி ட்ராஃபி விளையாடிய கிரிகெட்வீரனான, சிறுவர்களின் ‘ஹீரோ’ வாக வலம் வந்த கிருஸ்டோபர் அண்ணன் இன்று குடித்துவிட்டு சைக்கிளில் செல்லும் போது அடிபட்டு கிடக்கும் நிலையில் அவரை சந்திக்க நேர்கிறது. அவருடன் பின்நோக்கி பயணிக்கும் வாழ்க்கை, பெற்றோர்கள் ஏற்றுக் கொண்ட அவருடைய காதலி ஸ்டெல்லா, காதலிக்காக வெளியூர் சென்று வரும்போது வாங்கி வரும் அவளுக்குப் பிடித்த மில்ஸ் அண்ட் பூன் நாவல்கள், என நினைவலைகள் மோதியபடி அவருடன் வீட்டிற்குச் சென்றவனுக்கு அதிர்ச்சி கலந்த சோகம் காத்திருக்கிறது ரோஷினி அக்கா மூலமாக. அண்ணன் கிருஸ்டோபர் அன்று அதீதமாக குடித்திருந்ததற்கான காரணம் ஒரு திருப்பம்! லாவகமான தமிழ்வழி ஆங்கில உரையாடல்கள் கிருஸ்டோபர் அண்ணனின் ஆங்கில புலமையை வெளிப்படுத்த உதவியுள்ளன.
பத்திரம் கதை படுத்தும் பாடு, அதில் வரும் பார்த்தசாரதிகள், அவர்களின் பேச்சு சாதுர்யம், அதில் ஏமாறும் திலீபன் போன்றவர்களின் அலைக்கழிப்புகள் சோகமான நகைச்சுவை.
ஓயாத அலைகள் மனதை மிகவும் பிசையும் கதை. “முட்டம் சின்னப்பதாஸ்” போன்ற ரௌடியான குரூஸ் கோமஸ், பணக்கார வீட்டு அழகியான மெர்லின், இருவரும் காதலில் மணமுடிக்கின்றனர். மெர்லினின் அழகிற்கும் அன்பிற்கும் அடிமையான குருஸ் கோமஸ் அடிதடிகளை விட்டு திருந்தி மீன்பிடி தொழிலில் இறங்குகிறார். மீன்பிடிப்பு அமோகமாக வரவேண்டும் என்பதற்காக வல்லத்திற்கு (மீன்பிடி படகு) மந்திரவாதியை வைத்து பேய் அடித்து ஏற்றுவது…மனநலம் குன்றிய ஒருவரை பலி கொடுப்பதுதான் அது….பலி கொடுக்கப்பட்ட நடுத்தர வயதுபெண்ணிற்கு ஒரு குழந்தை இருப்பது குருஸ் கோமசிற்கு பிறகு தெரியவர, அதனால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி குடித்து குடித்து இறந்து போக, விதவையான மெர்லின் தன் இரண்டு குழந்தைகளையும் கரையேற்றும் கதை. கேன்சரால் அவதிப்படும் தாய் உடல் நலம் குன்றி இறக்கும் தருவாயில், கப்பலில் மாலுமியாகச் சென்ற மகன் ரெபிண்டோ 6 மாத காலம் திரும்ப முடியாத சோகத்தில், வீட்டில் தவிக்கும் பெண்களிடம் இயலாமையால் நடக்கும் உரையாடல்கள், கடைசியாக நிகழும் தாயின் மரணம்,அதற்கு முன்பான தாயின் மனதில் தோன்றும் காட்சி, தாயின் மரணத்தின் போது உடன் இருக்க இயலாத பரிதவிப்பு போன்றவை உணர்ச்சியுடன் விவரிக்கப்பட்டுள்ளன. “கடலின் அலைகளும் மீகாமன்களின் துயரங்களும் ஒருபோதும் ஓய்வதில்லை” என முடிகிறது.
‘கிளிஞ்சல்கள்’ ஒரு அழகிய கடலோர கிராமத்தின் மென்மையான காதல் கதை. நண்பன் பிரவீன் வீட்டு திருமணத்திற்கு வரும் (பணக்கார வீட்டு) ராமகிருஷ்ணன், ஸ்வீட்லினை கண்டு காதல் வயப்படும் கதை. காதல் நிறைவேறியதா இல்லையா? ஆசிரியர் சடாரென்ற திருப்பங்களுடன் கதையை பாய விடுகிறார்.
‘உப்பேறிய மனிதர்கள்’, ரத்தமும் சதையுமான கதை. வழக்கமான திருநெல்வேலி பாணி சினிமா கதை போல் துவங்கினாலும், வேறு தளத்தில் பயணிக்கிறது. மீனவ தொழிலாளர் சங்க தலைவனான சூசை அந்தோனி, கூலி உயர்த்தி கேட்கும் முதலாளிகளுடனான பேச்சுவார்த்தையில் கறாராக நடந்து கொள்கிறான். முதலாளியின் சூழ்ச்சியால் போட்டி சங்க சக தொழிலாளியே எஜமான விசுவாசத்தில் சூசை அந்தோனியை கொலை செய்கிறான். கொன்றவர்களை பழிவாங்க சிறுவயது மகன் சபதமேற்கிறான். முதலாளிகளின் மீது திரும்ப வேண்டிய கோபம் திசை திரும்பி பழிவாங்கும் வெறியாக, உப்பேறியது போல, கெடாமல் பாதுகாக்கப் படுகிறது. தொடர்கிறது.
பல பத்தாண்டுகளுக்குப் பிறகு பள்ளிப் பருவ நண்பனை எதேச்சையாக ஒரு ஞாயிற்றுக்கிழமை, தேவாலயம் சென்ற போது சந்திப்பவன் சொல்வதான கதை. தன் மனைவியுடன் பால்ய கால நண்பன் நிகழ்த்தும் உரையாடல்கள், தன்னை மனைவியின் துணையுடன் நிராயுதபாணியாக தாக்கும் பாணியில் வட்டார வழக்கு மொழியில் சுவாரசியமாக செல்கின்றன. திடீரென நண்பன் சொல்கிறான் விமலத்தா நோய்வாய்ப்பட்டு கிடப்பதாக! விமலத்தா என்றால் கம்பீரம். ஒரு பட்டத்து அரசனைப் போல வலம் வந்தவள். கடுமையான உழைப்பும், அடாவடித்தனமும், கருணையும் ஒருங்கே அமைந்தவள். சிறு பெண்ணாக இருந்த போதே இரு வேளை உணவுக்காக வீட்டு வேலைகள் செய்து பிழைத்தவள். “அந்தப் பிஞ்சுக் கைகளில் பசியின் ரேகை படர்ந்திருந்தது”..என்ற வரிகள் போதும் ஏழ்மையை உணர்த்த…தன் உழைப்பால் முன்னேறி அனைவரையும் ஆட்டிப்படைத்தவள். அன்பாலும் கூட. “ஒரு ராஜாளியை ஒரு குருவியைப் போல காணும் கொடுமை” கண்களிலும் இதயத்திலும் கண்ணீரை வரவழைக்கும் காட்சிகள்!.
மெர்ரி கிருஸ்துமஸ் ஒரு நீண்ட கதை, அதில் வரும் 84 வயது பேரழகி ஹெலனம்மாவின் பெரிய குடும்பத்தைப் போலவே! கிருஸ்துமஸ் ஈவ் இரவன்று துவங்கி கிருஸ்துமஸ் இரவு ஒரே நாளில் கதை முடிந்து விடுகிறது. ஏராளமான கதாபாத்திரங்கள், மகிழ்ச்சியோடு தூத்துக்குடி வீதிகளை கிருஸ்துமஸ் கொண்டாடி வலம் வருகிறார்கள் மக்கள். ஊரே வேடிக்கை பார்க்கிறது. பெருங்கூட்டமான தேவாலய படிக்கட்டுகளில் கூடவே பிச்சை கேட்டு கந்தலாடையுடன் நிற்கும் ஏழைகளும் வருகிறார்கள். இளம் வயதில் ஆசையோடு மணமுடித்த கணவன் சந்தகுரூஸ் ஆறு மாதத்திலேயே தோணி விபத்தில் இறந்துவிட, அதற்கு ஹெலனை மணமுடித்ததே காரணம் என்று ஊரார் பேச, தைரியமாக கணவனின் தம்பியாகிய அந்தோனியை மணமுடிக்கிறார் ஹெலன். எல்லா முடிவுகளிலும் மனைவியின் பேச்சை மீறாதவர், தனது மகள் கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்ற முடிவில், மனைவிக்கு எதிராக, மகளின் முடிவினை ஏற்கிறார் அந்தோனி. என்னே தந்தைக்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பு! ஒரு நாவலாக விரிய வேண்டிய கதைக்கரு சிறுகதையாக முடிந்துள்ளது. அழகான அமைதியான ஒரு குடும்பக் கதை, வயோதிக தம்பதிகளின் பிள்ளைகளை பிரிந்து வாழும் தனிமை, ஏக்கம் போன்றவை கவித்துவம். முடிவு ஏற்க முடியவில்லை. ஆசிரியர் கருணையற்று முடித்துள்ளார்! “சுபதினம்” எழுதிய சுஜாதா போல!
நூலாசிரியர் ஆண்டோ கால்பெட் ஒரு வங்கி அதிகாரி. ஏற்கனவே ‘ஒற்று’ என்ற நாவலை எழுதியுள்ளார். தான் சார்ந்த வங்கி அதிகாரிகள் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர். அவற்றிற்கிடையே அவகாசம் கண்டெடுத்து இந்த அற்புதமான ஒன்பது கதைகளை படைத்துள்ளார். நன்றாக வடிவமைக்கப்பட்ட, படிக்க வசதியாக, எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் விரும்புவது போல, சிறிது பெரிய எழுத்துக்களால் அச்சாக்கம் செய்யப் பட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நம் சக தோழர் எழுதிய கதைகள். படித்து இன்புறுவோம்.
வெளியீடு: மகிழினி பதிப்பகம்.
கதைத் தொகுப்பினை வாசிக்க ஆவலைத் தூண்டும் புத்தக அறிமுகம்!
நன்றி தோழர் 🙏