பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டின் தலையங்கம்
தமிழில்: ச.வீரமணி
அனைத்து அதிகாரங்களையும் தமதாக்கிக்கொள்வதன் மூலம், அரச மைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கை யாகும். இவ்வாறு அரசமைப்புச்சட்டம் வகுத்துத் தந்துள்ள அதிகாரங்களை மீறுவ தற்கான முயற்சிகளில் மோடி அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முக்கியமான வழிகளில் ஒன்றுதான், கூட்டுறவுத்துறைக்கு ஓர் அமைச்சகத்தை அமைத்திருப்பதும், அதற்கு அமித்ஷாவை அமைச்சராக நியமித்திருப்பதுமாகும்.
உள்ளூர் சங்கங்களில் ஊடுருவத் திட்டம்
இவ்வாறு ஒன்றிய அரசாங்கம் ஓர் அமைச்சகத்தை அமைத்தவுடனேயே, உச்சநீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு, பாஜக அரசாங்கத்தின் சாகசவாதத்திற்குச் சற்றே கடிவாளமிட்டது. 2011இல், 97ஆவது அரசமைப்புச்சட்டத் திருத்தம், அரசமைப்புச்சட்டத்திற்குள் பகுதி 9-பி (IXB) என்னும் ஒரு புதிய பிரிவைச் சேர்த்தது. அதன் மூலம், கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக மாநில அளவில் உள்ள சட்டங்களுக்குப் பல நிபந்தனைகளை விதித்தது. 2022 அக்டோபரில், மேற்படி 97-ஆவது திருத்தம் உள்ளூர் அளவில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்குப் (local cooperative societies) பொருந்தாது என்றும், அவை பல-மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு (multi-state cooperative societies) மட்டுமே பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இத்தீா்ப்பு அரசிற்கு ஒரு பின்னடைவாகும். ஏனெனில் அது 2011-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், மாநிலக் கூட்டுறவு சங்கங்களின் சட்டங்களின்கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள் அனைத்திலும் ஊடுருவத் திட்டமிட்டுக் கொண்டிருந்தது.
ஆபத்தான இப்போதைய முன்மொழிவு
பின்னர், மோடி அரசாங்கமானது மாநிலங்களில் தலையிட, பல-மாநிலக் கூட்டுறவு சங்கங்கள் வழியைப் பயன்படுத்தத் தீர்மானித்தது. அதே 2011 அரசமைப்புச்சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு, 2002ஆம் ஆண்டு பல-மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தைத் திருத்திட (Multi-State Cooperative Societies Act, 2002), இப்போது 2022 ஆம் ஆண்டு பல-மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தச்) சட்ட முன்வடிவு ஒன்றினை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இப்போது இவர்கள் முன்மொழிந்துள்ள 2022 சட்டமுன்வடிவு மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இது, மாநில சட்டங்களின் கீழ் செயல்பட்டுவரும் கூட்டுறவு சங்கங்களுக்குள் ஒன்றிய அரசாங்கத்தின் முடிவுகளை திணிப்பதற்கான அப்பட்டமான முயற்சியாகும். இதில் திருத்தப்பட்ட 6-ஆவது பிரிவின்படி, எந்தவொரு கூட்டுறவு சங்கமும், அந்த சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுக்கும் குறையாது ஆஜராகி, முன்னதாகத் தோன்றி செயல்பட்டுக்கொண்டிருக்கும் பல-மாநில கூட்டுறவு சங்கத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதாகத் தீர்மானம் கொண்டுவந்து, வாக்களித்து, நிறைவேற்றி, தன்னை இணைத்துக் கொள்ளலாம்.
நிர்வாகிகளை நியமிக்க முடியும்
அதேபோன்றே திருத்தப்பட்ட 13ஆவது பிரிவின்படி, பல-மாநில கூட்டுறவு சங்கங்களின் பங்குகள் எதையும் ஒன்றிய அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் எடுத்துக் கொள்ள முடியாது. திருத்தப்பட்ட 17-ஆவது பிரிவின்படி, ஒன்றிய அரசாங்கத்தால் ஒரு மத்திய தேர்தல் அதிகாரக் குழுமம் (Central Election Authority) நியமனம் செய்யப்படும். திருத்தப்பட்ட 45ஆவது பிரிவின்படி, ஒன்றிய அரசாங்கம் இயக்குநர் குழுவை (Board of Directors) புறக்கணித்துவிட்டு, ஒரு நிர்வாகியை (administrator) நியமிக்க முடியும். இந்தத் திருத்தங்கள் அனைத்தும், மாநிலங்களின் கூட்டுறவு சங்கங்களின் கட்டமைப்புக்குள் பல-மாநில கூட்டுறவு சங்கங்களை நுழைப்பதற்கான வேலையே என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இது, மாநில அளவில் செயல்பட்டுவரும் கூட்டுறவு சங்கங்களின் கழுத்தை நெரிக்க, ஒன்றிய அரசாங்கத்தை அனுமதித்திடும். தண்டனை நடவடிக்கைகளின் மூலமாகவும், இணைத்துக் கொள்வதன் மூலமாகவும், தேர்தல்களில் தலையிடுவதன் மூலமாகவும், மாநிலங்களின் ஒட்டுமொத்த கூட்டுறவு சங்கங்களின் கட்டமைப்புகளையும் தமதாக்கிக் கொள்ள முடியும்.
பல-மாநில கூட்டுறவு சங்கங்களின் பலவீன நிலை
இப்போது 2002 சட்டத்தைத் திருத்துவதற்காக இவர்கள் கூறும் “தர்க்கரீதியான காரணங்கள்” (“logic”), கூட்டுறவுகளில் வர்த்தகப் பணிகளை மேம்படுத்துவதற்காகவும், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்குப் பதில் கூறும் பொறுப்புகளை (accountability) உயர்த்துவதற்காகவும் என்பதாகும். எனினும், இவ்வாறு இவர்கள் கூறும் காரணங்களை ஆராய்வோமானால் அவை முன்னுக்குப்பின் முரணாக இருப்பதை நன்கு காண முடியும். கூட்டுறவு சங்கங்கள், மாநிலங்களின் கட்டுப் பாட்டிலிருந்து ஒன்றிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குச் சென்றால், அவற்றின் வெளிப்படைத் தன்மை, மக்களுக்குப் பதில் கூறும் பொறுப்புகள் எப்படி உயர்த்தப்படும் என்பதற்கும், அவற்றின் செயல்பாடுகளில் எப்படி முன்னேற்றம் ஏற்படும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. உண்மையில், நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள பல-மாநி லக் கூட்டுறவு சங்கங்கள் இப்போது நெருக்கடியில் இருந்து வருகின்றன. 2021 டிசம்பரில், அமித்ஷா நாடாளுமன்றத்தில், “நாட்டில் ஒன்பது மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டுவரும் 44 பல-மாநிலக் கூட்டுறவு சங்கங்கள் நிர்வாகத் திறமையின்மை யாலும் (inefficiency), நிதி மேலாண்மை தவறினாலும் (financial mismanagement) பலவீன மடைந்திருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் கேரளாவில் இருப்பதைப்போல், மாநில அளவில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் பல, பல-மாநிலக் கூட்டுறவு சங்கங்கள் பலவற்றைக் காட்டிலும் மிகவும் திறமையுடனும், லாபகரமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்குச் சான்றுகள் ஏராளமாக இருக்கின்றன.
அமுலும் அரசியல் நோக்கத்துடன் எடுத்த நடவடிக்கையும்
இன்னும் ஏராளமாகக் கூற முடியும். ஒன்றிய அரசாங்கத்தின் கட்டளைகளின்படி, ‘அமுல்’ (AMUL), ஒரு பல-மாநிலக் கூட்டுறவு சங்கமாக மாற்றப்படுவதற்காக, உள்ளூரில் இயங்கிக் கொண்டிருந்த ஐந்து கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்தது. இதன்பின்னர் இது “இயற்கை விவசாயம்” (“natural farming”) தொடர்பான உற்பத்திப் பொருள்களுக்கு சான்றிதழ் அளிக்கும் பணியிலும், பாலை ஏற்றுமதி செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. இத்தகைய அரசியல் நோக்கத்துடனான நடவடிக்கைகள் அது முன்பு செயல்படுத்திவந்த மாநில அளவிலான கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும், ‘அமுல்’ போன்று லாபகரமாகத் திறமையுடன் செயல்பட்டுவந்த கூட்டுறவு சங்கத்தையும் பலவீனப்படுத்தியிருக்கின்றன. மோடி அரசாங்கத்தின் நோக்கங்கள் மிகவும் தெளிவானவை. அது, குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் பலவீனமாகியிருக்கும் பல-மாநிலக் கூட்டுறவு சங்கங்களுக்குள் மீண்டும் பணத்தைச் செலுத்தி, அவற்றைக் கேரளா போன்று தொலைதூர மாநிலங்களுக்கு அனுப்பி புதிய தளங்களை நிறுவச் செய்திட வேண்டும் என்பதே மோடி அரசாங்கத்தின் நோக்கங்களாகும். கேரளாவில் மிகவும் வெற்றிகர மாகச் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளைப் பலவீனப்படுத்தி, அவற்றைத் தமதாக்கிக்கொண்டு, அங்கு பாஜக-வின் அரசியல் தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும்.
கைப்பற்றும் முயற்சியை தடுத்திட…
இந்தியாவில் கூட்டுறவு அமைப்பின் உயிர் நாடியே அதன் மாநில அளவிலான வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பில் அமைந்திருக்கிறது. வங்கித் துறையில் நவீன தாராளமயக் கொள்கைகள் ஏற்கனவே மாநிலங்களில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களை நெருக்கடிக்குள் தள்ளி யிருக்கின்றன. இவற்றை இப்போது கொண்டுவர உத்தேசித்துள்ள 2022 சட்டமுன்வடிவின் மூலமாக ஒன்றிய அரசாங்கம் எடுத்துக்கொள்ள மேற்கொண்டிருக்கும் முயற்சியானது, கூட்டுறவு அமைப்புகளை அரித்து வீழ்த்தி அழித்துவிடும். எனவே, இவ்வாறான இவர்களின் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையை, அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும், தடுத்துநிறுத்திட மாநிலங்கள் அனைத்தும் கைகோர்த்திட வேண்டும்.