எங்கள் போராட்டமும், டெல்லி பயண அனுபவங்களும்…

ஆண்டோ

இந்தியாவில் கிராம வங்கிகள் ஊரக வளர்ச்சிக்கும், விவசாய மற்றும் ஊரக தொழில் மேம்பாட்டிற்கும் கிராம வங்கிகள் சட்டம் 1976-ன் படி துவங்கப்பட்டது.

தற்போது 43 கிராம வங்கிகள் 26 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 21892 கிளைகளுடன் இயங்கி வருகிறது.

மொத்தம் 40 கோடி வாடிக்கையாளர்களுடனும் ரூ.925376 லட்சம் கோடிகள் வணிகத்துடன் இயங்கி வருகிறது.

கிராம வங்கிகளின் 92% கிளைகள் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் தான் இயங்குகிறது. கிராம வங்கிகள் வழங்கியுள்ள கடன்களில் 90% ஏழை எளிய சிறு குறு விவசாயிகள் மற்றும் தொழில் செய்வோருக்காக கொடுக்கப்பட்ட முன்னுரிமை கடன்களாகும். எந்த பெருமுதலாளியின் பெரும் பசிக்கும் இதுவரை இரையாகியதில்லை!

இப்படி கிராமப்புற பொருளாதார சுழற்சியில் கடந்த நான்கு தசாப்பதங்களுக்கும் மேலாக முக்கிய பங்காற்றி வரும் கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

அப்படி செய்யப்பட்டால் எந்த நோக்கத்திற்காக கிராம வங்கிகள் தோற்று விக்கப்பட்டதோ அந்த நோக்கமே சிதைந்து போகும்!

ஆம்…

பங்கு விற்பனை என்று வந்து விட்டால் சந்தையில் லாபம் தான் பிரதான நோக்கமாக மாறும். அப்படி மாறினால் குறைந்த லாபத்தோடு கிராமங்களில் இயங்கும் கிளைகள் அதிக இலாபமீட்டும் பகுதிகளை நோக்கி நகர்த்தப்படும்.

குறைந்த வட்டியில் கொடுக்கப்பட்டு வரும் விவசாய கடன்களின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும், எந்த கந்து வட்டிகாரர்களிடம் இருந்து கிராம மக்களை கிராம வங்கிகள் மீட்டதோ இனி  தங்கள் லாபத்தை தக்கவைக்கும் பொருட்டு வங்கிகளே அந்த வேலையை பார்க்க துவங்கும்.

தனியார் வங்கிகளை போல் முன்னுரிமை கடன்கள் குறைக்கப்பட்டு தனிநபர்களை சுரண்டித் திங்கும் அதிக வட்டி கடன்கள் நடைமுறையாகும்.

மொத்தத்தில் இலாபம்- வணிகம் என்ற பெயரில் சுரண்டல் மட்டுமே மிஞ்சி நிற்கும்.

வங்கிகள் என்பது பணம் படைத்தவர்களுக்கானது என்பதனை மாற்றி அங்கே மேல்சட்டை அணிய வழியற்ற ஏழை விவசாயியும் உள்ளே வந்து வங்கிச்சேவை பெறலாம், புளிப்பானைக்குள் புதைந்து கிடந்த சின்னஞ்சிறு சேமிப்புகளுக்கு பாதுகாப்பும் வட்டியும் சேர்த்து கிடைக்கும் என்பதெல்லாம் இனி பழங்காலத்து கதைகளாகிப் போகும்.

இவை ஒருபுறம் என்றால் கிராம வங்கிகளில் கொஞ்சம் கொஞ்சமாக நிரந்தரப் பணிகள் குறைக்கப்பட்டு தற்காலிக- காண்ட்டிராக்ட் பணிகள் அதிகரிக்கும். இது ஒரு பக்கம் உழைப்பு சுரண்டல் என்றால் மறுபக்கம் இடஒதுக்கீடு முறையை மெல்லமெல்ல சிதைக்கும் திட்டமும் கூட.

ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத முடிவுக்கு எதிராக எங்களின் அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து தர்ணா, வேலைநிறுத்தம் உட்பட பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இது குறித்து பேச நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி சென்ற எங்களுக்கான கலங்கரை விளக்கமாக இருந்தவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான தோழர்.சு.வெங்கடேசன் அவர்கள்.

தனது நெருக்கடியான பணிகளுக்கிடையே எங்களுக்கு நேரம் ஒதுக்கியதோடு இல்லாமல் தன் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி அவர்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மீது விமர்சனங்கள் வைப்பவர்கள் தொடர்ந்து இருதிராவிட கட்சிகளுடன் ஓரிரு சீட்டுகளுக்கு கூட்டணி வைப்பதை பெரும் குறையாக சொல்வதுண்டு.

இதே விமர்சனம் விடுதலை சிறுத்தைகள் மீதும் வீசப்படுவது உண்டு.

ஆனால் அந்த தலைவர்கள் எத்தனையோ முறை தேர்தல் அரசியலில் உள்ள யதார்த்த நிலையை விளக்கி ஓரிரு இடங்களேனும் நாம் பெற்றால் தான் மக்களின் குரலாக நாம் உரிய இடத்தில் ஒலிக்க முடியும் என  சொன்னாலும் நமக்கு அது புரிவதில்லை.

ஆனால் இந்த பயணத்தின் போது தான் தோழர் சு.வெங்கடேசன் என்னும் அந்த ஒற்றை மார்க்சிஸ்ட் எத்தனை தோழர்களை தன் கருத்தால், செயல்பாட்டால் வென்று இருக்கிறார் என்பதை அனுபவ பூர்வமாக உணர முடிந்தது.

எண்ணிக்கை அரசியலில் அவசியம் தான் ஆனால் காலத்தின் யதார்த்தத்தை கணக்கிட்டு கிடைக்கும் சிறு வாய்ப்பையும் தக்கவைப்பது மிகமிக முக்கியமானது.

அதேபோல் விடுதலை சிறுத்தைகளின் தலைவர்கள் தோழர்கள் தொல் திருமாவளவன் மற்றும் இரவிக்குமார் ஆகிய இருவரும் காலை பரபரப்பிலும் எங்களுக்காக நேரத்தை ஒதுக்கி பொறுமையாக கேட்டவர்கள் ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக குரல் கொடுக்க உறுதியளித்தனர்.

அதிலும் அந்த காலையில் அத்தனை குளிரில் தன்னை சந்திக்க வந்தவர்கள் சாப்பிட்டார்களா? என கேட்டறிந்த பின்னர் தான் தோழர்.திருமாவளவன் உரையாடத் துவங்கிய விதத்தில் வெளிப்பட்டது அவரின் தாய்மை!

பொதுவாக அரசியல்வாதிகள் என்றால் அப்படி இருப்பார்கள்… இப்படி இருப்பார்கள் என்ற பிம்பங்களை நொறுக்கி விட்டு பாராளுமன்ற காத்திருப்பு வளாக்கத்திலே மக்களோடு மக்களாக அமர்ந்து இருந்த திமுகவின் மாநிலங்கள் அவையின் உறுப்பினர் தோழர் அப்துல்லாவுடனான உரையாடல் பெரும் நம்பிக்கை தருவதாக இருந்தது.

அவரின் உரையாடலில் நாட்டின் மீதான அக்கறையும் ஒன்றிய அரசின் இதுபோன்ற மக்கள் விரோத நிலைப்பாடுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்த வலியையும் காண முடிந்தது.

தன் உடல் வலியையும் பொருட்படுத்தாமல் எழுந்து நின்று அவர் எங்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட விதத்தில் எங்கள் மனங்களில் உயர்ந்து போனார்!

அதேபோல் ஒரு நண்பனைப் போல் அறிமுகமான சில நிமிடங்களிலே எங்களுக்கு உதவிய திமுகவின் மாநிலங்கள் அவை உறுப்பினர் தோழர் கல்யாணசுந்தரம் அவர்களின் மகன் தோழர் ஸ்ரீதரின் உதவியும் மறக்க முடியாத ஒன்று.

தன் தந்தையின் அரசியல் பணியில் துணை புரிவதோடு நில்லாமல் ஒரு தெளிவான அரசியல் புரிதலும் எளிமையாக பழகும் குணத்தையும் அவரிடம் காண முடிந்தது. அவர் தான் தோழர்.அப்துல்லாவையும், தோழர்.மு.சண்முகம் அவர்களையும் சந்திக்க பேருதவியாக இருந்தார்.

அதேபோல் கவிஞரும், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் கனிமொழியும் கதகதப்பான காபியுடன் உபசரித்து மிகமிக கவனமாக கிராம வங்கிகள் குறித்தும் அதன் பங்கு விற்பனையால் ஏற்படும் விளைவுகளையும் கேட்டறிந்து கொண்டார்.

உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாமல் ரொம்பவே அமைதியாக ஆக காணப்பட்டார். அதேசமயம் ஒன்றிய அரசின் தவறான முடிவுகளுக்கு எதிராக நிற்பதிலும் மிகவும் உறுதியானவராக தெரிந்தார்.

அவர்  நிதானம் மிக்கவராகவும் அதேசமயம் அழுத்தமான முடிவுகள் கொண்டவராகவும் காணப்பட்டார்.

கடைசியாக நாங்கள் சந்தித்து உரையாடியது திமுகவின் மாநிலங்கள் அவை உறுப்பினரும் தொ.மு.ச வின் பேரவைத் தலைவருமான தோழர் மு.சண்முகம் அவர்கள்.

பழுத்த பழம்…. ஒன்றிய அரசின் இதுபோன்ற செயல்பாடுகளில் அவரது விமர்சனங்களை பகிர்ந்து கொண்டார். நிச்சயமாக உரிய இடத்தில் தன் கருத்தை பதிவு செய்வதாக தெரிவித்தார்.

இப்படியாக ஒரு சங்கப்பணியாக மட்டுமின்றி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான நம்பிக்கையும் மரியாதையும் அதிகரிக்கும் விதமான பயண அனுபவமாகவும் இருந்தது.

இன்னமும் ஒன்றிய அரசின் கிராம வங்கிகளுக்கு எதிரான இந்த முடிவினை எதிர்த்து நீண்டதொரு தூரம் செல்ல வேண்டியதை உணரும் அதேசமயம் யார் மக்களுக்கானவர்கள் என்பதையும் இப்போராட்டப் பயணம் வெளிச்சமிட்டு காட்டும்.

நமது பயணம் தொடரும்….

One comment

  1. சிறந்த அனுபவ பகிர்வு..சமூக அக்கறையின் அடையாளங்களாக விளங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நெகிழ வைக்கிறது.

Comment here...