மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் – நிதானமான அணுகுமுறை தேவை

சி.பி.கிருஷ்ணன்

(தமிழில் க.சிவசங்கர்)

இந்தியாவின் மத்திய வங்கியாக செயல்படும் ரிசர்வ் வங்கி, 2022 அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ‘மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்’ (Central Bank Digital Currency) என்ற புதிய நாணய  வடிவத்திற்கான வரைவை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய திட்டமானது பொதுமக்களிடம் போதிய அறிமுகத்திற்கு உள்ளாவதற்கு முன்னரே, டிஜிட்டல் நாணயம் அவசர கதியில் 2022 நவம்பர் 1-ஆம்  தேதி முதல் மொத்த விற்பனை (Wholesale) நாணய புழக்கத்திலும், அதனைத் தொடர்ந்து 2022 டிசம்பர் 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில நகரங்களில் சில்லறை (Retail) நாணய வர்த்தகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்த விற்பனை நாணயம் என்பது வங்கிகளுக்கு இடையிலான பெரிய அளவிலான பணப்பரிவர்த்தனைகளின் போது வங்கி மற்றும் பிற நிதி  நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். அதேபோல, சில்லறை விற்பனை நாணயம் என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையிலான பணப் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்தக்கூடியது ஆகும். இந்த மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) என்பது டிஜிட்டல் வடிவில் இயங்கும் ஒரு சட்டப்பூர்வமான நாணயமாக விளங்கும் என்று ரிசர்வ் வங்கி தனது வரைவு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இது தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகளுக்கு இணையாக பரிமாற்றம் செய்து கொள்ளத்தக்க பாதுகாப்பான ஒன்றாக இருக்கும் என்றும் அது தெரிவிக்கிறது.

105 நாடுகள் டிஜிட்டல் நாணயத்தை நோக்கி

2022 ஜூலை மாத நிலவரப்படி, உலகளாவிய மொத்த உற்பத்தியில் 95 சதம் வைத்துள்ள  105 நாடுகள் சட்டப்பூர்வமான டிஜிட்டல் நாணயத்தை நோக்கிய நகர்வில் பயணிக்கத் துவங்கியுள்ளன. அவற்றில் இதுவரை 10 நாடுகள் வெற்றிகரமாக இதனை அமல்படுத்தி முடித்துள்ளன. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சீனா உள்ளிட்ட 17 நாடுகள் டிஜிட்டல் நாணயத்தை பரிட்சார்த்த முறையில் அமல்படுத்தத் துவங்கி உள்ளன.

என்ன காரணம்?

செயல்பாட்டுச் செலவுகள் குறைப்பு, கிராமப்புறத்தில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவை, எல்லை தாண்டிய சர்வதேச பணப்பரிவர்த்தனைகளில் புதுமையான முன்னெடுப்புகள், தனியார் மெய்நிகர் நாணயத்திற்கான மாற்று, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செயல்பாடுகளின் திறனை அதிகரித்தல் போன்ற காரணங்களுக்காக டிஜிட்டல் நாணயத்தை நோக்கி நாம் விரைவாக நகர வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. அவற்றில் இருக்கும் உண்மைத்தன்மைகளை ஒவ்வொன்றாகப் பரிசீலிக்கலாம்.

செயல்பாட்டுச் செலவுகள் குறைப்பு:

காகித ரூபாய் நோட்டுக்களைப் பாதுகாப்பாக அச்சிடுவதற்கு கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் மட்டும் 4984 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனைகளில் டிஜிட்டல் நாணயத்தோடு சேர்த்து காகித ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. மேலும் டிஜிட்டல் நாணய பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பச் செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே செயல்பாட்டுச் செலவுகள் பெரிய அளவில் குறையும் என்ற வாதத்தில் உண்மைத் தன்மை இருப்பதாகத் தெரியவில்லை.

கிராமப்புற உள்ளடக்கிய நிதிச் சேவை (Financial Inclusion):

இணையதள வசதி இல்லாமலும் டிஜிட்டல்  நாணயப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்றும், இதன் மூலம் மின்சாரம் இல்லாத, இணையதள வசதிகள் இல்லாத பின்தங்கிய கிராமப்புற பகுதிகளிலும் இவற்றைப் பயன்படுத்தி பணப் பர்வர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. எனினும் இவ்வாறு மேற்கொள்ளப்படும் இணைய வழி இல்லாத பரிவர்த்தனைகள் முழுமையான பரிவர்த்தனையாக இருக்காது என்றும், இது பரிவர்த்தனைகளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வழிவகுக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் தற்போதைய ஒன்றிய அரசு வெளிப்படையான கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை மிகத்தீவிரமாக கடைபிடித்து வருகிறது. சிறு மற்றும் குறுந்தொழில் கடன்களுக்கு 12 முதல் 22 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த விகிதம் வரக்கூடிய நாட்களில் இன்னும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரத்தில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 7 சதவீத வட்டியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்படுகின்றது. இவ்வாறு சிறு, குறு தொழில் கடன்களின் மூலம் ஈட்டப்படும்  மிகப்பெரிய லாபத்திலிருந்து   பெரும்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் கடன் வழங்கப்படுகின்றது. மேலும் கிராமப்புற நிதிச் சேவைகளில் மிகப்பெரிய பங்களிப்பைச் செலுத்திக் கொண்டிருக்கும் கிராம வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை திட்டமிட்டு அழித்திடும் வேலைகளைச்  செய்து வருகிறது இன்றைய ஒன்றிய அரசு. உண்மை நிலை இவ்வாறு இருக்க, டிஜிட்டல் நாணய அறிமுகம் மூலம் கிராமப்புற அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவை (Financial Inclusion) அதிகரிக்கும் என்ற ரிசர்வ் வங்கியின் வாதத்தை ஏற்க முடியாது.

சர்வதேச பணப்பரிவர்த்தனைகள்:

உலக வங்கியின் அறிக்கைபடி, உலக அளவில் சர்வதேச பணப்பரிவர்த்தனைகளில் இந்தியா மிகப்பெரிய பங்கேற்பாளராக உள்ளதாகவும், 2021-ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா சுமார் 87 பில்லியன் டாலர் அளவிற்கான சர்வதேச பணப் பரிவர்த்தனைகளை ஈர்த்திருப்பதாகவும், அவற்றில் 20 சதவீதத்திற்கும் அதிகமான  பணம் அமெரிக்காவில் இருந்து பெற்றிருப்பதாகவும் தெரிய வருகிறது.

தற்போது டிஜிட்டல் நாணய அறிமுகத்தின் மூலம் இது போன்ற சர்வதேச பரிவர்த்தனைகளுக்கான செலவு மிகப் பெரிய அளவிற்கு குறையும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. இந்த பரிவர்த்தனைகள் முழுவதும் அயல்நாட்டு பரிவர்த்தனைகள் மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act)  மற்றும் ரிசர்வ் வங்கியின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கக் கூடியவை ஆகும். எனவே இத்தகைய பரிவர்த்தனைகளில் எந்த ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் என்றாலும் இந்த சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இந்த சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டு சர்வதேசப் பரிவர்த்தனைகள் எளிமையாகும் பட்சத்தில், அதே வகையில் அன்னிய செலாவணிகள் நாட்டை விட்டு வெளியேறும் நடைமுறையும் எளிமையாகும். இதனால் அன்னிய செலாவணிகள் நாட்டிற்கு உள்ளே வரும் அதே வேகத்தில் வெளியேறிவிடவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், இது பண மோசடிகள் அதிகரிக்கவும் வழி வகுக்கும். எனவே ரிசர்வ் வங்கி எவ்வாறு இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தப் போகிறது என்பது குறித்து விரிவாக பரிசீலித்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இந்த வாதத்தை ஏற்க முடியும்.

தனியார் மெய்நிகர் நாணயத்திற்கான (Crypto currency) மாற்று:

கிரிப்டோ நாணயம் என்று சொல்லப்படக்கூடிய மெய்நிகர் நாணயங்களின் சமீபத்திய வளர்ச்சி, பண மோசடி மற்றும் தீவிரவாத செயல்களுக்கான நிதி போன்றவற்றிற்கு உதவும் ஆபத்து உள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவிக்கிறது. மேலும் கிரிப்டோ நாணயங்களின் தங்கு தடையற்ற பயன்பாடு என்பது ஒரு நாட்டின் பணக் கொள்கையின் அடிப்படை நோக்கங்கள் மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், ஒரு கட்டத்தில் இது ஒரு இணைப் பொருளாதாரமாக உருவெடுத்து நாட்டின் பொருளாதார இறையாண்மையின் நம்பகத்தன்மைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கூறுகிறார்.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2018-ஆம் ஆண்டு கிரிப்டோ கரன்சியைத் தடை செய்து சுற்றறிக்கை வெளியிட்டது. எனினும்,  ரிசர்வ் வங்கி  தனது நடவடிக்கையின் நியாயத்தை நிறுவ வில்லை  என்று கூறி மார்ச் 2020-ல்  உச்ச நீதிமன்றம் இந்தத்  தடையை நீக்கியது. இதைத் தொடர்ந்தே கடந்த நவம்பர் 2021-ல் அனைத்து வகையான க்ரிப்டோ நாணயங்களையும் முழுமையாக தடை செய்யும் சட்ட வரைவை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. எனினும், இது நாடாளுமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒன்றிய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் இந்த விஷயத்தில் தொடர்ந்து ஒரு ஊசலாடும் போக்கையே கடைபிடித்து வருவது தெரிகிறது. இந்த நிலையை மாற்றி தனியார் கிரிப்டோ கரன்சிக்களை முழுவதுமாக தடை செய்யும் சட்டத்தை உடனடியாக செயல்படுத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

தனியார் வங்கிகளை சார்ந்திருப்பது ஏன்?

இப்போது ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி இருக்கும் டிஜிட்டல் நாணயம் என்பது பொதுமக்களுக்கு தனியார் கிரிப்டோ நாணயங்கள் வழங்கும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, அதேநேரம் பாதுகாப்புகளுடன் கூடிய சட்டப்பூர்வமான ஒரு டிஜிட்டல் நாணயமாக விளங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த டிஜிட்டல் நாணயத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா,   ஹெச் டி எஃப் சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, கோடக் மஹிந்த்ரா வங்கி, எஸ் வங்கி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் ஹெச் எஸ் பி சி வங்கி ஆகிய 9 வங்கிகளின்  மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்பது வங்கிகளில் முதல் மூன்று வங்கிகள் மட்டுமே பொதுத்துறை வங்கிகள் என்பதும், மற்ற ஆறு வங்கிகளும் தனியார் துறை வங்கிகள் என்பதும் கவனிக்கத்தக்கது. தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு மாற்றாக, பாதுகாப்பான மற்றும் நம்பகத் தன்மை மிக்க ஒரு டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துவிட்டு, எவ்வித நம்பகத்தன்மைக்கும் உத்தரவாதமில்லாத தனியார் வங்கிகளின் மூலம் அவற்றை செயல்படுத்துவது பல கேள்விகளை எழுப்புகின்றன.

புதுமையான மற்றும் திறன் வாய்ந்த பணப்பரிவர்த்தனை முறைமை:

இந்த டிஜிட்டல் நாணயம் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அனைத்தும் பாதுகாப்பான மற்றும் உடனடித் தீர்வை கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. மேலும், வங்கிகளுக்கிடையிலான தீர்வு என்பது  தேவைப்படாது என்றும், எந்த ஒரு தனிப்பட்ட வங்கியின் பங்களிப்பும் இன்றி, நேரடியாக ரிசர்வ் வங்கியின் மையப்படுத்தப்பட்ட சர்வர் மூலம் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணப்பரிவர்த்தனைகள் நடைபெறும் என்றும், இதன் மூலம் சிக்கல்கள் அற்ற, மிக எளிய வடிவிலான, விரைவான பணப்பரிவர்த்தனைகள் சாத்தியமாகும் என்றும் ரிசர்வ் வங்கி கூறுகிறது. சமீப ஆண்டுகளாக உலக அளவிலும், நம் நாட்டிலும் பாய்ச்சல் வேகத்தில்  உயர்ந்துள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வீச்சு, டிஜிட்டல் நாணயத்தின் வரவால்  மேலும்  அதிகரிக்கக் கூடும். எனவே, பணப்பரிவர்த்தனை முறைமை முன்னேற்றம் குறித்த  ரிசர்வ் வங்கியின் இந்த வாதம் ஏற்புடையதே.

உலக அளவில் 95 சதவீத மொத்த உற்பத்தியைக் கொண்டுள்ள நாடுகள் டிஜிட்டல் கரன்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதால், உலக சந்தையில் போட்டியிட வேண்டிய இந்தியாவும் அதை நோக்கி நகர வேண்டிய தேவை இருப்பதை மறுக்க முடியாது. நவம்பர் 2016-ல் ஒரு மாதத்திற்கு 3 லட்சம் பரிவர்த்தனைகளையும், சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புகளையும் பெற்றிருந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 730 கோடி பரிவர்த்தனைகளையும், 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்புகளையும் கொண்டவையாக மாறி இருக்கின்றன. அதே நேரத்தில் 2016 நவம்பரில் 18 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருந்த காகித பணப்புழக்கம் 2021 நவம்பரில் 32 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதையும் சேர்த்து கவனிக்க வேண்டிய தேவை உள்ளது. இதன்மூலம் காகித பணப்புழக்கத்தின் தேவை இந்திய சமூகத்தில் இன்றும் மிக அதிக அளவில் உள்ளது என்பது தெளிவாகிறது. எனவே டிஜிட்டல் நாணயம் என்பதை காகிதப் பணத்திற்கான முழுமையான உடனடி மாற்றாக முன் வைப்பதில் எந்த நியாயமும் இல்லை. மாறாக, ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் முறைமையை பாதிக்காத வகையில், படிப்படியான முறையில் டிஜிட்டல் நாணயத்தின் செயல்பாட்டை புழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.

பாதுகாப்பான தொழில்நுட்பம்

மேலும், ரிசர்வ் வங்கியின் இந்த டிஜிட்டல் கரன்சி எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது என்பது குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை. ஒன்றிய நிதியமைச்சர் தனது பட்ஜெட் உறையில் பிளாக் செயின் (Block chain) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே பல தனியார் கிரிப்டோ கரன்சிகளில் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும். இது இணையத் திருடர்களால் பலமுறை ஊடுருவப்பட்டு பல்வேறு மோசடிகளுக்கு உள்ளான ஒரு தொழில்நுட்பம் என்பதற்கு உலகம் முழுவதும் பல உதாரணங்கள் உள்ளன. எனவே, இது போன்ற ஒரு பாதுகாப்பற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் நம் நாட்டிற்கென்ற பிரத்யேகமான, பாதுகாப்பான ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க  வேண்டும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், சில்லரை டிஜிட்டல் நாணயம் என்பது டோக்கன் முறையிலான அமைப்பாக இருக்கும் என்பதாலும், டோக்கனை பெரும் நபரின் மீதே  அதன் மீதான தமது உரிமையின்  உண்மைத்தன்மையை உத்தரவாதப்படுத்திக் கொள்ள  வேண்டிய பொறுப்பு சுமத்தப்படும் என்பதாலும் பாதுகாப்பான புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்படுவது மிகவும்  முக்கியமானதாகும்.  ரிசர்வ் வங்கியும், ஒன்றிய அரசும் இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, பொதுமக்கள் தாமாக முன்வந்து இதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் நிதானமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.

2 comments

  1. டிஜிட்டல் பண பரிவர்த்தனை பற்றிய கட்டுரை அருமையான விளக்கங்களுடனும் சாதக பாதக விஷயங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  2. அற்புதமான விளக்கம்.மறைக்கப்பட்ட விவரங்களை எடுத்து கூறி தகுந்த ஆலோசனைகளை முன் வைத்த தோழருக்கு வாழ்த்துக்கள்.அருமையான கட்டுரை

Comment here...