ஜய ஜய ஜய ஜய ஹே

திரை விமர்சனம்

க.நாகநாதன்

“ஜய ஜய ஜய ஜய ஹே “மலையாளத் திரைப்படத்தை பார்த்தேன். மீண்டும் பெரியதொரு வியப்பு!!

 The Great Indian Kitchen போன்ற படங்களைத் தயாரித்த மலையாளிகளால்தான் இது போன்ற படங்களையும் தரமுடியும் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தர்ஷனா ராஜேந்திரன் என்கிற ஒற்றைத் தெரிந்த நடிகையை வைத்து ஒரு முழுப்படத்தையும் வெற்றிபெறச் செய்ய முடியுமென்றால், அவர்களின் கதை, திரைக்கதை, பாத்திரத் தேர்வு, அளவான இசை பற்றிய நம்பிக்கைகள்தான் வெற்றியின் ரகசியம் என்பது புரிகிறது.

குடும்பச் சூழல்களில் முடிவெடுக்கக கூடிய வாய்ப்புகள் எதனையுமே பெண்களுக்கு அளிக்காத அல்லது மறுக்கிற போக்கு (அது அந்தப் பெண்கள் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும்கூட) சிறு வயது முதல் திருமணம் ஆகி புகுந்த வீடு சென்று அங்கும் அதே மாதிரியான போக்குகள், அதனை அந்தப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை யதார்த்தம் ஆகியவைகளை நகைச்சுவையோடு விவரிப்பது இந்தப் படத்தின் கதை.

  • ஜெயபாரதி (தர்ஷனா) இந்திராகாந்தி போல் வளர்க்கப்படுவாள் என்கிற பீற்றல், யதார்த்தத்தில் கல்வி, உடை, சமத்துவம், சுதந்திரம் என்று எல்லாவற்றிலும் உடைத்து நொறுக்கப்படுவது. இறுதியில் அவளது படிப்பு தொடர வேண்டும் என்கிற அவளது விருப்பத்திற்கு மாறாக ராஜேஷிற்கு (பாசில் ஜோசப்) திருமணம் செய்து வைப்பதில் தொடர்கிறது. கணவன் ஒரு ஆணாதிக்க சிந்தனைவாதி. மனைவியை அடிப்பவன். அவனது உணவு முறை கூட மாற்ற அனுமதிக்காதவன். .புதிய உணவு செய்முறைகளை நிராகரிப்பவன்.அதன் காரணமாய் முதன்முதலில் மனைவியைக்கை நீட்டி அடிக்கத் துணிபவன் அடுத்தடுத்து சிறு சிறு காரணங்களுக்கெல்லாம் அதனையே வழக்கமாகக் கொள்கிறான். சம்பாதிக்கிற குடும்ப ஆண் என்கிற கவுரவத்தோடு கோபக்காரன் என்கிற தகுதியும் அவன் வீட்டில் உள்ள தங்கை மற்றும் விதவைத்தாய் ஆகியோரால் ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. மனைவி தன் தாயிடம் தொலைபேசியில் முறையிடும்போதெல்லாம் அனுசரித்து நடந்துகொள் என்கிற அறிவுரையேக் கிடைக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மனைவி இணையதளம் உதவியால்தான் மறைமுகமாய்க் கற்றுக் கொண்டதற்காப்புக் கலை மூலம் கணவனை எதிர்தாக்குதல் பலமாய் நடத்துகிறார். அடிவாங்கி அவதிப்படும் கணவன்,  தனது வலியைவிட ஆண் என்கிற அகங்காரம் அழிந்து அடங்கிப் போய் அவமானப்படுகிறான். அதன் பின் அவன் இல்வாழ்க்கை அன்பின்வழி நடந்து வெற்றிபெற்றதா இல்லை “தான்” என்கிற EGO மேலெழும்பி அழிந்துபோனதா என்பதே கனத.

படத்தின் தலைப்பே பாத்திரப் பெயரோடு ஒன்றி கதை சொல்வது அழகு.  ஒரு பெண் எந்தச் சூழ்நிலையிலும் தனியாக வாழ்ந்துவிட முடியும். ஆனால் ஒரு ஆணால் அப்படி வாழ முடியாது; அவன் மற்றவர்களை, குறிப்பாக பெண்களைச், சார்ந்து தான் வாழ முடியும் என்கிற செய்தியை போகிறபோக்கில் படம் சொல்கிறது. இல்லற வாழ்வில் ஒரு பெண்ணுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் மூன்று விடயங்கள் நீதி, சமத்துவம் மற்றும் தனி சுதந்திரம் என்பதை எடுத்துரைக்கிற படம். பெரும்பாலான ஆண்களுக்கு இந்த பிரக்ஞையே இல்லாததே பிரச்னை என்பதை அழகாய் விளக்கும் படம். Physical ஆக சண்டைபோடும் பெண்கள் நடைமுறையில் இருக்கிறார்களா என்கிற Logic கேள்வி எழாமல் இல்லை. இருந்தால் நன்றாக இருக்கும். இருக்க வேண்டும் என்றிருந்தால்தான் ஆண்களின் கொட்டம் குடும்ப வன்முறையில் அடக்கப்படும் என்பது முற்போக்காளர்களின் விருப்பம்.

மொத்தத்தில் பெண் சுதந்திரம், என்பது கல்வியில், பொருளாதாரத்தில், சமத்துவத்தில், நீதியில், முடிவெடுக்கும் உரிமைகளில் எல்லாம் இருக்க வேண்டும் என்கிற செய்திகளை உரத்து சொல்கிற படம்.  

இயக்கம்: விபின்தாஸ்

இசை: அன்கிட்மேனன்.

OTT தளம். HOT Star

படம்: ஜய ஜய ஜய ஜய ஹே.

நாகநாதன், திருச்சி

2 comments

  1. படத்தைப் பற்றிய விமர்சனம் என்னை போன்ற இன்னமும் இப்படத்தை பார்க்காதவர்களை பார்க்கத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது சிறப்பு.

  2. முற்போக்கான கதையம்சம் என்ற விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது!

Comment here...