மலக்குழி மரணத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு

சி.பி.கிருஷ்ணன்

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தலித் மக்கள் குடி நீர் தொட்டியில் மலம் கலக்கும் அளவிற்கு வெறுப்பு ஊட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை இறையூர் கிராமத்தில்தான் அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் சென்ற வாரம் நடைபெற்றது. ”இப்படியும் கூட நடக்குமா? மனிதர்கள் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போக முடியுமா?” என்ற கேள்வி விஷயமறிந்த அனைவரின் மனதிலும் இயற்கையாகவே எழுந்தன. ”இத்தகைய கயமைத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி” 2023 ஜனவரி 5ம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நான்காவது மாநாடு தீர்மானம் இயற்றியுள்ளது.

15 ஆண்டுகளாக குரலற்றவர்களின் குரலாக

தமிழ் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து கருத்தாலும், களத்திலும் சமர் புரிகிறது இந்த அமைப்பு. குரலற்றவர்களின் குரலாக இயங்கி வருகிறது இந்த அமைப்பு. இந்த அமைப்பின் சிறப்பு என்னவெனில் இதில் தலித் மக்கள் மட்டுமே உறுப்பினர்கள் ஆக முடியும் என்று எந்த விதியும் இல்லை. தீண்டாமைக் கொடுமைக் கெதிராக குரல் கொடுக்க யாரெல்லாம் முன் வருகிறார்களோ, அவர்கள் எந்த வகுப்பை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களெல்லாம் தங்களை இந்த அமைப்புடன் இணைத்துக் கொள்ளலாம். அப்படி உருவாக்கப்பட்டதுதான் இந்த அமைப்பு. நான்காவது மாநாட்டு பிரதிநிதிகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் அல்லாதவர்கள்தான். தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கெதிராக தலித் அல்லாதவர்களும் இணைந்து போராடினால்தான் தீர்வு காண முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது இந்த அமைப்பு.

“தலித் மக்களின் விடியலுக்கான போராட்டத்தில், சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான இயக்கங்களில் உழைப்பாளி மக்கள் அனைவரும் சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு களம் இறங்க வேண்டும். உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தலித் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் தீர்வு காண முடியும். இவ்விரு போராட்டங்களும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாதது” என்பதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நன்றாக உணர்ந்தே உள்ளது.

87 வகையான தீண்டாமைக் கொடுமைகள்

தமிழ்நாட்டில் ஆய்வு நடத்தியதில் 87 வகையான தீண்டாமைக் கொடுமைகள் கடைபிடிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றிற்கும் எதிராக தொடர்ந்து போராடி வரும் அமைப்புதான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. தமிழ்நாட்டில் 41 மாவட்ட அமைப்புகளை கொண்டுள்ளது. மேலும் வாலிபர், மாணவர், மகளிர் அமைப்புகளும், சிஐடியு, தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், வங்கி, இன்சூரன்ஸ், பிஎஸ்என்எல், போக்குவரத்து, மின்சாரம், மத்திய அரசு, மாநில அரசு, ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட இருபது தொழிற்சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. வங்கித்துறையில் பிஇஎப்ஐ சங்கம் துவக்கம் முதல் இதன் அங்கமாக செயல்பட்டு வருகிறது.

இரட்டைக் குவளை முறை, முடி வெட்டுவதில் பாரபட்சம், பொருள் விற்பதில் பாகுபாடு, நியாய விலைக் கடையில், குடி தண்ணீரில், பொதுக் குளத்தில், சாலை உபயோகத்தில், பேருந்து நிறுத்தத்தில் என்று தொடரும் பாகுபாடுகளுக்கு எதிராக அன்றாடம் குரல் கொடுக்கிறது இந்த அமைப்பு. ஆணவக் கொலைகளுக்கு முடிவு கட்ட தனிச் சட்டம் வேண்டும் என்று சேலம் முதல் சென்னை வரை 360 கிலோமீட்டர் நடைபயணம் நடத்தி இப்பிரச்சனையின் தீவிரத்தை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்த அமைப்பு.

தலித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை

பல பஞ்சாயத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ”தலித்துக்கள்” என்ற ஒரே காரணத்திற்காக சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை என்ற உண்மையை விரிவான கள ஆய்வுக்குப் பின் ஆதாரத்துடன் 2022 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் போட்டுடைத்தது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. உடனே தமிழக அரசு தலையிட்டு தலைமைச் செயலாளர் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் சிறப்பு சுற்றறிக்கை மூலம் தலித் தலைவர்கள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

நான்காம் மாநாடு

இப்படி ஏராளமான பணியை தொய்வில்லாமல் நடத்தி வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது, இரண்டாவது மாநாடு விருதுநகரிலும், மூன்றாவது மாநாடு தஞ்சையிலும் நடைபெற்றன. நான்காவது மாநாடு ஜனவரி 4 ஆம் தேதி மாலை 3000 பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான பொது நிகழ்ச்சி சாதி மறுப்பாளர்களின் சங்கமமாக துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாலபிரஜாபதி அடிகளார் ”தீண்டாமைக் கொடுமைக்கெதிராக சென்னையில் இந்த அமைப்பு பற்ற வைத்துள்ள தீயை கன்னியாகுமரி வரை எடுத்துச் செல்வோம்” என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

27 அமைப்புகள் கெளரவிக்கப்பட்டன

மறு நாள் ஜனவரி 5 ஆம் தேதி பிரதிநிதிகள் மாநாடு மூலக்கடை விகேகே மகாலில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் அறிக்கையின் மீது 29 பிரதிநிதிகள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். மாநாட்டில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ் புலிகள் கட்சி, தலித் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை, சாதி ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட 27 அமைப்புகளின் தலைவர்கள் கெளரவிக்கப்பட்டனர். இவர்களின் சார்பாக பேசிய ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் “தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி களத்தில் ஆற்றி வரும் பணியை மனதார பாராட்டுகிறேன். நீங்கள்தான் இதில் முதன்மையான அமைப்பு, உங்கள் பணி தமிழக வரலாற்றில் தடம் பதித்து வருகிறது என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்றார்.

32 தீர்மானங்கள்

மாநாட்டில் சாதி ஆணவ படுகொலைகள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக தனிச் சட்டம் கோரி, தலித் பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளை வலியுறுத்தி, மலக்குழி மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் முறையான இட ஒதுக்கீடு – தனியார் துறைக்கும் நீட்டிக்க வேண்டி, பீமா கோரேகான் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டி, பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளுக்கெதிராக, ஒரே ஊர் ஒரே மயானம் என்பதை வலியுறுத்தி, சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரி, பஞ்சமி நில மீட்பை வலியுறுத்தி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மனு சிலையை அகற்றக் கோரி மொத்தம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறப்பு விருந்தினர் கேரள அரசின் தேவசம் போர்டு இந்து அறநிலையத்துறை அமைச்சர் தனது நிறைவுரையில் “தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயல்பாடுகள் வெகுவாகப் பாராட்டத்தக்கவை. அனைவருக்குமான சமத்துவ உலகை படைப்பதில் இதன் நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன; பல மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னுதாரணமாக விளங்குகிறது” என்றார்.

நிர்வாகிகள் தேர்வு

நிறைவாக சிறப்புத் தலைவராக தோழர் எஸ்.கே.மகேந்திரன்,  தலைவராக த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளராக கே.சாமுவேல்ராஜ், பொருளாளராக இ.மோகனா உள்ளிட்ட 113 மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பிஇஎப்ஐ – தமிழ்நாட்டிலிருந்து அதன் தலைவர் தோழர் எஸ்.சுனில்குமார் மாநிலக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

”மலக்குழி மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்; ஒரே ஊர் ஒரே மயானம்; சாதியப்பாகுபாடுகளுக்கு முடிவு கட்டுவோம்” என்ற சூளுரைகளுடன் மாநாடு சிறப்பாக நிறைவேறியது.

3 comments

  1. Very saddened and angered to see this kind of activity by people. The persons responsible should be taken to task and punished severely. On the other hand people around should vehemently oppose any kind of discrimination.

  2. அருமை.எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவோம்

  3. தீண்டாமை ஒழித்து சமத்துவ சமுதாயம் உருவாக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் லட்சியம் விரைவில் எட்டப்படும் 💪

Comment here...