நூல் அறிமுகம்  – மரு. கு. சிவராமன்

ஜெயசிங்

அலோபதி மருத்துவம் அகிலம் எங்கும் ஆல மரம் போல்  கிளை பரப்பி வருகிறது . அதன் வணிக சாம்ராஜ்யம் பரந்து பட்டது. பலமானது . ஆங்கில மருத்துவத்திற்கு மாற்று இல்லை என்ற கருத்து நிலவி வரும் நிலையில்  பாரம்பரிய இந்திய மருத்துவத்தின் பல்வேறு கூறுகளின் முக்கிய கூறாகிய சித்த மருத்துவம் அண்மைக் காலங்களில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தடம் பதிக்கத் தொடங்கி இருப்பதைக் காணலாம் . சித்த மருத்துவத்தின் மகிமையை தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் எடுத்துச் சென்று அதனை மக்கள் மத்தியில் ஆழமாக பதியச் செய்து வருபவர் சித்த மருத்துவர் கு. சிவராமன் அவர்கள். அவரின் பல்வேறு பட்ட பணிகளை மரு.கு. சிவராமன் எனும் நூல் வாயிலாக விவரிக்கும் நூலாசிரியர் அதன் மூலம் சித்த மருத்துவத்தின் அவசியத்தையும் சிறப்பையும் இலகு தமிழில் எடுத்துரைப்பது சிறப்பான அம்சமாகும்.

மரு. கு. சிவராமன் என்ற தலைப்பிலான இந்நூலை சித்தமருத்துவத் துறையின் முதுகலைப் பட்டதாரியான மருத்துவர் திரு .வி. விக்ரம்குமார் எழுத நல்வழி நூல்கள் அமைப்பு 2022 நவம்பரில் வெளியிட்ட நிலையில் அண்மையில் நெல்லை மாநகர சித்தமருத்துவர்களும் நலன் விரும்பிகளும் நிறைந்த அவையில் இந்நூல் அறிமுகப்படுத்தப்பட்டது . மருத்துவரும்  நூலாசிரியருமான திரு. விக்ரம் குமார் அவர்கள் மருத்துவர் கு. சிவராமன் அவர்களுடன் கடந்த  25 வருடங்கள் உடனிருந்து பயணித்த அனுபவங்களின் அடிப்படையில் இந்நூலை மிகவும் எளிய நடையில் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .

பாளையங்கோட்டையில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை புனித சவேரியார் பாடசாலையில் ஆரம்பித்து பின்னர் பிரசித்தி பெற்ற பாளை சித்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்த மருத்துவரான சிவராமன் அவர்கள் சமூக உணர்வுடன் சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகளை எவ்வாறு கையாண்டார் என்பதை இந்நால் திறம்பட விவரிக்கிறது. 176 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 10 விதமான தலைப்புகளை உள்ளடக்கி இருவேறு கோணத்தில் எழுதப்பட்டுள்ளது . நூலின் முதற் பகுதியில் கு. சிவராமன் அவர்களை நூலாசிரியர் பார்க்கும் பார்வையும் இறுதிப் பகுதியில் சிவராமன் அவர்களை அவரது உற்ற நண்பர்கள் நோக்கிய விதமும் சித்தரிக்கப் பட்டுள்ளது .

ஒருங்கிணைந்த மருத்துவம்

மருத்துவத்தில் வணிகம்  தலைவிரித்தாடும் நிலையில் அறம் சார்ந்த மருத்துவத்தை முன்னெடுத்து வருபவர் சித்த மருத்துவர் சிவராமன் ஆவார். நவீன ஆங்கில மருந்துகளுடன் அண்மைக் காலங்களில் வளர்ந்து வரும் சித்த ஆயுர்வேத ஹோமியோபதி மருந்துகளையும் அதனைச் சார்ந்த மருத்துவர்களையும் நேர் கோட்டில் ஒன்றிணைக்கும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையின் அவசியத்தை அற வழியில் உலகறியச் செய்தவர் மருத்துவர் சிவராமன் எனலாம். அதன் ஆரம்பமே கோவிட் 19 நோய் தொற்றின் போது, ஆங்கில மருத்துவமனைகளில் ஆங்கில மருந்துகளுடன் சித்த மருத்துவ கண்டுபிடிப்பான கபசுர குடி நீரும் வழங்கப்பட பலரும் குணமடைந்து வீடு திரும்பினர்.  சித்த மருத்துவம் வழங்கிய பெருங்கொடை கபசுர குடி நீராகும். அப்போது இந்திய மருத்துவ கழகம் மட்டுமல்லாமல் உலக மருத்துவ கூட்டமைப்பும் கபசுரகுடிநீரின் முக்கியத்துவத்தை ஆராயத்தொடங்கியது. இதனடிப்படையில் நவீன அறிவியலும் பாரம்பரியமும் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தை ஆழமாக வெளிப்படையாக அறிவித்தவர் திரு.சிவராமன் ஆவார்.

மூலிகை மருந்து

கொரோனா தொற்று கட்டுக் கடங்காமல் பரவிக் கொண்டிருந்த போது இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று அலோபதியுடன் இணைந்து நோய் தீர்க்க  சித்த மருத்துவமும் போராடியது. நோய் எதிர்ப்பாற்றல் தரக் கூடிய கபசுரக் குடி நீர், நில வேம்புக் குடிநீர், அமுக்கரா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் போன்ற இயற்கை  மூலிகை மருந்துகளை உட்கொள்ள தமிழக அரசு 2020 ஏப்ரலில் பரிந்துரைத்ததை பெருமையுடன் குறிப்பிடும் நூலாசிரியர் சித்த மருத்துவ குடிநீரை நவீன மருந்துகளுடன் சேர்த்து பயன்படுத்த கூட்டு சிகிச்சைக்கான ஒப்புதலையும் அரசு வழங்கியதை நினைவு கூர்ந்து அதன் பின்னால் மருத்துவர் சிவராமனின் உழைப்பும் இருந்ததாக கூறுகிறார். இக்காலக் கட்டங்களில் அங்கும் இங்கும் ஒளிந்திருந்த ஆரோக்கிய நலக் கூறுகளில் ஒன்றான சித்த மருத்துவத்தை மக்கள் மனதில் ஆழமாக ஒளிர வைத்தவர் மருத்துவர் சிவராமன் எனலாம். பிற மருத்துவ முறைகளில் காணப்படும் சிறப்புக்களையும் நுணுக்கங்களையும் மிகத் தெளிவாக புரிந்து அவற்றுடன் சித்த மருத்துவ கூறுகளை இணைத்து அதன் வாயிலாக நோயாளர்கள் நலன் பெற முயன்றவர் திரு. சிவராமன் எனலாம் . இவரின் பெருமுயற்சி காரணமாக மக்கள் சித்த மருத்துவம் நோக்கி நம்பிக்கையுடன் நகரத் தொடங்கினர் .

சிறு தானியங்கள்

சிறுதானிய பயன்பாட்டில் பல ஆய்வுகளைச் செய்து, அறிவியல் தரவுகளைக் கொண்டு சாமானிய மக்களின் உணவு முறைகளில் சிறுதானியங்களைக் கொண்டு வந்தவர் கு. சிவராமன் என நூலாசிரியர் இந்நூலில் பெருமை பட கூறுகிறார். மாப்பிள்ளைச் சம்பா, மணிச் சம்பா, கருப்பு கவுணி போன்ற  ஆரோக்கியமான அரிசி வகைகள் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திய பெருமை அவரையே சாரும். இதனடிப்படையில் நெல் ஜெயராமனின் உணர்வை தமிழகமெங்கும் பரப்பவும் செய்தார். சிறு தானியங்கள் குறித்த இவரது பரப்புரை காரணமாக சாமை, தினை, வரகு, கம்பு, கொள்ளு  போன்ற சிறு தானியங்களை வாங்குவதற்கு மக்கள் விற்பனை நிலையங்கள் முன் வரிசை கட்டி நிற்கும் காட்சிகளை இன்றைய நாளில் காணலாம்  . இதே போன்று தமிழ் நாட்டில் மிகச் சிறிய நகரங்களில் கூட  நாட்டு மருந்துக் கடைகள் புதிது புதிதாக தோன்ற அங்கே  மூலிகை மருந்துகளுக்காக மக்கள் காத்திருக்கும் காட்சிகளையும் அன்றாடம்   நாம் காண்பதற்கு  சித்த மருத்துவத்தின் சிறப்பே காரணமாகிறது .

சித்தர்களின் தாரக மந்திரத்தை உள் வாங்கிய சித்த மருத்துவரான சிவராமன் அவர்கள் உணவின் வழியாக நலம் பெறும்  வழிமுறைகளை எவ்வாறு மக்களிடம் எடுத்துச் சென்றார் என்பதை நூலாசிரியர் விக்ரம் குமார்  இந்நூலில் தெளிவுபட விவரித்துள்ளார். சித்த மருத்துவத் துறைக்கு பெரும் பங்காற்றி தொடர்ந்தும் பணி செய்து வரும் சிவராமன் அவர்களை தமிழக அரசின் வளர்ச்சி திட்டக் குழுவில்  உறுப்பினராக இணைத்துக் கொண்டமை சித்த மருத்துவ துறைக்கு கிடைத்த மிகப் பெரும் அங்கீகாரமாகும். மருத்துவர் கு. சிவராமன் என்ற நூலில் திரு. சிவராமன் அவர்களின் அருமை பெருமைகளை கூறுவதன் வாயிலாக சித்த மருத்துவத்தின் அவசியத்தையும் அதன் மேன்மைகளையும் இந்நூலாசிரியர் திறம்பட பதிவிட்டுள்ளார்.

மூலிகை மருந்துகளை உள்ளடக்கிய சித்த மருத்துவத்தின் சிறப்பினூடாக ஒருங்கிணைந்த மருத்துவம்தான் இன்றைய காலத்தின் தேவை. இனி அதுவே மானிடத்தை காப்பாற்றும்  என்ற கு. சிவராமன் அவர்களின் உயர்வான  சிந்தனையை வழிமொழிகிறார் மருத்துவரும் எழுத்தாளருமான திரு. விக்ரம் குமார் அவர்கள்.

One comment

  1. கட்டுரையாளருக்கும், நூலாசிரியருக்கும் நன்றிகள் பல. மருத்துவத்தில் உயர்வு தாழ்வு இல்லை என்பதையும், பாரம்பரிய மருத்துவ முறைகள் கவனத்துடன் ஆராயப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வரும் மரு.கு.சிவராமன் அவர்களின் பெயரோடு வந்துள்ள நூல் அதிக அளவில் வாசகர்களை சென்று சேரட்டும்.

Comment here...