நம்பிக்கையும் உத்வேகமும் அளித்த இன்சூரன்சு ஊழியர்கள் மாநாடு

எம்.கிரிஜா

பல்வேறு புரட்சிகரமான, முற்போக்கு இயக்கங்களுக்கு உத்வேகமளித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கொல்கத்தா நகரில் ஜனவரி 8 முதல் 11 வரை அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கத்தின் (AIIEA) மாநாடு நடைபெற்றது.  21ம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்க 22 ஆண்டுகள் இருந்தபோது – அதாவது 1978ல் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டை நடத்திய கொல்கத்தா தோழர்கள் 21ம் நூற்றாண்டில் காலடி வைத்து 22 ஆண்டுகள் கழிந்த பின் – அதாவது 2023ல் சங்கத்தின் 26வது பொதுமாநாட்டை நடத்தினார்கள். 

தடைகளைத் தாண்டி

மாநாடு நடைபெறுவதற்கு 15 நாட்களே இருந்தபோது, மாநாட்டு நிகழ்விடமாக முன்பதிவு செய்யப்பட்ட அரங்கத்தில் நிகழ்வுகளை நடத்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தது ஏற்பாடுகளை செய்து வந்த தோழர்களுக்கு பேரிடியாக இருந்தது.  ஆனால் உடனே அதிலிருந்து மீண்டு அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் துவங்கினர்.  நாடு முழுவதிலுமிருந்து மிகுந்த ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் பங்கேற்கவுள்ள 1800க்கும் மேற்பட்ட தோழர்கள் அமர்ந்து மாநாட்டு நிகழ்வுகளை கவனிக்கும் வகையிலான இடம் என்று தேடியபோது வேறு எந்த அரங்கமும் அவர்கள் எண்ணத்தில் தோன்றவில்லை.  அப்போது ஜோதிபாசு ஆராய்ச்சி மையத்தை நிர்மாணிக்கும் பணிக்காக இருந்த இடம் அவர்கள் மனக்கண் முன் தோன்றியது. 

அம்மையத்தின் பொறுப்பாளர்களை அணுகி நிலைமை குறித்து தெரிவித்ததும், அவர்கள் அந்த இடத்தில் மாநாட்டை நடத்துவதற்கான இசைவை தெரிவித்தனர்.  முந்தைய நாள் வரை பொட்டல் காடாக இருந்த இடம், 15 நாட்களில் தோழர்களின் இரவு பகல் பாராத அயராத உழைப்பால் எழில்மிகு மாநாட்டு அரங்கமாக கம்பீரமான வடிவம் பெற்றது.  சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டை துவக்கி வைத்த தோழர் ஜோதிபாசுவின் நினைவாக அவரது பெயரில் அமைக்கப்படவுள்ள ஆராய்ச்சி மையத்தின் இடத்தில் சங்கத்தின் 26வது மாநாடு தடைகளைத் தாண்டி எழுச்சியோடு நடைபெற்றது.

உற்சாகமான வரவேற்பு

நம்மைப்போன்ற தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரை, மாநாடு என்பதும் மக்களிடையே பிரச்சாரத்தை கொண்டு செல்வதற்கான தருணம் ஆகும்.  எனவே, மாநாட்டையொட்டி வேன் பிரச்சாரம் என்பது அசாமின் கௌஹாத்தி நகரில் துவங்கி 1500 கிலோமீட்டர்கள் பயணித்து ஜனவரி 7ம் தேதி மாலை கொல்கத்தா நகரை வந்தடைந்தது.   அப்போது கொல்கத்தா நகரைச் சார்ந்த கலைக்குழுவின் மேளதாளங்கள் முழங்க, பழங்குடியினத்தவரின் பல்வேறு வடிவங்களிலான நடனங்களோடு அங்கு குழுமியிருந்த பிரதிநிதிகளும், பார்வையாளர்களும் பிரச்சாரக் குழுவிற்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனர். 

பொது மாநாட்டில் வெளிப்பட்ட ஒற்றுமையும், உறுதிப்பாடும்

ஜனவரி 8, 2023 அன்று காலை நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த 500 பெண்கள் உட்பட 3500 தோழர்களின் பங்கேற்போடு மாநாட்டுப் பேரணி எழுச்சியோடு துவங்கியது.  இன்சூரன்சு ஊழியர்களின் பிரச்சனைகள் பற்றியும், தொழிலாளி வர்க்கமும், நாட்டின் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் அந்தந்த மாநில மொழியில் விண்ணதிரும் முழக்கங்களுடன் இரண்டு கிலோமீட்டர் பயணித்து மாநாட்டு அரங்கை பேரணி எட்டியது.   சங்கத்தின் தலைவர் தோழர் வி ரமேஷ் சங்கக் கொடியை ஏற்றி வைக்க, தியாகிகளுக்கு அஞ்சலியோடு மாநாட்டு நிகழ்வுகள் துவங்கின. புகழ்பெற்ற பொருளாதார வல்லுநரும், மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவருமான பேராசிரியர் டாக்டர் ரதன் கஸ்னபிஸ் வரவேற்புரை ஆற்றினார். 

கேரள மாநிலத்தின் முன்னாள் நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.  எல்ஐசியையும், பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களையும் தனியார்மயமாக்கிட ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக முப்பதாண்டுகளுக்கும் மேலாக சமரசமற்ற போராட்டத்தை நடத்தி வரும் அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கத்தை அவர் பாராட்டினார்.  கேரள அரசின் ஜனநாயகப் பரவலாக்கம் அம்மாநில மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் எத்தகைய முக்கிய பங்கை வகிக்கிறது என்பதை விளக்கினார்.   

எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்திட அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைகளுக்கான மக்கள் குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைத்தார்.  “எல்ஐசிக்கான கேரளா” (Kerala for LIC) என்ற வடிவத்தில் கேரள மாநிலத்தில் எல்ஐசி நிறுவனத்தை பாதுகாத்திட எத்தகைய பிரம்மாண்டமான பிரச்சாரம் மாநிலம் முழுவதும் துவக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக விளக்கி தனது துவக்கவுரையை அவர் நிறைவு செய்தார்.

 இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் தெபாஷிஷ் பாசு சௌத்ரி, வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விவேக் சிங், அகில இந்திய எல்ஐசி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராஜேஷ் குமார், எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஜெயந்தா குஹா, மேற்கு வங்க சிஐடியுவின் அர்ஷத் அலி ஆகியோர் மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினர்.

நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்த பிரதிநிதிகள் அமர்வு

கடந்த மூன்றாண்டுகளில் உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கம் கடுமையான சவால்களை சந்தித்துள்ள சூழலில்  சர்வதேச அளவிலும், இந்தியாவிலும், இன்சூரன்சு அரங்கத்திலும் உள்ள பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவரிக்கும் அறிக்கையை பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா சமர்ப்பித்தார்.  10 மகளிர் தோழர்கள் உட்பட 68 தோழர்கள் பங்கேற்போடு  கிட்டத்தட்ட 11 மணி நேரம் அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.  பிரதிநிதிகள் அமர்வில் சிஐடியுவின் பொதுச் செயலாளர் தோழர் தபன் சென் வாழ்த்துரை வழங்கினார்.

நெகிழ்வான தருணம்

சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தோழர் சந்திர சேகர் போஸ் மாநாடு நடைபெறுவதற்கு ஒரு சில தினங்கள் முன்பு 100 வயதைத் தாண்டி 101வது வயதில் அடியெடுத்து வைத்தார்.  போராட்டிடம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வடிவமான தோழர் சந்திரசேகர் போஸ் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டார்.  மாநாட்டரங்கில் மேடைக்கு தோழர் போஸ் அழைக்கப்பட்டபோது அனைத்து தோழர்களும் எழுந்து நின்று கரவொலியெழுப்பி, விண்ணதிர வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

கீழ்க்காணும் முடிவுகளை மாநாடு ஒருமனதாக எடுத்தது.

•குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதம் என்ற சீரான விகிதத்தில் அளிப்பதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிடவும், வரையறுக்கப்பட்ட பணம் செலுத்தும் பென்ஷன் திட்டத்தின்(DCPS) கீழ் நிர்வாகத்தின் பங்களிப்பை தற்போதுள்ள 10%த்திலிருந்து 14% ஆக அதிகரிக்கவும்  கோரி நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது 2 மணி நேர வெளிநடப்பு வேலைநிறுத்தம் மேற்கொள்வது.  இன்சூரன்சுத் துறையில் உள்ள தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சங்கங்களோடும் கலந்தாலோசித்து வேலைநிறுத்தத்திற்கான தேதியை முடிவு செய்வது.  குடும்ப ஓய்வூதியத் தொகையை அதிகரித்து உடனடியாக அறிவிக்கையை வெளியிடக் கோரி அகில இந்திய இன்சூரன்சு பென்ஷன்தாரர் சங்கம் தில்லியில் ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தை நடத்தும் நாளன்று நாடு முழுவதிலும் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டம் நடத்துவது

• ஆயுள் காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்ட தினமாகிய ஜனவரி 19ம் தேதியை எல்ஐசி நிறுவனத்தை பொதுத்துறையில் வலுப்படுத்த வலியுறுத்துவது.  அதே போன்று பொதுக் காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்ட தினமாகிய மே 13ம் தேதியை பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து வலுப்படுத்தக் கோருவது.   இந்த இரண்டு நாட்களின்போதும் மனித சங்கிலி, கூட்டங்கள், கருத்தரங்குகள், பத்திரிகையாளர் சந்திப்பு, கன்வென்ஷன்கள், பிரசுர விநியோகம் உள்ளிட்ட வடிவங்களில் இத்தினங்களை அனுசரிப்பது

• எல்ஐசி மற்றும் பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை ஊழியர்களின் பணிநியமனம் குறித்த கோரிக்கையின் மீது உடனடியாகப் பிரச்சாரம் மேற்கொள்வது.  அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், குறிப்பிட்ட காலத்திற்கான வேலைவாய்ப்பு மற்றும் வேலைகள் கேஷுவல் மற்றும் காண்டிராக்ட்மயமாக்கப்படுவது ஆகிய பிரச்சனைகளில் வாலிபர் மற்றும் மாணவர்கள் நடத்தும் இயக்கங்களோடு நமது பணிநியமனத்திற்கான கோரிக்கை மீதான இயக்கங்களை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்வது

• பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது/பங்கு விற்பனை செய்வது, இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம் பாதிக்கப்படுவது, விலைவாசி உயர்வு அதன் விளைவாக மக்கள் வறுமையில் மூழ்கடிக்கப்படுவது ஆகிய பிரச்சனைகள் தொடர்பாக நாடு முழுவதும் கருத்தரங்குகளையும், கன்வென்ஷன்களையும் நடத்துவது

• தொழிற்சங்க ஸ்தாபன ஒற்றுமையை வலுப்படுத்திட சங்க உறுப்பினர்களின் தத்துவார்த்த புரிதலை மேம்படுத்திட நாடு முழுவதிலும் தொழிற்சங்க வகுப்புகளை நடத்துவது.  இளைய தோழர்களை அடையாளம் கண்டு, எதிர்காலத்தில் தொழிற்சங்க பொறுப்புகளை ஏற்று செயல்பட அவர்களை தயார்படுத்துவது.

• இந்திய அரசியல் சாசனத்தை பேணிப் பாதுகாத்திடவும், அதிகரித்து வரும் வகுப்புவாத அச்சுறுத்தலை எதிர்த்தும், அடிப்படை உரிமைகளும், சிவில் சுதந்திரங்களும் வெட்டிச் சுருக்கப்படுவதை எதிர்த்தும் இந்திய மக்கள் நடத்தும் பரந்துபட்ட போராட்ட இயக்கங்களில் இணைவது

சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக பல்வேறு சவால்களை சந்திக்கும் தருணத்தில் நடைபெற்ற மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்ற தோழர்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை, புரிதல், ஈடுபாடு மற்றும் ஒருங்கிணைப்பு, பங்கேற்ற அனைவருக்கும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்தது. 

மாநாட்டின் நிறையவாக தலைவராக தோழர் வி ரமேஷ், பொதுச் செயலாளராக தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா பொருளாளராக தோழர் பி எஸ் ரவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Comment here...