வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும்

எஸ். ஹரிராவ்

பதினோராவது இருதரப்பு ஒப்பந்தத்தில் தீர்த்து வைக்கப்படாத கோரிக்கைகளுக்காக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஜனவரி 30,31 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்துள்ளது. 2022 ஜுன் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த வேலை நிறுத்தம் பேச்சு வார்த்தை மூலம் சுமுகமான தீர்வு காண ஒத்திவைக்கப்பட்டது. இன்று வரை எவ்வித முன்னேற்றமும் காணப்படாத நிலையில், 11வது இருதரப்பு ஒப்பந்தமும் 2022 அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கான பேச்சு வார்த்தையும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உள்ளடக்கி வேலை நிறுத்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது‌.

1.ஊழியர் அதிகாரிகளின் மிக முக்கியமான கோரிக்கை “வாரம் 5 நாட்கள் வேலை” என்ற கோரிக்கை. அனேகமாக எல்லா அரசுத் துறைகளிலும், ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உட்பட வாரம் 5 நாள் வேலை என்பது வந்தபிறகும் வங்கித்துறையில் மட்டும் அமுலாக்க மறுப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று. வங்கித்துறையில் டிஜிட்டல் சேவை மூலமாக கணிசமான  பரிவர்த்தனைகள் நடைபெறும் போது வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படும் என்று அரசு தரப்பில் காரணம் கூறுவது ஏற்க முடியாத வாதம். உலகத்தில் பல நாடுகளில் வாரம் 4 நாள் வேலை என்பதை நோக்கி செல்லும்போது, இது ஒரு நியாயமான கோரிக்கை. யுஎஃப்பியு தரப்பில் திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி அரை மணி நேரம் வேலை நேரத்தை உயர்த்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

2.வங்கித்துறையில் 1996இல் ஓய்வூதியத் திட்டம் அமுலாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை, ஓய்வூதியம் மேம்படுத்தப் படவேயில்லை. மத்திய மாநில அரசுகளில் ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின் போதும் ஓய்வூதியமும் உயர்த்தப்படும். ரிசர்வ் வங்கியிலும் கடந்த கால ஊதிய ஒப்பந்தகளுக்கான ஓய்வூதியம் மேம்படுத்தப்பட்டு விட்டது. மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியில் உள்ளது போல், வணிக வங்கிகளிலும் ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. வங்கித்துறையில் ஓய்வூதிய நிதியத்தில் போதிய நிதி இல்லை என்ற வாதம் தட்டையான ஒன்று. தொழிற்சங்கங்கள் கேட்டும் அதற்கான வரவு செலவு கணக்குகளையும், எதிர்காலத்திற்கான நிதி மதிப்பீடுகளையும் வங்கிகளின் கூட்டமைப்பான ஐபிஏ வழங்கத் தயாராக இல்லை. ஓய்வூதிய மேம்படுத்தல், ஏற்கனவே மோசமான ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களான ஓய்வூதியர்களுக்கு முக்கியமாக வென்றெடுக்கப்பட வேண்டிய கோரிக்கை.

3. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தாண்டவமாடும் நிலையில், படித்த இளைஞர்களுக்கு ஓரளவேனும் வேலை வாய்ப்பு தருவது வங்கித் துறை மட்டுமே. புதிய கிளைகள் துவங்கப்படுவது, வணிக வளர்ச்சி காரணமாக கூடுதல் வேலைப் பளு,   அதிக எண்ணிக்கையில் பணிஓய்வுகள் ஆகிய காரணங்களினால் மிக அதிக அளவில் அனைத்து மட்டத்திலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. குறிப்பாக கடைநிலை ஊழியர்கள் பணிகள் தினக்கூலி அடிப்படையில் சுரண்டப்படுகின்றனர். எனவே வாடிக்கையாளர் சேவை மேம்பட, வணிகம் பெருக போதிய அளவு அதிகாரிகள், எழுத்தர்கள், கடைநிலை ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும் என்பது பிரதான கோரிக்கை.

4. அன்னிய, தாராளமய, பன்னாட்டு மூலதன, கார்பொரேட் கொள்கையின் முக்கிய அம்சம் 2003 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட புதிய பென்ஷன் திட்டம். தொழிற் சங்கங்களின் எதிர்ப்பின் காரணமாக தள்ளி போடப்பட்டு, 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வங்கித் துறையிலும் திணிக்கப்பட்டது. ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு சங்குச் சந்தையாக மாறி, பல்லாண்டு கால உழைப்பு பெரும் இழப்பாக முடியும் அபாயம் இதில் அடங்கி உள்ளது. 2008 இல் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியில் ஓய்வூதிய முதலீடுகள் எப்படி காணாமல் போயின என்பது சமீபத்தில் கண்கூடாகக் கண்ட வரலாறு. தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவருவது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது, இந்த கோரிக்கையின் நியாயத்தை எடுத்துரைக்கிறது. அந்த அடிப்படையில், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவருவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன. ஆனாலும், மத்திய அரசு பல முட்டுக்கட்டைகளைப் போடுகிறது.

5. பதினோராவது இருதரப்பு ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்து விட்டது. நான்கு அதிகாரிகள் சங்கங்களும், நான்கு ஊழியர் சங்கங்களும், பி.இ.எஃப்.ஐ சங்கம் தனியாகவும் அடுத்த ஊதிய உயர்வுக்கான கோரிக்கை பட்டியலை சமர்ப்பித்தாகி விட்டது. ஆனால் இன்றுவரை பேச்சுவார்த்தைக்கான எந்த அழைப்பும் வங்கி நிர்வாகங்களின் பிரதிநிதியான ஐபிஏ விடமிருந்து வரவில்லை. குறைந்த பட்சம் இன்னும் வங்கி நிர்வாகங்களிடமிருந்து பேச்சுவார்த்தைக்கான அங்கீகார அதிகாரத்தையோ இசைவினையோ பெறவில்லை. உடனடியாக காலம் தாழ்த்தாமல் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்பது ஊழியர்களின் எதிர்ப்பார்ப்பு, முக்கிய கோரிக்கை.

6. கடந்த ஒப்பந்தத்தில் தீர்க்கப்படாத கோரிக்கைகளாக- மருத்துவக் காப்பீடு குளறுபடிகள், ராணுவத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் ஊதிய விகித நிர்ணயம், வரையறுக்கப்பட்ட வங்கி வேலை நேரம் உள்ளிட்ட பல தீர்க்கப்படாமல் உள்ளன.

 இன்று பதினோராவது ஒப்பந்தம் முடிவுற்ற நிலையில் பழைய கோரிக்கைகள் நிறைவேறாமல், அதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக போராடியும் தீர்வுகள் எட்டப்படவில்லை. எனவேதான் இரண்டு நாள் வேலை நிறுத்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

One comment

  1. UFBU has rightly decided to launch struggle programme culminating in two days strike. Let us make the strike a massive success. Bank employees and officers are being deceived by the Govt – IBA concern. Thanks to the author of this article to have made it during this time.

Comment here...