தற்காலிக ஊழியர்களுக்கு போனஸ் –  ஒரு போராட்டத்தின் வரலாறு

நமது சிறப்பு நிருபர்

இந்தியன் வங்கியில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சட்டப்படியான போனஸ் பெறுகின்றனர். அந்த வகையில் முதற்கட்டமாக 2020-21 ம் ஆண்டிற்கான போனஸ் ஆயிரக்கணக்கான கடைநிலை ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தொடர்ச்சியாக சட்டப்படியான போனஸ் பெறுவார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துள்ளது. தற்காலிக ஊழியர்களின் இந்த நீண்ட கால கோரிக்கையை சாத்தியமாகியதற்கு பின்னால் தொழிற்சங்கத்தின் நீண்ட நெடிய தொடர் போராட்டங்கள் உள்ளன.

இது குறித்து இதற்கான பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து எடுத்து வரும் இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷனைச் (IBEA TN- BEFI) சேர்ந்த நிர்வாகிகள் கூறும் போது:

“இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேசன்-தமிழ்நாடு துவங்கிய காலம் முதலே தனது சங்க உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்காக போராடிய அதே நேரத்தில் வங்கியில் எவ்வித அடிப்படை உரிமைகளும் இன்றி வேலை செய்து வந்த தற்காலிக கடைநிலை ஊழியர்களின் நியாயமான உரிமைகளுக்காகவும் சேர்த்தே தொடர்ந்து போராடி வந்தது. 1983ம் ஆண்டு சங்கம் துவங்கப்பட்ட ஓராண்டிலேயே நாங்கள் வைத்த கோரிக்கைகளில் முதன்மையானது தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் என்பதாகும். இந்தியன் வங்கியில் துவக்க காலங்களில் தற்காலிக ஊழியர்களுக்கு பேனல் (Panel) முறையிலான பணி நியமனங்கள் என்பது வழக்கத்தில் இருந்தது. அதன் படி பணியில் இருக்கும் தற்காலிக ஊழியர்கள் பேனல் முறையின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

அவர்களுக்கு வங்கித்துறையின் ஒரு நிரந்தர கடைநிலை ஊழியரின் ஆரம்ப சம்பளத்தின் அடிப்படையில் ஒரு மாதத்தில் அவர்கள் வேலை செய்த நாட்களுக்கு ஏற்ப கணக்கிட்டு (pro-data basis) சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு வருடமும் சட்டப்படியான போனஸ் என்பதும் அவர்களுக்கு சாத்தியமானது. மேலும் ஐபிஇஏ சங்கத்தின் தொடர் போராட்டங்களால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அவர்களின் ஒரு பகுதியினர் வங்கியின் தேவையின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்களாக நியமிக்கப்பட்டும் வந்தனர். இதனால் தற்காலிகமாக பணிபுரிந்தாலும் சில ஆண்டுகளில் நிரந்தரமாக்கப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கை அந்த ஊழியர்களின் மனதில் இருந்தது. அந்த நம்பிக்கைகள் சங்கத்தின் தொடர் தலையீடுகளால் நினைவாகவும் செய்தன.

இவை அனைத்தும் 1997 ம் ஆண்டோடு முடிவிற்கு வந்தன. அதன் பிறகு கடந்த 25 ஆண்டுகளாக இந்தியன் வங்கியில் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் என்பது நடைபெறவில்லை. மேலும் அவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது போன்ற நிரந்தர ஊழியர்களுக்கு இணையான (pro- data) சம்பளம் வழங்கப்படாமல், மிகக்குறைந்த அத்துக்கூலிகளே வழங்கப்பட்டு வருகின்றன. சட்டப்படியான போனஸ் என்பதும் மறுக்கப்பட்டு வருகிறது. 1990 களுக்குப் பிறகு நம் நாட்டில் முன்னுக்கு வந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கங்கள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. வங்கியில் கடைநிலை ஊழியர்களாக இருக்கும் இவர்கள், மிக இயல்பாகவே சமூக தளத்திலும் கடைநிலையிலேயே உள்ளனர். இவர்களில் மிகப்பெரும்பலானவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்தே வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றையெல்லாம் எதிர்த்து எங்கள் சங்கமானது தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்த போராட்டங்கள் என்பது ஒருபுறம் சட்ட ரீதியிலான போராட்டங்களாகவும், மறுபுறம் ஊழியர்களைத் திரட்டி நேரடிக் களப் போராட்டங்களாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், சட்டப்படியான போனஸ் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தனித்தனியே வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

◆ பணி நிரந்தரதிற்கான வழக்கு 2015 ம் ஆண்டு தொழிலாளர் தீர்ப்பாயம் முன்னிலையில் தொடுக்கப்பட்டது (வழக்கு எண் ID67/2015). சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் 2017 ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டிற்கு சென்றுள்ள பின்னணியில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

◆ குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தி 2016ம் ஆண்டு வட்டார தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் கோரிக்கை வைக்கப்பட்டு 2017ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. வட்டார தொழிலாளர் ஆணையர் நீதிமன்றத்தில் தற்போது வரை இதற்கான வழக்கு நடைபெற்றுக் கொண்டுள்ளது.

◆ சட்டப்படியான போனஸ் வழங்கக்கோரி  2020-21 ம் ஆண்டில் துணைத்தலைமைத் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் வழக்கு தொடுக்கப்பட்டது. 2021 ம் ஆண்டு மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான தற்காலிக ஊழியர்களிடம் இருந்து சுய விவரத் தகவல்கள் அடங்கிய விண்ணப்பப் படிவங்கள் பெறப்பட்டு ஆணையர் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டன.

இவ்வாறான சட்டப்போராட்டங்களைத் தாண்டி களத்தில் ஊழியர்களைத் திரட்டி களப்போராட்டங்களையும் சேர்த்தே முன்னெடுத்து சங்கம். அந்த வகையில்,

◆ 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள மண்டலங்களில் தற்காலிக ஊழியர்கள் திரட்டப்பட்டு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் மாநிலம் முழுவதும் சுமார் 800 தற்காலிக ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டங்களின் முடிவில் சங்க பொறுப்பாளர்கள் மண்டல மேலாளர்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

◆ ஜூன் 2021 ல் தற்காலிக ஊழியர்கள் அனைவரும் இந்தியன் வங்கி மேலான் இயக்குனர் அவர்களுக்கு கடிதம் எழுதும் போராட்டத்தை சங்கம் முடிவு செய்து முன்னெடுத்தது. அதன்படி மாநிலம் முழுவதும் இருந்து தற்காலிக ஊழியர்கள் போனஸ் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தும் கடிதத்தை மேலான் இயக்குனருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் பங்குபெற்றனர்.

◆ ஆகஸ்ட் 2021ல் மீண்டும் தற்காலிக ஊழியர்களைத் திரட்டி மெழுவர்த்தி ஏந்திப் போராடும் நிகழ்விற்கு சங்கம் அறைகூவல் விடுத்தது. மாநிலம் முழுவதும் 30 இடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கில் தற்காலிக ஊழியர்கள் பங்கு பெற்று பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் மெழுவர்த்திகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். அந்தந்த பகுதிகளின் ஐபிஇஏ பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்திய இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் முன்னணி செய்தி ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது.

இவை அனைத்தும் சங்கத்தின் களப்போராட்ட வடிவங்களின் ஒரு கூறு மட்டுமே. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால்  இன்னும் பல வீரஞ்செரிந்த போராட்டங்களை முன்னெடுத்துள்ளது எங்களது சங்கம்.

இத்தகைய அனைத்து விதமான தொடர் போராட்டங்களின் விளைவாக போனஸ் விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கடந்த செப்டம்பர் 19ம் தேதி ஏற்பட்டது. போனஸ் குறித்து துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஐபிஇஏ சங்கத்திற்கும், இந்தியன் வங்கி நிர்வாகத்திற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் அனைவருக்கும் முதற்கட்டமாக 2020- 21 ம் ஆண்டிற்கான 8.33% போனஸ் வழங்கப்பட வேண்டும் என்றும், அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து போனஸ்  வழங்கப்பட வேண்டும் என்றும் புரிந்துணர்வு ஏற்பட்டது.

சுமார் 1400 தற்காலிக ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட சுயவிவர தகவல்கள் அடங்கிய கோப்பினை ஐபிஇஏ சங்கம் நிர்வாகத்திடம் அளித்தது. தன் பங்கிற்கு நிர்வாகமும் கடந்த மூன்று மாத காலமாக மண்டல நிர்வாகங்கள் மூலம் கிளைகளில் இருந்து தற்காலிக ஊழியர்கள் குறித்த தகவல்களைத் திரட்டியது. எனினும் சில மண்டல நிர்வாகங்கள் தலைமை அலுவலகத்திற்கு தகவல்கள் தருவதில் தொடர்ந்து சுணக்கம் காட்டியதால் தகவல்களை இறுதிப்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது.

தகவல்கள் கிடைக்கப்பெறாத அந்த மண்டலங்களில் ஐபிஇஏ பொறுப்பாளர்களை மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி அதிகாரிகளிடம் பேசி வேலைகளை விரைவுபடுத்தும் பணியினை சங்கம் தொடர்ந்து செய்து வந்தது. சங்கத்தின் இந்த தொடர் முயற்சியால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள அனைத்து 19 மண்டலங்களில் இருந்தும் தலைமை அலுவலகத்திற்கு தகவல்கள் கிடைத்தன. அதன் பலனாக கடந்த 21ம் தேதி அனைத்து பணிகளும் முடிந்து சுமார் 1475 தற்காலிக ஊழியர்களுக்கான போனஸ் தொகை மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மண்டல அலுவலகங்களில் இருந்து 23ம் தேதி முதல் கிளைகளுக்கு அனுப்பப்பட்டு தற்காலிக ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டு கால ஐபிஇஏ (த நா) சங்கத்தின் வரலாற்றில் இந்தியன் வங்கி ஊழியர்களின் உரிமைகள் மற்றும் பணி நிலைமைகள் சார்ந்து பல முன்னேற்றகரமான நிகழ்வுகளை எங்களது தலையீடுகளின் மூலம் ஏற்படுத்தியிருந்தாலும், கடந்த 2017 ம் வருடம் ஜூலை 21ம் தேதி தொழிலாளர் தீர்ப்பாயத்தில் தற்காலிக கடைநிலை ஊழியர்களுக்கான வழக்கில் கிடைத்த வெற்றியையே எங்களது மணிமகுடமாக கருதுகிறோம். அந்த வகையில் இப்போது போனஸ் விஷயத்தில் கிடைத்திருக்கும் இந்த வெற்றியை அந்த மணிமகுடத்தில் சூட்டப்படும் வைரக்கற்களாகவே பார்க்கிறோம்.

தற்காலிக ஊழியர்களுக்கான பணி நிரந்தரம் என்ற இறுதி இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சங்கத்திற்கு இந்த போனஸ் வெற்றி என்பது களைப்பு தெரியாமல் இன்னும் வேகமாகவும், உத்வேகத்தோடும் பயணிக்க உதவும் ஒரு உற்சாக மருந்தாக அமையும் என்றே நம்புகிறோம். பல கட்ட உண்ணாவிரதப் போராட்டங்களாலும், பொதுவெளியில் ஆர்ப்பட்டங்களாலும், சக்திமிக்க கோஷங்களாலும், நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களாலும், நிர்வாகத்தோடு நடத்திய பலகட்ட தொடர் பேச்சுவார்த்தைகளாலும் கிடைத்த வெற்றி இது. அந்த வகையில் பணி நிரந்தரம் என்ற இறுதி இலக்கை நோக்கி முன்னிலும் வேகமாக, ஆழமாக எங்களது பயணத்தை முன்னெடுப்போம். சமூக நீதியை நிலைநாட்டிடும் இந்த பயணத்தில் குரலற்றவர்களின் குரலாக என்றும் ஒலிப்போம்” என்று கூறினர்.

One comment

Comment here...