தோழர் அ. ரெங்கராஜன் (1952 – 2022) : அஞ்சலி

எஸ்.வி.வேணுகோபாலன்

இந்த ஆண்டின் தியாகிகள் தினமான ஜனவரி 19 அன்று நாம் பறிகொடுத்துவிட்டோம்  ஓர் எளிய உன்னத அன்புத் தலைவரை. இருதய சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவ மனையில் ஜனவரி 10 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட தோழர் அ ரெங்கராஜன், சிகிச்சை பலனின்றி நம்மையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்து விட்டார்.

தோழர் அ ரெங்கராஜன் ராஜபாளையத்தைச் சார்ந்தவர். சிவகாசி அய். ஜா. கல்லூரியில் தமிழ் மொழி வழியில் பட்டப் படிப்பு படிக்கையில், ஆங்கிலக் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றவர். இளங்கலை பொருளாதாரப் பிரிவில் படித்துக் கொண்டிருக்கும்போது, உலக அளவில் ஏற்பட்ட நெருக்கடியில் டாலர் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம். கல்லூரியில் அவ்வப்போது மாணவர்களை ஊக்கப்படுத்தித் திறமைகளை வெளிப்படுத்தச் செய்துவரும் பழக்கம் இருந்தது. 

அதுவரை மேடைப் பேச்சு பேசத் தயங்கிவந்த நமது தோழருக்கு, இந்தப் பொருளாதார நெருக்கடி குறித்து கல்லூரி முதல்வர் உள்ளிட்டு அமர்ந்திருந்த அவையைப் பார்த்துப் பேச வேண்டிய சோதனை வந்து சேர்ந்தது. மாணவர்கள் பேச அழைக்கப் பட்ட அன்றைய அந்த நிகழ்வுக்கு குமரி அனந்தன் அவர்களது சகோதரர் பேரா.நவநீத கிருஷ்ணன் தலைமை. அவரோ வாட்டசாட்டமானவர். நமது அன்புத் தோழரின் மெலிந்த உடல் உலக பிரசித்தம்.

‘என்னடா பேசப் போகிறோம்…’ என்று தயங்கித் தயங்கி மேடையில் ஏறுகையில் ஒரு விஷயம் பளிச்சிட்டிருக்கிறது. மேடையில் பேசத் தொடங்குகையில், என் போன்ற தலைவர் அவர்களே என்று விளித்திருக்கிறார். ஏதோ கிண்டல் செய்கிறார் என்று கொஞ்சம் கை தட்டல், சீழ்க்கை ஒலி புறப்பட்டிருக்கிறது. முதல்வர் மட்டும் சுவாரசியமற்று உம்மென்று பார்த்துக் கொண்டிருக்கிறார். 

ரெங்கராஜன் இம்முறை அந்த என்னை அழுத்திச் சொல்கிறார்,  யென் போன்ற தலைவர் அவர்களே, டாலர் வீழ்ந்து கொண்டிருக்கும் போது உலகச் சந்தையைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஜப்பானிய யென் போன்ற தலைவர் அவர்களே என்று அவர் சொன்னதுதான் தாமதம், முதல்வர் உள்பட அனைவரும் அந்தச் சொல் ஜாலத்தை ரசித்து உற்சாகக் கரவொலி எழுப்பியிருக்கின்றனர்.

பேச்சில் இம்மாதிரியான பொடி தூவி கேட்போரை ஈர்த்துச் சொல்ல வேண்டிய செய்திகளை அனைவரும் விரும்பிக் கேட்குமாறு பேசும் அவரது திறமை அதற்குப் பின் மேலும் அழகு பெற்றது.  சிக்கலான பிரச்சனைகள், நுட்பமான விஷயங்களைக் கூட சாதாரண ஊழியர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் அதைச் சொல்லும் பக்குவம் அவருக்கு வாய்த்திருந்தது.

கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு கால்நடைத் துறையில் சிறிது காலம் பணியாற்றிய தோழர் ரெங்கராஜன், பிறகு இந்தியன் வங்கி வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1974 ம் ஆண்டு அருப்புக்கோட்டை கிளையில் பணியில் சேர்ந்த அவர், பின்னர் ராஜபாளையத்திற்கு மாற்றல் பெற்றுச் சென்றார். 1975 நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது ஜனநாயக இயக்கங்கள் நாடு முழுவதும் அதற்கு எதிராகக் கிளர்ந்தன. அதை ஒடுக்குவதற்கு முக்கிய தலைவர்களைச் சிறையிலடைத்தது காங்கிரஸ் ஆட்சி. எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிரான உணர்வு நிலையில் திரண்ட மத்திய தர ஊழியர்கள் வரிசையில் முக்கிய இடத்தில் இருந்தார் ஏ ஆர் ஆர்.

மூன்றாம் இருதரப்புக்கான போராட்ட காலத்தில் கிளியரிங் வேலைகள் முடக்கம் என்பது சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் மட்டுமே சாத்தியமாயிருந்த போராட்டம். ராஜபாளையம் நகரில் அதை நடத்திக் காட்டினார் தோழர் ரெங்கராஜன். நகர வங்கி ஊழியர் அமைப்பின் செயலாளராக இயங்கினார். இப்போது அவருக்கு உற்ற தோழனாக அப்போதைய தஞ்சாவூர் வங்கி ஊழியர் சீ பாலசுந்தரம் (CB) வாய்த்தார்.

இப்போது அவருக்கும், தோழர் சி பி அவர்களுக்குமான தோழமையில் இடதுசாரி அரசியல் திசையும் பிடிபட்டிருந்தது. உண்மைக்கான தேடலில் அவர் தெளிவான பாதையை அடைந்துவிட்டிருந்தார்.

உதயமானது புதிய சங்கம் 

மார்ச் 6, 1983 அன்று சென்னையில் நடைபெற்றது இந்தியன் வங்கி ஊழியர் சிறப்பு மாநாடு, முறையாக ஒரு தொழிற்சங்க மாநாடு எப்படி நடைபெறுமோ அதன் அத்தனை அம்சங்களோடு நடத்தப் பட்டதில், அழகுக் கையெழுத்தில் “காடு மலைகளைக் கடந்து வந்தோம்….” என்று கவிதை வரிகளோடு தொடங்கிய அறிக்கையும், தீர்மானங்களும் வடிவமைக்கப்பட்டு விவாதத்திற்கு முன் வைக்கப்பட்டதில் தோழர் அ ரெங்கராஜனின் உழைப்பு பெரும் பாராட்டுக்குரியது. அன்றைய நாளில் அங்கே உதயமான புதிய சங்கத்தின் கம்பீர பயணத்தின் அடுத்தடுத்த மைல் கற்களில் அவரைப் போன்ற தோழர்கள் பலரது தியாகம் ததும்பிக் கொண்டிருக்கிறது. இந்தியன் வங்கி ஊழியர் அச்சோசியேஷன் உதயமானது. அது இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அங்கமாக இன்று வரை பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

சம்மேளனத்தின் பணிக்கு பரிணமித்த தருணம் 

1990 ஆகஸ்ட் 15 அன்று சென்னையில் நடைபெற்ற இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழக அமைப்பின் மாநாட்டில் மாநில பொதுச் செயலாளராக தோழர் அ. ரெங்கராஜன் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் பெரும் பொறுப்பு அவரது ஆற்றல்களை மேலும் முழுமையாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற களமாக விளங்கியது. மாநில சம்மேளனமும் புது மெருகு பெற்றது. வங்கி ஊழியர் இயக்கத்தில் பன்மடங்கு அதிகமாக BEFIயின் குரல் மக்களிடம் சென்று சேரத் தொடங்கிய காலம் அது. அந்தக் கூட்டு உழைப்பில், அடுத்தடுத்து சம்மேளனத்தோடு பல்வேறு வங்கிகளின் சங்கங்களை இணைப்பதில் தோழர் ரெங்கராஜனின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 

கருத்து வேறுபாடுகளைக் கடந்து வங்கி ஊழியர் சங்கங்களிடையே பொது மேடை உருவாக்குவதில் அவரது அணுகுமுறை, தோழமை உறவு பெரிதும் துணை நின்றது. அனைத்துச் சங்க மேடைகளில் ஆங்கிலமே பொது மொழியாக பெரு வாரியான தோழர்கள் புரிந்து கொள்ள சிரமப்படும் தளத்தில் ஒலித்துக் கொண்டிருந்த போது, தமிழில் முழங்கிய அவரது குரல் சங்க வித்தியசங்கள்  கடந்தும் எல்லோரையும் ஈர்த்தது. நேரடியாக செய்தியைச் சொல்வது, பொருள் பொதிந்த புதுக் கவிதை வாசகங்களை மேற்கோள் காட்டுவது, அரசியல் பின்னணியை ஊழியர்களுக்குப் புரியும் வண்ணம் பளிச்சென்று எடுத்து வைப்பது, ஆவேசமாக முடிப்பது என்பதான அவரது பேச்சுமுறை அனைவரையும் ஈர்த்தது.

மாநில சம்மேளனத்தை வளர்ப்பதில், உறுப்புச் சங்கங்களுக்கு ஆலோசனை வழங்குவதில், அவர்களது இயக்கங்கள், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் உடன் சென்று நிற்பதில், தேவையான வழிகாட்டுதலை நல்குவதில் அவரது தொடர் பங்களிப்பு குறிப்பிடப்பட வேண்டியது. வங்கி அரங்கைக் கடந்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்,  மத்திய மாநில அரசு ஊழியர் சங்கங்கள்,  இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகள் ஆகியவற்றோடு இணக்கமான முறையில் கூட்டியக்கங்கள் வளர்ந்தன. 

சென்னையில் எந்தத் தரப்பு ஊழியர் அமைப்பு போராடிக் கொண்டிருந்தாலும், அறிவார்ந்த கருத்தரங்கம் ஒன்று நடத்திக் கொண்டிருந்தாலும் அந்த மேடையில் ஒலிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு கேட்கப்பட்ட குரல்களில் ஒன்றாக இருந்தது ரெங்கராஜனின் குரல். அதற்கு அவரது இளமைக்காலத்தில் தொடங்கிய வாசிப்பு, பின்னர் இடதுசாரி அரசியல் ஈர்ப்பினால் வளர்த்துக் கொண்ட ஆழ்ந்த புத்தக வாசிப்பு, அபார நினைவாற்றல், திறந்த மனத்துடன் எதையும் அணுகும் பக்குவம், பதவி-அனுபவம்-வயது வித்தியாசம் பாராது யாரிடமிருந்தும் புதிய அம்சங்களைக் கற்றுக் கொள்ளத் தயாராயிருக்கும் அவரது பண்பாக்கம், இந்தியன் வங்கி தொழிற்சங்க இயக்கத்தில் அவருடன் பணியாற்றிய தோழமை இதயங்களிடமிருந்து கிடைத்த நேயம்…உள்ளிட்டவை காரணிகளாக இருந்தன.

பிரச்சாரப் பயணங்கள் 

பத்தொன்பது ஆண்டுக்காலம் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக் தொடர்ந்து ஆறு மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு இயங்கிய அவரது செயல்பாட்டின் முக்கிய வெளிப்பாடு, 1998 மற்றும் 2001 ஆண்டுகளில் தமிழகம் முழுமையும் அசாத்தியமான முறையில் சம்மேளனம் நடத்திய பிரச்சாரப் பயணங்கள் ஆகும். வாராக்கடன் குறித்த பெரும் விழிப்புணர்வை, பெருமுதலாளிகள் அடிக்கும் கொள்ளையை, அவர்களுக்கு சாதகமான அரசு கொள்கைகளை ஊர் ஊராக, சிற்றூர்கள் உள்ளிட்டு வங்கி ஊழியர்கள் பிரச்சாரப் படுத்தி அம்பலப்படுத்தியது மிகப் பெரும் சாதனையாகும். 

ஜூலை 19 வங்கிகள் நாட்டுடமையாக்கப் பட்ட நாளை அனுசரிப்பதில் விதவிதமான வடிவங்களை மாநில சம்மேளனம் கையிலெடுத்தது. வாடிக்கையாளர் சந்திப்பை நடத்தியது ஹிண்டு நாளேட்டில் பெரிய கவனத்தை ஈர்க்கும் அளவு இடம் பெற்றது. அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கம் உள்ளிட்டு, தேசம் தழுவிய அளவில் பல முக்கிய இயக்கங்கள் எதிலும் BEFI-TN இடம் பெறாத எந்த இயக்கமும் நடந்ததில்லை என்று சொல்லும் அளவு பரந்து விரிந்த மேடைகளிலும் கூட்டாக இயங்கியதில் அவரது தனித்துவமான பங்கிருந்தது.

பெண் ஊழியர் துணைக்குழு உருவாக்கம், மகளிர் தினக் கொண்டாட்டம் இவற்றில் சிறப்பு முன்னுரிமை உண்டு. தற்காலிக ஊழியர்களை அணி திரட்டுவதிலும் கூட்டுறவு கிராம வங்கி ஊழியர் இயக்கங்களோடு நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதிலும் அவரது பாங்கு உயர்வானது.  

எந்த வயதினரும் சூழ்ந்து மொய்க்கும் அன்பின் ஊற்றாக இருந்தது அவரது தனித்துவமிக்க இயல்பு. இளைஞர்களை ஈர்த்தது அவரது மொழி. இசை, திரைப்படம், விளையாட்டு, அரசியல், சமூகம், பொருளாதாரம், வரலாறு என்று எந்தப் பொருளின் மீதும் ஞானத்தோடு பேசக்கூடியவர் அவர்.

இந்தியன் வங்கியில் IBEF என்ற அகில இந்திய சம்மேளனம் 1986ல் அமைக்கப்பட்டபோது அதன் உதவிப் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  ரெங்கராஜன் பின்னர் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டார். குறிப்பாக இந்தியன் வங்கி 1996 ல் வரலாறு காணாத நஷ்டத்தைச் சந்தித்தபோது மத்திய அரசும், நிர்வாகமும் ஊழியர்கள் தலையும் எம்ஓயு என்ற பெயரில் உரிமைகள் மறுப்பைத் திணிக்க முற்பட்டபோது அதற்கு எதிராகப் போராடியது IBEF.  மாற்று எம்.ஓ.யு விவாதித்துத் தயாரித்தபோது அதை வடிவமைப்பதில் அவரது அறிவாற்றல், மொழி ஆளுமை கச்சிதமான முறையில் இறுதி வடிவம் பெறுவதில் உதவியது. 

BEFI அகில இந்திய அமைப்பிலும் ரெங்கராஜன் பங்களிப்பு முக்கியமானது. இருதரப்பு ஒப்பந்த பேச்சு வார்த்தை தயாரிப்பில், கோரிக்கை வடிவமைப்பதில், குறிப்பாக பென்ஷன் மூன்றாவது பலனுக்கான போராட்டத்தில், பிரச்சாரத்தில், அவரது பங்களிப்பு காத்திரமானது. அகில இந்திய மத்திய குழு உறுப்பினராக அவர் சிறப்பாக இயங்கியவர். 

Bank Workers’ Unity க்கு தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவது மட்டுமல்ல, அதனை வடிவமைப்பதில், உள்ளடக்கத்தை செழுமைப்படுத்துவதில் தோழர் ரெங்கராஜனின் பங்கு அபாரமானது. பல்லாண்டுகள் அதன் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், அந்த பத்திரிக்கையை வங்கி ஊழியர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார் அவர்.

தோழர் ரெங்கராஜனின் மறைவு தொழிற்சங்க இயக்கத்திற்கும், வங்கி ஊழியர் இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.

Comment here...