எஸ். கண்ணன்
அரசுகளின் தாக்குதல்கள், முதலாளித்துவத்தின் லாப வெறிக்காக முன் வைக்கும் தனியார்மயம் மற்றும் தாராளவாத கொள்கை, ஆகியவற்றை எதிர் கொள்ளும் களப் போராட்டங்களின் அனுபவங்கள் போன்றவற்றை மதிப்பீடு செய்யவும், வர்க்க ஒற்றுமை மற்றும் சங்க வலிமையை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவும் ஒரு சுய பரிசோதனை தேவைப்படுகிறது. அதை இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு) மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, மாநாடு நடத்தி செய்து வருகிறது. 2023 ஜனவரி 18 முதல் 22 வரை பெங்களூரு மாநகரில் நடந்த 17வது மாநாடு அந்த சுய பரிசோதனையை திறம்பட மேற்கொண்டதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான எதிர்கால கடமைகளையும் வரையறை செய்துள்ளது.
சர்வதேச பார்வையும், ஒன்றுபட்ட போராட்டமும்:
சி.ஐ.டி.யு உலக தொழிற்சங்க கூட்டமைப்பு (WFTU) அமைப்பில் அங்கம் வகிக்கிறது. அதிக உறுப்பினர்களைக் கொண்ட சங்கங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. மாநாட்டை வாழ்த்தி உலக தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பாம்பிஸ் கிரித்சிஸ் பேசினார். ”அமெரிக்கா உலகில் ஏராளமான நாடுகளை ஆக்கிரமித்து செல்வ வளத்தை சூறையாடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளது. ஆனால் ரஷ்ய-உக்ரைன் போரில், தன்னை ஒரு சமாதானப் புறாவைப் போல் முன்னுறுத்தி, செயல்பட்டு வருகிறது. உலக சமாதானம் என்பது பொருளாதாரத் தடைகளாலோ, மருத்துவ உபகரணங்களை விநியோகிக்க முடியாது என்பதாலோ, ஏற்படுத்த முடியாது. ஏனென்றால் இது பொருளாதாரத்தை மையப் படுத்திய யுத்தமாகும். அதேநேரம் உலகம் முழுவதும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு கடுமையாக உள்ளது. மற்றொரு புறம் தொழிலாளர்கள் சந்திக்கும் துயரங்கள் அதிகரிப்பும், அதை எதிர்த்த போராட்டங்களின் அதிகரிப்பும் காணமுடிகிறது” எனக் குறிப்பிட்டார். எனவே உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையின் அவசியத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மாநாட்டை வாழ்த்தி மத்தியத் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், ஏ.ஐ.யு.டி.யு.சி, டி.யு.சி.சி, ஏ.ஐ.சி.சி.டி.யு, சேவா, எல்.பி.எப், யு.டி.யு.சி ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், குறைந்த பட்ச மாத ஊதியத்தை உயர்த்தும் சட்டம் இயற்றுவது குறித்தும், தொடர வேண்டிய, ஒன்று பட்ட போராட்டங்கள் குறித்தும் உரையாற்றினர். அதேபோல் இந்த மாநாட்டில், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம், பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம், மாநில அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, மத்திய அரசு ஊழியர்களின் சம்மேளனம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்களும் தங்களின் கருத்துக்களை மாநாட்டில், சகோதரப் பிரதிநிதிகளாக தெரிவித்தனர். அவர்களின் பேச்சு ஒவ்வொரு தொழிற்சங்கமும் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் பிரச்சனைகள், தனித்த போராட்டங்கள் ஆகியவற்றுடன், கூட்டான ஒன்றுபட்ட போராட்டங்களின் அவசியத்தை தொழிற்சங்கங்கள் உணர்த்துவதாக இருந்தது.
இதற்கும் மேலாக தொழிற்சங்கங்களுக்கு இடையேயான ஒற்றுமையுடன் இதர சமூக அமைப்புகளுடனான ஒற்றுமையையும் கட்டமைக்க வேண்டிய தேவையை சி.ஐ.டி.யு தொடர்ந்து வலியுறுத்துகிறது. குறிப்பாக விவசாயி, விவசாய தொழிலாளி, மாதர், வாலிபர் மற்றும் மாணவர் அமைப்புகளுடனும் சில கோரிக்கைகள் மீது ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. தொழிற்சங்கங்களின் கூட்டான வேலை நிறுத்த போராட்டங்களை ஆதரித்த சமூக போராட்டங்களும் தேவைப்படுகிறது. அதேபோல் சமூக கோரிக்கைகள் மீது தொழிற்சங்கங்களும் வினையாற்ற வேண்டிய அவசியம் அதிகரித்து இருக்கிறது. இந்த உணர்தல் காரணமாக, சி.ஐ.டி.யு மாநாட்டை வாழ்த்தி, அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ. விஜயராகவன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீமதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர், ஏ.ஏ. ரஹீம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் வி.பி.ஷானு ஆகியோர் பங்கெடுத்து வாழ்த்தி பேசினர்.
இந்த ஒற்றுமையை 2020 நவம்பர் 26 அன்று தொழிலாளர்கள் துவங்கிய வேலைநிறுத்தம் மற்றும் விவசாயிகளின் டில்லி முற்றுகை போராட்டத்தில் காணமுடிந்தது. ஓராண்டு காலம் நீடித்த விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் மிகப் பெரிய வரலாற்றை நிகழ்த்தியது. எனவே சி.ஐ.டி.யு மாநாடு அரசியல் கடந்த, மதம், சாதி, இன, மொழி மற்றும் பாலின வேறுபாடுகளைக் கடந்த ஒற்றுமை உணர்வினையும், வர்க்க ஒற்றுமையின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. அதன் மூலமே தொழிலாளி வர்க்கத்தின் மீதான கொள்கைத் தாக்குதல்களை முறியடிக்க முடியும் என்பதே அதன் அடிப்படை புரிதலாகும்.
புதிய சவால்களை எதிர் கொள்வதற்கான ஆய்வு:
முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறை பெரும் வளர்ச்சியை பெற்று வருகிறது. அதன் மூலமான லாப குவிப்பு மூலதனத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் குதூகலத்தை வழங்கி வருகிறது. இந்த மாற்றங்கள் தொழிலாளி – முதலாளி உறவை மறுகட்டமைப்பு செய்துள்ளது. ஒருபுறம் மூலதனம், தொழிலாளர் சந்தையையும், நுகர்வு சந்தையையும் குறி வைத்து பயணிக்கிறது. மற்றொருபுறம் சமமான, சீரான வளர்ச்சியின்மை காரணமாக புலம்பெயர்தல் அதிகரித்து, கணிசமான தொழிலாளி வர்க்கம் மூலதன குவி மையங்களை நோக்கி பயணிக்கிறது. எப்படியாகினும், சிலந்தி கட்டி வைத்த வலையில் விழும் பூச்சிகளாக தொழிலாளி வர்க்கம் மூலதன வலைக்குள் சிக்கி கொண்டு கொடுமையான சுரண்டலுக்கு ஆட்படுவது அதிகரித்து வருகிறது. ஆம் சுரண்டல் அதிகரிக்கிறது என்பதை உணர்ந்து அதிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள தொழிலாளி வர்க்கம் போராடுகிற அதேவேளையில் ஒரு பெரும் பிரிவு இது தனது தலைவிதி என்று நொந்து, அதற்கான தீர்வை தனது சடங்கு சம்பிரதாயங்களில் தேடிக் கொண்டிருக்கிறது. இந்த சிக்கலான உளவியல் பிரச்சனைகளை வகுப்பு வாதம் பயன்படுத்திக் கொள்கிறது.
தாராளவாதத்தை ஆதரிக்கும் அரசியல் சூழல், உலகமயமாகும் மூலதன வளர்ச்சி, உலகம் முழுவதும் உள்ள வளங்களை பன்னாட்ட்டு நிறுவனங்கள் கைப் பற்றும் தீவிரம், இதற்கு உடந்தையாக தொழில்நுட்ப வளர்ச்சி, ரோபோ, டிஜிட்டல், தொழில் வளர்ச்சி 4.0 போன்ற நாமகரணங்கள் மீதான மாயை ஆகியவற்றை எதிர் கொள்ள தொழிலாளி வர்க்க ஒற்றுமை மட்டுமே ஆயுதமாக உள்ளது. ஆனால் மூலதனம் அந்த ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் வகையில் பண்பாட்டு ஆயுதங்களையும், அதன் பெருமிதங்களையும் முன்னுறுத்தி, ஒன்றுபடும் தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தி தன்னை மேம்படுத்திக் கொள்கிறது என்பதை சி.ஐ.டி.யு தொடர்ந்து சுட்டிக் காட்டுகிறது.
இத்தகைய சவால்களை எதிர் கொள்ளும் வகையில் பொதுவான அமைப்பு அறிக்கை மீதான விவாதம் விரிவாக நடைபெற்றது. 16 பெண்கள் உள்ளிட்டு, 98 பிரதிநிதிகள் பங்கேற்று 1500 பிரதிநிதிகளின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அதேநேரம் புலம் பெயர் தொழிலாளர் குறித்தும் அவர்களைத் திரட்டுவது குறித்தும், பொருள் உற்பத்தி முறையில் வளர்ந்து வரும் மாற்றங்கள் குறித்தும், முதலாளி – தொழிலாளி உறவு முறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், வகுப்புவாத அபாயத்தை எதிர் கொள்வது குறித்தும் தனித்தனி ஆய்வறிக்கைகள் முன் மொழியப்பட்டு விவாதிக்கப் பட்டது. இதன் மீது 223 பிரதிநிதிகள் விவாதித்தனர்.
மேற்படி செய்முறைகளால், பங்கெடுத்த பிரதிநிதிகள் கூடுதலாக விவாதங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது. இது களத்திலும் பிரதிபலிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதை மிக முக்கிய கடமையாக சி.ஐ.டியு மாநாடு ஏற்றுக் கொண்டுள்ளது.
புதிய நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு தேர்வுகள்:
அடுத்த மாநாடு வரையான புதிய தலைமை தேர்வு செய்யப்பட்டது. டாக்டர். கே. ஹேமலதா தலைவராகவும், தோழர் தபன்சென் பொதுச் செயலாளராகவும், தோழர் எம்.சாய்பாபு பொருளாளராகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து 36 பேர் கொண்ட துணை நிர்வாகிகளும் ஏகமனதாக தேர்வாகினர். 39பேர் கொண்ட செயற்குழுவில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ்நாட்டில் இருந்து தோழர்கள் ஏ.கே.பத்மனாபன், அ. சவுந்தரராஜன், ஜி. சுகுமாறன், மாலதி சிட்டிபாபு மற்றும் ஆர். கருமலையான் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழுவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.