அதானிதான் இந்தியாவா?

சி.பி.கிருஷ்ணன்

”இது ஏதோ ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டுமல்ல; இது இந்தியாவின் மீது, இந்திய நாட்டின் சுதந்திரத்தின் மீது, அதன் ஒற்றுமை மீது …..தொடுக்கப்படும் திட்டமிட்ட தாக்குதலாகும்” என்று அறிக்கை விடுகிறார் கெளதம் அதானி. அதாவது ஹிண்டென்பர்க் ஆய்வறிக்கை இந்தியாவை குறி வைத்து தொடுக்கப்படும் தாக்குதல் என்கிறார். எப்போதெல்லாம் முதலாளிகளுக்கு ஆபத்து வருகிறதோ அப்போது அவர்கள் வெவ்வேறு வகையில் அதனை திசை திருப்ப முயல்வார்கள். ”எங்கள் தொழில் நசிந்தால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்பதுதான் அவர்களின் வழக்கமான தற்காப்பு அல்லது திசை திருப்பல். ஆனால் அதானி எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய் இது இந்தியாவின் மீதான தாக்குதல் என்கிறார்.

”இது இந்தியாவின் மீதான தாக்குதல் இல்லை அதானி; இது உங்கள் மீதான தாக்குதல் மட்டுமே; நீங்கள் பொய்யாக ஊதிப் பெருக்கி வைத்த பங்குகளின் விலை பலூனில் ஊசி குத்தினால் காற்றிறங்குவது போல் புஸ் என்று இறங்குகிறது” என்று பதில் கூறி விட்டது பங்குச் சந்தை.

ஹிண்டென்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு 129 பக்க அறிக்கையாக 2023 ஜனவரி 24 ஆம் தேதி வெளி வந்துள்ளது. அதில்

 • நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக 6 நாடுகளுக்கு நேரடியாக சென்று, ஆயிரக்கணக்கான ஆவணங்களை ஆராய்ந்து, அதானி குழுமத்தின் முன்னாள் பொறுப்பாளர்கள் பலருடன் உரையாடி உறுதி செய்து கொண்ட பிறகுதான் இந்த அறிக்கையை வைக்கிறோம்.
 • அதானி குழுமம் பல ஆண்டுகளாக மோசடி கணக்கு காட்டி, தங்களின் பங்குகளை செயற்கையாக விலை உயர்த்தி காட்டியுள்ளன.
 • அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்கள் – அதானி என்டர்ப்ரைஸஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி டோடல் கேஸ், அதானி க்ரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி வில்மார் – மூலம் தனது பங்கு மதிப்புகளை கடந்த மூன்று ஆண்டுகளில் மோசடியாக 819% உயர்த்திக் காட்டியதன் மூலம் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு இந்த குறுகிய காலகட்டத்தில் ரூ.1,62,000 கோடியிலிருந்து  ரூ.9,72,000 கோடியாக 6 மடங்கு உயர்ந்து விட்டது.
 • அதானி குழுமத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் 22 பேரில் 8 பேர் கெளதம் அதானியின் குடும்ப உறுப்பினர்கள்.
 • கெளதம் அதானியின் இளைய சகோதரர் ராஜேஷ் அதானி வைர வியாபாரத்தில் வரி ஊழல், கையெழுத்து மோசடி போன்ற குற்றங்களுக்காக 2004-2005 ஆண்டுகளில் குறைந்தது இரு முறை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பின்னாளில் அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்படுகிறார்.
 • கெளதம் அதானியின் மைத்துனர் சமீர் வோரா இதே வைர வியாபார ஊழலில் ஈடுபட்டதாகவும், மீண்டும், மீண்டும் பல முறை கண்காணிப்பாளர்களுக்கு தவறான கணக்கு சமர்ப்பித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர். இவர் பின்னாளில் அதானி குழுமத்தின் ஆஸ்திரேலியா பிரிவிற்கு செயல் இயக்குநராக பதவி உயர்வு பெறுகிறார்.
 • கெளதம் அதானியின் மூத்த சகோதரார் வினோத் அதானி மொரிஷியஸ் நாட்டில் மட்டும் 38 போலி கம்பெனிகளை சொந்தமாகவோ, நெருக்கமானவர்கள் மூலமாகவோ கையாள்கிறார். இவ்வாறு சைப்ரஸ், யுனைடெட் அராப் எமிரேட்ஸ், சிங்கப்பூர், கரீபியன் தீவுகள் இப்படி பல நாடுகளில் போலி கம்பெனிகளை ரகசியமாக வினோத் அதானி நிர்வகிக்கிறார் என்று எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது.
 • வினோத் அதானி இந்த கம்பெனிகள் மூலம் அதானி குழுமத்தின் பங்குகளை செயற்கையாக ஊதிப் பெருக்குவது, அதானியின் தனியார் கம்பெனிகளிலிருந்து, பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள பொதுக் கம்பெனிகளுக்கு பணத்தை செலுத்தி இவை ஆரோக்யமாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இப்படி அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைக்கிறது ஹிண்டென்பர்கின் ஆய்வறிக்கை. அது மேலும்

 • அதானியை விமர்சனம் செய்யத் துணியும் பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் பலர் பல்வேறு வழக்குகள் மூலம் மவுனமாக்கப்பட்டுள்ளனர்;. எனவே அவருக்கு எதிராக முதலீட்டாளர்களோ, பத்திரிக்கையாளர்களோ, பொதுமக்களோ ஏன் அரசியல் வாதிகளோ கூட பேசுவதற்கு பயப்படுகிறார்கள். அதன் காரணமாகவே அவரால் பட்டப் பகலில் எந்த சட்டதிட்டத்தையும் மதிக்காமல் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட முடிகிறது.
 • இந்த ஆய்வறிக்கையின் முடிவில் நாங்கள் 88 கேள்விகளை கேட்டுள்ளோம். அதானி ”தான் வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதாக” கூறி வருகிறார். அப்படியானால் இந்தக் கேள்விகள் அவருக்கு எளிமையான கேள்விகள்தான். அவரின் பதிலை எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம்.

என்று கூறுகிறது.

இதற்கு அதானி குழுமம் ஜனவரி 29 ஆம் நாள் 413 பக்க மறுப்பறிக்கை கொடுத்துள்ளது.

 • ஹிண்டென்பர்க் நிறுவனத்தின் அறிக்கை ஆதாரமற்றது, தவறான தகவல்களை கொண்டுள்ளது, உள் நோக்கம் கொண்டது, பொய்யானது.
 • 88 கேள்விகளில் 65 கேள்விகளுக்கான பதில் அதானி கம்பெனிகளின் ஆண்டறிக்கைகளில் உள்ளன. 18 கேள்விகள் எங்களைப் பற்றி அல்ல; எங்கள் பங்குதாரர்களைப் பற்றியும் மூன்றாவது நபர்கள் பற்றியும் உள்ளன. 5 கேள்விகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்.

என்று பொதுவாக அதானி குழுமத்தின் மறுப்பறிக்கை கூறுகிறது. ஆனால்

அதானியின் பங்குகள் செங்குத்தாக சரிந்து கொண்டே வருகிறது. அதன் மொத்த சந்தை மதிப்பு பாதிக்கும் கீழே சரிந்து விட்டது. இது ஹிண்டென்பர்க் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்பதையும் அதானியின் மறுப்பறிக்கையில் உண்மை இல்லை என்பதையும் காட்டுகிறது.

அதானி குழுமத்தின் முதலீடு பற்றி கேள்வி எழுப்பியதற்காக “த வயர்” என்ற ஆங்கில மின்னிதழ் மீது அதானி குழுமத்தால் 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுக்கப்பட்டது; அதே போல் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது. இது ஹிண்டென்பர்க் வைக்கும் இத்தகைய குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்பதையே காட்டுகிறது.

நம்பிக்கை இழப்பு

அதானி குழுமத்தின் மீது சர்வதேச அளவில் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஸ்விட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட முதலீட்டு வங்கி க்ரெடிட் சூய்ஸ் அதானி குழுமத்தின் பத்திரங்களை அடமானம் வைத்துக் கொண்டு கடன் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல சர்வதேச நிறுவனங்கள் இத்தகைய முடிவை எடுத்துள்ளன.

அதானி குழுமத்தில் எல்ஐசி கணிசமாக முதலீடு செய்துள்ளது; ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகள் பெருந்தொகை கடனாக கொடுத்துள்ளன. இந்த வீழ்ச்சியினால் அவை பாதிக்கப்படக்கூடாது.

மேலும் சாதாரண பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை காப்பாற்ற செபி என்ன செய்கிறது? ஒன்றிய அரசு என்ன செய்கிறது? என்று உச்ச நீதிமன்றம் கேட்கிறது. பல பங்குச் சந்தை ஊழல்களை நாடு கண்டுள்ளது. அப்போதெல்லாம் செபி என்ன செய்து கொண்டிருந்தது என்பது விடை தெரியாத கேள்வி. சமீபத்தில் நடைபெற்ற சித்ரா ராமகிருஷ்ணா ஊழல் பற்றி எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால் பாதிக்கப்பட்ட சாதாரண முதலீட்டாளர்களுக்கு எந்தவிதமான நஷ்ட ஈடும் கொடுக்கப்படவில்லை. இப்போதும் சாதாரண பங்குதாரர்கள் பாதிக்கப்படும் போது செபி என்ன செய்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு

எதிர்கட்சிகள் இந்த ஊழல் குற்றச்சாட்டைப் பற்றி தீவிர விசாரணையும், நடவடிக்கையும் வேண்டும் என்று ஒரே குரலாக கோருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே ஹிண்டென்பர்க் அறிக்கை வைத்துள்ள குற்றச்சாட்டை பற்றி உச்ச நீதி மன்றத்தின் கண்காணிப்பில். உயர் மட்ட குழு ஒன்று அமைத்து, விசாரித்து உண்மை கண்டறியப்பட வேண்டும். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுவே இந்தப் பிரச்சனைக்கு உண்மையான தீர்வாக அமையும்.

Comment here...