டி.ரவிக்குமார்
பல நாடுகளைப் பிடித்து, வளங்களை சூறையாடி தங்கள் வளங்களை பெருக்கி வந்த பிரிட்டிஷ் ஏகாதியபத்தின் அசுர பசிக்கு எதிராக திரண்ட இந்திய மக்களின் சுதந்திர போராட்ட சரித்திரத்தில் தடம் பதித்த நாள் 1942, ஆகஸ்ட் 9 ல் துவக்கப்பட்ட ‘”வெள்ளையனே வெளியேறு போராட்டம்”.
தொழிற்சங்கங்களின் பிரகடனம்
அதே ஆகஸ்ட் 9 ’வெள்ளையனே வெளியேறு‘ போராட்ட நாளன்று நாடெங்கும் கோடிக்கணக்கான மக்களைத் திரட்டி மகத்தான மக்கள் இயக்கம் நடத்த அறைகூவல் விடுத்துள்ளது மத்தியத் தொழிற் சம்மேளனங்கள், மற்றும் துறைவாரி சம்மேளனங்களின் கூட்டு மேடை.
முறைசார் தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், சேவைத்துறை, , கட்டுமானத்துறை, ஆடை நெய்தல், சுமை தூக்குதல், ஆலைத் தொழில், சுரங்கம் , கனிமம், விவசாயம், மீன்பிடி, எண்ணை சுத்திகரிப்பு, வங்கி, இன்சூரன்ஸ், மத்திய அரசு, மாநில அரசு, பாதுகாப்பு, வான், கடல், தரை வழி போக்குவரத்து, துறைமுகம், சுகாதாரம், கல்வி, நிரந்தர ஊழியர், தற்காலிக ஊழியர், காண்ட்ராக்ட் தொழிலாளி என்று அனைத்துத் துறைகளிலும் கோடிக்கணக்கான தொழிலாளர்களை பிரதிநித்துவக் கூடிய மத்திய தொழிற் சங்கங்களும், சம்மேளனங்களும், காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 – தியாகிகள் தினத்தன்று – புதுடெல்லியில், பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் முன்னிலையில் 2023 மார்ச்சு மாதம் துவங்கி ஆறு மாதங்கள் நாடெங்கும் பல்வேறு பிரச்சார இயக்கங்கள் நடத்தி நிறைவாக ஆகஸ்டு9, 2023 அன்று மாபெரும் மக்கள் இயக்கம் நடத்த கூட்டுப் பிரகடனம் வெளியிட்டுள்ளார்கள்.
நாட்டு மக்கள் கடும் துயரத்தில்
மத்தியில் பிஜேபி ஆட்சி அமைந்த பிறகு அவர்கள் கடைபிடிக்கும் கொள்கைகளினால், நாட்டின் தொழிலாளர்களும், சாதாரண மக்களும் சந்திக்கும் மோசமான நிலைமைகளை, இந்தக் கூட்டு மேடை விரிவாக விவாதித்தது.
ஒன்றிய அரசின் இந்த மோசமான கொள்கைகள் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் எதிரானது ஆகும். கடந்த எட்டு வருட ஆட்சி நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கடுமையான தாக்குதல்களை தொடுப்பதாகவும் அவர்களின் அடிப்படைச் சுதந்திரத்தையே பறிப்பதாகவும் அமைந்து அவர்களை நினைத்துப் பார்க்க முடியாத அளவு, துன்பங்களையும், துயரங்களையும், பாதிப்புகளையும் எதிர்கொள்ள வைத்துள்ளது. வேலை இழப்புகளும், வேலை இன்மையும் மக்களின் பாதிப்புகளை இன்னும் கடுமையாக்குவது மட்டுமல்லாமல் பட்டினி குறியீட்டினையும் உயர்த்தி உள்ளது. கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றிற்கான திட்ட ஒதுக்கீடுகளும், மானியங்களும் கடுமையாக வெட்டப்படுகின்றன. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயனீட்டாளர்களின் அளவையும், ஒதுக்கீடுகளையும் அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் இவை குறைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. ஒதுக்கீடு செய்யும் தொகையும் முழுமையாக செலவிடப்படுவதில்லை.
கோரிக்கைகள்
நாட்டு மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்துள்ளது இந்த கூட்டு மேடை.
பொதுத்துறைகள் பாதுகாக்கப்பட வேண்டும்
அனைவருக்குமான கல்வி
தற்காலிக மற்றும் காண்ட்ராக்ட் பணிகளை கைவிடுதல்
தற்காலிக, காண்ட்ரக்ட் ஊழியர்கள் பணி நிரந்தரம்
சமூக பாதுகாப்பு மற்றும் பென்சன் திட்டங்கள்
அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் குறைத்தல்
போன்ற பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து பல இயக்கங்களை நடத்தி இருந்தாலும் இந்த அரசாங்கம் இந்த கோரிக்கைகளை உதாசீனம் செய்யும் போக்கையே கடைபிடித்து வருகின்றது.
அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டு மேடை இதுவரை கிடைக்கபெற்ற அனுபவத்தினால், போராடங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தின் அடிப்படையில், 2023 மார்சு மாதம் துவங்கி ஆறு மாதங்களுக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரச்சார இயக்கம் நடத்த முடிவெடுத்துள்ளது.
9 ஆகஸ்ட் 2023 ‘வெள்ளையனே வெளியேறு” இயக்க நினைவு தினத்தன்று மாபெரும் மக்களியக்கத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. அதனை வெற்றிகரமாக்குவது வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடமை.