ஆசானாகத் திகழ்ந்த அன்புத் தலைவர் உ.ரா.வரதராசன்

எஸ்.வி.வேணுகோபாலன் 

அன்று காலை அவரோடு பேசி இருந்தேன். ஆனால் அவருக்கான அழைப்பு அல்ல அது. அவரது எண்ணும் அன்று அழைத்தது. தீக்கதிர் ஆசிரியர் குழு தோழர் குமரேசன் கேட்டிருந்த கட்டுரை தொடர்பான அழைப்பு, அங்கே அவரிருந்து எடுத்து, அவருக்கே உரித்தான அந்தக் கம்பீரக் குரலில், “வணக்கம்…தீக்கதிர்” என்றார். பேரின்ப அதிர்ச்சியோடு, “நீங்களா தோழர்…எப்படி இருக்கீங்க?” என்றேன். மறுநாள் இல்லாது போயிருந்தார் அவர். 

எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் எப்போதும் எல்லோராலும் நேசிக்கப் படுபவர்களாக இருப்பர். 1987இல் வேலூரில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில மாநாட்டு மேடையில் இருக்கும்போதே, சி ஐ டி யு தமிழ் மாநிலக் குழுவிற்காக ஆங்கில அறிக்கை ஒன்றை வேகமாகத் தமிழ்ப்படுத்திக் கொண்டிருந்தார். மாவட்ட இயக்கத் தோழர் ஒருவரை உணவு இடைவேளையின்போது அழைத்து பத்திரிகை செய்தி அனுப்பி விடுங்கள் என்று காகிதங்கள் கொடுத்து அனுப்புகையில் அவரைக் கேட்டேன், ”இதை எப்போது எழுதினீர்கள்” என்று, புன்னகைத்தவாறே தோளில் தட்டிவிட்டு நகர்ந்தார். 

BEFI அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த தோழர் அசீஸ் சென் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தினுள் பாராட்டுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. AIIEA தலைவர் தோழர் என் எம் சுந்தரம் ஆற்றிய உரை முக்கியமானது. அந்த நேரத்தில் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் வரதராசன், ஆனால் கூட்டத்தினூடே திடீர் என்று வந்து நின்றார், “என் தோழன் பாராட்டப்படும் தருணத்தில் நான் வேறெங்கோ எப்படி இருப்பேன், பெயிலில் வந்திருக்கிறேன் மருத்துவ மனையில் இருந்து…” என்று தொடங்கினார். “அதிகம் பேச அனுமதி இல்லை…. மாநிலங்கள் அவைக்கு அந்தந்த மாநில ஆளும் கட்சிக்குத் தான் உறுப்பினர்கள் அதிகம் அனுப்ப வாய்ப்பு… மேற்கு வங்கத்தில் இருப்பது இடது முன்னணி அரசு, ஒரு தொழிற்சங்கத் தலைவரை அனுப்பி வைக்கிறது…இங்கே அதிமுக அரசு, ஒரு வர்த்தகரை அனுப்பி வைக்கிறது…நடுத்தர வர்க்க ஊழியர்கள் புரிந்து கொள்ளவேண்டும்…தமிழகத்தில் எந்த மாதிரி ஆட்சி அமைந்தால் தொழிலாளர்களுக்கு நன்மை விளையும் என்று புரிந்து கொள்ளவேண்டும்!” என்று முடித்துக் கொண்டார். 

காவல் துறை ஆட்கள், உளவுத் துறை ஆட்கள் யாருக்கும் அஞ்ச மாட்டார். கேரள சமாஜத்தில் வைத்து, வங்கி ஊழியர்களது எளிய கூட்டம் ஒன்று, முப்பது பேர் பங்கேற்ற சிறிய கூட்டம். அழுக்குச் சட்டை, வேட்டியோடு கைப்பை ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓர் ஆசாமி, இங்கே என்ன நடக்குது என்று என்னிடம் வந்து  கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் அங்கே வந்த உ.ரா.வ, “என்ன ஐபி ஆளா…ராஜீவ் காந்தி அரச எப்படி கவிழ்க்கிறதுன்னு ரகசிய கூட்டம்னு எழுதிக்க….எதுக்கு இந்த அற்ப வேல? எங்க போராட்டத்தை திட்டமிட நிர்வாகிகள் தனியே கூடினால் கூட மோப்பம் பிடிச்சு வந்து நிப்பீங்களா” என்று அதட்டல் போட்ட குரல் இன்னும் என் நினைவில்….அந்த ஆசாமி ஓசைப்படாமல் நடையைக் கட்டினார். 

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு பணியாளர் தோழர்களோ, தீக்கதிர் ஊழியர்களோ, அரங்கங்களில் அலுவலகப் பணியில் இருப்பவர்களோ  அவரவர் குடும்பங்கள் பற்றி மிகுந்த கரிசனத்தோடு அழைத்து வினவி, வேண்டிய உதவிகள் செய்து கொண்டே இருப்பார்.  தில்லியில் சி ஐ டி யு மையத்தில் பணியாற்றச் சென்ற ஆண்டுகளில் சென்னைக்கு வந்தால் தீக்கதிரில் தான் முதலில் போய் இறங்குவார். பல பணிகளை ஒருங்கிணைத்து இதழின் தரத்தை மேம்படுத்த அவரது பங்களிப்பு மகத்தானது. கம்ப்யூட்டர் மயத்திற்கு எதிராக வங்கி ஊழியர் சம்மேளனம் நடத்திய போராட்டத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையாளர் கொச்சைப்படுத்தி எழுதியபோது நேரடியாகச் சென்று உக்கிரமாக வாதிட்டு அவர் எழுதிக் கொடுத்த எதிர்வினையை, அந்த இதழ் வாசகர் கடிதங்கள் பகுதியில் அன்று ஒற்றைக் கடிதமாகப் பெரிதாக வெளியிட்டிருந்தது. சமரசமற்ற போராளி அவர்.

நிறைய பேரை அழைத்து எழுத வைத்தார். மின்னஞ்சலில் நான் பகிர்ந்த செய்தித் தொகுப்பு ஒன்றை வாசித்ததும், அதை ஒரு கட்டுரை வடிவில் என்னை எழுதக் கேட்டு வண்ணக்கதிரில் வெளியிட வைத்தார்; பின்னர் வண்ணக்கதிர் இணைப்பின் தொடர் கட்டுரையாளராக உருப்பெற்றது எதிர்பாராதது. தினமணியில் அவரது கட்டுரைக்கான எனது கடிதங்கள் எப்போதும் தனியாகச் சிறப்புக் கடிதங்களாகவே நடுப்பக்கத்தில் வந்ததுண்டு. ஏராளமான தோழர்களை அவரவர் திறமைகளுக்கேற்ப பங்களிப்பு செய்யுமாறு தூண்டிக் கொண்டே இருப்பார். 

தமிழரசு கட்சியில் சில காலம் செயலாற்றியவர் அவர். சிலம்புச் செல்வர் ம பொ சி அவர்களது உற்ற சீடராக இருந்தவர், ‘அறிவார்ந்த நண்பர்களே’ என்று தொடங்கி அவர் மேடையில் பேசுவதை, தமிழரசு எனும் இதழில் அப்படியே வார்த்தை விடாமல் உராவ தான் நினைவில் நிறுத்தி எழுதித் தருவாராம். அவரது நினைவாற்றல் அபாரமானது. அவரது பேச்சை கலைஞர் கருணாநிதி விரும்பிக் கேட்பார். சிந்தாதிரிப்பேட்டையில் நேப்பியர் பூங்கா என்றிருந்தது, மே தினப் பூங்காவாக உருமாற்றம் பெற்றது அவரது கோரிக்கையின் வெற்றி. 

குங்குமம் இதழில் எண்பதுகளின் மத்தியில் வந்திருந்த அவரது நேர் காணலில் அவர் குறிப்பிட்டிருந்தது சுவாரசியமான ஒரு செய்தி, திமுக சார்பில் நெடுஞ்செழியன் அவர்களே வரதராசனைத் தங்கள் கட்சிக்கு வந்துவிடுமாறு கேட்டாராம், ஆட்சிக்கு வருமுன் பேசிய தோரணையிலேயே இப்போதும் கழகப் பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர், நாங்கள் இப்போது ஆட்சியில் சாதித்திருப்பதை மென்மையாக மக்கள் மனத்தில் பதிய வைக்கும்படி பேச நீங்கள் தேவை என்று சொன்னாராம். 

அப்படிப்பட்ட தோழர் மார்க்சிஸ்ட் இயக்கத்திற்கு கிடைத்தது பெருமைக்குரியதாகும். ராதா ராஜன் எனும் புனைபெயரில் கீழ் வெண்மணி எனும் தலைப்பில் அவர் எழுதி வெளிவந்த சிறு புத்தகம் அபாரமான முறையில் ஆவேசம் கொள்ளும் மொழியில் இருக்கும். தேர்தல் களத்தில் தனது தொண்டையை அவர் எப்படித்தான் பராமரித்துக் கொண்டிருந்தார் என்பது ஆகப் பெரிய புதிர். வில்லிவாக்கம் சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற போது அவர் பெற்ற வாக்குகளும், வெற்றி வித்தியாசமும் புதிய வரலாறு. அப்போதைய மிகப் பெரிய தொகுதி அது. 

1980களில் அகில இந்திய அளவில் ரிசர்வ் வங்கியிலும், பொதுத்துறை வங்கி ஊழியர் இயக்கப் பரப்பிலும் அவரது பாத்திரம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தினுள் அவரைச் சிறைப்பிடிக்க முயன்ற காவல் துறையை பெண் ஊழியர்கள் திரண்டு நின்று வெளியேற்றினர். குடியிருப்புக்குள் புகுந்தபோது, அவர் மற்றவர்களைத் தற்காத்துத் தன்னை சிக்க வைத்துக் கொண்டு போராட்டங்கள் நின்றுவிடாது இன்னும் கூடுதல் எழுச்சியோடு தொடர வழி வகை செய்தவர். கூட்டுறவு அரங்கில் அவரது பங்களிப்பு மிகவும் காத்திரமானது, மிகக் குறுகிய காலத்தில் விரிந்த களத்தில் அதிகார வர்க்கத்தின் அத்து மீறல்களைத் துணிந்து தட்டிக்கேட்பவராகவும், ஆட்சியாளர்களது சுயநல போக்குகளை அம்பலப்படுத்திப் போராடும் கூட்டுத் தலைமையை உருவாக்கி ஒரு தொடர்ச்சியான இயக்கத்தைக் கட்டுபவராகவும் அவர் திகழ்ந்தார்.

வங்கி அரங்கில் நின்றுவிடாது, பரந்துபட்ட உழைப்பாளி மக்கள் தலைவராக உயர்ந்து சி ஐ டி யு அகில இந்திய செயலாளராக உயர்ந்தார். பிராவிடண்ட் ஃபண்ட் கமிட்டி உள்பட பல முக்கிய பொறுப்புகளில் ஆட்சியாளர்களுக்குக் கடும் நிர்ப்பந்தம் ஏற்படுத்தித் தொழிலாளர் நலன் காத்தவர். பி அண்ட் சி மில் போராட்டத்தில் அவரது பங்கு சிலிர்க்க வைப்பது.

இசை, வரலாறு, புவியியல், அறிவியல், இலக்கியம் என பன்முக ஞானமும், தேடலும், துணிவும் மிகுந்திருந்த தலைவர் தோழர் வரதராசன் ஏற்பாட்டில் வெளிவந்த செங்கீதங்கள் ஒலிப்பேழை முக்கியமானது. வலுவான போராட்டங்கள், உயிரோட்டமான சங்க அமைப்புகள், கலகலப்பான அலுவலகச் சூழல், துணிவு மிக்க நடவடிக்கைகள், எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் உறுதி மிக்க முன்னெடுப்புகள் என்று இயங்கியவர் தான் நம்மைத் துன்பக் கடலில் மூழ்க வைத்துப் பிரிந்தார். அவரது பெயரின்றி தமிழகத்தின் எந்தத் துறை வரலாறும் நிறைவு பெறாது. 

(பிப்ரவரி 11 தோழர் உ.ரா.வரதராசன் நினைவு நாள்)

3 comments

  1. நெஞ்சை தொட்ட வரிகள்….
    கடந்து போன காலம்…நினைவில் நிற்கும் நினைவுகள்…விமலா வித்யா

  2. தோழர் உ ரா வோடு சில நிமிடங்கள் வாழ்ந்து விட்டு வந்தது போன்ற உணர்வு…வரளற்றுத் தகவல்களால் நிறைந்து கிடைக்கும் ஒரு நினைவேந்தல்…

Comment here...