பெண் ஊழியர்கள் மீது வன்மம் கக்கும் மண்டல மேலாளரும், அவரை பாதுகாக்கும் TNGB நிர்வாகமும்

மாதவராஜ்

“சார், என் மனைவிக்கு அபார்ஷன் ஆகிவிட்டது. இந்த நேரத்தில் அவளுக்கு விருதுநகர் மண்டல மேலாளர் டிரான்ஸ்பர் போட்டதும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமுமே காரணம். இப்போது அபார்ஷன் ஆகிவிட்டது என்று மெடிக்கல் லீவு கேட்டால் அதையும் மறுத்து ஆப்சென்ட் போடுகிறார்கள். இதையெல்லாம் யூனியன்லயிருந்து கேக்க மாட்டீங்களா?”  தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளரிடம்  துடிதுடித்துப் பேசயிருக்கிறார் அவர்.  தமிழ்நாடு கிராம வங்கியின் கிளையொன்றில் கிளர்க்காக பணிபுரியும் பெண் ஊழியரின் கணவர் அவர்.    

2021 செப்டம்பர் மாதத்தில்தான் அந்தப் பெண் ஊழியர் தற்போது வேலை பார்க்கும் கிளைக்கு மாற்றலாகி இருந்தார். இரண்டு மாத கர்ப்பமாக இருந்தபோது 2022 நவம்பர் 7ம் தேதி அவருக்கு முதல் தடவை அபார்ஷன் ஆகி இருக்கிறது. அவர் மீண்டும் ஜனவரி மாதத்தில் கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. டாக்டர் மிகுந்த கவனமாகவும், மன அழுத்தங்கள் இல்லாமலும் இருக்க வேண்டும் என அறிவுரை தந்திருக்கிறார். அந்த நிலைமையில் இருந்த பெண் ஊழியருக்கு ஜனவரி இரண்டாம் வாரத்தில் ஏறத்தாழ 100 கி.மீ தள்ளி டிரான்ஸ்பர் போட்டிருக்கிறது விருதுநகர் மண்டல நிர்வாகம்.

அந்த டிரன்ஸ்பருக்கான காரணம் இதுதான். வங்கிப் பணத்திற்கு சற்றும் பாதுகாப்பில்லாத வகையில் விதிகளை மீறி பணிபுரிய அந்த பெண் ஊழியரை கிளை மேலாளரும், மண்டல மேலாளரும் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதற்கு அந்த பெண் ஊழியர் மறுத்ததும், எதிர்த்து பேசியதும் விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமியால் தாங்க முடியவில்லை. அதற்காகத்தான் அந்த பெண் ஊழியரை எந்த காரணமும் காட்டாமல் விதிகளை மீறி 100 கி.மீ. தொலைவில் இடமாற்றல் செய்துள்ளார்.

அந்த பெண் ஊழியரும், அவரது கணவரும், கந்தசாமியிடம் தங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி, இந்த நேரத்தில் டிரான்ஸ்பர் செய்ய வேண்டாம் என கேட்டு இருக்கின்றனர். இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த நிலையில் இப்படியொரு டிரான்ஸ்பர் அதிர்ச்சியளிக்கிறது, பதற்றமாயிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்கள். கந்தசாமி மறுத்ததோடு இல்லாமல் உடனடியாக அவரை ரிலீவ் செய்ய மும்முரமாகி இருக்கிறார். எனவே அந்த பெண் ஊழியர் தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மெடிக்கல் லீவு எடுத்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் ஊழியர் தமிழ்நாடு கிராம வங்கியில் இருக்கும்  சங்கத் தலைவர்களிடம் பேசி இருக்கிறார். சங்கத்திலிருந்து சேலத்திலிருக்கும் பொது மேலாளரிடம் பேசி இருக்கிறார்கள். பொது மேலாளரும் டிரான்ஸ்பரை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஆனால் அந்த பெண் ஊழியருக்கு விருதுநகர் மண்டல அலுவலத்திலிருந்து போன் செய்து, எப்போது ஜாய்ன் செய்யப் போகிறீர்கள் என அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், 2023 ஜனவரி 27ம் தேதி அந்த பெண் ஊழியருக்கு மீண்டும் அபார்ஷன் ஆகிவிட்டது. கனவு சிதைந்து, பெரும் இழப்பின் வேதனை கொண்டிருந்திருக்கிறார் அவர். தன் நிலையை விளக்கி மெடிக்கல் லீவை extend செய்து கடிதம் கொடுத்திருக்கிறார். அவருக்கு லீவை மறுத்து ஆப்சென்ட் போடச் சொல்லி இருக்கிறார் மிஸ்டர் கந்தசாமி! வன்மத்தின் உச்சபட்சம் இது.

இதெல்லாம் என்ன மனநிலை என்றே தெரியவில்லை. கொஞ்சம் கூட மனிதாபிமானமும், பெண் ஊழியர்கள் குறித்த புரிதலும் இல்லாமல் தொடர்ந்து அந்த மண்டல மேலாளர் செயல்படுகிறார். இழப்பின் வலியில் துடித்துக் கொண்டு இருக்கும் பெண் ஊழியரை இப்படியா நடத்துவது? உலகத்தை எட்டிப் பார்க்காமல் உருக்குலைந்து போன சிசுவின் மரணத்துக்கு ஒரு வகையில் தானும் காரணமாகி விட்டோமே என்ற குற்ற உணர்வே இருக்காதா?

கேள்விப்பட்டவுடன் அந்த பெண் ஊழியர் வீட்டுக்கு தமிழ்நாடு கிராம வங்கியில் இருக்கும் சங்கத் தலைவர்கள் நேரில் சென்றிருக்கிறார்கள். பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்த அவரது குடும்பத்துக்கு ஆறுதல் அளித்திருக்கிறார்கள். அந்த குடும்பத்தின் கோபமும், ஆதங்கமும் வங்கி நிர்வாகத்தின் மீதும், குறிப்பாக விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமியின் மீதும் இருந்திருக்கிறது.

இந்தச் செய்தி வங்கியில் பலருக்கும் தெரிய ஆரம்பித்ததும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவதூறுகள் பரப்பப்படுகின்றன. நவம்பர் 7ம் தேதி முதல் அபார்ஷன், ஜனவரி 27ம் தேதி இரண்டாம் அபார்ஷன் என்று சொல்லி நக்கல் அடிப்பதும், அதைத் தொடர்ந்த கமெண்ட்களும் கொச்சையானவை. வக்கிரமானவை. அதிகாரத்தில் இருப்பவர்களின் அழுகிய புத்தியும், ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடத்தும் அத்து மீறல்களும் கொடுமையானவை.

இந்த விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமி பற்றி, ஏற்கனவே சங்கங்கள் தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்திற்கு மூன்று புகார் கடிதங்கள் கடந்த இரண்டு வருடங்களில் எழுதி இருக்கின்றன. மிஸ்டர் கந்தசாமிக்கு பெண் ஊழியர்கள் மீதே எப்போதும் வெறுப்புத்தான். பெண் ஊழியர்கள் வேலை பார்க்கும் கிளைகளுக்கு ஆய்வுக்குச் சென்றால் மணிக்கணக்கில் உட்கார்ந்து கடந்த நாட்களின் சிசிடிவி ரெகார்டிங்கை பார்ப்பார். பெண் மேலாளர்கள் என்றால், கிளையில் அவர் இருக்கும் வரை உட்கார அனுமதிக்க மாட்டார். பெண் ஊழியர்கள் கேஷுவல் லீவு லெட்டரில் “Personal reason” என குறிப்பிட்டால், போன் செய்து என்ன Personal reason என்று கேட்பார். ”வாங்குற சம்பளத்துக்கு வேலை பாக்குறதுல்ல, அசிங்கப்படுத்திருவேன் பாத்துக்க” என ஒரு பெண் ஊழியரை மிரட்டி இருக்கிறார். தங்களோடு பணிபுரிந்த ஒரு மேலாளருக்கு இன்னொரு பெண் மேலாளர் பணி ஓய்வு விழா நடத்த முயன்றபோது, அதை ‘பிரிவு விபச்சார விழா” என வாட்ஸ் அப்பில் கிண்டல் அடித்தவர். “லேடி ஸ்டாஃப் கிட்ட ப்ரொடக்ட்விட்டி இல்ல. பேங்க் காச வேஸ்ட் செய்றாங்க” என கமெண்ட் அடிப்பவர்.

ஆனால்  நிர்வாகம் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த தைரியத்தில்தான் மிஸ்டர் கந்தசாமி பெண் ஊழியர்களுக்கு எதிரான குற்றங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். தன் வக்கிரத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்  தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்துக்கும், மாநில மகளிர் ஆணையத்திற்கும், மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கும் புகார் அனுப்பி இருக்கிறார். அந்த புகாரின் மீது நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஊழியர்களை மிரட்டுவதற்கும், சுரண்டுவதற்கும் விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமி போன்ற நபர்களே தங்களுக்குத் தேவை என நிர்வாகம் கருதுகிறதோ?

எனவே விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமியின் அக்கிரமத்தையும், ஆணவப் போக்கையும் பொதுவெளியில் அம்பலப்படுத்தி, பெண் ஊழியர்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ள கந்தசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  தமிழ்நாடு கிராம வங்கியில் உள்ள சங்கங்களோடு இந்திய ஜனநாயக மாதர் சங்கமும், சி.ஐ.டி.யூவின் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவும் 9.2.2023 அன்று விருதுநகர் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தின, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பாலபாரதி அந்த ஆரப்பாட்டத்தில் கலந்து கொண்டு, குற்றவாளியான மண்டல மேலாளர் மீது இரண்டு வாரங்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜனநாயக மாதர் சங்கம் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டி இருக்கும் என எச்சரித்தார்.

மன்னிக்க முடியாத குற்றங்கள் செய்துள்ள அந்த கிளை மேலாளர், விருதுநகர் மண்டல மேலாளர் கந்தசாமி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு நியாயம் கிடைக்கவும் தொடர்ந்து இயக்கத்தை முன்னெடுப்பது என சங்கங்கள் உறுதியோடு இருக்கின்றன.

One comment

  1. கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! இத்தகைய நபர் வங்கியில் இன்னும் தொடர்கிறார் என்பதே அதிர்ச்சியாக உள்ளது..

Comment here...