மஹாராஷ்டிர வங்கியில் ஆட்குறைப்பு, அவுட்சோர்சிங் முறையை கண்டித்து மூன்று நாள் வேலைநிறுத்தம்

நமது நிருபர்

பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா நிர்வாகத்தின் ஊழியர்-அதிகாரிகள் விரோதப் போக்கை எதிர்த்தும், தொழிலாளர் நலச் சட்டங்களை மதிக்காமல், தொழிற்சங்கங்களிடம் முறையான பேச்சு வார்த்தை நடத்தாமல், தன்னிச்சையாகச் செயல்படும் வங்கி நிர்வாகத்தின் ஆணவப் போக்கைக் கண்டித்தும் AIBOMEF, BOMOO, BOMOA, BOMKM, BOMKSENA, MNS, MANS ஆகிய ஏழு ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் இணைந்து United Forum of Mahabank Unions என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி தோழர் விராஜ் டிகேகரை அமைப்பாளராகவும் தோழர் தனஞ்சய் குல்கர்னியை இணை அமைப்பாளராகவும் கொண்டு செயல் பட்டு வருகிறது.

இந்தக் கூட்டமைப்பின் சார்பில் பாங்க் ஆஃப் மஹாராஷ்டிராவில் மூன்று நாட்கள் -ஜனவரி 27, பிப்ரவரி 9,10 – வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. நாடு முழுவதுமுள்ள  20,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் வங்கியின் வளர்ச்சி 250 விழுக்காடு அதிகரித்திருக்கும் நிலையில் 20 விழுக்காடு ஊழியர்கள் குறைக்கப் பட்டுள்ளனர்! பணிநிறைவு, பதவி உயர்வு பெற்றதால் உருவாகும் காலியிடங்கள் நிரப்பப் படுவதில்லை.

ஊழியர், அதிகாரிகள் பற்றாக்குறையுள்ள இந்நிலையில் புதிய கிளைகள் நாள்தோறும் நாடு முழுவதும் திறக்கப்பட்டு வருகின்றன. எங்கிருந்து இதற்கான மனிதவளம் இருக்கிறது என்று பார்த்தால் புதிய கண்டுபிடிப்பாக வங்கி நிர்வாகம் அதிகாரிகள் மயமாக்கும் வேலையைத் திணித்து வருகிறது. ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அதிகாரிகளை  வேலை செய்ய வைப்பது என்று தொடங்கி முழுதுமாகவே அதிகாரிகள் மயத்தை நோக்கிப் போகிறது.

ஊழியர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க பிஸினஸ் கரெஸ்பாண்டெண்ட்ஸ் வகைப்பட்ட ஊழியர்கள் அவுட்சோர்சிங் முறையில் ஏராளமாக எடுக்கப்படவுள்ளனர்.

பகுதி நேர கடைநிலை ஊழியர்கள், முழுநேர கடைநிலை ஊழியர்கள் காலியிடங்கள் நிரப்பப்படாமல் அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்!

நிரந்தர ஊழியர்களை குறைத்து, வெளிப்பணியாட்கள் மூலம் வேலையை முடிப்பதன் மூலம் ஒரு புறம் கடும் சுரண்டலில் ஈடுபடும் நிர்வாகம், மறுபுறம் தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தையும் முடக்கப் பார்க்கிறது. 2022 நவம்பர் 3, 2023 ஜனவரி 23, 26 ஆகிய நாட்களில் புணேயிலுள்ள வங்கியின் தலைமையகத்திலும் 2023- ஜனவரி 18, 24, 25 ஆகிய நாட்களில் மும்பை மத்திய உதவி தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் நடைபெற்றது.

சங்கங்கள் கூட்டாக வேலைநிறுத்த அறைகூவல் விடுத்த நிலையில், அதை உடைப்பதற்காக, புனே, மும்பை, நாக்பூர், அவுரங்காபாத் ஆகிய இடங்களில் வங்கி வளாகத்தில் அமைந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பெயர்ப் பலகைகளை அகற்றிவிட்டு ‘வங்கிக்குச் சொந்தமான இடம்’ என்ற பெயர்ப் பலகைகளைப் பொருத்தியுள்ளது! 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த தொழிற்சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போடப்பட்டுள்ளன.

மேலும், இருநாள் வேலைநிறுத்தம் செய்தால் நான்கு நாட்கள் சம்பள வெட்டு, பணிஉயர்வில் பாதிப்பு என்றெல்லாம் சொல்லி ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தது நிர்வாகம். இதையெல்லாம் மீறி இந்த மூன்று நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

பாங்க் ஆப் மஹாராஷ்ட்ரா வங்கி நிர்வாகத்தின் அடாவடிப் போக்கை முறியடிக்க இன்னும் தீவிரமான ஒன்றுபட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஒட்டு மொத்த வங்கி ஊழியர்கள்-அதிகாரிகளின் ஆதரவு இன்றியமையாதது.

Comment here...