வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துக

பாராளுமன்றம் முன்பாக வங்கி ஊழியர்களின் எழுச்சி மிக்க தர்ணா போராட்டம்

டி.ரவிக்குமார்

இந்திய வங்கித்துறை தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகின்றது. வங்கித்துறையின் மொத்த வைப்புத் தொகை, கடன் தொகை, லாபம் ஆகிய யாவும்  தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் இத்தகைய வளர்ச்சிக்கு பின்பலமாக இருக்கக் கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.

கூடும் பணிச்சுமை

வங்கியின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதனுடைய பணிச்சுமையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. வைப்புத் தொகை பெறுவது மற்றும் கடன் வழங்குவது என்ற அடிப்படைச் சேவைகளைத் தாண்டி தற்போது வங்கிச் சேவை பன்முகப்பட்டதாக பரவி வருகின்றது. க்ரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் வழங்குவது, அதன் பரிவர்த்தனைகளை தொடர்ந்து கண்காணிப்பது, காப்பீடு, மற்றும்  டிமேட் கணக்குகளை பராமரிப்பது, ஏடிஎம் இயந்திரம் மற்றும் அதன் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது என்று பல கூடுதல் பணிகளை தற்போது வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் செய்து வருகின்றனர். அரசு வங்கிகள் மட்டுமே சாமான்ய மக்களுக்கான வங்கிச் சேவையை அளித்து வருகிறது.  இதன் காரணமாகவும், கூடுதல் பணிகளுக்கும் தேவையான  ஊழியர்கள் இல்லாததால் வங்கி வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்

பல கிளைகளில் ஒரே ஊழியரே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகின்றார்கள். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் குறித்த நேரத்திற்குள் தங்கள் தேவைகளை முடிக்க இயலுவதில்லை. நீண்ட நேரம் வங்கிப் பணிகளுக்காக செலவிட வேண்டி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்குமிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. இந்த கடுமையான பணிச்சூழலினால் வங்கி ஊழியர்கள் பெருமளவு பாதிப்புள்ளாகின்றனர். மேலும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணரிக்கப்படுகிறது. இலக்கை எட்டாத அதிகாரிகள் பொதுவெளியில் அவமானப்படுத்தப்படுகிறார்கள். செயலி மூலமும், தொலைபேசி மூலமும் வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்தறிவது என்ற பெயரில் தொடர்ந்து வங்கிப் பணியாளர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். குறித்த நேரத்திற்குள் அவர்களுடைய பணியை முடிக்க இயலாமல் அவர்களது அன்றாட பணி நேரம் நீட்டிக்கப்படுகின்றது. பல வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்ய கட்டாயப்படுத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் ரீதியாக பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகின்றது.  மருத்துவ அவசரத்திற்கும், குடும்பத் தேவைகளுக்கும் விடுமுறை எடுக்க முடியாமல் தத்தளிக்கின்றனர். இதன் காரணமாக சில அதிகாரிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கூட்டாட்சி முறைக்கே வேட்டு வைக்கும் செயல்

வங்கி நிர்வாகங்கள் தேவைக்கேற்ப பணியாளர்களை நியமித்து இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் பல வங்கிப் பணிகளை தற்காலிக ஊழியர்களை நியமித்து சமாளிக்கின்றன. இவ்வூழியர்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து பணி செய்து வந்தாலும் இவர்கள் பணி நிரந்தரப்படுத்தப்படுவது கிடையாது. பணிநேர வரம்பு கிடையாது. அரசாங்கம் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச கூலி, போனஸ் கூட இவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. எந்தவித பணிப் பாதுகாப்பும் கிடையாது.

வங்கிகளில் போதிய ஆட்களை நியமித்து, தற்காலிக பணியாளர்களாகளை நிரந்தரம் செய்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வங்கி நிர்வாகங்களும், அரசும் தயாராக இல்லை.   பொதுத்துறை, கூட்டுறவு, கிராம வங்கிகள் என ஒட்டு மொத்த வங்கித்துறையையே தனியார் மயமாக்க தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது ஒன்றிய அரசு. கூட்டுறவுத்துறை தனியார்மயமாக்கப்படுகின்றது; மத்தியத்துவப்படுத்தப்படுகின்றது. இது கூட்டாட்சி முறைக்கே வேட்டு வைக்கும் செயலாகும்.  பங்கு விற்பனை மூலம் கிராம வங்கிகள் உருவாக்கத்தின் நோக்கத்தை சிதைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பென்ஷன் திட்டத்தை மேம்படுத்துக

1993 ல் பென்சன் திட்டம் வங்கி ஊழியர்களுக்கு பி எப் திட்டத்திற்கு மாற்றாக செயல்படுத்தப்பட்ட பிறகு வங்கி ஊழியர்களுக்கான ஊதியம் 6 முறை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரமைப்பின் பயன்கள் எதுவும் வங்கி ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்படவில்லை. இதே போன்ற பென்சன் திட்டம் செயல்பாட்டில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு மற்றும் பல அமைப்புகளில் ஒவ்வொரு ஊதிய சீரமைப்பின் போதும் ஓய்வூதியர்களின் பென்சன் திட்டமும் அதே அளவு சீரமைக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளில் உள்ளது போல் வங்கி ஊழியர்கள் பென்சன் திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதும், ஊழியர்களுக்கு பாதகமான புதிய பென்சன் திட்டம் முழுவதுமாக ரத்து செயப்பட்டு அனைவருக்கும் உத்தரவாதமான பென்சன் திட்டம் அமுலாக்கப்பட வேண்டும் என்பதும் வங்கி ஊழியர்களின் நீண்டகால பிரதான கோரிக்கைகளாக உள்ளன.

”வங்கி வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவையை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்; வங்கிகளில் தேவைக்கேற்ப பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட பென்சன் வழங்கப்பட வேண்டும்: பென்சன் திட்டத்தில் முன்னேற்றம் வேண்டும்; பொதுத்துறை, கிராம, கூட்டுறவு வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்: வங்கிகளில் வெளிப் பணியாளர்களை நியமிக்கும் முறையை கைவிட வேண்டும்; கூட்டுறவுத் துறை மீதான தாக்குதல் கைவிடப்பட வேண்டும்; கிராம வங்கியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்”

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) தொடர்ந்து பல்வேறு இயக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அவ்வியக்கங்களில் ஒரு பகுதியாக வரும் ஏப்ரல்4, 2023 அன்று புதுடெல்லியில் பாராளுமன்றம் முன்பு மாபொரும் தர்ணா போராட்டத்தை நடத்த உள்ளது.  இத்தகைய இயக்கங்களே கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான பாதையாகும்.

3 comments

  1. We support all the activities regarding this. This is a long standing problem, which was not solved for more than 3 decades. We should not rest until, we achieve this. Red Salute Comrades 👏

  2. வங்கி ஊழியர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் BEFI யின் கோரிக்கை முழக்க போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..ரவீந்திரன்

  3. போராட்டத்திற்கு வரவேற்பும் வாழ்த்துக்களும் !

Comment here...